விரல்களால் இடையிடுதல், இடையிட்டு உந்தல், உருட்டல், அஞ்சுகையில் அள்ளல், ஆராய்தல், ஆராய்ந்ததை மீறல், மீறியதைப் பெருக்கிப் புது இராகம் பிடித்தல், விவரித்தல், விவரித்ததை மேலும் தெளிவித்து வருடல், வருடியதை அள்ளல், அள்ளியதைச் செவிகுளிர அருளல் எல்லாம் மிருதங்கத்தின் செயல்கள். செவியில் விழும் இந்த மிருதங்கத்தின் கோதுதலை, அத்துணை அழகாய் இந்தப் பாடலில் கேட்கலாம்.
பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் தவில் ஓசை, சித்ராவின் பல்லவிக் குரல், முதலாவது இடையிசை எல்லாம் முடிந்த கையோடு வருகிற முதலாவது சரணத்தில், "மையல் கொண்டு மலர் வாடுதே" எனும் வரிகள் முடியும்பொழுது மிருதங்கம் பாடலை உயிர்ப்பிக்க ஆரம்பிக்கும்.
அழகிய திருமுகம் - ஒரு தரம் பார்த்தால்
அமைதியில் - நிறைந்திருப்பேன்
இந்த வரிகளில், மிருதங்கம் இடையிட்டு உந்தும் அழகிருக்கும். இசையின் இடைவெளிகள் வரிகளுக்கு இடங்கொடுக்கும்அழகிருக்கும். இரண்டும் சேர்ந்து நல் அகம் பாடும் அழகிருக்கும். எல்லா இசையையும் விட்டுவிட்டு, மிருதங்கத்தை மட்டும் கவனித்திருந்தால், வரிகளும் மிருதங்கமும் செய்யும் ஆலிங்கனத்தை இரசிக்கலாம். மொத்த உற்சவத்தில் அது ஒரு தனி அடுக்கு.
"நுனிவிரல் கொண்டு - ஒரு முறை தீண்டு" எனும் வார்த்தைகளில், மிக நுணுக்கமாய் மிருதங்கம் செய்யும் அந்தத் துருவல்!
இரண்டாவது இடையிசையில், நாதஸ்வரம் வந்து தடுக்கும்பொழுது, அதன் அழகுக்கும் இடங்கொடுத்து, அதையும் மெதுவாய் அணைந்து ஆராய்ந்து தன்னோடு அள்ளிக்கொள்ளும். தன்னை வரிகளோடு விவரித்து, பாடலின் இறுதியில் விரிந்து தன் ஆருத்ர அழகைக் காட்டியிருக்கும். உயிர்களுக்கு, ஆறுதலுக்கு நல்ல இசையும், கவியும் தந்த ரஹ்மானையும் வைரமுத்துவையும் நன்றிகளால் ஆராதிக்கும் செயலை இந்த மிருதங்கம் செய்துவிட்டுப் போனதாய் எண்ணிக் களிக்கவேண்டியதுதான்.
Comments