Skip to main content

Posts

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

Decoupled - Netflix series

Netflix இல் டிசம்பர் 17 வெளியான 'Decoupled' தொடர், எனக்கு மிகமிக சுவாரசியமான ஓர் அனுபவமாக அமைந்தது. இது எல்லோருக்குமான தொடர் இல்லை. எல்லோருக்கும் சரியாகப் புரியவேண்டும் என்பதோ பிடிக்கவேண்டும் என்பதோ இல்லை. எனக்குத் தனிப்பட மிகமிகப் பிடித்திருந்தது. பார்க்கும் நிமிடங்கள் சுவாரசியமாகக் கரைந்தது. வசனங்களில் புத்திசாலித்தனத்துடனான நகைச்சுவை கலந்திருக்கிறது. Witty, Intellectual, சமூகத்தைப் பற்றியும் மனிதர்களின் நடத்தையைப் பற்றியும் அங்கங்கே வாள் போல ஆழமாய்க் கீறி அதை நகைச்சுவையால் மிகத் திறமையாகத் தழுவி மருந்திட்டிருக்கிறார்கள். மிகவும் இலேசான கதையோட்டத்துக்குள் நிறையக் கொண்டு வந்திருக்கிறார்கள். காதலித்து, சில வருடங்கள் இணைந்திருந்து பிரிதலுக்குத் தயாராகும் ஓர் எழுத்தாளருக்கும், பிஸினஸில் ஈடுபடும் பெண்ணுக்குமிடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது. இதில் எல்லாவற்றையும் critical thinking ஊடாக அணுகி, எல்லா நேரமும் பெரும்பான்மைச் சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக்கொள்ளாத ஓர் எழுத்தாளருக்கு அவளால் தொடர்ந்து துணையாக இருக்கமுடியவில்லை. ஆனால், இருவரும் பிரிதலைப் பற்...

குறுகிய காலத் துணை: Evolutionary psychology என்ன சொல்கிறது?

காதல், காமம் சார்ந்த துணைகளைக் குறுகிய காலத் துணையாகத் (Short term relationship) தெரிவு செய்யலாமா? அல்லது நிறையத் துணைகள் வைத்துக்கொள்ளலாமா? அதை எப்படித் தெரிவு செய்யவேண்டும்? அல்லது ஓரிரவில் நிகழும் காமத்தை (One night stand) எப்படித் தெரிவுசெய்வது? Evolutionary psychology என்ன சொல்கிறது? நிறையப்பேருக்கு, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் மட்டுமே நாட்டம் இருந்தாலும், இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் என்கிற ஆர்வமும் இருக்கும். அவர்களும் இதைப் படிக்கலாம். பெரும்பாலும் குறுகிய காலத் துணைகள் என்றால், ஓரிரவில் ஒருவருடன் காமத்தைக் கடந்து( One night stand), அவருடன் அதற்குப் பின்னால் எந்தவிதமான உறவுமோ தொடர்புமோ வைத்துக்கொள்ளாமல் இருப்பதே என்கிற கருத்தும் நிலவுகிறது. குறுகிய காலத் துணை என்றால் அது மட்டும் இல்லை. ஆனால், 'One night stand' ம் அதில் உள்ளடக்கம் என்று வைத்துக்கொள்ளலாம். குறுகிய கால உறவு என்றால், இருவர் சந்தித்து, ஓர் அறைக்குள்ளேயோ வேறெங்கோ சென்று காமம் வைத்துக் கொள்வதும் உடலால் இன்பம் அடைவதும் அந்த ஒரு நாளின் பின்னால் அதை விட்டு விலகுவதும் மட்டும் இல்லை. குறுகிய காலத் துணையில்...

Netflix Series : The Crown ❤

'தி க்ரவுன்' முதலாவது சீஸனில் முதலாவது எபிஸோட் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். சிறந்த தொலைக்காட்சித் தொடர் என்று கோல்டன் குளோப் விருது பெற்ற தொடர். முதலாவது எபிசோட்டிலேயே இங்கிலாந்தின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கதை ஆரம்பமாகிறது. 1947இல், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், அவருக்கும் கிரேக்க மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பிலிப்பிற்கும் இடையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு, இளவரசர் பிலிப் தனது கிரேக்க மற்றும் டென்மார்க் குடியுரிமையை விட்டுக்கொடுத்து, வெளிநாட்டுப் பட்டங்களை விட்டுக்கொடுத்து லெஃப்டினன் பிலிப் மவுண்ட்பட்டன் ஆகிறார். இருவருடைய திருமணமும் நடக்கிறது. முதல் சில நிமிடக் காட்சிகளிலேயே லைட்டிங், ஆடை வடிவமைப்பு, கட்டட வடிவமைப்பு, கதாப்பாத்திரங்கள், அவற்றை எடுத்திருக்கும் முறை, பின்னணி இசை என்று அனைத்தையுமே அருமையாக எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் போது, 1945 வரை பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன்ட் சர்ச்சில் திருமணத்திற்கு வரும்போதே சகலரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டுதான் வருவார். 'Winston still thinks he is the ...

Iron dome : இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்பு

ஏவுகணைகளுக்கு எதிராக Iron dome  இஸ்ரேலின் தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்ட செய்திகளை எல்லாம் பார்த்திருப்போம். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனின் ஹமாஸ் ராணுவம் 1000-2000 வரையான ஏவுகணைகளை இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகள் மீது ஏவியது.  இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மக்களின் குடியிருப்பு பகுதியில், நகரப் பகுதியில், எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. இஸ்ரேலிய மக்கள் சிலர்  வானவேடிக்கை பார்ப்பது போல வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஹமாஸ் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் தரையைத் தொடாமல்  வானத்திலேயே வெடித்துக் கொண்டிருந்தது!   WATCH as the Iron Dome Aerial Defense System intercepts rockets over southern Israel: pic.twitter.com/xUz3bMuTzz — Israel Defense Forces (@IDF) May 12, 2021 இத்தனைக்கும், Iron dome எனப்படும் இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்புக் கேடயம் தங்களைப் பாதுகாக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை. அதென்ன Iron dome!  யூதர்களின் உழைப்பைப் போல, நாட்டுப் பற்றைப் போல, விவசாயம் முதல் போர் வர...

ஸ்கொட்லாந்தில் நிக்கோலா ஸ்டெர்ஜன் வெற்றி! அவர்களுடைய தேர்தல் முறை எப்படி வேலை செய்கிறது?

ஸ்கொட்லாந்து தேர்தலில் SNP எனப்படுகிற ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. பாராளுமன்றத்தில், 129 இல் 64 இடங்களைப் பெற்றிருக்கிறது.  2016ம் ஆண்டுத் தேர்தலில் பெற்றதை விடவும் இந்தமுறை  ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விடவும் ஒரு இடம் குறைவாகப் பெற்றிருக்கிறது.  ஸ்கொட்லாந்தின் தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் இலகுவில் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியாதபடி அமைக்கப்பட்டது. எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இணைந்து மக்களுக்காக வேலை செய்யவேண்டும் என்கிற வகையில் அமைக்கப்பட்டது.  ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 129 இடங்கள். ஆனால் மொத்தத்  தொகுதிகளோ வெறும் 73 தான்! அப்படியானால் மிகுதி உறுப்பினர்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள்?   வாக்குச் செலுத்தும்போது இரண்டு நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். ஒன்று, ஊதா நிறத்தில் உள்ள படிவத்தில் உங்கள் தொகுதியில் உங்களுக்குப் பிடித்த உறுப்பினரைத் தெரிவு செய்யலாம். இன்னொன்று, peach நிறத்தில்...

அவனோடு சென்ற என் நெஞ்சே!

பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற, "உயிரே உயிரே" பாடலில், நாயகியின் மனமும் உடலும் நாயகனைத் தேடித் தேடி அலைவதும் உழல்வதுமாக இருப்பதுபோல் மணிரத்னம் காட்சியமைத்திருப்பார். சொல்லிவைத்து ஓவியம் தீட்டியதுபோல, இந்தப் பாடலின் காட்சி அழகுக்கும், சித்ராவின் ஜீவனுக்கும், ரஹ்மானின் இசையமைப்புக்குமிடையில் அத்துணை பொருத்தம். "நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே! என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே! அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே!" எப்பொழுதும் நாயகனைத் தேடி ஓடும் அவள் மனதில் ஒரு சோகம். இதயத்தில்  கொஞ்சம் கனம். அது அவளுடைய அழகின் கனமாக இருக்கலாம். அல்லது அவளுடைய கட்டுப்பாடு மற்றும் கலாச்சாரத்தின் கனமாகவும் இருக்கலாம். ஆனால், அவளுடைய அழகின் கனத்தையும், அதிலொரு பகுதியான மாரழகின் கனத்தையும், தன் மனதின் கனத்தையும் அவள் தாங்கியபடி, அவனை, தன் தலைவனைத் தேடி ஓடும் அழகை உள்ளார நேசித்து அழகாய் எடுக்கவேண்டும் என்று மணிரத்னத்திற்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை. அழகினைச் சுமப்பதில் துயரம் இருக்குமா? தலைவனைப் பிரிந்...

தமிழ்க் கனவு

அன்றொரு நாள் என் கனவில் உரையாடலின் பிறழ்வில் அவள் தன் சேலைத் தலைப்பினை தோள்களால் வாரிக்கொண்டு மார்பை மறைத்து மேனியால் சிரித்ததில் நெற்றி வரிகள் கொஞ்சம் நெறி தவறி அசைந்ததில் பிழம்புக் குங்குமங்கள் பூப்போல உதிர்ந்துவிட்டன. அங்ஙனமே வெள்ளைச் சேலை நதியாகி அலையடித்ததில் தென்றல் விளையாடித் தோற்றதில் அவள் பெண்ணழகு மட்டும் வெற்றிகொண்டு கிடந்த அழகினை நான் எப்படிச் சொல்லி மகிழ்வேன்!

தமிழ் மங்கை

என் மன வீட்டினுள்ளே, மருமமாய்ப் பெருகி வளரும் மழையிருட்டுக்கும், வெளிச்ச வாசலுக்குமிடையில், ஓரமாய்ச் சாய்ந்து நிற்கும் ஒருத்தியின் நிழல் உருவத்தைப் பிரதிஷ்டை செய்திருந்தேன். அது ஒரு ரெட்டைப் பின்னல் யுகம். அதிலொன்றை, மார்பெனும் வலது சமஸ்தானத்தில் இட்டுக்கொண்டு வினைகள் பல ஆற்றி நின்றாள். அவள் அழகெனும் அரியணை மேவும் ஆசையிருந்தாலும், விபரீதமாய் எதுவும் செய்ய ஓண்ணாமல், அவள் முலைமுகத்தெழுந்த மலரொளியை என் தமிழ் சென்று மொய்த்திருக்க ஆசை கொண்டேன். புகழுக்குக் கூசும் மங்கையல்லள். இருந்தும் என் தமிழ் புக்க புலனிழக்காளோ? மிகையடுத்துச் சொல்லவில்லை. ஏட்டில் அணியெடுத்து, எழில் மொழியை விளம்பி நான் புனையும் முன்னே, காற்று வந்து திருப்பிய பக்கமாய் என் கனவு கலைந்ததை என் சொல்வேன்.  

மார்கழி ஆடல்

அவள் மண் உறு வளம் எங்கும் ஊறும் பனிச் சிரிப்பினொடு பொன் உறு பூ மேனியை   புனை துகிலாடிப் பொருத்தினள் நனி விண்மீன் நிரை கிள்ளி நுனி வெள்ளி மாலை அள்ளி  சென்னிய மார்வம் சேரும்  அணி நகை பல திருத்தினள் அங்கே அவள்  கண் இரு பெருங் கயலாட  புனற் தாமரைத் தண்டாட தான் உண்டாடவொரு நறுமலரின்றி  வண்டு நின்றாடும் வகை ஒரு  நாட்டியம் எழுதினள்.

அவள் தமிழ் நிறத்தினாள்

காலைக் கருக்கலில்,  மங்கும் பனிமதியில்,  சோலைச் செருக்கில்,  வண்டு சுழன்று ஞிமிறும் ஞால ஒழுங்கில் எல்லாம்,  நாளும் உந்தன் பேரழகு புலருமடி விரியும் மலரில், தோயும் பனியில்,  தென்றல் அணவும் காரியத்தில்,  அமுதமாய் முத்தி விழும் மதுரம் அள்ளி  உன்னைத் தமிழால் மட்டும் தொழுதிருப்பேனோடி

கலாவல்

அவளொரு நல்ல வாசகி. ஒரு மாலை மையலில், ஆடையின் நூலிழை யாவும் பொன்னிழையாகும் நேரத்தில், தன் தேகப் போர்வை மீது ஒரு புத்தகம் வைத்துப் படித்திருந்தாள். அதன் உச்சந்தலையை மார்போடு மூடி அணைத்து, அதன் வகிடு முகந்து, அதன் மூலைத் தாளில் ஏறி முனை திருகப் பார்த்திருந்தாள். திருக மனம் வரவில்லை. இதுவரை கடந்திட்ட பக்கங்களின் கனம் அது தாளவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். கருக்கல் பொழுது வந்து கதிரவனைக் கவ்வ, பொன் ஆர்ந்த மார்பினைப் பூரண நிலவின் புழுக்கம் விழுந்து கவ்வ, பூ ஆர்ந்த கூந்தலைத் தென்றல் மோதிக் கவ்வ, அண்ணாந்து பார்த்தால் அநியாயச் சின்னமாய் மின்னும் மதன நட்சத்திரங்கள்...

அவனும் அவளும்

நாளும் புது விந்தையுடன், வேள் வேட்கையுடன், கவி வாஞ்சையுடனெல்லாம், அவள் திரட்டி வைத்திருந்த அந்த இரகசிய வெற்றிடங்களுக்கெல்லாம் அவன் தேவைப்பட்டான். சிலநேரங்களில் அவளுக்கு, அவனுடனான ஓர் உரையாடலை அள்ளி, மூலவேரில் ஓர் உற்சவம் நிகழ்த்தி, ஆதி இச்சையில் எழுந்த ஆசைத் தேரில் நிறுத்தி, உயிரின் உயிரிலெல்லாம் உழவேண்டும் என்றிருக்கும். மறுகணமே, வாழ்வை நல்ல திருமண நிறுவனமாகவும், காதல் நிறுவனமாகவும், பார்த்துக் கட்டிய தன் காலக் கோட்டைக்கெல்லாம், ஆயுட்காப்புறுதி இட்டு வாழும் இந்தக் காப்புறுதிப் பண்பாட்டுச் சமூகத்தின் முன்னால், வேறொருவனுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட அவளுக்கு, அவன்  ஒன்றுமில்லாதவனாக காட்சியளித்தான்.  ஆதலால், அவனுடைய உயிரொன்றும் அவ்வளவு அவசியமில்லை என்கிற பாசாங்குத்தனத்தை அவளுக்குள்ளேயே வளர்த்து, அதில் தன் சுயமரியாதை, சுய இச்சை எல்லாவற்றையும் கட்டிக்காத்து வாழப் பழகினாள். இந்தக் கட்டிக்காப்புக்கும் அவசியத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் அவனை வெறும் உரையாடல் துணையாக வைத்திருக்க விரும்பினாள். ஓர் உயிரின் தனித்த தேவைக்கும் தேடலுக்கும் முன்னால்,...

கண்ணனும் ராதாவும்: ஆசைப்பெருக்கு

ராதாவுக்கு கவிதைகளென்றால் அவ்வளவு பிடித்தம். ஒன்றைப் பிடிக்கிறதென்றால், அதை ஏன் பிடிக்கிறது என அவளுக்குள்ளேயே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வாள். ஆதலால், தனக்குப் பிடிக்கிற விஷயங்கள் மீது, அவளுக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருந்தது. அதனால் அவளால் ஒன்றில் தனித்து இலயிக்க முடிந்தது. அவளுடைய இந்த இலயிப்பையும் புரிதலையும், அவசர உலக மாந்தர்களால் உடைக்க முடியாமல் போகிறபொழுது, ஒருவித எரிச்சலையும், கோபத்தையும், அவள் மீது வளர்த்துக்கொண்டார்கள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. கவிதையென்பது, ஓர் உயிர் தன்னுள் தான் மூழ்கி, தன் உயிரின் வடிவங்களில் ஓர் அழகினையும், ஒழுங்கினையும் கண்டு தெளிந்து, அதை மொழியில் வார்த்து, மீண்டும் விழுங்கிக்கொள்ளும் வளமான செயலென்று கருதுவாள். கவிதைக்கு, வடிவம் ஒன்று இல்லையென்றும், மனதில் ஆசைப்பெருக்கம் செய்யும் அத்துணை அழகையும் கவிதையென்றும் நம்பினாள். அவளுக்கு அவை, பண்டைய மொழிபோல, படவெழுத்துக்களால் ஆனவையாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி. அந்தப் படவெழுத்துக்களால் கண்ணன் அவளைப் புனையும் பொழுதெல்லாம், கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியாகிக் கரைந்து போவாள். இப்படி அவள், எதில்...

எங்கே எனது கவிதை - மிருதங்கம்

விரல்களால் இடையிடுதல், இடையிட்டு உந்தல், உருட்டல், அஞ்சுகையில் அள்ளல், ஆராய்தல், ஆராய்ந்ததை மீறல், மீறியதைப் பெருக்கிப் புது இராகம் பிடித்தல், விவரித்தல், விவரித்ததை மேலும் தெளிவித்து வருடல், வருடியதை அள்ளல், அள்ளியதைச் செவிகுளிர அருளல் எல்லாம் மிருதங்கத்தின் செயல்கள். செவியில் விழும் இந்த மிருதங்கத்தின் கோதுதலை, அத்துணை அழகாய் இந்தப் பாடலில் கேட்கலாம். பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் தவில் ஓசை, சித்ராவின் பல்லவிக் குரல், முதலாவது இடையிசை எ ல்லாம் முடிந்த கையோடு வருகிற முதலாவது சரணத்தில், "மையல் கொண்டு மலர் வாடுதே" எனும் வரிகள் முடியும்பொழுது மிருதங்கம் பாடலை உயிர்ப்பிக்க ஆரம்பிக்கும். அழகிய திருமுகம் - ஒரு தரம் பார்த்தால்   அமைதியில் - நிறைந்திருப்பேன் இந்த வரிகளில், மிருதங்கம் இடையிட்டு உந்தும் அழகிருக்கும். இசையின் இடைவெளிகள் வரிகளுக்கு இடங்கொடுக்கும்அழகிருக்கும். இரண்டும் சேர்ந்து நல் அகம் பாடும் அழகிருக்கும். எல்லா இசையையும் விட்டுவிட்டு, மிருதங்கத்தை மட்டும் கவனித்திருந்தால், வரிகளும் மிருதங்கமும் செய்யும் ஆலிங்கனத்தை இரசிக்கலாம். மொத்த உற்சவத்தில் அது ஒர...

முகிலென மகிழுவன்

மழைநாட் காலைகளில், வீட்டின் கதவுச் சட்டத்துக்கென்று ஓர் அழகு வரும். மழையை அளவாய் அடக்கிக்கொண்டு காட்டும்போது, எதுவும் அழகுதானே! இதை நினைத்தே, யாரோ செதுக்கியதுபோல, அற்புதமான செவ்வக மரவேலைப்பாடு. அதன் விளிம்பில் நின்றபடி, நீரின் நூலினால் நெய்த கண்ணாடித் துமிகளின் முன்னால், தன் தோளினை நிதானமாய்ச் சாய்த்துக்கொள்ள அவளுக்குப் பிடிக்கும். சாய்ந்தவள், ஒரு பாதத்தின் சாய்வின் மீது, மறுபாதம் வைத்துக் கவவிக்கொண்டு, என் பார்வையின் பள்ளத்தில் கருப்பஞ்சாறு ஊற்றினாள். இடைவெளிக்கும் தீண்டலுக்கும் நடுவில் நின்று, 'உன்னை விரைந்துவந்து வரைபவன் என்ன செய்வன்' என்று வினவினேன். தமிழை நிறுத்தி, 'வெறும் மழையைச் சேர்ந்து ரசிப்பவன் என்றும், கூடச் சேர்ந்து நனைபவன் என்றும் கருதிதியோ?' என நகைத்தேன். ' 'தூவானத்  துமி பட்டுத் துளிர்த்த நெஞ்சின் வியர்ப்பினை, மழையின் நீர்த்தாரை அள்ளித் துடைப்பதுபோல் பாவித்து, என்னை நனைத்து மன்றாடி மகிழுவன். அது அவன் கவிச்செயல்' எனத் தலை சாய்த்தாள். கவவவுகவெனத் தமிழ் ஓசையுடன் பொழிந்தது காதல் மழை. 

மழைத் துவலை

பேரியாழ் தேகத்தில் தெரியல் கமலத்தில் மாரி மழைத் துவலையெனக் கழன்று  உயிரில் தூறி விழும் துறைவன் பாட்டு

தழல் இன்பம்

ஞாழல் மரத்தடியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள் வள்ளி. அவள் ஞாலத்திலே ஆழ்ந்திருந்த நினைவின் சுகத்தை, கற்பனையின் காந்தத்தை, அதை அவள் தன் விடைத்த இடையில் ஏந்தி மடக்கித் தாங்கும் வடிவினை எல்லாம், அலுங்காமல் அள்ளிடவே கந்தனும் அருகில் வந்தான். ஓதித் திரை உளரி, கழுத்தில் வெம்பனி வந்து ஊதியும், கீழ் விலாத் தண்டில் ஊசி இறக்கியும், ஆலிலை வயிற்றை மஞ்ஞை உதிர்த்த மயிலிறகால் அது வந்து வந்து வாட்டியும், வேலனைப் புலவிப் பின் தழுவும் இன்பம் அறியவெனப் புல்லாதிருந்தாள் அந்தப் பொல்லா மகள். அவள் எண்ணத் தழலின்  வாசமும் வெப்பும் அறிந்து, அவளை அன்றாடம் நுகர்ந்தவன், சோலை ஒலிகளிலும் மெதுவாய், அவள் பெயரைப் பாங்கொடு சொல்லி அழைத்து, அவள் மெய் காண, வேல் எறியும் விழி காண, வண்டு மூச விண்ட மலரொன்றைக் கண்டு பறித்தான். அவளை வனைந்துகொண்டு, நறும் தேனொழுகும் செவ்வாய் வரிகளைத் தமிழ்ப் புனலில் நனைத்துச் சூட்டினான். அவள் புலவியதன் நுணுக்கம் தேடி அவன் கைகள் நெருங்க, அவனைத் தன் ஆழ்ந்த தழல்  இன்பம் காண நெருக்கி அணைத்திட்டாள் வள்ளி.

மழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி

' மழைக்குருவி ' பாடலில் இடம்பெறும், "கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது!" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான்.    "ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது? ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பா...