தாயைப் பிரிந்த கன்றின் தவிப்புக்கு ஆறுதல் சொல்லிவிடமுடியாது. அதன் கண்களையும், கட்டப்பட்டு நிற்கும் இடத்தையே சுற்றிச் சுற்றித் தன் தவிப்பை வெளிப்படுத்தும் விதத்தையும் பார்த்தவர்களுக்கு ஓர் உண்மை தெரியும். எத்தனை செயல்கள் செய்தாலும், தாய்ப்பசு வரும்வரை கன்றின் ஏக்கம் தீராது. அதுபோக, அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதன் ஏக்கம் எங்களையும் தொற்றிக்கொள்ளும். கிட்டச் சென்று அரவணைத்துக்கொள்ளும்போது, எங்கள் மனம் வேண்டுமானால் கொஞ்சம் நிறைவு காணும். இந்த ஆழத்தை இந்த முல்லைப்பாடல் எப்படிக் கொண்டுவருகிறது எனப் பார்ப்போம். இலக்கியத்தில் இருக்கும் அழகே இந்த ஆழம்தான். படிக்கும்போது தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள். அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. துயரை மேலும் அதிகரிக்கச்செய்யும் பொழுது. 'மழைக்காலத்துக்கு முன்னர் திரும்பி வந்திடுவேன்' எனச் சொல்லிவிட்டுப்போன தலைவன் எப்போ திரும்பி வருவான் எனத் தலைவி வருத்தத்தில் இருக்கிறாள். அவள் வருந்தி இளைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் அந்தத் துயர் தொற்றிவிட்டது. இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாத செவிலித்தாயும் முதுமையான சில பெண்களும் ...