Friday, November 6, 2015

முல்லைப்பாட்டு : கன்று தவிப்பதைப் போல்!


தாயைப் பிரிந்த கன்றின் தவிப்புக்கு ஆறுதல் சொல்லிவிடமுடியாது. அதன் கண்களையும், கட்டப்பட்டு நிற்கும் இடத்தையே சுற்றிச் சுற்றித் தன் தவிப்பை வெளிப்படுத்தும் விதத்தையும் பார்த்தவர்களுக்கு ஓர் உண்மை தெரியும். எத்தனை செயல்கள் செய்தாலும், தாய்ப்பசு வரும்வரை கன்றின் ஏக்கம் தீராது. அதுபோக, அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதன் ஏக்கம் எங்களையும் தொற்றிக்கொள்ளும். கிட்டச் சென்று அரவணைத்துக்கொள்ளும்போது, எங்கள் மனம் வேண்டுமானால் கொஞ்சம் நிறைவு காணும். இந்த ஆழத்தை இந்த முல்லைப்பாடல் எப்படிக் கொண்டுவருகிறது எனப் பார்ப்போம். இலக்கியத்தில் இருக்கும் அழகே இந்த ஆழம்தான். படிக்கும்போது தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள்.

அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. துயரை மேலும் அதிகரிக்கச்செய்யும் பொழுது. 'மழைக்காலத்துக்கு முன்னர் திரும்பி வந்திடுவேன்' எனச் சொல்லிவிட்டுப்போன தலைவன் எப்போ திரும்பி வருவான் எனத் தலைவி வருத்தத்தில் இருக்கிறாள். அவள் வருந்தி இளைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் அந்தத் துயர் தொற்றிவிட்டது. இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாத செவிலித்தாயும் முதுமையான சில பெண்களும் 'நற்சொல்' கேட்டுவரக் கோவிலுக்குப் போகிறார்கள். 


யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

அங்கே, நெல்லையும் புதிய மலர்களையும் தூவி 'நற்சொல்' கேட்டு நிற்கின்றனர்.  இவர்களின் வேண்டுதல் புரியாத ஒருவர் 'நற்சொல்' சொல்வது காதில் கேட்டால் நல்லதே நடக்கும் என்று அர்த்தம். இதனை 'விரிச்சி கேட்டல்' என்பார்கள். அதனால் யாராவது 'இன்சொல்' சொல்வது தங்கள் காதில் விழவேண்டும் என்று வணங்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கிற இளங்கன்று, தனது தாய் இன்னும் வரலன்னு துயரில் அங்குமிங்கும் சுற்றித் தவிக்கிறது. அதிக குளிர் காரணமாக, நடுங்குகிற இருதோள்களிலும் தனது கையை மாற்றி மாற்றி வைத்துக் கட்டிக்கொண்டு நிற்கும் ஆயர்மகள் ஒருத்தி அதைப் பார்க்கிறாள். அதன் அருகே சென்று, "கோவலர்கள் பின்னால் இருந்து செலுத்த உன்னுடைய தாயார் இதோ இப்பவே வந்துவிடுவார். நீ கவலைப்படாத" என்று ஆறுதல் சொல்கிறாள். இந்த இனிய சொல்லைக் கேட்ட முதிய பெண்களும் செவிலித்தாயும் 'நற்செய்தி' கேட்ட சந்தோஷத்தில் அதை வந்து தலைவியிடம் சொல்கிறார்கள். நிகழ்வினை அப்பிடியே ஒப்பிவித்து, " நல்லவர்களின் வாய்ச்சொல்லினைக் கேட்டோம்; அதனால், உன் தலைவன் போரில் வெற்றிபெற்றுத் திரும்பி வந்துவிடுவான். 'மாமை' நிறம் கொண்ட நீ முதலில் வருத்தப்படுவதை நிறுத்து!" என்று திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லுகிறார்கள். இதனால் அவளுக்கு தனிமை வருத்தம் இன்னும் அதிகமாகி, குவளை மலர் போன்ற கண்களில் கண்ணீர் முத்துக்கள் தேங்கி நிற்க, தனிமை வருத்தத்தில் இருந்தாள்.

"மாமை நிறம் கொண்டவளே" எனச் சொன்னபோது அவளுக்குத் துக்கம் இன்னும் அதிகமாகி இருக்கும். 'மாமை' நிறம் என்பது அழகானதாகக் கருதப்படுவது. வெள்ளையும் இல்லாமல், கறுப்பும் இல்லாமல் ஒரு அழகான நிறம். தலைவன் பிரிவால், இப்போது அவள் உடல் 'பசலை' நிறத்தை அடைந்திருக்கும்.  அவர் இல்லாமல் என் அழகும் இப்படி வீணாகப் போகிறதே என்று இன்னும் வருந்தியிருப்பாள். தலைவன் வந்து தொட்டதும், பசலை நிறம் மாறி, பழையபடியே 'மாமை' நிறம் பெற்றுவிடுவாள். ஒரு பாடலுக்குள் எத்தனை நுணுக்கங்கள்!

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,                      
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீநின்                                    
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப

எத்தனை ஆறுதல் சொன்னாலும் அடங்காத இந்தத் தவிப்பு, கன்றின் தவிப்பைப் போன்றது. அவளுடைய தாயுமான தலைவன்  வந்தால்தான் தீரும்.

Monday, November 2, 2015

அடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்
இந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு! காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை! அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.  

மான்கள் மட்டுமா! துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப்  பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும்! அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும்.  அவர் தீண்டினால் உயிர் நிறைவேன்.

அந்த மான்களுக்கும் யானைகளுக்கும்கூட,  இந்த மாரிகாலத்தில் ஒன்றுடனொன்று சேர்ந்து இன்பம்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது என் மனம் எப்படிச் சும்மாயிருக்கும் தோழி! நீயே நியாயத்தைச் சொல்லு! மழைக்காலம் வருவதற்கு முதல் வந்திடுவேன்னு சொல்லீட்டுப்போன இவர் இன்னும் வரல. இளைத்துவிட்டேன். 

மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து  
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்  
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி  
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்  
மாலை வந்தன்று மாரி மாமழை  
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்  
இன்னும் வாரா ராயின்  
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே.  

இந்தப் பாடல் ஒரு பெண்ணின் ஆற்றாமையைச் சொல்லுகிறது. இதேபோல கார்காலத்தில் ஒரு ஆண் தன்னுடையை ஆற்றாமையைச் சொல்லி வேண்டினால் எப்படியிருக்கும்! வேட்கையை எப்படி ஆற்றுவேன் என்று கேட்டால் எப்படியிருக்கும்! சங்கத்தமிழ் போலவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது வரிகளில்  இயற்கையை அழைப்பது வழக்கம். 

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?

எல்லா உயிரனங்களும் மகிழ்ச்சியாக இருக்கிற கார்காலம் இது. நீ மட்டும் ஏன் பிரிந்திருக்கிறாய் எனும் ஆற்றாமை!

Friday, October 16, 2015

கூதிர்காலத்தை குறுந்தொகையால் வரவேற்கலாம்...

கூதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. பனியும் மழையும் ஒன்றாகப் பொழியும்போது அதற்குப் பொருத்தமான ஒரு அழகான குறுந்தொகைப் பாடலோடு காதல் காலத்தை வரவேற்பது அழகாக இருக்கும் என நினைக்கிறேன்.

தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்க மாட்டான்னு கவலைப்பட்ட தன் தோழியிடம் தலைவி தன் மனநிலையைச் சொல்லுகிறமாதிரியான பாடல்.

படம் : இணையம் 

தோழியே கேளு, ஈரத்தைச் சுமந்துவந்து என்மேல தூவுகிறபடி பனிக்காற்று வீசுகிற கூதிர்காலம் இது. நடுக்கம் தருகிற இந்தக் குளிர்கால இரவின் அமைதியில் மெல்லிய மணி ஒலி மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைவிலிருந்தாலும் துல்லியமாகக் கேட்கிறது. இரவுல நல்லாத் தூங்குற பசுவை ஈ/நுளம்பு உறங்கவிடாம கடிச்சு தொந்தரவு செய்கிறது. ஈ அமரும் இடத்தை எல்லாம் தன்னோட நாக்கால தடவுவதற்காக பசு தன்னோடை தலையைத் தூக்கிவிட்டு மறுபடியும் உறங்குகிறது. இதையே திரும்பத் திரும்பச் செய்திட்டிருக்கு. அது இப்பிடி செய்யும்போதெல்லாம் அதோடை கழுத்துல இருக்கிற குட்டி மணி அசைந்து அசைந்து சின்ன ஒலி எழுப்புது. அந்த ஒலி என்னை ஏதோ செய்கிறது. என் தனிமைக்கு துக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது. 

இந்தச் சத்தம் மற்றவர்களுக்கும் கேட்குமா ? நான் ஒருத்தி மட்டும்தானா? மற்றவர்கள் நன்றாக உறங்குகிறார்கள். அவரோடை நினைவு வந்து என்னைத் துன்புறுத்துகிறதால எனக்கு உறக்கம் வரல. என்னை மாதிரியே தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளியாக விழுகிற தூய, மெல்லிய பனிபடர்ந்த மழைக் கண்களோடு புலம்புகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா! 

இப்போது இந்தப் பாடலைப் படித்தால் இதன் இனிமை புலப்படும். சுற்றுச்சூழலில் நிலவுகிற காலநிலையை அப்பிடியே தலைவியின் உளவியலோடு பொருத்தி எழுதியிருக்கிறார் புலவர். இந்தப் பாடலை இயற்றிய சங்ககாலப் புலவனான வெண்கொற்றனின் துல்லியத்தன்மையை என்னவென்று சொல்வது. பசுவை மாதிரியே தலைவியும் அவனைப் பற்றிய நினைவைத் திரும்பத் திரும்பத் துரத்தப் பார்க்கிறாள். அவன் நினைவோ நுளம்புபோல திரும்பத் திரும்ப இவளிடமே வந்து ஒட்டிக்கொள்கிறது.

சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் 
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் 
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந் 
தூதை தூற்றுங் கூதிர் யாமத் 
தானுளம் புலம்புதொ றுளம்பும் 
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. 


வழக்கம்போல இதை ஒரு வைரமுத்துவின் வரியோடு தொடர்புபடுத்துவேன் என நீங்கள் எதிர்பார்ப்பது புரிகிறது. ஒன்றில்லை, இரண்டு இருக்கிறது. 'சர சர சாரக்காத்து' பாட்டில் 'மாட்டு மணிச் சத்தமா மனசுக்குள்ள கேக்கிற' என்றொரு வரி உண்டு. சங்க இலக்கியத்தை கிராமியப் பாடலுக்குள் எவ்வளவு அழகா கொண்டுவந்திருக்கிறார்!

மஜ்னு படத்தில் இடம்பெற்ற 'பட பட பட்டாம்பூச்சி' என்கிற அழகான வரிகள் உள்ள பாடலை எடுத்துக்கலாம். காதல் வந்த பெண்ணின் இரவை  இப்படிச் சொல்கிறார். காதலனின் நினைவா தனிமையில் இருக்கும்போது இவளுக்கும் மனசு ஏதோ செய்கிறது.


"கடமுட கடமுட கொடம் ஒன்னு மனசுக்குள் உருளுதே 
பூனை வந்து உருட்டவும் இல்லை 
காத்து வந்து கவுக்கவும் இல்லை 
இந்தச் சத்தம் ஏன் கேட்குதோ 
வந்த தூக்கம் ஏன் போனதோ!" 

என்று காதலியானவள் காதலனிடம் புலம்ப, "அது வேற ஒன்னுமில்லை, நான்தான் உன் மனசுக்குள்ள புகுந்திருக்கேன். நீ புரண்டு படுக்கையில் உருண்டு விழுந்திருப்பேன். அந்தச் சத்தம்தான் அது" னு பதில் சொல்லித் தேற்றுகிறமாதிரி அமைகிற வரிகள். இந்த வரிகளிலும்  ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறதுதான் இதன் அழகு. இலக்கியத்தன்மை சேரும்போது காதல் அடையும் உயர்வுக்கு அளவே இல்லை.


Wednesday, October 14, 2015

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள்.
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை 
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து 

பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன 

நறுந்தண் ணியளே நன்மா மேனி 
மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தால் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல்.

காதலனின் மென்மையான அன்பினைச் சொல்லுகிற இன்னொரு பாடல். இதன் முதல் இரண்டு வரிகளும் "பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை" வரிகள்போல குட்டிக்கவிதை.

தலைவனின் பிரிவினால் துயருறும் தலைவிக்கு அவளுடைய தோழி ஆறுதல் சொல்கிறாள். அதற்குத் தலைவி கூறும் பதிலாக இப்பாடல் அமைகிறது. 

"வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு


"அழாஅல்" என்று நம் அழுத கண் துடைப்பார்"

என்னுடைய நீண்ட வளைந்த கூந்தலை விரல்களால் ஒதுக்கி/வருடி/நீவி/வகிர்ந்து, பின்னாலிருந்து/ முதுகுப்பக்கமாக அணைத்துவைத்துக்கொண்டு "அழாதே" என்று என் கண்ணீரைத் துடைத்த காதலன் ஏன் இன்னும் வரலங்கிற மாதிரி அமைகிற பாடல். இதில்  வருகிற 'உளரி' என்கிற வார்த்தை பயன்பாட்டில் இருப்பதாகக்  கேள்விப்படவில்லை. ஆனாலும் தலைகோதிவிடுகிற காதலை அழகாய் முன்னிறுத்துகிறது.

Saturday, September 12, 2015

தேரழகு !

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, நல்லூர்க் கந்தனின்  தேர்த்திருவிழாக் காலம்  என்பது ஒரு மிகப்பிரமாண்டமான கொண்டாட்டக் காலம். யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கலாச்சார விழாவாகவே ஆகிவிட்டது என்றுகூடச்  சொல்லலாம். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவானது,  மொத்தமாக  27 நாட்கள் இடம்பெற்று, வைரவர் உற்சவத்துடன் நிறைவுபெறும். இன்றுவரை சரியான ஆகம விதிமுறைகளின்படி இடம்பெறும் தேர்த்திருவிழா இதுவென்றும்  சொல்லலாம். 

தேரன்று, வெளிக்கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள்  என அனைத்தும் மூடப்பட்டு, ஒரு விடுமுறை தினம்போலவே காட்சியளித்தது. கோயிலிலிருந்து குறிப்பிட்ட அளவு தூரத்திலேயே வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதியெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, எங்குபோனாலும் பக்திப் பாடல்கள்தான் காதுகளில் கேட்டவண்ணம் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வீதியில், கலாச்சார ஆடைகளுடன் வரும்படி அறிவுறுத்தும்  பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலாச்சார ஆடைகளுடன் கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். முருகன் தேர் ஏறியதை மட்டும் பார்த்துவிட்டு ஒருசிலர் வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.  பக்கத்தில் வீடிருப்பவர்கள் தேர் கோயிலைச் சுற்றி முடிப்பதற்குள் மீண்டும் வந்துவிடலாம் என்று செல்வதுண்டு. மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தாலும், கோயிலைச் சுற்றியுள்ள பிரம்மாண்டமான மக்கள் திரள் மட்டும் கால் வைக்க இடமின்றி அப்பிடியே இருந்தது. இப்படியாக, எல்லா மனித இயக்கங்களும் தேர்த்திருவிழாவை மையப்படுத்தியே இயங்கிக்கொண்டிருந்தது.


காலை ஏழு மணிக்கெல்லாம் முருகன் தேரேறிவிட, பெருந்திரளான மக்களும் அப்போதுதான் வந்துகொண்டிருந்தார்கள். எப்போதுமே தேரைச் சுற்றி இயங்கும்  மக்கள் கூட்டம், 'அரோகரா' என்று சொல்லிகொண்டே வடம் பிடித்து இழுக்கிற இளைஞர் கூட்டம், கலாச்சார ஆடைகளில் நிறைந்திருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள், தேருக்கு முன்னால் வரும்  காண்டாமணி ஓசை, முரசின் ஒலி,   தேருக்குப் பின்னால் பஜனை பாடிச் செல்லுபவர்கள், அசையும் தேரின் சிறுமணியோசை, குழந்தைகளைத் தன் தோள்மீது இருத்திவைத்துக்கொண்டு தேர் காட்டும் அப்பாக்கள்  என்று எல்லாமே ஒரு தேரின் அழகினைத் தீர்மானிக்கிறது. வடம் பிடித்து இழுக்கும்போது, தேரானது மக்கள் கூட்டத்தில் மிக மெதுவாக அசையும் அழகினை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. தேரானது புதிதாகக் கட்டப்பட்ட வடக்கு வாசலைக்  கடக்கும்போது கோபுரத்திலிருந்து தாமரை இதழ்கள்  கொட்டப்பட்டது. கோயிலைச் சுற்றித் தேர் செல்லும் வீதியெங்கும் மணலால் நிரப்பப்பட்டு இருந்தது. தேர்  கோயிலைச் சுற்றி முடிந்ததும் கோயில் மணலில் இருந்து கதை பேசுகிற மக்கள் அழகு. குழந்தைகள், மணலில் கூம்பு வடிவம் அமைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் திருவிழாக் கடைகளை நோக்கி நகர்ந்துவிட்டனர்.கோயில் வீதிக்கு வெளியே திருவிழாக் கடைகளுக்கென்று தனியான ஒருபகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவற்றைக் கடக்கும்போது சிறுவயது நினைவுகள் வந்துபோவதைத் தடுக்கமுடியாது. திருவிழாக்கடைகள் என்றால் வளர்ந்தவர்களுக்கு வேண்டுமானால் அதிகளவு முக்கியமில்லாத பகுதியாகத் தோன்றலாம். ஆனால் சிறுவர்களைப் பொறுத்தவரை முழுத் திருவிழாவுமே அதுதான். 


Thursday, August 27, 2015

தமிழர் அரசியலும் சர்வதேசமும் 2..

ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுச்  சில நாட்களே ஆகிறது. இந்நிலையில், இலங்கையின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் அரசிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது  என்பதனை ஆராய்வது அவசியமாகும். சாதகமான ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிற வேளையில் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் என்ன அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்துவைத்திருப்பதும்  அவசியம்.

இனப்பிரச்சனையும் உள்நாட்டு அரசியலும்

ஜனவரி 17ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபின்னரும்கூட  உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இதன் காரணமாக, இனப்பிரச்சனை தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையோ, கருத்துகளையோ யாரும் முன்வைக்கவில்லை. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது. 

வெளிப்படையான பேச்சுகளை முன்னெடுத்திருந்தால், அவை தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியற் பிரச்சாரமாக உருவெடுத்திருக்கும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைகூட மார்ச்சில் வெளியாகவிருந்த மனித உரிமை அறிக்கையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைந்த புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதே சர்வதேசத்தின் எண்ணமாகவும் இருந்தது. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்வரை இனப்பிரச்சனை தொடர்பில் அனைவரும் அடக்கிவாசித்தார்கள். அப்படியிருந்துமே எதிரணியினால் இனவாதப் பிரச்சாரம் தூண்டப்பட்டது. அதனை முக்கிய பிரச்சாரமாகக் கொண்டிருந்த மஹிந்த அணி மீண்டும் தோல்விகண்டது.

புதிய அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 

ஜனவரி 8ல் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களும்  உதவியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்தும் புதிய அரசுடன் ஒருவித தொடர்பைப் பேணிவந்தது. இரண்டாவதாக, பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தாலும் புதிய அரசுக்கான தனது ஆதரவினை விலக்கிக்கொள்ளவில்லை. ஓகஸ்ட் 17 தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாதபோதும்கூட, ரணிலின் தலைமையிலான கட்சிக்குத் தனது ஆதரவினை வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்தது. தற்போதும்கூட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில்தான் புதிய அரசோடு செயற்பட்டு வருகிறது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒருவித சுமுகமான உறவைப் பேணிவருகிறது.

தேசிய அரசாங்கமும்  இனப்பிரச்சனைத் தீர்வும்

பாராளுமன்றத் தேர்தலிலே எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாதபடியினால் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொண்டன. ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமே இணைந்து ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனாலும் தேசிய அரசாங்கம் அமைப்பதன் மூலம் நாட்டின் பிரதான பிரச்சனைகளைத் தீர்ப்பது இலகு என்பதே  சில அரசியல் வல்லுனர்களுடைய கருத்து. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசிய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கும். ஆகையால், நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டுவரும்போது இடையூறுகள் இல்லாமல் நிறைவேற்றலாம். 

புதிய அரசின்  மீட்சியின் பின்னரான நடவடிக்கைகள் 


ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் 'தி ஹிந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டி மிகவும் முக்கியமானது. அதில் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், நிச்சயமாக 13ம் திருத்ததிற்கு அப்பால் சென்று தீர்வு எட்டப்படும் என்றும் கூறியிருந்தார். இனப்பிரச்சனைத் தீர்வு  தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா முக்கியமான பொறுப்பினை ஏற்றிருப்பதாகக் கூறினார்.

சில நாட்களிலேயே, சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன், வவுனியாப் பூந்தோட்டம் முகாமில் வசிக்கும் மக்களுக்குக்  குடியிருப்புப் பிரதேசங்களை அமைத்துக்கொடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றது.

இனப்பிரச்சனை தொடர்பிலான சர்வதேச அணுகுமுறை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்பதில் இந்தியா, அமேரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் உறுதியாக இருக்கின்றன. ஆசியாவில் சமாதானத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் கட்டியெழுப்பவேண்டிய அவசியம் சர்வதேச நாடுகளுக்கு இருக்கிறது. இதனடிப்படையில் இனப்பிரச்சனை தொடர்பான தீர்வுத் திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் மத்தியஸ்தம் வகிக்கின்றன. உள்நாட்டில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதின் மூலம்தான் நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதில் தெளிவாகக் இருக்கிறார்கள். 

அமெரிக்காவானது தற்போது இந்தியாவுடன் நெருங்கிய உறவினைப் பேணிவருகிறது. தனது கொள்கைகளில் பாரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. ஆசியக் கண்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல், நிலையற்ற தன்மை இருப்பதால் இன்னொரு  வல்லரசுடன் இணைந்து செயற்படவேண்டிய நிலை அமெரிக்காவுக்கு இருக்கிறது. ரஷ்யாவும் சீனாவும் இணைந்து 'Multipolar world order' எனும் சித்தாந்தத்தை நோக்கிப் பயணிப்பதால், இந்தியாவுடன் சேர்ந்து ஏனைய ஆசிய நாடுகளையும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதன் மூலம் ஆசிய நாடுகளுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகிறது. இது அமெரிக்காவினுடைய நீண்டகாலத் திட்டம் என்கிறார்கள்  சில மேற்கத்தேய அரசியல் ஆய்வாளர்கள்.

இன்னொரு உதாரணமாக பங்களாதேஷினை எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவானது பங்களாதேஷுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுவதோடு, அதன் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்குதாரராகச் செயற்படுகிறது. பங்களாதேஷின் வேகமான வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இரு நாடுகளினதும் உறவானது 'three Ds' அடிப்படையில் அமைந்தது என்கிறார்கள் அமெரிக்க இராஜதந்திரிகள். Democracy, Development and Denial of space for terrorism என்கிற மூன்று விடயத்திலும் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அங்கு நேரடியாக முதலீடு செய்யும் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அமெரிக்க நிறுவனங்கள். இதில் NGOக்களின் பங்கும் அதிகமானது. அதே போன்றதொரு உறவையே இலங்கையுடனும் ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்தத் தடவை இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செயற்படுகிறது.

அத்தோடு, நேபாளத்தில் நிலவும் உள்நாட்டு பிரச்சனைகளின் காரணமாக அங்கே சமஷ்டி முறை மூலம் அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா முனைப்புக் காட்டுகிறது. பங்களாதேஷின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் முக்கியமானது.போர்க்குற்ற விசாரணையும் சர்வதேசமும் 

தற்போது இலங்கையின் உள்ளக விசாரணையை ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. தென்னிலங்கையில் நிலவும் அமெரிக்க எதிர்ப்புச் சிந்தனையை  மாற்றவேண்டிய அவசியமும் அமெரிக்காவுக்கு இருக்கிறது. புதிய அரசின் மேற்குலகுக்கு ஆதரவான செயற்பாடும், தமிழ்ச் சமூகம் தொடர்பில் புதிய அரசு எடுத்துவரும் ஒருசில நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். உள்ளக விசாரணையில் வெளிநாட்டு விசாரணையாளர்களும் உள்வாங்கப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது.


உலக அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு செயற்படுமளவுக்குத்  தமிழ்த் தலைமைகள் வளர்ச்சி காணவேண்டும். தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும். அதன் மூலம் இனப்பிரச்சனையையும், சமூக பொருளாதார பிரச்சனைகளையும் தீர்த்து முன்னேற வியூகம் வகுக்கவேண்டும். பேரம்பேசும் அரசியலை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். ஊடகங்களும் கல்வி அமைப்புகளும் வெறுமனே உணர்ச்சி அரசியலைக் கையில் எடுப்பதை விடுத்து மென்போக்குடன் கூடிய திறமையான அணுகுமுறையை வகுக்கவேண்டும். 


Tuesday, August 11, 2015

தமிழர்களின் அரசியலும் சர்வதேச நகர்வுகளும்!

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்திலிருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது.

இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில், அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும். அதனை அடைவதற்கு ஒற்றுமையும் உழைப்பும் அவசியம். சர்வதேச அரசியல் பற்றிய அறிவினைச்  சாதாரண மக்களும் பெற்றிருக்கவேண்டும்.இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அனுசரணை, வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவருகிறது.  இந்தமுறையும், தமக்குத் தேவையான பேரம்பேசும் ஆற்றலை வழங்கும்படி கேட்கிறார்கள். சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை, எல்லாவிதமான விடயங்களையும் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுப்பார்கள். அதற்கான சூழ்நிலை அமைந்துவராவிட்டால், அவற்றை அமைத்துக்கொள்ளுவார்கள். அப்படிச் சாதகமான சூழ்நிலை நிலவும் காலகட்டத்தில், தங்களது  பேரம்பேசும் அரசியல் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதம். ஆனால், வாக்குபலம் மட்டுமே பேரம்பேசும் சக்திக்கு போதுமானதாக அமையாது. சிறந்த பேச்சாளர்களும் உறுதியான கட்டமைப்பும் அவசியம். தமிழ் மக்களையும் போராட்டங்களில் ஈடுபடுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

2009 முதல் 2015 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  

2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிறகு , 2010 ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவுடன் 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதன்பிறகு, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் மஹிந்த அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அரசினது ஆர்வமற்ற  மனப்பான்மையால் பேச்சுவார்த்தையானது  தோல்வியுற்றபின், சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கை அரசுக்கு அதிகப்படியான அழுத்தங்கள் வந்தது. அதோடு, அமெரிக்காவும்  ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்  இலங்கைக்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டுவந்து, அதில் வெற்றியும் கண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் பலம்பொருந்திய, சர்வாதிகார  உள்நாட்டு ஆட்சியில் அனைவரும்  குரல் கொடுக்கத் தயங்கியபோதுதான் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

 மஹிந்தவின் அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்கள் எதற்கும் அடிபணியாது நின்றது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியது. தனது ஆட்சி அதிகாரத்தைப் பறிப்பதற்குத் திட்டம் தீட்டப்படுகிறதென்பதை அறிந்த மஹிந்த அரசானது தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னராகவே அடுத்த தேர்தலுக்குச் சென்றது. அதன்பிறகு, 2015 ஜனவரியில் மஹிந்தவின் ஆட்சி அதிகாரமானது  எதிர்பாராத விதமாகப் பறிக்கப்பட்டது. அது  Silent revolution/Rainbow revolution என்று சிலரால் அழைக்கப்பட்டது.  இந்த மாற்றத்தின்  பின்னணியில் இந்தியாவின் செயற்பாடு வலுவாக இருந்ததாக தென்னிலங்கையில் விமர்சனங்கள் எழுந்தது. இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் மஹிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியப் புலனாய்வுத் தலைவரின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார். மஹிந்தவைத் தோற்கடிக்கவென மைத்திரி தலைமையில் தென்னிலங்கையில் ஒன்றுசேர்ந்த கூட்டமைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துகொண்டது. சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் ஆலோசனை இன்றித்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த முடிவினை எடுத்திருக்காது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 

இந்தியாவில் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்பட்டபின் பா.ஜ.கா அரசானது  ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. முன்னைய அரசு போல அல்லாது, பா,ஜ.கா அரசின் வெளியுறவுக் கொள்கைகள் உறுதியானது என்பதே சில ஆய்வாளர்கள் கருத்து. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக  நியமிக்கப்பட்ட அஜித் டோவால் மிகவும் உறுதியானவர். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துபோவதைக் கடுமையாக எச்சரித்தார். இந்தியாவுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டிய அவசியம் இருக்கிறது.

2015 ஜனவரித் தேர்தல் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்துப் புதிதாக நிறையக் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கின்றன.  எதிர்ப்பு அரசியல் செய்வது அந்தக் கட்சிகளின் கொள்கையாகும். சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  நகர்வுகளைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள். இதே எதிர்ப்பைத் தான் சிங்களக் கடும்போக்கு கட்சிகளும் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவானது, இலங்கைக்கு எதிராக ஐநாவில் பிரேரணையைச் சமர்ப்பித்தது. இதைச் சிங்களக் கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவர்களும் எதிர்த்தார்கள். இதில் எந்தவிதமான இன்டலெக்சுவல்த்தனத்தையும் காணமுடியவில்லை.   ஆனால், தான் கொண்டுவந்த பிரேரணையை எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டுமென்பது அமெரிக்காவினது எண்ணமாகவிருந்தது . உலகின் தலைசிறந்த பேரம்பேசக்கூடிய பேச்சாளர்களைக் கொண்டிருக்கிற அமெரிக்காவானது, பெரும்பானைமையான நாடுகளின் ஆதரவைப் எப்படியோ பெற்றுக்கொண்டது. இதில் சுமந்திரனின் பங்கும் இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் மஹிந்த அரசின் நெருங்கிய நண்பராக இயங்கிவந்த அவுஸ்திரிலேயாவுடன்  பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு அவுஸ்திரேலியாவானது மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. கொஞ்சம் கடுமையாகவிருந்த பிரேரணையை நிறைவேற்றவதற்கு போதியளவு ஆதரவு இல்லாமல் இருந்தபோது, அதில் சில திருத்தங்களை அமெரிக்கா மேற்கொண்டது. அப்படி நிறைவேற்றப்பட்ட பிரேரணைதான் இன்றும் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருந்துவருகிறது.

அதன்பிறகு, முழுச் சமூகமும் இணைந்து மகிந்தவினை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற முற்பட்டவேளை, தமிழ்ச் சமூகத்தினை வாக்கினைப் புறக்கணிக்கும்படி சில கட்சிகள் கேட்டுக்கொண்டன. இறுதியில் சிறுபான்மை வாக்குகளே புதிய அரசின் சக்தியையும் தீர்மானிக்க உதவியாக இருந்தன.

2015க்குப் பின்னரான தென்னிலங்கை நிலவரம் 

சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரியின் அரசானது தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த இராணுவக் கெடுபிடிகளை அகற்றியதோடு, குறிப்பிட்ட அளவு காணிகளையும் மக்களிடம் கையளித்தது.  புதிய அரசின் இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் மஹிந்தவின் கூட்டம் தங்களுக்கு ஆதரவான இனவாத வாக்குகளாக மாற்றப் பார்த்தன.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்தல், கடும்போக்கான கருத்துகளைத் பொதுவெளியில் தெரிவித்தல் போன்ற செயற்பாடுகள் நிகழ்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால், அது தென்னிலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். "சர்வதேசமும் மைத்திரி-ரணில் அரசும் சேர்ந்து நாட்டைப் பிரிக்கப்போகிறார்கள்" என்கிற மஹிந்தவின் பிரச்சாரத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும். தென்னிலங்கை மக்களின் ஆதரவுடன், தமிழர்களின் பிரச்சனைய ஆராயத் தயாராகவிருக்கிற  ஒரு புதிய அரசு பாராளுமன்றம் வரவேண்டிய அவசியமிருக்கிறது. தென்னிலங்கையையும் சமாளித்துக்கொண்டு தமிழர் பிரச்சனையையும் தீர்த்து வைக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலை நிலவுகிறது. 

பேரம்பேசும் அரசியல் - சிறந்த Negotiators அவசியம் 


“In a negotiation, we must find a solution that pleases everyone, because no one accepts that they must lose and that the other must win... Both must win!” - Nabil N. Jamal

பேரம்பேசுதல் நிகழும்போது இருதரப்பும் வெற்றிபெறவேண்டும். சிறந்த முறையில் பேரம் பேசக்கூடிய சக்திகளையும் நபர்களையும் கொண்டே தற்போதைய உலக அரசியல் இயங்கிவருகிறது. அணு ஆயுத ஒப்பந்தங்கள் முதல் உள்ளூர்க்  கைத்தொழில் ஒப்பந்தம் வரைக்கும் எத்தனையோ விடயங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள். அமெரிக்காகூட 'hard power' எனும் கொள்கையிலிருந்து 'smart power' எனும் கொள்கைக்கு நகர்ந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திலிருந்து நிறையப் பேச்சாளர்கள், இன்டெலெக்சுவல்ஸ்,சமூக அமைப்புகள் உருவாகவேண்டிய காலகட்டம் இது. 

ரணில் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குப் பின்னரான அரசியல் 

ரணிலின் தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ரணில் பிரதமரானதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். அதில் தங்கள் பேரம்பேசும் பலத்தைக் காட்டவேண்டிய கட்டாயம் தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது. உள்நாட்டிலேயே பேசிக்கொண்டிருக்காமல் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சரியான உறவைப் பேணவேண்டும். செப்டெம்பரில் வெளிவரவிருக்கும் ஐநாவின் அறிக்கையும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்கும். தென்னிலங்கை அரசியலைக் கவனத்திற்கொண்டு, மார்ச்சில் வெளிவரவிருந்த  ஐ.நாவின் விசாரணை அறிக்கையானது செப்டெம்பருக்குப்  பிற்போடப்பட்டிருக்கலாம்.

இத்தகைய அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிற அதேசமயம் வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியினையும் கவனத்திற்கொள்ளவேண்டும்.

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறைக் கொள்கை - QDDR 2015

Monday, August 10, 2015

தமிழர்களும் சர்வதேசமும் - Soft Power to Smart Power

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில் அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும்.இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அனுசரணை, வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவருகிறது.  இந்தமுறையும், தமக்குத் தேவையான பேரம்பேசும் ஆற்றலை வழங்கும்படி கேட்கிறார்கள். சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை, எல்லாவிதமான விடயங்களையும் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுப்பார்கள். அதற்கான சூழ்நிலை அமைந்துவராவிட்டால், அவற்றை அமைத்துக்கொள்ளுவார்கள். அப்படிச் சாதகமான சூழ்நிலை நிலவும் காலகட்டத்தில், தங்களது  பேரம்பேசும் அரசியல் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதம். ஆனால், வாக்குபலம் மட்டுமே பேரம்பேசும் சக்திக்கு போதுமானதாக அமையாது. சிறந்த பேச்சாளர்களும் அவசியம். 

2009 முதல் 2015 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  

2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை மௌனித்த பிறகு , 2010 ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவுடன் 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதன்பிறகு, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் மஹிந்த அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அரசினது ஆர்வமற்ற  மனப்பான்மையால் பேச்சுவார்த்தையானது  தோல்வியுற்றபின், சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கை அரசுக்கு அதிகப்படியான அழுத்தங்கள் வந்தது. அதோடு, அமெரிக்காவும்  ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்  இலங்கைக்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டுவந்து, அதில் வெற்றியும் கண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் பலம்பொருந்திய, சர்வாதிகார  உள்நாட்டு ஆட்சியில் அனைவரும்  குரல் கொடுக்கத் தயங்கியபோதுதான் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

 மஹிந்தவின் அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்கள் எதற்கும் அடிபணியாது நின்றது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியது. தனது ஆட்சி அதிகாரத்தைப் பறிப்பதற்குத் திட்டம் தீட்டப்படுகிறதென்பதை அறிந்த மஹிந்த அரசானது தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னராகவே அடுத்த தேர்தலுக்குச் சென்றது. அதன்பிறகு, 2015 ஜனவரியில் மஹிந்தவின் ஆட்சி அதிகாரமானது  எதிர்பாராத விதமாகப் பறிக்கப்பட்டது. அது  Silent revolution/Rainbow revolution என்று சிலரால் அழைக்கப்பட்டது.  இந்த மாற்றத்தின்  பின்னணியில் இந்தியாவின் செயற்பாடு வலுவாக இருந்ததாக தென்னிலங்கையில் விமர்சனங்கள் எழுந்தது. இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் மஹிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியப் புலனாய்வுத் தலைவரின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார். மஹிந்தவைத் தோற்கடிக்கவென மைத்திரி தலைமையில் தென்னிலங்கையில் ஒன்றுசேர்ந்த கூட்டமைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துகொண்டது. சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் ஆலோசனை இன்றித்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த முடிவினை எடுத்திருக்காது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 

இந்தியாவில் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்பட்டபின் பா.ஜ.கா அரசானது  ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முன்னைய அரசு போல அல்லாது, பா,ஜ.கா அரசின் வெளியுறவுக் கொள்கைகள் உறுதியானது என்பதே சில ஆய்வாளர்கள் கருத்து. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக  நியமிக்கப்பட்ட அஜித் டோவால் மிகவும் உறுதியானவர். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துபோவதைக் கடுமையாக எச்சரித்தார். இந்தியாவுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டிய அவசியம் இருக்கிறது.

2015 ஜனவரித் தேர்தல் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்துப் புதிதாக நிறையக் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கின்றன.  எதிர்ப்பு அரசியல் செய்வது அந்தக் கட்சிகளின் கொள்கையாகும். சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  நகர்வுகளைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள். இதே எதிர்ப்பைத் தான் சிங்களக் கடும்போக்கு கட்சிகளும் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவானது, இலங்கைக்கு எதிராக ஐநாவில் பிரேரணையைச் சமர்ப்பித்தது. இதைச் சிங்களக் கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவர்களும் எதிர்த்தார்கள். இதில் எந்தவிதமான இன்டலெக்சுவல்த்தனத்தையும் காணமுடியவில்லை.   ஆனால், தான் கொண்டுவந்த பிரேரணையை எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டுமென்பது அமெரிக்காவினது எண்ணமாகவிருந்தது . உலகின் தலைசிறந்த பேரம்பேசக்கூடிய பேச்சாளர்களைக் கொண்டிருக்கிற அமெரிக்காவானது, பெரும்பானைமையான நாடுகளின் ஆதரவைப் எப்படியோ பெற்றுக்கொண்டது. இதில் சுமந்திரனின் பங்கும் இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் மஹிந்த அரசின் நெருங்கிய நண்பராக இயங்கிவந்த அவுஸ்திரிலேயாவுடன்  பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு அவுஸ்திரேலியாவானது மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. கொஞ்சம் கடுமையாகவிருந்த பிரேரணையை நிறைவேற்றவதற்கு போதியளவு ஆதரவு இல்லாமல் இருந்தபோது, அதில் சில திருத்தங்களை அமெரிக்கா மேற்கொண்டது. அப்படி நிறைவேற்றப்பட்ட பிரேரணைதான் இன்றும் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருந்துவருகிறது.

அதன்பிறகு, முழுச் சமூகமும் இணைந்து மகிந்தவினை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற முற்பட்டவேளை, தமிழ்ச் சமூகத்தினை வாக்கினைப் புறக்கணிக்கும்படி சில கட்சிகள் கேட்டுக்கொண்டன. இறுதியில் சிறுபான்மை வாக்குகளே புதிய அரசின் சக்தியையும் தீர்மானிக்க உதவியாக இருந்தன.

2015க்குப் பின்னரான தென்னிலங்கை நிலவரம் 

சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரியின் அரசானது தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த இராணுவக் கெடுபிடிகளை அகற்றியதோடு, குறிப்பிட்ட அளவு காணிகளையும் மக்களிடம் கையளித்தது.  புதிய அரசின் இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் மஹிந்தவின் கூட்டம் தங்களுக்கு ஆதரவான இனவாத வாக்குகளாக மாற்றப் பார்த்தன.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்தல், கடும்போக்கான கருத்துகளைத் பொதுவெளியில் தெரிவித்தல் போன்ற செயற்பாடுகள் நிகழ்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால், அது தென்னிலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். "சர்வதேசமும் மைத்திரி-ரணில் அரசும் சேர்ந்து நாட்டைப் பிரிக்கப்போகிறார்கள்" என்கிற மஹிந்தவின் பிரச்சாரத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும். தென்னிலங்கை மக்களின் ஆதரவுடன், தமிழர்களின் பிரச்சனைய ஆராயத் தயாராகவிருக்கிற  ஒரு புதிய அரசு பாராளுமன்றம் வரவேண்டிய அவசியமிருக்கிறது. தென்னிலங்கையையும் சமாளித்துக்கொண்டு தமிழர் பிரச்சனையையும் தீர்த்து வைக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலை நிலவுகிறது. 

பேரம்பேசும் அரசியல் - சிறந்த Negotiators அவசியம் 


“In a negotiation, we must find a solution that pleases everyone, because no one accepts that they must lose and that the other must win... Both must win!” - Nabil N. Jamal

பேரம்பேசுதல் நிகழும்போது இருதரப்பும் வெற்றிபெறவேண்டும். சிறந்த முறையில் பேரம் பேசக்கூடிய சக்திகளையும் நபர்களையும் கொண்டே தற்போதைய உலக அரசியல் இயங்கிவருகிறது. அணு ஆயுத ஒப்பந்தங்கள் முதல் உள்ளூர்க்  கைத்தொழில் ஒப்பந்தம் வரைக்கும் எத்தனையோ விடயங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள். அமெரிக்காகூட 'hard power' எனும் கொள்கையிலிருந்து 'smart power' எனும் கொள்கைக்கு நகர்ந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திலிருந்து நிறையப் பேச்சாளர்கள், இன்டெலெக்சுவல்ஸ்,சமூக அமைப்புகள் உருவாகவேண்டிய காலகட்டம் இது. 

ரணில் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குப் பின்னரான அரசியல் 

ரணிலின் தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ரணில் பிரதமரானதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். அதில் தங்கள் பேரம்பேசும் பலத்தைக் காட்டவேண்டிய கட்டாயம் தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது. உள்நாட்டிலேயே பேசிக்கொண்டிருக்காமல் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சரியான உறவைப் பேணவேண்டும். செப்டெம்பரில் வெளிவரவிருக்கும் ஐநாவின் அறிக்கையும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்கும். தென்னிலங்கை அரசியலைக் கவனத்திற்கொண்டு, மார்ச்சில் வெளிவரவிருந்த  ஐ.நாவின் விசாரணை அறிக்கையானது செப்டெம்பருக்குப்  பிற்போடப்பட்டிருக்கலாம்.  

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறைக் கொள்கை - QDDR 2015

Thursday, August 6, 2015

அகமருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம் : சிறுபேச்சு 6

மலையாளத் திரைப்படங்களைப் போலவே மலையாளப் பாடல்களும் இசை, மொழி அடிப்படையில் மென்மையை இழந்துவிடவில்லை. இயல்பிலேயே இனிமையான மொழிக்கு, வரிகளைப் பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் கவிஞர்கள் மயக்குகிறார்கள். சில நாட்களாகவே இந்த இரண்டு பாடல்களையும் மனதில் இருந்து நீக்கமுடியவில்லை. ஒன்று, அல்போன்ஸ் புதிரன் இயக்கிய 'பிரேமம்' என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற 'மலரே' என்கிற பாடல்.  விஜய் ஜேசுதாஸின் குரலில் ஒரு அனுராக கீதம்.

♫ குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகமருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம் ♪ ♫ இரண்டாவது, 1983 என்கிற படத்தில் இடம்பெற்ற  ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இணைந்து பாடிய 'ஓலன்ஞாளிக் குருவி' என்கிற பாடல். நிறைய வருடங்களுக்குப் பிறகு  வாணி ஜெயராமும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடிய பாடல். மெட்டுப்போலவே பாடலில் இழையோடுகிற கொஞ்சல் அழகு.
Saturday, July 11, 2015

பாகுபலி

நீங்கள் வரலாற்றுப் படங்களிலும் அதன் காட்சியமைப்பிலும் திளைப்பவராக இருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சின்ன வயதில் மகாபாரதக் கதைகளைப் படித்து, குருச்சேத்திரப் போரைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் மிகப் பிடித்தமானதாக அமையும். எங்கள் வரலாற்றிலும் சூப்பர் ஹீரோக் கதைகள் உண்டு. அதைக் கற்பனை கலந்து நேர்த்தியான 'பிரமாண்டம்'  கொடுக்க யாரும் முன்வர மாட்டார்களா என்கிற ஏக்கம் பலருக்கும் இல்லாமல் இல்லை.

'நான் ஈ' என்கிற காதல், fantasy கலந்த திரைப்படத்துக்குப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம்தான் 'பாகுபலி'. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காகக் கிட்டதட்ட மூன்று வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது  ராஜமௌலியின் பதினோராவது படம். 'பாகுபலி' ஒரு  கற்பனை கலந்த வரலாற்றுக் கதையாக அமைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.


பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், ரானா, சத்தியராஜ், நாசர் என்று நடிகர்கள் பலரும் இருக்க, ராஜமௌலியின் விருப்பத்துக்குரிய ஒளிப்பதிவாளரான செந்தில்குமார் அழகான காட்சி வடிவங்களைக் கொடுத்திருக்கிறார். அருந்ததி, மகதீரன், நான் ஈ போன்ற படங்களில் பணியாற்றியவர். ஒளிப்பதிவிலும் பிரமாண்டம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புராணகால கதைக்குத் தேவையான அத்தனை பிரம்மாண்டத்தையும் ஒரு நேர்த்தியான உழைப்பின் மூலம் தந்திருக்கிறார்கள். வரலாற்றுப் படங்களுக்குத் தேவையான  நேர்த்தியான பிரமாண்டத்தைத் இந்தியச் சினிமா கண்டிருக்காது எனலாம்.

பேரரசில் நிலவும்  ராஜதந்திரச் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றப்படும் இளவரசன் தன்னுடைய பின்னணி தெரியாமலேயே வேறொரு இடத்தில் வளர்கிறான். சில காரணிகளாலும் ஏதோவொரு தன்னிச்சையான உந்துதலாலும் விடைகளைத் தேடித் புறப்படுகிறான். இறுதியில் தான் யார் என்பதைக் கண்டடைந்து தனது பணிகளை நிறைவேற்றுகிறானா என்பதுதான் கதையின் சுருக்கமான அமைப்பு. புராணகாலக் கதைகளுக்கே உரிய வடிவம் என்றாலும் அவற்றைக் காட்சிப் படிமங்களாக அமைத்த விதம்தான் ஆச்சரியப்படவைக்கிறது.

தமன்னா , பிரபாஸ் இடையிலான காதல்க் காட்சிகள், உக்கிரமான போர்காட்சிகள் என   அனைத்திலும் பிரமாண்டம் தெரிகிறது. பிரமாண்டம் என்று தேவையற்ற செலவுகளைச் செய்யாமல், கலைகளிலும் நல்ல கற்பனைத் திறனுள்ள காட்சியமைப்பிலும் பிரமாண்டம் காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் பாராட்டப்படவேண்டியது. யுத்தக் காட்சிகளில் எல்லாம் தேவையான அளவுக்கு கற்பனையைச் செலுத்தியிருக்கிறார். Lord of the rings மாதிரிச் சண்டைக் காட்சிகளைப் போல  நம் புராணக் கதைகளை  எடுத்துக் காட்டமாட்டார்களா என்று எண்ணியதுண்டு. இந்தியச் சினிமா அதை ராஜமௌலி மூலம் ஓரளவுக்கு கண்டிருக்கிறது எனலாம். 

மகாபாரதத்தில், குருசேத்திரப்போரில் மட்டுமே கேள்விப்பட்ட 'திரிசூல வியூகம்' போன்றவற்றைக் காட்சியமைப்பில் சிறப்பாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார். படத்தில் வருகிற அரண்மனைக் காட்சிகள், பாத்திரப் படைப்புகளில் எல்லாம் படத்துக்கு மேலும் பலமான விஷயங்கள். 

தமிழில் இதற்குத் தேவையான அத்தனை உழைப்பையும் மதன் கார்க்கி கொடுத்திருக்கிறார். வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி தான் எழுதியிருக்கிறார். கள் குடித்து மகிழும் கூடத்தில் 'உருக்கியோ... நட்சத்திரத் தூறல்' என்றொரு பாடல். அழகான தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருக்கிறார் மதன்கார்க்கி. அந்த பாடலில் வருகிற நேர்த்தியான நடன அமைப்பையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

படம் எதிர்பாராத விதமாக திடீரென்று முடிந்தது போல தோன்றினாலும், இரண்டாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. வீணான காட்சியமைப்புகளில் பணத்தைச் செலவழிப்பதைவிட தேவையான காட்சிகளுக்கு மேலும் பிரமாண்டம் கூட்டுவது தான்  அவசியம். அதை  நேர்த்தியாகச் செய்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராஜமௌலி. 

Monday, July 6, 2015

ஜூலை மலர்களே!

ஜூலை மாதம் என்றாலே சட்டென்று இரண்டு பாடல்கள் நினைவைத் தட்டும். ஒன்று, ரஹ்மானின் இசையில் அனுபாமா பாடிய "ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு" என்கிற பாடல். இன்னொன்று, "ஜூலை மலர்களே... ஜூலை மலர்களே...உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்" என்கிற பா.விஜயின் வரிகள். 

கொன்றைப் பூக்கள் ஜூலை மாதத்தில் பூக்கும். மரம் முழுவதும் நிறைந்திருக்கும். அதனால் "ஜூலை மலர்கள்" என்கிறார் பா.விஜய். கொன்றைப் பூக்களைத் தான் "ஜூலை மலர்கள்" என்றிருக்கவேண்டும். கொன்றைப் பூக்கள் அவ்வளவு அழகு. ஆனால் சிங்கள மொழியில் இதனை "Esala Mal" என்று அழைப்பார்கள். அதாவது ஜூலை மலர் என்று அர்த்தம்.

"கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்"சங்ககாலத்தில் கொன்றைப் பூவின் நிறத்தை பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவார்கள்.  சிவனுக்குப்  பிடித்தமான பூ என்பதால் சிவனைக் 'கொன்றை வேந்தன்' என்றும் அழைப்பதுண்டு.

வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு 

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்  
    
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் 
    
கானங் காரெனக் கூறினும்  

யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.
   
இந்தக் குறுந்தொகைப் பாடல் கொன்றையைப் பற்றிப் பேசுகிறது. கொன்றையைப்  பெண்களுக்கு ஒப்பிட்டிருக்கிறார் ஒதலாந்தையார் .

இதன் பொருள் மிகவும் அழகானது. என்னோட அவர் பொய் சொல்லமாட்டார். கார் காலத்துக்கு முதல் வருவேன்னு சொன்னார். இந்தக் கொன்றையைப் பார்க்கப்  பெண் மாதிரி தோன்றினாலும் அது பெண்ணல்ல என்று தெளிவதுபோல , இந்த கொன்றைப் பூக்கள் கார்காலத்தை சொன்னாலும் அதை நான் நம்பமாட்டேன். ஏனென்றால் என்னோடை அவர் பொய் சொல்லமாட்டார். கார்காலம் என்றால்  இந்நேரம் வந்திருப்பார்.

அதைத்தான் கொஞ்சம் கவிதாயாக்கி  " ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே " என்றார் வைரமுத்து.


Friday, July 3, 2015

பாபநாசம்


கமல்ஹாசன் நடித்த பாபநாசம் என்கிற திரைப்படத்தை வெளியிடப்பட்ட தினமான இன்றே பார்க்கக்கிடைத்தது. கமலுக்கு ஒரு தரமான சினிமா அமையவேண்டும் என்பதுவே எனது  நீண்டநாள் எதிர்பார்ப்பு. இந்தத் திரைப்படம் அதனைப் பூர்த்தி செய்திருக்கிறது. 

பாபநாசம் என்கிற ஊரில் மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சனை  ஒரு குற்றச்செயலில் போய் முடிகிறது. குற்றத்தை மறைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை.  ஒரு சாதாரண மனிதனின் புத்திசாலித்தனத்துக்கும் போலீஸ், சட்டம் போன்ற அமைப்புக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தப்படம்.


மோகன்லால் நடித்த  'திருஷ்யம்' என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். இரண்டுக்கும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து  இயக்கியது ஜீது ஜோசெப் என்கிற இயக்குனர். 

நடிப்பைப் பொறுத்தவரையில் அந்தந்தக் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் கமலின் நடிப்புத்தான் ஒட்டுமொத்தப் படமுமே என்றும் சொல்லலாம். ஒரு சாதாரண மனிதனின் நிலை தடுமாற்றம் காணவேண்டிய இடத்தில் தடுமாற்றத்தையும், தைரியம் கொள்ளவேண்டிய இடத்தில் தைரியத்தையும் வரவழைத்துக்கொள்கிறது. அந்தந்த நிலைகளையும் உணர்வுகளையும் தன் நடிப்பிலேயே சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதிக் காட்சி ஒன்றில்  குற்றவுணர்வையும் துயரத்தையும் ஒன்றாக வெளிப்படுத்தும்போது 'இதுதான் கமல்' என்று சொல்லத்தோன்றியது. மிகவும் பொருத்தமான கதாப்பாத்திரத் தேர்வுகள். அதிலும் அந்த Esther Anil என்கிற குட்டிப்பெண்ணின் நடிப்புப் பிரமாதம்.

தமிழில் நல்ல சினிமாக்கள் வெளிவருவது  குறைவு. இந்த வாரத்தில் காக்கா முட்டை , பாபநாசம் போன்ற நல்ல திரைப்படங்களைப் பார்க்கக்கிடைத்தது.

Tuesday, June 30, 2015

கண்ணதாசன்

கம்பராமாயணத்தில் வருகிற வரைக்காட்சிப்  படலத்தில் "பானல் அம் கண்கள் ஆட. பவள வாய் முறுவல் ஆட" என்று  ஒரு அழகான பாடல். சந்திர சயிலத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள். அப்போது என்னவெல்லாம் அசைகிறது எனக் கம்பன் சொல்லுகிறார்.  இதைப் படிக்கும்போது கண்ணதாசன் எழுதிய "கட்டோடு குழலாட ஆட" என்கிற பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது. வாசிக்கும்போதே இனிக்கிறது. இரண்டு தோழிகள் நடனமாடிகொண்டும் சுதந்திரமாகப் பாடிக்கொண்டும்  போவதுபோல அமைந்த  பாடல். அப்படிப் போகிறபோது என்னவெல்லாம் ஆடுகிறது என்று சொல்லும் பாட்டு. கண்ணதாசனின் சொற்கள்கூட கொடிபோல ஆடும்.

கண்ணதாசனின் இந்தப் பாடலை  எல்லோரும் மாணிக்கவாசகர் இயற்றிய  திருவெம்பாவைப் பாடலுடன் ஒப்பிடுவார்கள். ஒருசில வரிகளை மட்டுமே ஒப்பிடமுடியும். பெண்கள் நீரினைக்  குடைந்தாடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனச் சொல்லும் திருவெண்பாவைப் பாடல்.

//காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட// இதனைப் பிரித்து எழுதினால் இப்படி அமையும்.

காது ஆர் குழை ஆட
பைம்பூண் கலன் ஆட
கோதை குழல் ஆட
வண்டின் குழாம் ஆட

பெண்ணானவள்  நீரினில் இறங்கிக் குளிக்கும்போது காதில் பொருந்திய குழைகளுடன் சேர்ந்து பொன்னாலான அணிகலன்களும் ஆடுகின்றன. அவளுடைய கூந்தல் ஆடுகிறது. அதனால் அதிலுள்ள மாலை அசைகிறது. அவர்கள் மூழ்கும்பொழுது அதிலிருக்கிற வண்டுகள் எல்லாம் எழுந்து ஆடுகின்றன.

ஆனால் கண்ணதாசன் மேலதிகமாக கிராமியப் பாடலுக்குரிய சொற்களைப் பயன்படுத்தியிருப்பார்.

பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
முதிராத நெல்லாட ஆட
முளைக்காத சொல்லாட ஆட
உதிராத மலராட ஆட
சதிராடு தமிழே நீ ஆடு

பெண்கள் ஊஞ்சல் ஆடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் சொல்லுகிறார்.

பானல் அம் கண்கள் ஆட
பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட
பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட
திரு மணிக் குழைகள் ஆட

தசரதனும் அவனது படைகளும் சந்திர சயிலத்தில் கண்ட காட்சிகள் இவை. 

Saturday, June 27, 2015

கண்ணுக்கு அணி! - சிறுபேச்சு 5


கோலம் காண் படலத்தில் சீதையை அலங்கரிக்கிற காட்சில ஒரு குட்டி சினிமாட்டோகிராபியே நடத்தியிருக்கிறார் கம்பன். மெதுவாக நகர்கிற  காட்சிகள்  வைத்த  மாதிரி. 


'அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு
அணி என அமைக்குமாபோல் '

கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுதல் எல்லாம் அழகல்ல. கண்ணைப் பாதி மறைக்கிற மாதிரி அமைந்திருக்கிற இமைகள்தான் கண்ணுக்கு அழகு. அதுமாதிரித்தான் சீதைக்கு நகைகள் அணிவித்து அலங்கரிப்பது. நகைகள் சீதையின் அழகினை மறைப்பது  இன்னும் அழகு.  அழகுக்கு அழகு சேர்ப்பது மாதிரி இருக்கிறது. பிறகு, braided messy bun வடிவில் சிகை அலங்காரம். சுட்டி, காதணிகள், வளையல்கள்  அணிதல், இடையினில் ஓவியம் தீட்டுதல் பற்றிச் சொல்லுகிறார். சீதைக்கு அணிவிக்கப்பட்ட முத்துக்களால் ஆன இடையணியின் ஒளி, பட்டின் நிறம், சீதையின் செந்நிற மேனியின் நிறம் எல்லாம் சேர்ந்து புறப்பட்ட கலவையான வண்ணமும் ஒளியும் அலங்கரிப்பவர்கள் கண்களைக் கூசச் செய்ததாம் என்கிறார். 


Wednesday, June 17, 2015

நியூட்ரினோ - The Hindu கட்டுரை

தேனி மாவட்டத்தில் நடக்கவிருக்கிற நியூட்ரினோ ஆய்வு பற்றி அப்துல்கலாம் ஹிந்துவில் எழுதியிருக்கிறார். இந்தப் பிரபஞ்சம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முதல் எப்படி உருவானது என்கிறதை அறிய நியூட்ரினோ உதவும். Big Bang நிகழ்ந்த கணத்திலிருந்து தோன்றிய நியூட்ரினோக்கள் இன்றும் பிரபஞ்சத்தில் விரிகின்றன என்கிறார்கள்.

நியூட்ரினோக்கள் மூலம் ஆதி மூலத்தைக் கண்டுபிடித்தால், அந்தக் கணம்வரை கடவுளுக்கு வேலை இல்லாமல் போய்விடும். இந்தத் தியரிகள் புரியுதோ இல்லையோ, 'அந்த big bang நிகழ்த்தினது யாரு'ன்னு திரும்ப ஒரு கேள்வி கேட்டுவிட்டு புத்திசாலி மாதிரி சிரிப்பார்கள்! அப்பிடியானவங்ககிட்ட, 'இன்னைக்கு மதியச் சாப்பாடு நல்லாவே இல்லை. கேவலமான கம்பினேஷன்' னு சொல்லீட்டு எஸ்கேப் ஆகவேண்டியதுதான். அறிய விரும்புபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களுக்காக தமிழில் நிறைய அறிவியல் விஷயங்கள் எழுதப்படவேண்டும். 
தமிழ்ச் சூழலில் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸில் அதிகூடிய புள்ளிகள் எடுத்து பெருமைப்பட்டுக்கொண்டவர்கள் யாரேனும் இருந்தால், இவற்றை எளிமையாக விளக்கி டீடெயிலான கட்டுரைகள் எழுதலாம். ரிச்சர்ட் பிரன்ஸனுக்குக் கூட நேரம் மிச்சமாகுமாம் என்று படித்தேன்.

உரையாடல்கள் - Concise dialogues

சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை' என்கிற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிலும், நிஜத்திலும் நல்ல உரையாடல்கள் என்பது அரிது. மணிரத்னம் படங்களில் காதலர்கள்கூட புத்திசாலித்தனமாக பேசிக்கொள்வார்கள். சுருக்கமாகப் பேசினால் 'என்ன மணிரத்னம் படம் மாதிரி பேசுற. ஒன்னுமே புரியல' ம்பாங்க. இப்போது ஒன்னுமே புரியல என்பது 'முயற்சிப்பது' என்பதைத் தாண்டி கேலியாக மாறிவிட்டது. 

 'Concise dialogues' னு சொல்லலாம். இதை எழுதுறதுல மணிரத்னமும் சுஜாதாவும் வல்லவர்கள். இலத்தீன் வார்த்தையான 'concisus' இலிருந்து உருவானது. ரியாலிட்டிக்கு கொஞ்சம் ஒத்துவராதது போலத் தெரிந்தாலும், அப்படிப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். வார்த்தை விரயமின்றி ஒருசில வார்த்தைகளிலேயே நிறையத் தகவல்களை உள்ளடக்கி சொல்லவருகிற விஷயத்தைச் சொல்லுவது முக்கியம். தட்டையாக இல்லாமல் அடுத்தவருக்குக் கொஞ்சம் மூளையும் மேலதிகமாக வேலை செய்யும். ஒரு புதிர் மாதிரியும் இருக்கலாம். அதை உடைப்பது சுவாரசியம். முரண்பாட்டை உரையாடல்களில் நேர்த்தியாக வெளிப்படுத்தும்போது ஒரு வாசகரைக் கொட்டாவி விடாமல் வைத்திருக்கலாம். அதிர்ச்சிக்கு உள்ளாக்குதல் அடிக்கடி நிகழும்.


'உங்களுக்கு 'ஸ்பைஸ் கேர்ள்ஸ்' பிடிக்குமா?'
'ஏன்!'
'சும்மாதான் நீங்க என்ன டைப்புனு தெரிஞ்சுக்க'
'இல்ல.. நித்யஸ்ரீ'
'கொரியா ஏறக்குறைய தமிழ்நாடு சைஸ் , மக்கள் தொகையும் ஏறத்தாழ நாலு கோடி அறுபத்தஞ்சு லட்சம். எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்க 98 பர்சன்ட்! தமிழ்நாடு மாதிரித்தான் விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தவங்க. திடீர்னு கப்பல், மோட்டார் கார், டெக்ஸ்டைல், எலெக்ட்ரோனிக்ஸ்னு தாவினாங்க. ஆயிரம் மடங்கு ஏற்றுமதி அதிகப்படுத்தினாங்க.'
'எக்ஸ்கியூஸ் மீ ... எதுக்காக இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க'
'சும்மா இம்பிரெஸ் பண்ணலாம்னுட்டு'
'நான் இம்பிரஸ் ஆகல... இந்தப் புள்ளி விபரம்லாம் மனோரம்மா இயர்புக்ல கிடைக்கும்.'
'வார்றீங்களே.. நித்யஸ்ரீ குரல்ல ஒரு அழுத்தம், அதட்டல் இருக்கும். எனக்கும் பிடிக்கும்.
இருவருக்கும் காப்பி எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் ஆவலுடன் உட்கார்ந்தான்.
*****
திரைப்படத்தில் இதன் பங்கு முக்கியமானது. நிறைய உதாரணங்களைக் காட்டலாம். ஆய்த எழுத்து படத்துக்காக சுஜாதா எழுதிய வசனங்கள் சிறப்பு.
"How about a coffee"
"அர்ஜுன் ! எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சு! புரியுதா!"
"Just a coffee. ஒரு கப். புனிதம் கெடாத coffee. whats the problem?"

"கல்யாணங்கிற institution எல்லாம் சும்மா. சொஸைட்டிக்காக.. ஊர்ல ஒத்துக்கணும்னு.. நாமதான் சொஸைட்டிக்காக எதுவுமே செய்றதில்லையே! இதை மட்டும் எதுக்கு செய்யணும்?"

Friday, June 12, 2015

முடிவுகளைத் திருப்திப்படுத்தல் - சிறுபேச்சு 4

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏராளமான முடிவுகளை எடுக்கிறோம். இன்றைக்கு என்ன கலர் ஆடை போடுவது, என்ன உணவை எடுத்துச்செல்வது, எந்தப் பக்கத்துக்கு காலுறையினை முதலில் போடுவது என ஏராளமான முடிவுகளை நம் மூளை எடுக்கும். சில முடிவுகள் தன்னிச்சையாக நிகழ்பவை. ஒரு பொருளை வாங்கும்போது மிகச்சிறந்தது எதுவென்று தேடுவதில்லை. காரணம், நம் முன்னே ஏராளாமான தெரிவுகள் இப்போது வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்டளவு முடிவுகளைத்தான் நம் மூளை எடுக்கிறது என்பது நியூரோலோஜிஸ்ட்களின் கருத்து. அதிலும் குறிப்பாக,  ஒரு விடயத்தை அதிமுக்கியமானது என தீர்மானிப்பதில்லையாம். 

1978ல் சைமன்(Herbert A.Simon) எனும் பொருளாதார வல்லுனருக்கு நோபல் பரிசு கிடைத்தது. நிறுவனங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களையும், அவை எடுக்கப்படும் முறைமையினையும் ஆராய்ந்தவர்.  நாம் எல்லோரும் அவர் அறிமுகப்படுத்திய 'திருப்திப்படுதல்' என்கிற கருத்தை பின்பற்றுகிறவர்கள். ஒரு தீர்மானம் எடுக்கிறபோது நாம் எல்லோரும் பின்பற்றுகிற சிந்தனைச் செயற்பாட்டுக்கு அவர் ஒரு சுருக்கமான சொல்லைத் தேடினார். ஒரு மிகச் சிறந்த தெரிவினை எடுக்கமுடியாது போகும்போது நாம் இருப்பதிலேயே 'பரவாயில்லை' என்கிற முடிவை எடுப்போம். அதாவது ஒரு பொருளைத் தேர்வு செய்யும்போது இது இருக்கிறதிலேயே பரவாயில்லை ரகம் என்று தீர்மானித்துக்கொள்வோம்.

இருப்பதை, கிடைத்ததை  வைத்து திருப்திப்படுகிறவர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள் என்று மேற்கொள்ளப்பட்ட  சமூக உளவியல் ஆய்வுகள் சொல்கிறது. ஆனால் அதை நம் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானங்களில் செயற்படுத்த முடியுமா ? 

2015ம் ஆண்டிற்கான  பணக்காரர்கள் பட்டியலினை Forbes சஞ்சிகை வெளியிட்டது.  அதில் Warren buffet மூன்றாம் இடத்தினைப் பிடித்திருந்தார்.  1958ல் வாங்கிய அதே வீட்டில்தான் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். இருப்பதை வைத்து திருப்திகொள்ளவேண்டும் என்பது அவரது கருத்து. கிழமை நாட்களில் நியூயோர்க் நகரத்துக்குச் செல்லும்போது காலை உணவுக்காக  ஒரியோ குக்கீஸ் மற்றும் ஒரு கலன் பாலையும் கொண்டுசெல்வது வழக்கம் என ஒரு வானொலிப்பேட்டியின்போது  சொன்னார். ஆனால் முதலிடுதல் என்று வரும்போது அவரின் கொள்கைகள் வேறுவிதமானது. மிகச் சிறந்த முடிவுகளையே அவர் எடுத்திருக்கிறார்.  அவரைப் பொறுத்தவரை முக்கியத்துவம் பெறாத விடயங்களில் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள மட்டுமே நாம் திருப்தி அடையவேண்டும் என்பதுதான்  அவரது கருத்து. 

Warren buffet பற்றி ஒரு நல்ல ஆக்கம் . http://www.wsj.com/articles/lessons-from-50-years-of-buffett-1430527313

Friday, June 5, 2015

இயோபின்டே புஸ்தகம்.

1975ல் இந்திரா காந்தியின் அரசினால், இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்திலிருந்து பின்நோக்கி நகருகிற கதைக்களம். கதைசொல்லியாக ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறார். அரச ஆணையின்படி தான் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்து, தான் பார்த்தவற்றை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பிக்கிறார்.


நீலகிரி, மூனாரில் ஆங்கிலேயர்கள் தேயிலைப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்த காலம். 1900ம் ஆண்டளவில் ஜாக்ஸன் என்கிற ஆங்கிலேய அதிகாரிக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அடிமைகளை அடக்கியாள இயோப் என்கிற உள்நாட்டு இளைஞனை ஜாக்ஸன் நியமிக்கிறார். இயோபிற்கு திருமணம் முதலான ஆதார காரியங்களைச் செய்துவைக்கிறார். ஜாக்ஸன் இறந்தபின்னர் இயோப்பின் கைக்கு அதிகாரமும் உரிமையையும் மாறுகிறது. பிரிடிஷ்காரர்கள் போலவே இயோபின் ஆட்சியும் அமைகிறது.
இயோப்பிற்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. முதல் இருவரும் தந்தையைப் போலவே வன்முறை செய்கிறவர்கள். மூன்றாவது பிள்ளையான யோஷி(Farhadh Fazil) தனது தாயைப் போல அமைதியும் அன்பும் கொண்டவன். சில காலங்களில் நோயின் காரணமாக தாய் இறந்துவிடுகிறாள். தன்னுடைய சகோதர்கள் செய்யும் கொலையைப் பார்த்துவிடும் யோஷி தப்பித்து ஓடி, பிரிட்டிஷ் அரசின் ரோயல் நேவியில் இணைகிறான். மீண்டும் திரும்பிவந்து தன்னுடைய குடும்பத்தையும் காதலையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. பத்மப்பிரியாவின் கதாப்பாத்திரம்தான் கதையின் ஓட்டத்துக்கு சுவாரசியமானது. எனக்கு ஆரண்ய காண்டத்தை நினைவுபடுத்தியது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பு, கதைக்களம், ஆர்ட் டிரெக்க்ஷன் என்று ஒரு பீரியட் படத்துக்குரிய அத்தனை அம்சமும் உண்டு.

Thursday, June 4, 2015

மனதோடு பேசலாம் - நிகழ்ச்சி

கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் ஆலமரம், செம்புன்னு காலம்  போய், சோபா செட்டு கண்ணாடி கிளாஸ்னு ட்ரெண்டு மாறிப்போச்சு. அதனாலேயே கொஞ்சக் காலமாக மற்றவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன்  என்று ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சிகள் மீது எதிர்மறையான கருத்து வைத்திருந்தேன். எந்த  டிவி சானலுக்கு மாற்றினாலும் 'இதோ அறிவுரை சொல்லுகிறேன்' என்று பலபேர் காத்திருக்கிறார்கள். இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி, நிபுணத்துவம் அற்றவர்கள் எல்லோரும் மற்றவர்களின் வாழ்வில் தலையிட்டு  ஏதேதோ குழப்பம் செய்து பணம் பார்க்கிறார்கள். தங்கள் டிஆர்பி ரேட்டினை  உயர்த்திக்கொள்ளவதற்கு பிரச்சனைகளை அணுகுகிறார்கள்.  எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அதே நோக்கம் இருந்தாலும் சில நிகழ்ச்சிகளில் கொஞ்சமேனும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன்.

தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் 'மனதோடு பேசலாம்' எனும் நிகழ்ச்சியினைத் தற்செயலாகக் காணக்கிடைத்தது. நான் பார்த்தவரையில் நிபுணத்துவம் பெற்ற உளவியல் ஆலோசகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் பொதுவான ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு, அருகிலிருக்கும் உளவியல் நிபுணரைப் பாருங்கள் என்கிறார்கள். 

"நான் விரும்பி கல்யாணம் செய்துகிட்டேன். என் கணவர் பிரச்சனை பண்ணுகிறார். அவரோடு சேர்ந்து வாழலாமா? வேண்டாமா?"  என்று உளவியல் ஆலோசகரிடம் ஒரு பெண் தொலைபேசியில் கேட்டு வைத்தார்.

உண்மையில் உளவியல் நிபுணர்கள் என்பவர்கள் இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி தீர்ப்புச் சொல்லுபவர்கள் அல்ல. பிரச்சனைகளைச் செவிமடுப்பவர்கள். தங்களின் பயிற்ச்சிகளின் மூலம் தகுதியான கேள்விகள் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களைப்  பேசவைத்து, அவர்களிடமிருந்தே தீர்வை எதிர்பார்ப்பவர்கள். டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்கு ஏதும் புரட்சி பண்ணிடுவாரோ என்று நினைத்தேன். "தீர்மானம் நீங்கள் தான் எடுக்கவேண்டும். எந்த உளவியல் நிபுணரும் முடிவு சொல்லமாட்டார்கள். நீங்களாக ஆராய்ந்துதான் முடிவு எடுக்கவேண்டும். ஒரு நல்ல உளவியல் நிபுணராகப் போய் பாருங்கள்" என்று  இயல்பாகப் பதில் சொன்னார். அழகான பதில். 

நல்லவேளை அந்தப் பெண் கடும்போக்கு  மாதர் சங்கப் பக்கம் ஏதும் போகவில்லை. போயிருந்தால், அவர்களே முடிவைச் சொல்லியிருப்பார்கள்!

Thursday, May 28, 2015

வன்முறைகளின் உளவியல் 2 Cognitive behavioural therapy - சிறுபேச்சு 3


குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பங்கு பெரியது. அவற்றைப் பற்றிப் பேசுகிற புத்தகம்தான் "The Young Mind". குழந்தைகள் தங்கள் வளர்ச்சியில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை ஆராய்வதோடு அதற்குரிய சரியான உளவியல் வழிகாட்டல்களை எப்படி அணுகுவது என ஒரு கட்டமைப்பை நிறுவியிருக்கிறது.பாடசாலையில்  தனது நண்பி தன்னைப் பார்த்து சிரிக்கவில்லையென்று ஒரு மாணவி வருத்தப்படுகிறாள் என்று வைப்போம். இதை வைத்து தனது நண்பிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அந்தக் குழந்தை எண்ணிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், தான் அழகில்லாமலும், போரிங் டைப்பாகவும் இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்ளும். யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று தன்னம்பிக்கையின்றி அழுத்தத்துடன் இருக்கும். சிலர் தங்களைத்  தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சிலவேளைகளில் பாடசாலைக்குப் போவதையே நிறுத்திவிடும். இந்தமாதிரியான எதிர்மறை எண்ணங்கள் எதிர்காலத்தை எப்படியெல்லாமோ மாற்றக்கூடும். அடுத்தவர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தகூடியவர்களாக மாற்றும். ஒரு சிறிய விடயம் எவ்வளவு தூரம் வளரக்கூடும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.

சில குழந்தைகளுக்கு நாய்களைக் கண்டால் அதீத பயமிருக்கும். உதாரணமாக இரவுகளில் அவை தொலைவில் குலைத்தாலும் இவர்களுக்கு பயம்  வந்துவிடும். உளவியல்ல இதை  "Cynophobia" என்று சொல்லுவார்கள். இதற்குக்கூட மேற்குலக நாடுகளில் உளவள ஆலோசனை உண்டு.  CBT (cognitive behavioural therapy) என்று சொல்லுவார்கள்.  அதாவது பேச்சின் மூலம் ஒருவரின் ஆதார எண்ணங்களையும் பிரச்சனைகளையும்  மாற்றுவார்கள். அங்கு சைனோபோபியாவைக்கூட சீரியஸ் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தீர்க்க முற்படுகிறார்கள். ஆனால் இங்கு சிறுவர் துஷ்பிரயோகம் முதற்கொண்டு, தீவிர உளவியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளை கவனிக்க மறுக்கிறார்கள். இப்படியானவர்கள்தான் போதைப்பொருள் பாவனை, வன்முறை மாதிரியான விஷயங்களைக் கையில் எடுக்கிறார்கள் என்கிறது மேற்குலகின் ஸ்டடிஸ்டிக்ஸ். 

சமூகத்தில் நிலவும் வன்முறைகளுக்கான தீர்வு என்று பேசும்போது எல்லோரும் எப்போதுமே சட்டத்தையும் கட்டுப்பாடுகளையும்தான் பேசுகிறார்கள். எந்தவொரு பிரச்சனை என்றாலும் அது அங்கேயே ஆரம்பித்து அங்கேயே முடிகிறது என்பதுதான் பெரும்பாலோனோரின் அடிப்படைச் சிந்தனை. அதிலிருந்து அறிவுரைகளைச் சொல்லுகிறார்கள். 

முதலில் ஒருவர் அடுத்தவர் மீது பிரயோகிக்கும் உளவியல் வன்முறைகளை  நிறுத்தவேண்டும். உளவியல் வன்முறைக்கு பெண்ணியமும் ஆணாதிக்கமும் தெரியாது. அதனை முழுதாக நிறுத்தமுடியாவிட்டாலும்,   சரியான உளவள ஆலோசனைகள் வழங்கும் கட்டமைப்பு நிறுவப்படவேண்டும். பாடசாலைகளில் இருந்து வீடுவரைக்கும் அந்த உளவியல் அறிவுரை வழங்கும் கட்டமைப்பு விரிவாக்கப்படவேண்டும். 

வடக்கின் தேவை : Entrepreneurship or Social entrepreneurship ? : சிறுபேச்சு 2

நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில்  "Moving from aid to entrepreneurship" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. வடக்கின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தைச் சொல்லியிருந்தது அந்தக் கட்டுரை. இருந்தாலும் உள்ளிருக்கும் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னேறுவது பற்றி அந்தக் கட்டுரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஒரு பொருளாதார அறிவுரையாளரிடம் இருந்து  எல்லாவற்றையும்  எதிர்பார்க்கவும் முடியாது.

நிறையத் தன்னார்வ நிறுவனங்களும், சில நாடுகளும் வடக்கிற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்யக் காத்திருக்கின்றன. ஆனால் அந்தந்தச் சமூகத்தில் இருக்கிற மக்கள்தான் அதற்கு ஆர்வம் காட்டவேண்டும். வருகிற உதவிகளை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் பலர்  இருக்கிறார்கள். அரச  வேலைவாய்ப்புத்தான் வேண்டுமென்று கேட்கிறார்கள். அது கிடைக்கும்வரையாவது சுயதொழில் முயற்சிகளில் இறங்கமாட்டேன் என்கிறார்கள். தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக, உலகில் தோற்றுப்போன கொள்கைகளைப் பரப்பி இளைஞர்களைத் திசைதிருப்புபவர்கள் மலிந்துபோயிருக்கிறார்கள். 

சமூகத்தின் உள்ளிருந்து  புதிதாகத் தொழில் முனைவோர்கள் வரவேண்டும். குறிப்பாக வெளியிலிருந்து முதலிடுபவர்கள்  எல்லோராலும் சமூகப் பிரச்சனைகளை உள்வாங்கி அதற்குத் தீர்வுதரும் வகையில் செயற்படமுடியாது. என்னைப் பொறுத்தவரை உள்ளிருந்து நிறைய Social entrepreneurs உருவாகவேண்டும். Social entrepreneurship என்பது சமூகத்தின் பிரச்சனைகளை உள்வாங்கி அதற்குரிய தீர்வுகளை வியாபாரத்தின் மூலம் வழங்குவதாகும். சாதாரண தொழில்முனைவோர் இலாபத்தை மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருப்பர். Social entrepreneurship வெறுமனே இலாபத்தை மட்டும் நோக்காகக் கொள்ளாது, சமூகத் தீர்வுகளையும் வழங்குகிற வியாபார முறைமை. சமூகத்தின் பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்ட முறைமை.

Saturday, May 23, 2015

உயிரே! காதலின் உச்சம்

ஒருகாலத்தில் மணிரத்னம் இயக்கிய  திரைப்படங்களில் இணைந்து இயங்கிய  கூட்டணிபோலப்  பொருத்தமான கூட்டணிகள் எல்லோருக்கும் அமையவில்லை. தன்னைச்சுற்றி ஒரு நல்ல குழுவினை அமைத்துக்கொண்டார் எனலாம். ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அவர் பேணுகிற அமைதி, அது தருகிற  ஆழம், இடைவெளிகள் , கவித்துவம் என்பன அவரின் தனித்துவம். அதனாலேயே  அவற்றை மீண்டும் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத்  தவிர்க்கமுடிவதில்லை.  அப்படியான, குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான உயிரே திரைப்படத்தைப்  பற்றிச்  சில விஷயங்களைச் சொல்லியாகவேண்டும்.

                              


ஒரு போராட்டக் குழுவினைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்படுகிற காதல்,காமம்,ஏக்கம்,போராட்டம் போன்றவற்றுக்கான பதிலை அவற்றினூடே காட்ட முயற்சித்த படம்.  அதில் மனிஷாவின்(மேக்னா ) பாத்திரம்தான் கவனிக்கப்படவேண்டியது. அதனால், தன்னுடைய சிறிய வயதிலேயே வன்புணர்வுக்கு உள்ளாகிய, Posttraumatic stress disorder இருக்கிற ஒரு பெண்ணுக்கும்   ஆணுக்கும் இடையிலான காதல்க்கதை  என்றால் இன்னமும் பொருத்தமாக இருக்கும். உளவியல் பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண், காதலினால் எப்படித் தன்னை மீளவும் அமைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள் என்பதைக் காட்சியமைப்புகளினூடு சொல்லியிருப்பார். அதாவது ஒரு பெண்ணைப் பாதிப்பிலிருந்து படிப்படியாக மீட்பதுதான் திரைப்படம் முழுதும் காதலாக வியாபித்திருக்கிறது.

ஒரு Rape trauma syndrome உள்ள பெண்ணாக மனிஷாவின் நடிப்பைச் சொல்லியாகவேண்டும். காதல், காமத்தின் மீது விருப்பமிருந்தாலும் தன்னுடைய பழைய பாதிப்புகளிலிருந்து மீளமுடியாத பெண்ணை அவரின் நடிப்பில் பார்க்கலாம். வன்புணர்வினால் பாதிக்கப்பட்டோருக்கு  hapnophobia இருக்கும். அதாவது தொடுதலும் தீண்டப்படுதலும் பிடிக்காது.  Anxiety attacks அதிகம் ஏற்படும். மூச்சுவிடுதலில் சிரமமிருக்கும்.  அமர் மேக்னாவைத் தொட முற்படும்போதெல்லாம் மேக்னா ஒருவித எதிர்ப்பைக் காட்டுவார். அந்த எதிர்ப்பே அன்புக்கும் உளவியல் பாதிப்புக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும். இதையெல்லாம் மணிரத்னம் திரைப்படத்தில் கவனமாகக் கையாண்டிருப்பார். கூடுதலாக மக்கள் நடமாட்டம் அற்ற வெளிகளை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் ஒரு ஆணின் மீதும், தனிமையின் மீதும் மேக்னா நம்பிக்கை கொள்ளும்படி காட்சியமைப்புகள் அமைந்திருக்கும்.

அதில் மேக்னாக்கு இருக்கிற உளவியல் பாதிப்புகள் பற்றி அமருக்கு (ஷாருக் ) தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள், அந்த விடயத்தை இன்னொருவரிடம் இலேசில் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள். பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கு விருப்பமிருக்காது. அதனால் ஒரு ஆணின் ஏக்கம், வேண்டுகோள், கேள்விகள் எல்லாவற்றையும் பாடல்களில், தன் வரிகளினூடு கொண்டுவந்திருப்பார் வைரமுத்து. "கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை
உள்ளத்தில் ரணமிருந்தால் உறவுகள் மலர்வதில்லை" என்று பாலைவன மணலில் அவள் எழுதிவிட்டுப்போகிற கவிதை வரிகள் போதும். அந்த இடத்தில் வருகிற  ரஹ்மானின் பின்னணி இசையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

                      


இந்தப் படத்தின் திரைக்கதையில் சுஜாதாவின் பங்கு உண்டு. வசனங்களில், மற்றவர்களைப் போல வாழ்க்கை அமைத்துக்கொள்ள ஏங்கும் ஒரு பெண்ணின் ஏக்கம் இருக்கும். கீழே குறிப்பிட்டிருக்கிற வசனங்கள் ஒரு உதாரணம்.

"சிரிச்சா அழகா இருக்க . அப்புறம் ஏன் உம்னு! சிரிக்க மாட்டேங்கிற!"
"பாட்டிம்மா,எட்டு வயசுல இருந்து என் சிரிப்பெல்லாம் எங்கயோ போயிடிச்சு "
"உள்ள என்ன பூட்டி வைச்சிருக்கிற"
"ஒன்னுமில்லை, துக்கம்"
"பொண்ணுக்கு துக்கம் கூடாது. என் பேரன் மாதிரி ஒருத்தனை பாத்து கட்டிக்க"
"என் தலைஎழுத்து அப்பிடி இல்லை"
"தலை எழுத்தா! எல்லாம் நாமளே எழுதிக்கிறதுதான்"


"என்னைப் பாத்தா பயமா!"
"பயமா! பயத்தைப் பத்தி உனக்கென்ன தெரியும்!"

"உலகத்துல உனக்கு எது பிடிக்கும்"
"அம்மா உள்ளங்கை, எங்க ஊர் கோயில் மாடத்துப்புறா, கவிதை"

"உலகத்துல எது பிடிக்காது"
"நீ இவ்ளோ கிட்ட வர்றது பிடிக்கல"
"பொய் சொல்ற"
"உன் சிரிப்பு, உன் அதிகப்பிரசங்கித்தனம், உனக்குள்ள இருக்கிற இந்த சந்தோஷம்" 

காமத்தையும் காதலையும் சொற்களிலும், கவிதையிலும் வெளிப்படுத்திய பக்குவம் வைரமுத்துவையும் சுஜாதாவையும் சாரும். அந்தத் திரைப்படத்தில் ஏற்படுகிற காமத்தின் இடைவெளியைப் பாடல்க் காட்சியமைப்புகளின் மூலம் அமைத்துக் காட்டியது மணிரத்தின் சிறப்பு.

Exoticism!This is a phenomenon called the "liminal space of dreaming" in that the terrorist woman cannot fulfill her sexual desire so the songs fill the void of this desire by "their sumptuousness and exotic locales" in the Ladakh region. -  Elleke Boehmer and Stephen Morton