கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள்.
பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம்.
குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களுக்கு நிம்மதி தர விளைந்ததே அழகுணர்ச்சி. ஆனால் பக்தியுணர்ச்சி அதற்குள் கடவுளை அழைத்துவந்து நம்பிக்கை கொடுத்தது. ஆனால் பகுத்தறிவு மீண்டும் அதில் இருக்கும் அழகுணர்ச்சியை மட்டும் எடுத்து இரசிக்க நினைக்கிறது.
இப்படிப்பட்ட Gospel இசையோடு, மீனவ கிராமத்தில் வளர்கிற சிறுவனுக்கு ஏற்ற நாட்டுப்புற இசையோடு blues எனப்படும் இசையையும் கலந்து ரஹ்மான் இந்தப் பாடலைத் தந்திருக்கிறார். Blues நீண்டகால எதிர்பார்ப்பு, வலி எல்லாவற்றையும் எடுத்துரைக்கிறது. Gospel அவனுடைய கதையைச் சொல்வதோடு நம்பிக்கையயும் தருகிறது. ஒருவர் இதை பிரச்சாரம் போல எடுத்துச்செல்ல மற்றவர்கள் chorus மூலம் ஆமோதிக்கிறார்கள். இதை நடனத்திலும் மிக அழகாக எடுத்திருப்பார்கள்.
அவனைப் பொறுத்தவரை அவள்தான் அவனுக்கு நம்பிக்கையைக் கொண்டுவந்த தெய்வம். அவள் மீது பக்தியோடு பாடுகிறான். தன்னுடைய வலியை மீட்பதாகப் பாடுகிறான். கொஞ்சம் சிக்கலான இந்தப் பாடலுக்கு ரஹ்மான் அறிமுகப்படுத்திய சித் ஸ்ரீராம் குரல் மிகவும் உதவியாக இருந்ததாக ரஹ்மானே சொல்லியிருக்கிறார். இந்த உணர்வுகளை சித் ஸ்ரீராம் ஊடாக சரியாக கொண்டுவர முடிந்ததைச் சொல்லியிருக்கிறார்.
எந்த மதமாக இருந்தாலும் ரஹ்மானால் அதன் ஜீவனில் ஓர் அழகுணர்ச்சி பிடிக்க முடிகிறது. இசையும் ரசனையும் அழகுணர்ச்சியும் மதங்கள் தாண்டியது என்பதை ரஹ்மானுடைய பல பாடல்களில் பார்க்கலாம். இதே கடல் படத்தில் அன்பின் வாசலிலே என்கிற பாடலின் இறுதியில் church bell ஐ அழகாக பயன்படுத்தியிருப்பார்.
ஹோசானா பாடலில் தேவாலய மணி ஓசையை அழகாகப் பயன்படுத்தியிருப்பார். ஹோசானா என்கிற தங்கள் புனிதமான வார்த்தையை ரஹ்மான் அவமானப்படுத்திவிட்டதாக சில கடும்போக்கு கிறிஸ்தவ அமைப்புகள் சொன்னாலும், ரஹ்மான் பக்திக்கு அழகான காதலுணர்ச்சி ஒன்றை அள்ளித் தந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆண்டாள் முதல் நாயன்மார்கள் வரை பக்திக்குள் சொன்ன அழகுணர்ச்ச்சியையும் காதல் உணர்ச்சியையும் இதுபோல பகுத்தறிந்து ரசிப்பது சுகமானது.
Comments