Skip to main content

Posts

Showing posts from 2017

மலரினும் மெல்லிது காமம் 07 - ஆராக் காமம்

ஓவியம் - ஷண்முகவேல்  "காதங் காமம் ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும் சூளுறல் வையைப் பெருக்கன்றோ" காமம் ஒரு நதி அன்றோ? வேகமாகச் சுருங்கவேண்டிய இடத்தினில்  சுருங்கி, பெருகும் இடத்தில் பெருகிநிற்கும் வையையைப் (நதியைப்) போன்றது காமம். அத்தகைய அழகான காமம் என்றும் ஓரிடத்தில் நிற்குமோ? அது பெருகிக்கொண்டே போகும். தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். இங்கு 'ஒல்லை' என்பது அத்தனை அழகான சொல். சுருங்கிய இடத்தில் நதி வேகம் கொள்ளும் அழகை, அந்தச் சொல்லை உச்சரித்தே பார்த்துக்கொள்ளலாம். அதுபோல பெண்ணும் ஒரு நதி. பொதிகையில் தோன்றிய  தமிழ்கொண்டு, தொட்டுத்  திறக்கவேண்டிய நதி.  வாலி, இந்த அழகுக்கு இன்பம் சமைத்திருப்பார். மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா , மெதுவா , மெதுவா இங்கு வைகையில் வைத்திடு கை அதுபோல, தன் உறைவிடமான(பதி)  மதுரையை மறந்து உன் பெண்  மடியினில் பாய்ந்தது வைகை. ஒரு ஆற்று நீரை எப்படி வருடித் துழாவுவாயோ, அப்படி உன் கரங்கள் வந்து, மடியின்மீது மாண்போடு விழவேண்டும்.  வையையின் தன்மையை ஒத்தது அவன்

மலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்  செறிதோறும் சேயிழை மாட்டு" - குறள்  புதிதாய் ஒரு விடயத்தை அறியும்போது என்ன தோன்றும்? அட, இதை இவ்வளவு நாளும் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் தோன்றும். ஒரு நுண்ணழகை அறியும்போது என்ன தோன்றும்? இத்தனை நாளும் இந்தச் சாலையைக் கடக்கிறோமே, அந்த மதிற்சுவர்ப் பூவைக் கவனிக்கவில்லையே என்று தோன்றும். கவனிக்கையில், அன்று அந்தச் சாலையே புதிதாகத் தோன்றும். அப்படிச் சில அழகுகளை நின்று ஆராயத் தோன்றும். ஒரு புத்தகத்தைப் படிக்கப் படிக்க, அறியாமை விலகுவது இன்பம். அறியாமை விலகவிலக இன்னும் அறிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது எனத் தோன்றும். நுணுக்கமாக வாசிப்பவர்களுக்கு ஒற்றை வசனங்கூட மீண்டும் மீண்டும் சுவைத்தரும். அதுபோல, காமத்தை இரசிக்கத் தெரிந்தவர்க்கு அதில் நுணுக்கங்கள் பிடிபடும். அந்த நுணுக்கங்கள் அறியப் பெருக்கொண்டேபோகும். ஆசைகள் கிளைவிட்டு மலரும். அன்பு வேர்விட்டு ஊன்றிக்கொள்ளும். "ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்" என்கிற பிரபல பழமொழி எல்லாம் புதியன தேடாதவரும், இரசிக்கத் தெரியாதவரும் சொல்லிவைத்த பழமொழி என்கிறான் வள்ளுவன். ஒரு குறிப்பிட்ட

மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்

மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்  மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்  கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம். கருநீலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம். வைரமுத்து  கண்ணாடியின்  முன்நின்று (Katoptronophilia) காமத்தின் நுண்கலைகள் பயில்வது காதலைத் தூண்டும். அதேநேரம், அது உணர்வின் கவனத்தைத் திசை திருப்பாமல் இருப்பதும் முக்கியம்.  தனியே, கண்ணாடியில் எமது அழகைக் கடந்திருக்கிறோம். அப்படிக் கடக்கையில், ஒன்று அழகை மெச்சிக்கொள்வோம். இல்லையென்றால், தாழ்வுமனப்பான்மை தோன்றும். நம் அழகை நாமே  மெச்சிக்கொள்வதன் தீவிர நிலை நார்சிஸம். இப்படித் துணையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதையும் நார்சிஸம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமத்தைச் சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டது கிடையாது. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்வரை அழகு. கரை மீறாதவரை ஆழி அழகு. உள்ளக் காதலும் அப்படித்தான். எதிலும், நுண்கலை காண்பது காமத்துக்கு அழகு. புதுக் கலைகள் அழகு. சிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை

மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்

Loving is a journey with water and with stars with smothered air and abrupt storms of flour: loving is a clash of lightning-bolts and two bodies defeated by a single drop of honey. - Neruda காதல் மொழியைப் பொறுத்தவரையில், "பருகுதல்" என்கிற சொல் ஒருவித தீவிரத் தன்மையைக் குறிப்பது. காதல் தன் துணையைச் சுமை என்று அறியாது. அதேபோல, உயிர் உறையும் காமத்தில்/காதலில் சகலதும் தூய்மையானது.  பருகுவன்ன காதலொடு திருகி மெய் புகுவன்ன கை கவர் முயக்கம்  பருகுதலை உடைய தீவிரக் காதலில் ஒருவரையொருவர் முயங்கி உறங்குகிறார்கள். இருவரும் ஒருவரே போன்று தழுவி இருக்கிறார்கள். அப்படி இருக்கிறவர்கள்கூட புலம்புகிற அளவுக்குக் கொடியது இந்த மழையும் வாடைக்காற்றும் என்று அகநானூற்றுத் தலைவி சொல்கிறாள். தலைவன் இருந்திருந்தால் மழைத்துளி பட்ட இதழ்களைப் பருகி இருப்பான் என்கிற ஏக்கம் அவளுக்கு இருக்கலாம்.  சங்கப்பாடல்களில் அகநானூறு, பரிபாடல், கலித்தொகை எல்லாம் தலைவன் பரத்தையரோடும் தலைவியரோடும் நீராடுவது பற்றிச் சொல்கின்றன. தலைவன் மார்பை தெப்பம் என்று நினைத்து பெண்கள் ஆடுவர்.  பெண்கள் வைகை

மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்

ஓவியம் : John Fernandas  தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும். கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது. அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும்  தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது. 

மணிரத்னத்தின் ஆண்கள்

இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் வருகிற  கதையின் நாயகிகளைப் போலவே நாயகர்களும் மனதில் ஒரு சிகரம் அமைத்து வாழ்பவர்கள். அவர்களைப் போலவே  அவர்களைச் சுற்றி இயங்கும்  ஏனைய ஆண் கதாப்பாத்திரங்களும்  மனதிடம் உள்ளவர்கள். உளவியல் இரீதியாக உறுதியானவர்கள். அதேநேரம், மனதினில் இருக்கும் காதல், ஈரம் போன்ற மென் உணர்வுகள் எல்லாவற்றையும் முகபாவனையிலும் செயல்களிலும் எழுதிக் காட்டக்கூடியவர்கள். உள்ளே நியூட்டன் கண்டறியாத ஒரு  ஈர்ப்பு இருந்துகொண்டேயிருக்கும். ஆப்பிள்கள் விழுகிறதா ரோஜாக்கள் விழுகிறதா என்பது பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது. நூறு பேரை அடித்து வீழ்த்துவதும், உரக்கப் பேசுவதும், நரம்புகள் புடைப்பதுமே வீரம் என்கிற முரட்டுத் தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்துப்போட்டவர்கள்.  வீரத்துக்கு "மன திடம்" என்று முகவரி எழுதியவர்கள். மனதிடம், கர்வம், அன்பு, காதல், மென்மை எல்லாம் ஒருசேரக் கொண்ட அரிதான ஆண்களின் பிரதிபலிப்பு.  எழுத்தாளராகவும் பொறியியலாளராகவும் வருகிற கன்னத்தில் முத்தமிட்டால் மாதவன், தீவிரவாதிகளை நேர்காணல் செய்யத் தனியே செல்லும் அரவிந்தசாமி, ஆய்த எழுத்து மைக்கல், 

நிலமடந்தை

மனப்பீடத்தில் வீற்றிருந்து மணிமொழி சூட்டி அழகு பார்க்கும் பெயரற்றவளுக்கு எழுதிய ஓலைகள். பாயல் கொள்ளுதல்   கண்மணியாள், மூடிவைத்த வீணை போல் நினைவில் உனது வடிவு .தந்தி மீது இரு கயல்கள். வெறித்த வெண்ணிலவில் உறங்கும் புள்ளெல்லாம் எழுப்பிவிடத் தோன்றுகிறது. கிடக்கட்டும் வைகறை. வள்ளியைத் தொழுதல்  வள்ளீ , எனதன்பு சொல் நர்த்தகி. "அடுக்கடுக்காய் மலரும் விடியல் காண நீர்த்தாமரை விழித்திருக்கும்" என்று நீ சொன்னால்,அப் பொருளின் வேர் மருவிய மொழியும் பாதி வழியில் நாணும். கூதிர்காலம்... நங்கை, இது வெள்ளைச் சூரியன்கள் பார்க்கும் கன்னி மாதம். ஓர் அச்சிர ஆராதனம். ஊசிப் பூக்கள் நெருக்கையிலே ஒரு ஆளுயர விடமேற்றிக் கொலைகள் புரிகுவாய். உயிர் இறங்கிய மறுகணமே பற்றிக்கொண்டு எரிகிறதொரு சித்திரவனம் என்பாய். பதிலுக்கு, குளித்த மலர்கள் தொட்டுப் பறவை ராகம் பாடுகையில் உன் குற்றமிலாப் புன்னகை கள் என்றிருக்கிறேன். விழா மகளே, நங்காய்! இப்போதும் உன் செவியோரம் தவம்கிடந்து தொட்டுச் சென்றது ஒரு நெடிய பனிக்காற்றுத்தான் என்று சொன்னால் நீ நம்பப் போவதில்லை. நீ நம்பவில்லை என்றால் மட்டுமே

மலரினும் மெல்லிது காமம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்

பாதம்  நடப்பதால் பாதை உண்டாகிறது. நிலத்திலே பதியக்கூடிய பரந்த அடிப்பகுதியே பாதம்.  அடி என்பது ஒரு பொருளினுடைய அடிப்பாகம். பதி - பதம் - பாதம்  சமஸ்க்ருதம்  வாங்கிக்கொண்ட சொற்களில் பாதம் என்கிற சொல்லும் ஒன்று என்றும், பாதை என்கிற சொல்லே,  'Path' போன்ற சொற்களாக வழங்கப்பட்டு வருகிறதென்பதுமே  தேவநேயப் பாவாணர் கூற்று.  இப்படிப்பட்ட உயர்வான உடலின் பாகத்தினை இலக்கியங்கள் பெண் வடிவில் உயர்வாக்கப் போற்றின. பாதத்தின் உயர்வினைப் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் சமய இலக்கியங்களாகத்தான் அமைந்தது. ஆனால் சங்க இலக்கியப் பாடல்கள் பெண்களின் பாதங்களை உயர்வாக்கப் பாடின. காதலின் மென்தன்மையைக் குறிக்கவும், அதன் பொருளை உணர்த்தவும்  பயன்பட்டது. 'நலம் புனைந்து உரைத்தல்' எனும் அதிகாரத்தில் பெண்களின் பாதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லும் வள்ளுவர் முதல் அடியிலேயே, அவள் அனிச்சம் பூவிலும் பார்க்க மென்மையானவள் என்றுவிட்டு இறுதி அடியிலே பாதத்தின் சிறப்பைப் பற்றி எழுதியிருப்பது இன்னொரு சிறப்பு. "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்." - குற

மலரினும் மெலிது காமம் - ஞயம்பட உரை.

உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால்  காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து  முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள். "மலரினும் மெல்லிது காமம்  சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்"  இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும்  உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும். "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்  செறிதோறும் சேயிழை மாட்டு" காம உணர்வு மிகவும் நுண்ணியது (ஐதே காமம்) என்கிறது ஒரு குறுந்தொகைப் பாடல். இந்