சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன். "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோ...