உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால் காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள். "மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்" இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும் உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும். "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு" காம உணர்...