Skip to main content

பாகுபலி

நீங்கள் வரலாற்றுப் படங்களிலும் அதன் காட்சியமைப்பிலும் திளைப்பவராக இருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சின்ன வயதில் மகாபாரதக் கதைகளைப் படித்து, குருச்சேத்திரப் போரைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் மிகப் பிடித்தமானதாக அமையும். எங்கள் வரலாற்றிலும் சூப்பர் ஹீரோக் கதைகள் உண்டு. அதைக் கற்பனை கலந்து நேர்த்தியான 'பிரமாண்டம்'  கொடுக்க யாரும் முன்வர மாட்டார்களா என்கிற ஏக்கம் பலருக்கும் இல்லாமல் இல்லை.

'நான் ஈ' என்கிற காதல், fantasy கலந்த திரைப்படத்துக்குப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம்தான் 'பாகுபலி'. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காகக் கிட்டதட்ட மூன்று வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது  ராஜமௌலியின் பதினோராவது படம். 'பாகுபலி' ஒரு  கற்பனை கலந்த வரலாற்றுக் கதையாக அமைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.


பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், ரானா, சத்தியராஜ், நாசர் என்று நடிகர்கள் பலரும் இருக்க, ராஜமௌலியின் விருப்பத்துக்குரிய ஒளிப்பதிவாளரான செந்தில்குமார் அழகான காட்சி வடிவங்களைக் கொடுத்திருக்கிறார். அருந்ததி, மகதீரன், நான் ஈ போன்ற படங்களில் பணியாற்றியவர். ஒளிப்பதிவிலும் பிரமாண்டம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புராணகால கதைக்குத் தேவையான அத்தனை பிரம்மாண்டத்தையும் ஒரு நேர்த்தியான உழைப்பின் மூலம் தந்திருக்கிறார்கள். வரலாற்றுப் படங்களுக்குத் தேவையான  நேர்த்தியான பிரமாண்டத்தைத் இந்தியச் சினிமா கண்டிருக்காது எனலாம்.

பேரரசில் நிலவும்  ராஜதந்திரச் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றப்படும் இளவரசன் தன்னுடைய பின்னணி தெரியாமலேயே வேறொரு இடத்தில் வளர்கிறான். சில காரணிகளாலும் ஏதோவொரு தன்னிச்சையான உந்துதலாலும் விடைகளைத் தேடித் புறப்படுகிறான். இறுதியில் தான் யார் என்பதைக் கண்டடைந்து தனது பணிகளை நிறைவேற்றுகிறானா என்பதுதான் கதையின் சுருக்கமான அமைப்பு. புராணகாலக் கதைகளுக்கே உரிய வடிவம் என்றாலும் அவற்றைக் காட்சிப் படிமங்களாக அமைத்த விதம்தான் ஆச்சரியப்படவைக்கிறது.

தமன்னா , பிரபாஸ் இடையிலான காதல்க் காட்சிகள், உக்கிரமான போர்காட்சிகள் என   அனைத்திலும் பிரமாண்டம் தெரிகிறது. பிரமாண்டம் என்று தேவையற்ற செலவுகளைச் செய்யாமல், கலைகளிலும் நல்ல கற்பனைத் திறனுள்ள காட்சியமைப்பிலும் பிரமாண்டம் காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் பாராட்டப்படவேண்டியது. யுத்தக் காட்சிகளில் எல்லாம் தேவையான அளவுக்கு கற்பனையைச் செலுத்தியிருக்கிறார். Lord of the rings மாதிரிச் சண்டைக் காட்சிகளைப் போல  நம் புராணக் கதைகளை  எடுத்துக் காட்டமாட்டார்களா என்று எண்ணியதுண்டு. இந்தியச் சினிமா அதை ராஜமௌலி மூலம் ஓரளவுக்கு கண்டிருக்கிறது எனலாம். 

மகாபாரதத்தில், குருசேத்திரப்போரில் மட்டுமே கேள்விப்பட்ட 'திரிசூல வியூகம்' போன்றவற்றைக் காட்சியமைப்பில் சிறப்பாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார். படத்தில் வருகிற அரண்மனைக் காட்சிகள், பாத்திரப் படைப்புகளில் எல்லாம் படத்துக்கு மேலும் பலமான விஷயங்கள். 

தமிழில் இதற்குத் தேவையான அத்தனை உழைப்பையும் மதன் கார்க்கி கொடுத்திருக்கிறார். வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி தான் எழுதியிருக்கிறார். கள் குடித்து மகிழும் கூடத்தில் 'உருக்கியோ... நட்சத்திரத் தூறல்' என்றொரு பாடல். அழகான தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருக்கிறார் மதன்கார்க்கி. அந்த பாடலில் வருகிற நேர்த்தியான நடன அமைப்பையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

படம் எதிர்பாராத விதமாக திடீரென்று முடிந்தது போல தோன்றினாலும், இரண்டாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. வீணான காட்சியமைப்புகளில் பணத்தைச் செலவழிப்பதைவிட தேவையான காட்சிகளுக்கு மேலும் பிரமாண்டம் கூட்டுவது தான்  அவசியம். அதை  நேர்த்தியாகச் செய்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ராஜமௌலி. 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...