நாளும் புது விந்தையுடன், வேள் வேட்கையுடன், கவி வாஞ்சையுடனெல்லாம், அவள் திரட்டி வைத்திருந்த அந்த இரகசிய வெற்றிடங்களுக்கெல்லாம் அவன் தேவைப்பட்டான்.
சிலநேரங்களில் அவளுக்கு, அவனுடனான ஓர் உரையாடலை அள்ளி, மூலவேரில் ஓர் உற்சவம் நிகழ்த்தி, ஆதி இச்சையில் எழுந்த ஆசைத் தேரில் நிறுத்தி, உயிரின் உயிரிலெல்லாம் உழவேண்டும் என்றிருக்கும்.
மறுகணமே, வாழ்வை நல்ல திருமண நிறுவனமாகவும், காதல் நிறுவனமாகவும், பார்த்துக் கட்டிய தன் காலக் கோட்டைக்கெல்லாம், ஆயுட்காப்புறுதி இட்டு வாழும் இந்தக் காப்புறுதிப் பண்பாட்டுச் சமூகத்தின் முன்னால், வேறொருவனுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட அவளுக்கு, அவன் ஒன்றுமில்லாதவனாக காட்சியளித்தான்.
ஆதலால், அவனுடைய உயிரொன்றும் அவ்வளவு அவசியமில்லை என்கிற பாசாங்குத்தனத்தை அவளுக்குள்ளேயே வளர்த்து, அதில் தன் சுயமரியாதை, சுய இச்சை எல்லாவற்றையும் கட்டிக்காத்து வாழப் பழகினாள். இந்தக் கட்டிக்காப்புக்கும் அவசியத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டத்தில் அவனை வெறும் உரையாடல் துணையாக வைத்திருக்க விரும்பினாள்.
ஓர் உயிரின் தனித்த தேவைக்கும் தேடலுக்கும் முன்னால், ஒழுக்கம், சமூகம், திண்ணை மனிதர், கடப்பாடு போன்ற அர்த்தமற்ற வஸ்துக்களை எல்லாம் கணக்கில் எடுத்து, மனம் எனும் துலாத்தட்டில் வைத்துப் பார்க்கவேண்டி இருக்கிறதல்லவா?
சமூகத்தின் கணக்கின்படி, அதன் குல மங்கை காப்பாற்றிக் கொடுத்திருக்கும் பொல்லாத கற்பு எனும் ஒழுக்க இலக்கணத்தின்படி, அவன் தோற்றவனாக இருந்தாலும், அவள் கணக்கின்படி அவள்தானே தோற்றவள் ஆகிறாள்.
இந்த ஆழம் அவளுக்குப் புரிந்தால், அவனைப் போராடி வெல்லவேண்டும். வாழ்க்கையில் போராடி வெல்லப்படவேண்டியவன், போராடி வெல்லப்படும்போதுதான், இருவரின் ஆசைக்கும் இருளுக்கும் அழகு வரும்.
Comments