Skip to main content

Posts

Showing posts from June, 2016

இறைவி 2 - ஆய்த எழுத்து

இறைவி திரைப்படம்  பற்றிய எனது முன்னைய பார்வை யை மணிரத்னத்தின் திரைப்படத்தில் வருகிற பெண்  கதாப்பாத்திரங்களோடு  ஒப்பிட்டு எழுதியிருந்தேன். மணிரத்னத்தின் படங்களில் வரும் பெண்கள் இயல்பாகவே பெறுமதியானவர்கள் என்றும்  எழுதியிருந்தேன். அதற்கு எதிர்வினையாக ஒருசில கருத்துகள் வந்தது. 'இறைவி' பெண்களை முற்போக்கானவர்களாகக் காட்டும் திரைப்படமல்ல, மாறாக ஆண்களை பிற்போக்கானவர்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனை உள்ளவர்கள் என்றும் காட்டும் திரைப்படம் என்று சொல்லியிருந்தார்கள். அவர்களின் நியாயப்படுத்தலில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் இந்தப் படம் பெண்களின் பெருமை பேசுகிறேன் என்று ஆண்களை நியாயப்படுத்தி இருக்கிறதென்பது சில விமர்சகர்கள் கருத்து.  இதுவரை, விஜய் சேதுபதியின் போக்கையே மாற்றிவிடும் மலர்விழி கதாப்பாத்திரம் சொல்லவரும் காமம்-காதல் முரண்பாட்டை யாரும் சரியென்று சொல்லவில்லை. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நாங்கள் சேர்ந்து வாழலாம் என்றாவது கேட்டிருக்கலாம். இறைவி விமர்சனத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கேட்டதுபோல எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்! கார்த்திக் சுப்புராஜின்  இறைவி  திரைப்

மெய்தொட்டுப் பயிறல் - கவிதாஞ்சலி 4

இலக்கியத்தில் களவொழுக்கத்தின்போது   தலைவியின் வேட்கையை உணர்ந்த தலைவன் எண்வகைச் செயல்களை ஆற்றுவான். தலைவிக்கும் காதல் உடன்பாடு இருக்கிறது. ஆனால் அவள் பெண்மையின் நலன்கள் அவளைத் தடுக்கிறது. அவற்றை நீக்கவேண்டும். அதன்பின்னரே கூடல் நிகழும்.இவற்றை மெய்தொட்டுப் பயிறல்,பொய்பாராட்டல்,இடம்பெற்றுத்தழாஅல்,இடையூறு கிளத்தல்,நீடுநினைந்திரங்கல்,கூடுதலுறுதல்,சொல்லியநுகர்ச்சி,தீராத்தேற்றம் என்று எண்வகைச் செயல்களாக வகைப்படுத்துகின்றன. தலைவியின் அச்சமும் மடமும் நாணமும் நீங்கும் பொருட்டு அவளைத் தீண்ட முற்படல் மெய்தொட்டுப் பயிறல் எனப்படும். 'பயிறல்' என்பது தீண்ட முயலுதல் எனும் பொருள் கொள்ளும் என்கின்றனர். இவ்வாறு முயலும்போது தலைவியிடம் பலவகை மாற்றங்கள் நிகழும். "நிலவே கேளு! உன்  ஒளி இவளின்  முகத்தை விட பிரகாசமாய் இருந்தால் நான் உன்னையே மணப்பேன்" என்றெல்லாம் பொய்பாராட்டல்  நிகழும். இதில் பொய் சொல்லி நெருங்குதல் பற்றிக் கூறும் பாடல்கள் நிறைய இருக்கின்றன. அவள் மேல் அமர்ந்த வண்டைத் துரத்தும் சாக்கில் அவள் கூந்தல் திருத்தி, நுதல்  தடவி, வண்டினையும் ஓட்டிவிட்டு மெல்லடிகளைத் தடவுகிற

கவிதாஞ்சலி - கவியரசு கண்ணதாசன்

செவ்விது! செவ்விது! தமிழ்க்காதல்.   இன்று கவியரசு கண்ணதாசனின் 90வது பிறந்ததினம். இலக்கிய நயத்தைத் திரையிசைப் பாடல்களுக்குள் நுழைத்தவர் கண்ணதாசன். நூற்றுக்கணக்கான பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பதிவில் இரண்டு பாடல்களில் இருக்கும் இலக்கிய நயத்தைப் பார்க்கலாம். இப்படியான தமிழையும் இனிமையையும்  இனித் திரையில் எதிர்பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. முதலில் " அன்புள்ள மான் விழியே "   என்கிற   பாடலில் உள்ள  இலக்கிய நயம் பற்றிப் பார்க்கலாம்.  காதலன், "அன்புள்ள மான் விழியே" என்று ஆரம்பித்து ஒரு கடிதம் எழுதுகிறான். உயிர்க் காதலோடு அவளுக்குக்  கவிதை எழுதுகிறான். "உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால்" என்பதுபோல, சேருகிற போதெல்லாம் உயிர் தளிர்க்க தீண்டலால் இது உயிர்க்காதல். எப்போது தீண்டினாலும் காதல் புதிதாய்த் தோன்றும். இப்படியாகத் தொலைவின் ஏக்கத்தில்/ பிரிவின் துயரில் கடிதம் எழுதுகிறேன் என்கிறான். ஆனால் அவளோ "நானும் ஆசையில் ஒரு கடிதம் வரைந்தேன். ஆனால் அதைக் கைகளில் எழுதவில்லை. இரு கண்களில் எழுதிவந்தேன்" என்று பதில் போடுகிறாள். நீதானே மான் வி

கவிதாஞ்சலி 2

இலக்கியக்காதல் போல அழகான மொழியமைப்பும் காதலும் கொண்ட பாடல்கள் சில வந்திருக்கின்றன. அதில் "என் சுவாசக்காற்றே" படத்தில் இடம்பெற்ற " தீண்டாய் மெய் தீண்டாய் " என்கிற பாடலும் குறிப்பிடத்தக்கது. இதில் "மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். வைரமுத்துவின் இந்த வரிகள் தவறென்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்படியல்ல, இதன் பொருள் வேறு. கம்பராமாயணத்தில் சீதைக்கே இந்தச் சந்தேகம் வருகிறது. இராமன் வில்லை உடைப்பதற்கு முன்னமே அவனைக் கன்னிமாடத்திலிருந்து பார்த்துவிடுகிறாள் சீதை. அவன் மீது காதல் வயப்படுகிறாள். பிறகு, வில்லை ஒருவன் உடைத்துவிட்டான் என்கிற செய்தியைத் தனது  தோழிகள் சொல்லித் தெரிந்துகொள்கிறாள். ஆனால் தான் அப்போது பார்த்தவனும் இவனும் ஒருவன்தானா என்கிற சந்தேகம் அவளுக்கு திடுக்கென்று வந்துபோகிறது. இருவரும் ஒருவரேயானால் மகிழ்ச்சி என எண்ணுகிறாள். சபையில் எல்லோர் முன்னாலும் அவனைத் தலைநிமிர்ந்து வேறு பார்க்கமுடியாது. பெரியவர்கள் ஏதேனும் எண்ணுவார்கள் என்கிற பயமும் நாணமும் காரணமாக இருக்கலாம். அதனால் தனது கைவளையைத் திருகுவதுபோல கடைக்க

கவிதாஞ்சலி‬

ஒரு பாடல் அதனுள்ளே கவிதைத்தன்மை கொண்டிருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். அப்படியான பாடல்கள் நிச்சயமாக என் தெரிவுகளில்(Playlist) முதலிடத்தைப் பிடித்துவிடும். பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும்போது வார்த்தைத் தேர்வுகளில் நழுவித் தொலைந்துபோவது ஒரு சுகானுபவம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருபாடல் தரக்கூடிய அதியுச்ச சுகம் என்றால் அதுதான் என்பேன். அப்படியான பாடல்களைத் தொகுக்கவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் . கவிதைகளில் இருக்கும் மீமொழி(metalingualism) அழகு. அதாவது, இரண்டாம் அடுக் கு மொழி. ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு கவிதை மொழி மூலம் வெளிப்படுத்துவது. அதில் கற்பனைக்கு நிறையவே வேலை இருக்கும். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" என்பது போல, அந்தப் புதிருக்குள் நுழைந்து யாத்திரை செய்வது ஒருவித போதை. உதாரணமாக, "உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது." என்கிற வைரமுத்துவின் வரிகளை எடுத்துக்கொள்ளலாம். கற்பனைச் சிறகு விரிந்தால் இதற்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்களுக்கு மேலே எழுதிவிடலாம். சாய்ந

இறைவிகளின் கதை

இந்திரா : "உங்ககிட்ட கேள்வியெல்லாம் கேட்கணும்னு அமுதா எழுதி வைச்சிருக்கா..." அமுதா : "20 கேள்விகள்... கேட்கலாமா...! நீங்க ஏன் என்னை விட்டுட்டு போயிட்டீங்க?" மணிரத்னத்தின் பெண்கள், எவருடைய தலையீடுமின்றித்  தங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொண்டு நகர்பவர்கள். புத்தித் தெளிவு, அழகியல் உணர்வுகள், சுயதன்மை, துணிவு  எல்லாமே  இயல்பாகவே அமையப்பெற்றவர்கள். பெண்களின் உலகத்தில் நானொரு புரட்சி நிகழ்த்துகிறேன் என்று மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள  வேண்டிய அவசியமற்றவர்கள். அதனாலேயே யார்மீதும் முறைப்பாடுகளை வைக்க முன்வராதவர்கள். ஆண்களுடன் தங்களைப் பிணைத்துக்கொள்ளும்போதுகூடத் தெரிவுகளில்  பிழைவிடுவதில்லை. அதிமேதாவித்தனமோ முட்டாள்த்தனமோ அற்றவர்கள். சிலநேர இடைவெளிகளில் மறைமுகமாக ஆண்களை ஆக்கிரமித்துவிடக்கூடியவர்கள் . நாங்கள் நாங்களாகவே இருந்துகொள்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்பவர்கள். யாரிடமிருந்தும் சுதந்திரம் வேண்டாதவர்கள். அவர்களுக்குச்  செய்வதற்கு என்று ஒரு வேலை இருக்கும். இத்தனைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் திரையில் இயல்பாகவே  இயங்கிக்கொண்டிருக்கும். சுதந்