Sunday, July 29, 2012

உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்  ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய வேர்ச்சொற் கட்டுரைகள் படிக்க நேரிட்டது .   அதில் உ என்னும்  வேர்ச்சொல் பகுதியில் உகரச்சுட்டு பற்றி பகிர்ந்திருப்பார் . 


உகரம்  ஒலிக்கும் போது இதழ் குவிந்து முன்னோக்குவதால் உகரச்சுட்டும், பேசுபவரின் முன்னிடத்தை குறிக்கும் . 

ஒருவரை நோக்கி சொல்கிறோம் என்றால் அவர் முன்னிலையில் (மிக நெருக்கமாக ) உகரச்சுட்டு பயன்படுத்தப்படும் .

உதாரணமாக : உதுக்காண்
                               உந்தா
                               உந்த
                               உவன்
                               உது
                               உவை


உந்த ( இந்த ) சொற்கள் ஈழத்தமிழ் பேச்சுவழக்கில் இன்றும் உள்ள சொற்கள் . இந்த உகரச்சுட்டு யாழ்ப்பாணத்தில் உண்டு தமிழ் நாட்டில் வழக்கற்றதாகி விட்டது என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கார் தேவநேயப் பாவணார் .

ஈழத்தமிழில் இவற்றின் பயன்பாடுகள் :

உதுக்காண் ( என் முன் பார் ) இருக்கும் நல்லா தேடிப்  பார் .

உவனிட்ட(முன் நிற்ப்பவர் ) எத்தனையோ  தடவை சொல்லீட்டன் 

சும்மா உவ்விடமா (உ + இடம் ) வந்தனான் . அப்பிடியே உங்களையும் பாத்திட்டு போகலாம் எண்டு வந்தன் . 

என அன்றாட வழக்கில் இந்த உகரச்சுட்டு உண்டு . இலங்கை தமிழின் பழமைக்கு இதுவொரு எடுத்துக்காட்டு என சொல்லலாம் . 

காரணம் இந்த உகர சொற்கள் சில பல்லாயிரம் வருடங்கள் பழமையான குமரி நாட்டில் (லெமூரியா கண்டம் ) வழக்கில் இருந்ததாக சொல்கிறார் தேவநேயப்பாவனார் . அவற்றில் சில வழக்கில் இல்லை என்கிறார் .  
Thursday, July 26, 2012

கங்கை கொண்ட சோழபுரம் பயணம் - பகுதி 1

ஒரு வரலாற்று இடத்தின் சிறப்பை கேள்விப்பட்டு , அந்த தகவல்களை கொண்டு அந்த இடம் இப்படித்தான் இருக்குமென  மிகப்பெரிய  பிம்பத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொண்டு அங்கு எப்போது செல்வோமென  எதிர்பார்த்திருப்பது ஒரு தனி சுகம் என்றால் , அதை நேரில் பார்த்து பிரமிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அதை விட அதீத மகிழ்ச்சியும் ஆச்சரியமும்  தரும் .

அப்படியானதொரு சந்தர்ப்பம் ,  இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு  பிரயாணம் செய்த போது கிட்டியது . இந்த தடவை கங்கை கொண்ட சோழபுரம் முதல்  தராசுரம் ,தஞ்சைப் பெருங்கோயில், மதுரை , குமரிமுனை  வரை செல்வதென  நீண்ட தெரிவை மேற்க்கொண்டேன்.

முதலாவது இலக்கு சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் நோக்கியதாக அமைந்திருந்தது . சென்னை நோக்கி மீண்டும் திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் செல்லலாம் என எண்ணமிருந்தது.

வாகனம் கங்கை கொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது சோழப்பேரரசு பற்றிய எண்ண  ஓட்டமும் மனதில் தொற்றிக்கொண்டது .

தரையில் தன் பேரரசை நிறுவியதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய கப்பற்படை கொண்டு கடல் தாண்டி மலேசியா , இலங்கை என அனைத்து நாடுகளையும் தன் வசமாக்கிய சோழ பேரரசை நெருங்குகிறேன் என்பது மனதில் பெருமையையும் , எதிர்பார்ப்பையும் அதே நேரம் ஏக்கத்தையும் கொடுத்திருந்தது .

ஒரு டைம் மெஷின் கிடைத்தால் , 1000 ஆண்டுகள் பின்னால் சென்று சோழர் கால தமிழர்களையும் , களிறுகளுடன் நிற்க்கும் சோழர் படைகளையும் காண வேண்டுமென ஆவல் எழுந்தது. மனதிற்க்குள்ளேயே ஒளியை விட  வேகமான ஒரு டைம் மெஷின் இருக்கிறதே . அதில் ஒரு 1000 வருடங்கள் பின்னால் செல்வது போல கற்பனை ஓடிக்கொண்டிருந்தது .

இந்நகரம் இராசேந்திர சோழனால் ,கங்கையை வெற்றி கொண்டதை  கொண்டாட கட்டப்பட்டது . இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றதால் கங்கை கொண்ட சோழன் எனவும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . 

பெரியதொரு கோட்டையின் வாயிலூடாக (சிதைந்திருந்தது ) உள் வீதியில் நுழைந்த போது பாரிய சிற்ப்பக்கலையும் கட்டடக்கலையும் மெய் சிலிர்க்க   வைத்தது .


ஏறக்குறையை 250 ஆண்டுகள் சோழர்கள் கங்கை கொண்ட சோழபுரத்தை (இப்போது ஜெயங்கொண்டம் ) தலைநகராக்கி ஆண்டார்கள் எனப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 20 ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது .

அழகுடன் 160 அடி உயர விமானத்துடன் பிரம்மாண்டமாக நின்ற கோவிலை பார்க்கும் போது சோழர்களின் கட்டிடக்கலை மெய் சிலிர்க்க வைத்தது. தஞ்சை பெருங் கோவில் பிரம்மாண்டமானது என்றால் கங்கை கொண்ட சோழபுரம் அழகு மிகுந்தது .
விமானத்தின் அமைப்பு நேர்கோடாக இல்லாமல் நெளிவுகளாக இருக்கும் . அதனால் தான் இதை பெண்மையின் அழகு கவர்ந்து இழுக்கிறது என்பார்கள் போல . இந்த கோயிலின் சிவலிங்கம்  4 மீட்டர் உயரமுடையது.


 சுற்றி இயற்கையால் கொடுக்கப்பட்ட அழகும் கோவிலை மேலும் அழகாக காட்டியது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இடங்களை புகைப்பட கருவி வாங்கிக்கொண்டது. கூடவே நிறைய மேல்நாட்டு பிரஜைகளும்  சிற்ப வேலைப்பாடுகளில் மூழ்கியிருந்தனர் . நம்மவர்கள் அங்கு பெரும்பாலாக  இல்லை .


ஒரு வேளை  வரம் அள்ளித்தரும் சாமி,நினைத்தது நடக்கும்  என கட்டுக்கதைகள் கட்டப்பட்டு வியாபார உத்திக்குள்  சிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் . 


மனது உள் வாங்கிக்கொண்ட  இதன் அழகை மூளையும் காலமும் நினைவு வைத்திருக்க சில புகைப்பட நினைவுகளையும் கொண்டு  அங்கிருந்து புறப்பட்டோம் .


எடுக்கப்பட்டபுகைப்படங்களில் சில ...1000 வருட தமிழ் எழுத்துகள்


நந்தி


Tuesday, July 24, 2012

ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா

சுஜாதா தன் கதைகளாக இருந்தால் கூட அதில் தனக்கு தெரிந்த  தகவல்களை பகிர்வது சாதாரணம் . கதையின் ஓட்டத்தின் வேகத்தையும் சுவராசியத்தையும் அவை இன்னும் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவடைய செய்யாது .


அண்மையில் வாசித்த சுஜாதாவின் " ஒரு லட்சம் புத்தகங்கள் " கதை மிக சுவாரசியமானது. சமூகத்தில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ,அத்தனை அழுக்குகளையும் ஒரே கதையில் சுட்டிக்காட்டுவது என்பது மிக கடினம் .

மாகாகவி பாரதி போன்றவர்களை சமூகம் எப்படி பார்த்தது ,பார்க்கிறது என்பதிலிருந்து யாழ் நூலகம் , இலங்கை தமிழர் ,தனி நபர்களின் அரசியலும் நாட்டின் அரசியலும் எப்படி இந்த சமூகத்தை கையாள்கிறது என்பது வரை இந்த கதையில் தொட்டுவிட்டு சென்றிருப்பார் .


நம்ம சமூகத்திலை ஒரு பழக்கம் ஒன்றிருக்கு , ஏதாவது ஒன்றை சின்னதாக
கடமைக்கு செய்து விட்டு செய்து விட்டேன் செய்து விட்டேன் என்று இறக்கும் வரை  சொல்லிக்கொண்தே இருப்பது . அதை அரசியல் வாதிகள் பார்வையில்  " நாங்க தான் கடையடைப்பு நடத்தினோமே " என்று சொல்வதோடு அவர்கள் கடமை முடிந்து போவதை சுட்டிக்காட்டி இருப்பார் . இதனை சமூகத்தில் இருந்து கண்டறிய நுணுக்கமானதொரு அவதானிப்பு வேண்டும் . 


சமூகத்துக்கு  யார் விரோதிகள் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்லி முடித்திருப்பார் . அனைவரும் வாசிக்க வேண்டிய கதை இது . 


வாசிக்கஒரு லட்சம் புத்தகங்கள் 

Wednesday, July 11, 2012

இரண்டு இணையத்தளங்கள்

நான் தினமும் வாசிக்கும் தளங்களில் புதிதாக இணைந்திருக்கும் தளங்கள் இவை . தமிழின் சுவையை எளிமையாக்கி அனைவரையும் சேரும் வண்ணம் பகிர்ந்து வருகிறார்கள்.

தினம் ஒரு பா 


வலைத்தளம் : தினம் ஒரு பா 

நன்னூல் ,கம்பராமாயணம் , சிலப்பதிகாரம் ,அகநானூறு ,நளவெண்பா , தேவாரம்  என அதில் வரும் பாடல்களை  எளிமையான உரை நடையில் விளக்கம் கொடுக்கும் தளம் . கம்பனின் தமிழ் மீது அதிக ஈர்ப்பு ஏற்ப்பட காரணமான தளமும் கூட . தமிழ் பாடல்களில் சுவாரசியம் நிறைந்த கணக்கதிகாரம் ,புதிர்  போன்றவை மிகவும் பிடித்தமானவை . எழுத்தாளர் என் சொக்கன் அவர்கள் இதனை தொகுத்து பகிருகிறார் .குறுந்தொகை குறு டுவீட்டுகளாக 

குறுந்தொகைகளை எளிய உரைநடையில் பகிருவதோடு ,அதனை இன்னமும் சுருக்கி 2 வரிகளில் எளிமைப்படுத்தி விடுவார் . குறுந்தொகைகளை  வரலாற்று ஆவணமாக அணுகாமல் கவிதைகளாக உணர வைப்பது  சிறப்பு.

குறுந்தொகைகள்  எந்த காலத்துக்கும் , எவருக்கும் பொருந்தக்கூடியது . அதனை சுவை குன்றாது எளிமைப்படுத்துவது என்பது தனி சிறப்பு . இவற்றை தொகுத்து வரும் விஜய் ரெங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் .

வலைத்தளம்  : குறும்பா 

குறுந்தொகைகளை குறு டுவீட்களாக பெற இவரை டுவிட்டேரில் பின்பற்றலாம் . - @urapvr

காரணங்கள்காரணங்கள் சௌகரியமானவை 
மறதி என்பது மறக்கப்படாத தருணம் 
மறுக்கிறேன் என்பதை மறைக்க   
தவறுகளை நியாயப்படுத்த
காரணங்கள் தேடுகிறேன் 

அனைவரும் செய்வதுதானென
இன்னொரு காரணத்தை வைத்துக்கொண்டு !