' மழைக்குருவி ' பாடலில் இடம்பெறும், "கிச்சு கீச்சென்றது. கிட்ட வா என்றது. பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது!" என்கிற வைரமுத்து வரிகளை ரஹ்மான் சுகித்துக் கொண்டாடும் அழகு, ஒரு மரக்கொப்பின் நுனியையும், அதிலிருந்து நூதன அழைப்புத் தருகிற ஒரு குயில் பேடின் சுகத்தையும் விழிக்குள் வீசியெறிந்து போகிறது. அதன் கீழே பார்த்தால், பாரதி அமர்ந்திருந்து தன் 'குயில் பாட்டு' கவிதையின் இறுதி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறான். "ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?" பாரதி சொன்ன குயிலின் கதைபோல, வைரமுத்துவின் மழைக்குருவி பாடலும் கற்பனைதான். ஆனால், பாரதி கேட்பதுபோல், இதன் ஆழ்ந்த நுண்ணிய பொருளை எப்படி உரைப்பது? ஆங்கே நீல மலைச்சாரல். தென்றல் வந்து நெசவு நடத்துமிடம் . ஆல மரக்கிளைமேல் மேகம் அடிக்கடி தங்குமிடம். நல்ல மழைக்காடு. எந்திர மனிதரின் அசைவும் ஓசையும் இல்லாமல் மௌனம் வீற்றிருக்கும் வனம். அங்கே இவன் இயற்கையை இரசித்து அணுக்கம் கொள்ள வந்திருக்கிறான். வானம் குனிந்து மண்ணை வளைந்து தொடுவதைப் பா