என் மன வீட்டினுள்ளே, மருமமாய்ப் பெருகி வளரும் மழையிருட்டுக்கும், வெளிச்ச வாசலுக்குமிடையில், ஓரமாய்ச் சாய்ந்து நிற்கும் ஒருத்தியின் நிழல் உருவத்தைப் பிரதிஷ்டை செய்திருந்தேன். அது ஒரு ரெட்டைப் பின்னல் யுகம். அதிலொன்றை, மார்பெனும் வலது சமஸ்தானத்தில் இட்டுக்கொண்டு வினைகள் பல ஆற்றி நின்றாள். அவள் அழகெனும் அரியணை மேவும் ஆசையிருந்தாலும், விபரீதமாய் எதுவும் செய்ய ஓண்ணாமல், அவள் முலைமுகத்தெழுந்த மலரொளியை என் தமிழ் சென்று மொய்த்திருக்க ஆசை கொண்டேன். புகழுக்குக் கூசும் மங்கையல்லள். இருந்தும் என் தமிழ் புக்க புலனிழக்காளோ? மிகையடுத்துச் சொல்லவில்லை. ஏட்டில் அணியெடுத்து, எழில் மொழியை விளம்பி நான் புனையும் முன்னே, காற்று வந்து திருப்பிய பக்கமாய் என் கனவு கலைந்ததை என் சொல்வேன்.