பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற, "உயிரே உயிரே" பாடலில், நாயகியின் மனமும் உடலும் நாயகனைத் தேடித் தேடி அலைவதும் உழல்வதுமாக இருப்பதுபோல் மணிரத்னம் காட்சியமைத்திருப்பார்.
சொல்லிவைத்து ஓவியம் தீட்டியதுபோல, இந்தப் பாடலின் காட்சி அழகுக்கும், சித்ராவின் ஜீவனுக்கும், ரஹ்மானின் இசையமைப்புக்குமிடையில் அத்துணை பொருத்தம்.
"நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே! என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே! அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே!"
எப்பொழுதும் நாயகனைத் தேடி ஓடும் அவள் மனதில் ஒரு சோகம். இதயத்தில் கொஞ்சம் கனம். அது அவளுடைய அழகின் கனமாக இருக்கலாம். அல்லது அவளுடைய கட்டுப்பாடு மற்றும் கலாச்சாரத்தின் கனமாகவும் இருக்கலாம்.
ஆனால், அவளுடைய அழகின் கனத்தையும், அதிலொரு பகுதியான மாரழகின் கனத்தையும், தன் மனதின் கனத்தையும் அவள் தாங்கியபடி, அவனை, தன் தலைவனைத் தேடி ஓடும் அழகை உள்ளார நேசித்து அழகாய் எடுக்கவேண்டும் என்று மணிரத்னத்திற்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.
அழகினைச் சுமப்பதில் துயரம் இருக்குமா? தலைவனைப் பிரிந்த தலைவிக்கு, காமத்தைப் பிரிந்த தலைவிக்கு அழகும் ஒரு சுமை. மனத்தால் பிரிந்திருத்தலும் ஒரு சுமை.
சங்கப்பாடலில் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் மனமும் இப்படிக் கவலையுற்று தலைவனைத் தேடி ஓடுகிறது. ஆனால் அதை எவ்வளவு அழகான காட்சியாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
"புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்துற
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே!"
தினைப்பயிர் விளைவிக்கும் நிலத்தில் உள்ள மக்கள் கொளுத்திய நெருப்புக்கு அஞ்சி, தன் புகலிடத்தை/ பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுகிற அழகான மயில் எப்படி ஓடுகிறது தெரியுமா? கதிர்த் தட்டையில் இருந்த குருவிகளும் வருந்துகிற படி வேகமாக ஓடுகிறது. பந்தாடுகிற மகளிரைப் போல குதித்துக் குதித்துச் செல்லுகிறது. மயில் குதித்துச் செல்கிறதா அல்லது மயில் செல்லும் வேகத்தில் குருவிகள் பந்தாடுவதுபோல மாறிமாறிக் குதித்து அமருகிறதா? எதுவானாலும் நெஞ்சம் குதிக்கிறது. துயருற்று, அந்த வருத்தத்திலும் அழகாய்க் குதிக்கிறது. அதனால்தான் இப்படியொரு அழகான ஒப்பீடு.
பெரும்பாலும் பார்க்கிறவர் கண்ணில்தான் அழகும் இருக்கிறது. இந்த ஒப்பீட்டை மாரழகோடும் அழகாக ஒப்பிட்டு ஆராதிக்கலாம்.
இந்த அழகுகள் பதறுவதுபோல் என் மனமும் உடலும் மலைநாடனான என் தலைவனோடு போகிறது என்கிறாள் தலைவி.
அழகில், துயரத்தில், மயில் எப்படித் தன் அழகான தோகையைச் சுமையை சுமந்துகொண்டு போகிறதோ, அதுபோல் தன் நெஞ்சம் வருந்தித் துள்ளுகிறது. அது என் தலைவனைத் தேடி ஓடுகிறது என்கிறாள் தலைவி.
இந்த இலக்கிய நயத்தையும், மணிரத்னத்தின் இந்தக் காட்சி அழகையும் ஒப்பிடும்போது அழகு நம் நெஞ்சில் குடியேறாமல் போகுமா? காமம் கனதியிலும் அழகு எனும் சங்கதிதான் எம்முள் நிலைபெறாமல் போகுமா!
Comments