Skip to main content

Posts

Showing posts from September, 2016

Tweets - கண்மணியாள்

எழுதிய சில டுவீட்களின் தொகுப்பு... குழல்காடு குலைந்தலைய நின் நன்னுதல் சிறுநிலா ஒளி அருந்தி யாசகம் கேட்கையில் இருகரை காணாது என் உள்ளக் காட்டாறு. மென் குழலடுக்கில் சிதறிய வெண்தோட்டு மல்லிகையும் நின் மார்பணிக்குள் இடறி உருளும் நல் முத்தும்  உன் பெயரின் ஒரு பாதி அழகை உச்சரிக்கக்கூடும். தாயன்பு கொண்டு   உச்சந்தலை நுகர்ந்து "கடலிலே விடம் தேடு" என்று நீ மதுரமொழி உரைத்தபோதே  செவியின்பம் கொண்டேன். இதோ உன் இதழ்களுக்கு மோட்சமென்று  கனிவாய்  உன் பொற்பதம் உயர்த்தித் தருகையில் சென்னியது உன் கர்வம் என்றறிந்தேன். உதிரும் ஒற்றைச் சிறகில் உன் பார்வை தவமிருக்கும் அழகைவிட ஒரு பறவையின் பறத்தலில் என்ன இருந்துவிடப்போகிறது! பள்ளிக்குழந்தைகள் ஒருமித்து ஒப்பிக்கும் தேவார சந்தம் போல முத்தாடும் உன் சிரிப்பு. விழாக்கோலம் பூணும் வானத்தை ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே முத்தங்கள் பரிமாறிக்கொள்வோம். அதில் ஒரே நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் ரகசியங்கள் கற்போம். குழல் ஊதும் தோரணையில் உன் கைகளைப் பிடித்து முத்தமிடுகையில் படபடக்கும் உன் பட்டாம்பூச்சி விரல்களின் மென்பாரம்கூடத் தாளவி

முத்தாடு: முத்த இலக்கணம்

கவிஞர் வைரமுத்து எழுதிய " சுத்தி சுத்தி வந்தீக " என்கிற பாடல் காதலோடு இயைந்த காமத்தை அழகியலாக உரைக்கும். "முத்தாடும் ஆசை முத்திப்போக" என்றுவிட்டு, எங்கெல்லாம் முத்தமிட்டுக்கொள்வோம் என, அன்பானவர்கள் உரையாடிக்கொள்வதுபோல  எழுதியிருப்பார். என் காது கடிக்கும் பல்லுக்கு  காயம் கொடுக்கும் வளைவிக்கு  மார்பு மிதிக்கும் காலுக்கு  முத்தம் தருவேன்   மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவது என்பது காதலைத் தொழும் வகையைச் சார்ந்தது. "உன் உடல் மீதும், உன் உயிர் மீதும் மரியாதை வைத்து உன்னைத் தொழுகிறேன். இத்தனை காலமும் உன்னைச் சுமந்த பாதங்கள் மீது எனக்குக் காதல்." என்று சொல்லாமல் சொல்வதுதான் பாத முத்தம். ஆனால், காது கடிக்கும் பற்களுக்கு ஏன் முத்தம் தரவேண்டும்! வெறுமனே, இதழ்கள் உரசிக்கொள்வது மட்டுமே  முத்தத்திற்கு இலக்கணம் ஆகாது என்கிறது நம் இலக்கியங்கள். இலக்கியம் கூறும் முத்தத்திலேயே பலவகை உண்டு. "சிவந்த உன் கடைக்கண் பார்வையையும் உன் கூரிய பற்களிலே ஊறும் நீரினையும் சுவைக்காமல் உன்னுடைய அன்புக்குரியவனால் இருக்க முடியாது. விரைவில் உன்னைத் தே

யானை மரம்

கடந்த மாதம் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுப் பகுதிக்குப் போயிருந்தேன். இந்தத் தீவு யாழ்ப்பாண நகரிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்திருக்கிறது. 'குறிகட்டுவான்' எனும் பகுதியிலிருந்து கடல் வழியாக நீண்டதூரம் பயணிக்கவேண்டும். இது இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. கடலும் கடல் சார்ந்த இடமுமாகையால் அங்கு வாழ்கிற  மக்கள் சுவர்களை அமைப்பதற்குக்கூட பவளப்பாறைகளைப் பயன்படுத்துகின்றனர். அங்கு இடிந்த நிலையில்  காணப்படும்  டச்சுக்காரர்களின் கோட்டைகூட பவளப்பாறைகளால் அமைக்கப்பட்டிருக்கிறது.  இந்தத் தீவில்  பல நூற்றாண்டுகள் பழமையான மிகப்பெரிய பெருக்கு மரமொன்று நிற்கிறது. இதை "யானை மரம்" என்றும் அழைப்பார்கள். 'Adansonia' எனப்படுகிற தாவரவியல் பேரினத்தைச் சார்ந்தது. இந்தத் தாவரவியல் இனத்தைச் சார்ந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலே  வாழும். இந்த மரத்துக்கென்று சிறப்பான தன்மை இருக்கிறது.  இந்த மரம் மழை பெய்யும் பொழுது ஏராளமான நீரை தனது தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும். கிட்டத

காத்திருத்தலின் அழகியலும் காதலும் : கவிதாஞ்சலி 06

அகநானூற்றிலே 58வது பாடல் காத்திருத்தலின் அழகியலையும் காமத்தையும் நயமாகச் சொல்லுகிறது. சங்கப் பாடல்களிலே இரவில் காதலனும் காதலியும்  களவில் சந்திப்பது வழக்கம் அல்லவா. அதேபோல இங்கே தலைவனுக்காகத் தலைவி காத்திருக்கிறாள். வாட்டும் குளிரில் தனிமையில் காத்திருக்கிறாள். எல்லோரும் உறங்கும் இரவில் தலைவன் வருகிறான். அவன் வந்ததும் மின்னும் வளையணிந்த தன் கைகளால் அவன் முதுகினைச் சுற்றி வளைத்துப் பற்றிக்கொண்டு இறுக்குகிறாள். ஒரு மெல்லிய அணைப்பு. தமிழிலே 'ஞெமுங்க' என்றொரு அழகான சொல் இருக்கிறது. இறுக்குதல் அல்லது அழுத்துதல் என்று பொருள். ஆனால், இது காதல்கொண்டோரின் நெருக்கம். மிகவும் மென்மையான இறுக்கம். இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே ஒருவித மென்மை வந்து ஒட்டிக்கொள்கிறது அல்லவா! "வனைந்து வரல் இளமுலை ஞெமுங்கப் பல் ஊழ் விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற" மலர்களில் பேரின்பம் வேர்பிடிக்க தென்றல்போலொரு தீண்டல்தானே வேண்டும். தன் மார்புகளை அவன் மார்போடு மெல்ல அழுத்தி அணைக்கிறாள். அணைப்பின்போது தன் துயரமெல்லாம் கரையவேண்டும் என எண்ணுபவள் பெண். அதேநேரம், அணைக்க எரிகிற தீயல்லவா காதல்