Skip to main content

Posts

Showing posts from December, 2018

மார்கழி ஆடல்

அவள் மண் உறு வளம் எங்கும் ஊறும் பனிச் சிரிப்பினொடு பொன் உறு பூ மேனியை   புனை துகிலாடிப் பொருத்தினள் நனி விண்மீன் நிரை கிள்ளி நுனி வெள்ளி மாலை அள்ளி  சென்னிய மார்வம் சேரும்  அணி நகை பல திருத்தினள் அங்கே அவள்  கண் இரு பெருங் கயலாட  புனற் தாமரைத் தண்டாட தான் உண்டாடவொரு நறுமலரின்றி  வண்டு நின்றாடும் வகை ஒரு  நாட்டியம் எழுதினள்.

அவள் தமிழ் நிறத்தினாள்

காலைக் கருக்கலில்,  மங்கும் பனிமதியில்,  சோலைச் செருக்கில்,  வண்டு சுழன்று ஞிமிறும் ஞால ஒழுங்கில் எல்லாம்,  நாளும் உந்தன் பேரழகு புலருமடி விரியும் மலரில், தோயும் பனியில்,  தென்றல் அணவும் காரியத்தில்,  அமுதமாய் முத்தி விழும் மதுரம் அள்ளி  உன்னைத் தமிழால் மட்டும் தொழுதிருப்பேனோடி

கலாவல்

அவளொரு நல்ல வாசகி. ஒரு மாலை மையலில், ஆடையின் நூலிழை யாவும் பொன்னிழையாகும் நேரத்தில், தன் தேகப் போர்வை மீது ஒரு புத்தகம் வைத்துப் படித்திருந்தாள். அதன் உச்சந்தலையை மார்போடு மூடி அணைத்து, அதன் வகிடு முகந்து, அதன் மூலைத் தாளில் ஏறி முனை திருகப் பார்த்திருந்தாள். திருக மனம் வரவில்லை. இதுவரை கடந்திட்ட பக்கங்களின் கனம் அது தாளவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். கருக்கல் பொழுது வந்து கதிரவனைக் கவ்வ, பொன் ஆர்ந்த மார்பினைப் பூரண நிலவின் புழுக்கம் விழுந்து கவ்வ, பூ ஆர்ந்த கூந்தலைத் தென்றல் மோதிக் கவ்வ, அண்ணாந்து பார்த்தால் அநியாயச் சின்னமாய் மின்னும் மதன நட்சத்திரங்கள்...