Netflix இல் டிசம்பர் 17 வெளியான 'Decoupled' தொடர், எனக்கு மிகமிக சுவாரசியமான ஓர் அனுபவமாக அமைந்தது. இது எல்லோருக்குமான தொடர் இல்லை. எல்லோருக்கும் சரியாகப் புரியவேண்டும் என்பதோ பிடிக்கவேண்டும் என்பதோ இல்லை. எனக்குத் தனிப்பட மிகமிகப் பிடித்திருந்தது. பார்க்கும் நிமிடங்கள் சுவாரசியமாகக் கரைந்தது.
வசனங்களில் புத்திசாலித்தனத்துடனான நகைச்சுவை கலந்திருக்கிறது. Witty, Intellectual, சமூகத்தைப் பற்றியும் மனிதர்களின் நடத்தையைப் பற்றியும் அங்கங்கே வாள் போல ஆழமாய்க் கீறி அதை நகைச்சுவையால் மிகத் திறமையாகத் தழுவி மருந்திட்டிருக்கிறார்கள். மிகவும் இலேசான கதையோட்டத்துக்குள் நிறையக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
காதலித்து, சில வருடங்கள் இணைந்திருந்து பிரிதலுக்குத் தயாராகும் ஓர் எழுத்தாளருக்கும், பிஸினஸில் ஈடுபடும் பெண்ணுக்குமிடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது.
இதில் எல்லாவற்றையும் critical thinking ஊடாக அணுகி, எல்லா நேரமும் பெரும்பான்மைச் சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக்கொள்ளாத ஓர் எழுத்தாளருக்கு அவளால் தொடர்ந்து துணையாக இருக்கமுடியவில்லை. ஆனால், இருவரும் பிரிதலைப் பற்றிப் பேசிக்கொண்டாலும் இருவருக்குமிடையில் இருக்கும் அந்த மேஜிக்கோ ஈர்ப்போ குறையவும் இல்லை. இருவருக்குமிடையில் நல்ல நட்பும் புரிதலும் ஒருவிதமான கெமிஸ்ட்ரியும் இருந்துகொண்டே இருப்பது போல இருக்கும். இந்தத் தொடரில் இருக்கும் அழகுகளில் அதுவும் ஒன்று.
சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகளை, தங்களை அறியாமலேயே செய்யும் விடயங்களை மூர்க்கமாகவும், அதேநேரம் அதை புத்திசாலித்தனமான நகைச்சுவையூடாகவும் ஆங்காங்கே அணுகியிருப்பது எல்லாம் அழகு. இதையெல்லாம் நேரே கொடுத்தால் எல்லோரும் offend ஆகி தாங்கள் தாக்கப்படுவது போல உணர்வார்கள். ஆனால் அதை நகைச்சுவையூடாக கொடுக்கும்போது ஒருசிலர் அவற்றைச் சிந்திப்பார்கள்.
பணக்காரர்கள் மீது வெறுப்பு வைத்திருக்கும் ஒருவரை பணக்காரர்கள் அனுபவிக்கும் சூழலுக்குள் கொண்டு வருவது, எப்போதும் துக்கமான சூழலில் இருக்க விரும்புபவர்களை சீண்டுவது, தேச பக்தர்களை நையாண்டி செய்வது, நடைமுறையில் எதையும் பின்பற்றாமல் புரட்சி செய்பவர்களை சீண்டுவது என்று ஏராளம் உண்டு.
ஆகமொத்தம் தரமான, புத்திசாலித்தனமான நகைச்சுவையினை, உறவுகளின் போக்கினை, ஓர் எழுத்தாளருக்கும் பிசினஸில் ஈடுபடும் பெண்ணுக்கும், ஒரு கணவனுக்கும் மனைவிக்கும், ஒரு ரசிகைக்கும் எழுத்தாளனுக்கும், பிசினஸ் துணைகளுக்கும் இடையிலான காதலினை மகிழ்ச்சி தரும் அனுபவமாகப் பார்க்கலாம்.
Comments