நாம் சிறுவர் பிராயத்தில் கடந்து வரும் நபர்கள் , உறவுகளில் எம் மீது அதீத அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அன்பை சரியாக புரிந்துகொள்வதில்லை.காலங்கடந்த பின்னரே இந்த உறவுகளின் அன்பின் ஆழம் எமக்கு தெரியவரும் . அவர்களின் இன்மையை உணரும் போது இது இன்னும் அதிகமாகும் . அவர்கள் மீதான வெறுப்பிற்கு அவர்களின் தோற்றம் , நடத்தைகள் காரணமாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் வைத்திருக்கும் அன்பு ஆழமானது . எமக்கு எதுவெல்லாம் சின்ன சின்ன மகிழ்ச்சியை தருமோ அதையெல்லாம் அவர்கள் மனம் கோணாது செய்வார்கள் . அந்தளவு முதியவர்கள் எம் மீது வைக்கும் அன்பு சிறிது கூட சுயநலமில்லாத அன்பு எனலாம் . ஆனால் அவற்றை நிறைவேற்ற அவர்கள் என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் உணர்வதில்லை .எமது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்ற நிறைவேற்ற எமக்கு விருப்பங்கள் அதிகரிக்குமே தவிர அவர்கள் நிலையை புரிந்துகொள்வதில்லை . அப்படிப்பட்ட ஒரு சிறுவன் பாட்டியுடன் தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான் . அந்த சிறுவனுக்கும் அவனது கிராமத்து பாட்டிக்கும் இடையேயான பாசம் , வெறுப்பு ,கலந்த உறவுப்பயணம் தான் இந்த திரைப்படம்