தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான இலங்கையின் வடக்கு மாகாணம் புவியியல், அரசியல், கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அத்தோடு நீண்டகால அபிவிருத்தி, ஆண்டாண்டு காலமாக அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் எதிர்காலம், கட்டமைப்பு ஆகியவை மிகப்பெரும் அபாயத்தையும் சந்தித்து நிற்கிறது. இவற்றைக் கட்டியெழுப்பவும் தகர்த்து எறியவும் வேண்டிய கடப்பாடு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. புத்திஜீவிகள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொருளாதார வல்லுனர்கள், தனியார் நிறுவனங்கள், சுயதொழிலில் ஈடுபடுவோர், சமூக நலன்விரும்பிகள், பிரதேச மக்கள், புலம்பெயர் தமிழர்கள் எல்லோரையும் சந்தித்துப் பேசியதில் ஒரு பிரதான குறைபாடு ஒன்றைக் காணமுடிந்தது. இவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைப்பதற்குரிய கட்டமைப்புகள் இன்னமும் சரியாக உருவாக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் தன்னிச்சையாகச் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தத் தனிமனித முயற்சிகள் ஒன்றாகச் சேரும்பொழுதே பலம்பொருந்திய ஒரு கட்ட...