இந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு! காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை! அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.
மான்கள் மட்டுமா! துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப் பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும்! அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும். அவர் தீண்டினால் உயிர் நிறைவேன்.
அந்த மான்களுக்கும் யானைகளுக்கும்கூட, இந்த மாரிகாலத்தில் ஒன்றுடனொன்று சேர்ந்து இன்பம்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது என் மனம் எப்படிச் சும்மாயிருக்கும் தோழி! நீயே நியாயத்தைச் சொல்லு! மழைக்காலம் வருவதற்கு முதல் வந்திடுவேன்னு சொல்லீட்டுப்போன இவர் இன்னும் வரல. இளைத்துவிட்டேன்.
மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்
மாலை வந்தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரா ராயின்
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே.
இந்தப் பாடல் ஒரு பெண்ணின் ஆற்றாமையைச் சொல்லுகிறது. இதேபோல கார்காலத்தில் ஒரு ஆண் தன்னுடையை ஆற்றாமையைச் சொல்லி வேண்டினால் எப்படியிருக்கும்! வேட்கையை எப்படி ஆற்றுவேன் என்று கேட்டால் எப்படியிருக்கும்! சங்கத்தமிழ் போலவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது வரிகளில் இயற்கையை அழைப்பது வழக்கம்.
பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?
எல்லா உயிரனங்களும் மகிழ்ச்சியாக இருக்கிற கார்காலம் இது. நீ மட்டும் ஏன் பிரிந்திருக்கிறாய் எனும் ஆற்றாமை!
Comments
தலைவனின் ஏக்கத்தை பதிந்த தலைவரின் வரிகள் அருமை.
ன்