Saturday, June 16, 2018

மலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு

வெற்பிடை யாம் கொய்து
நாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.
சுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.
ஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.
ஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்தப் பாடல் நல்லதொரு உதாரணம்.
வேங்கை நறுமலர் வெற்பிடை(வெற்பு - மலை) யாம் கொய்து, மாந்தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும் பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச் சேந்தனவாம், சேயரிக் கண்தாம்.
தலைவியைத் தேடி அவளுடைய தாய் வருகிறாள். தலைவியினுடைய கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்து, 'எங்கே போனாய் இவ்வளவு நேரம், என்னவாயிற்று' என வினவுகிறாள். தலைவி தடுமாறினால், களவியல் வாழ்வு அம்பலப்படும் என அறிந்த தோழி, ஒரு நிகழ்வினைச் சடாரெனப் புனைகிறாள். 'தாயே, நாங்கள் மலையினிடையில் உள்ள கொன்றை மரத்தில், நல்ல நறுமணம் உள்ள மலர்களைக் கொய்யும் செயலைச் செய்துகொண்டிருந்தோம். அப்படி அந்த மலரை நெடுநேரம் பறித்திருக்கையில், எங்கள் மாந்தளிர் மேனி எங்கும் வியர்த்துக்கொட்டியது. அதனாலே அங்கிருக்கும் அருவிகளில் பாய்ந்து நீரைக் குடைந்தாடினோம். அதனால் இவள் கண்கள் சிவப்பாகி இருக்கிறது' என்கிறாள். இதையெல்லாம் தலைவன் பின்னால் ஒளிந்திருந்து கவனித்திருக்க, அவனுக்கும் கேட்கும்படி உரைக்கிறாள் தோழி. தோழியானவள், அவர்களுடைய களவுப் புணர்ச்சியை உரைக்கும் நயம்தான் இந்தப் பாடலின் உயிரோட்டம்.
பச்சை மலையையும், மஞ்சள் பூக்களையும் கொண்டு அவர்கள் காமத்தை அலங்கரிக்கிறாள். தலைவன், அவளின் உடலெங்கும் பூக்கள் சொரியும்படி அத்தனை அழகுடன் அவளைக் கூடியிருக்கிறான். 'கொய்தல்' என்கிற வார்த்தையின் சந்தம் அந்தக் காமத்துக்கு மேலுமொரு அழகு. அதனால் அவள் மேனி வியர்த்துக்கொட்டிய எழிலை ஒரு அருவிபோல முன்னிறுத்துகிறாள். நீர் நுழைந்தால் ஆடை குழையும். கூந்தல் தன் அலங்காரங்களை இழந்து ஒழுங்கற்ற ஓர் அழகைச் சூடிக்கொள்ளும். கண்கள் சிவக்கும். இவையெல்லாம் காமத்திலும் நிகழும்.
அவர்களின் காமத்தை அழகுபடுத்தவும் வேண்டும். அதை அழகுபடுத்துவதன் மூலம், ஒளிந்திருந்து கேட்கும் தலைவனுக்கும் இவள் மேனியின் நலனை எடுத்துரைத்து, இவள் மீதான காதலைக் கூட்டவேண்டும். அதேநேரம் பொருத்தமான ஒரு பொய்யையும் சொல்லவேண்டும். தோழி புத்திசாலி.
இதையொரு காட்சியாக, பூக்களின் வண்ணங்களோடும், வியர்வைத்துளிகளின் விழுதுகளோடும் காணும்பொழுதுதான் அதனுள்ளே இருக்கும் மொழியினதும் செயலினதும் அழகு புலப்படும்.
மலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.

Friday, May 18, 2018

மலரினும் மெலிது காமம் 08 - புதுவெள்ளம்


நீரில் நனைந்த கூந்தலை நெறிப்படுத்தி   வாரியணைத்துக்கொள்வதும், உளரிய பொற்கூந்தல் விரல்களினின்று பிழைத்து விழவிழ வாங்கி நுகர்வதும், காமமுற்றோர்(காதலுற்றோர்) செய்யும் சிருங்காரக் கலை. அந்தக் கலைக்காகவே, கூந்தல் நெளிநெளியாய்ப் நெய்யப்பட்டது போலிருக்கும். உயிரை உய்த்துணரும் நற்புணர்வின் பின்னர், வியர்வையின் கதகதப்பும் மணமும் கொள்ளும்பொழுது அது மேலும்மேலும் வனப்புக் காட்டக்கூடியது. 
அதைச் சங்கத்தமிழ்க் கவிகள் அத்துணை நயமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதைப் படிக்கையில்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்,
ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்தபடி,
தகிக்கும் தமிழொடு கலந்தாடி
இரு காதலர் புணரும் வேளையில்,
ஆற்றின் மேல் நீண்டிருக்கும், அதன் கொப்புகள் சொரிந்த மலர்ப்போர்வையின்கீழே,
பண்புடன் புணரும் மீனினம்போல அத்துணை குளுமை தரும். ஒரு சங்கப் பாடலில் மனதிற்கு இனிய சங்கத்தலைவியானவள் காமுற்றிருக்கிறாள். அவள் உணர்வைச் சொல்ல, சங்கக்கவி, ஆற்றுமணலை அவள் கூந்தலோடு ஒப்பிடுகிறார். ஆற்று நீரறுத்த மணல்(அறல்) எப்படி வரிவரியாக நெளிவுடன் திரண்டு அழகாய் இருக்குமோ, அப்படி இருக்கிறது அவள் கூந்தல் என்கிறார். சற்றுமேலே சென்று, புணர்வின் பின் மணக்கும் கூந்தல்போல, தாதுதுக்களும் மொட்டுகளும் விழுந்த காவிரிக்கரை காணப்படுகிறது என்கிறார். மேலும், அது திருமகளின் மார்பினில் கிடந்து தவழும் முத்தாரம்போல, ஊடறுத்து ஓட அந்தக் கரு மணல்வரிகள் கொள்ளும் அழகுபோன்றது கூந்தல் என்கிறது சங்கப்பாடல்.

"தொய்யகம் தாழ்ந்த கதுப்புப்போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல் இடைபோழும் பொழுதினாள்."


Friday, February 9, 2018

அம்மான் மகளே!

கஜூராஹோ சிற்பம் - காமுறுதல் 

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா


குத்துவிளக்கு எரிகிற அறையில், ஒரு மிதமான வெம்மை இருக்கும். அந்த ஒளி தருகிற வெம்மை, அறையின் சுவர்களிலெல்லாம்  பட்டுத் தெறித்து, உடல்மீது அளவோடு வந்து இறங்கும். அப்படி இறங்கும் அந்த ஒளியின்  அழகுக்கு   முன்னால், தரித்திருக்கும் ஆடைகூடத் தோற்றுப்போகும். ஒளியை உடல் உடுத்திக்கொள்ள விரும்பும். காரணம், விளக்கு ஒளியில் மட்டுமே, பாதி உடலின் வடிவு இருளிலும், மீதி உடலின் வடிவு ஒளியிலும் வளைந்துகொடுக்கும் அழகைப் பார்க்கலாம். காற்றில், குத்துவிளக்கின் ஒளி கொஞ்சம்  அசைந்து துடிக்கையில், ஒளி உடலைத் துதிக்கும் அழகையும் பார்க்கலாம். 

அப்படிப்பட்ட அறையில், உறுதியான கால்களையுடைய கட்டில் இருக்கிறது. அதன்மீது, அன்னத்தின் இறகு, இலவம் பஞ்சு என ஐந்துவகை அடுக்குகளால் செய்யப்பட்ட மெத்தை இருக்கிறது. அந்தப் பஞ்சசயனத்துக்கு வெண்மை, வாசம் போல ஐந்து குணங்களும் இருக்கிறது. ஐந்துபுலன்களுக்கும் ஆசை வேராகும் மெத்தை.

அந்தப் பஞ்சசயனத்தின்மீது, கொத்துக் கொத்தாக மலரணிந்த கூந்தலையுடைய நப்பின்னையும் கண்ணனும் உறங்குகிறார்கள். அதிலும், நல்லதொரு கூடலுக்குப் பின்னான உறக்கம்போல, நப்பின்னையின் கொங்கைகள்மீது தலைவைத்து  உறங்குகிறான். பஞ்சணை மீதே இன்னொரு பஞ்சணையை உணர்ந்த மயக்கத்தில் அவன் உறங்குகிறான். கண்ணனின் மோகம் வளர்த்த யாகத்தில் நப்பின்னை உறங்குகிறாள்.

இப்படி மயங்கிப் போயிருக்கும் இருவரையும் ஆண்டாள் எழுப்புகிறாள். உன் கணவனை ஒருகணமேனும் பிரியமாட்டாயா என்று நப்பின்னையைக் கேட்கிறாள். கதவைத் திறவுங்கள் என்று கேட்கிறாள். இப்படியாக, ஆண்டாளின் தமிழ் என்பது காட்சியாகப் படித்துச் சுவைக்கக்கூடியது.

இந்த நப்பின்னை, யசோதையின் தமையனின் மகள் என்று சொல்லப்படுகிறது. கண்ணன், ஏறுதழுவி(ஏழு காளை அடக்கி) இவளை மணந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. நப்பின்னை, கண்ணனின் மாமன் மகள்.

'ஹலோ மிஸ் இம்சையே' பாடலில், வாலி 'அம்மான் மகளே, என்னை அசத்தும் ஆழ்வார் குழலே' என்று நப்பின்னையைச் சொல்கிறாரா, இல்லை, ஆண்டாளைச் சொல்கிறாரா, இல்லை இருவரையும் சேர்த்துச் சொல்கிறாரா எனத் தெரியவில்லை. 'உன்னாலே உன்னாலே' படத்தில் நாயகனுக்குப்  பெண்கள்மீது விருப்பம் இருக்கும்.  ஆனால், சதாமீது காதல் இருக்கும். கூடவே இன்னொரு பெண்மீதும் கொஞ்சம் விருப்பம் இருக்கும். அதனால் இப்படிப் பயன்படுத்தினாரா தெரியாது.

ஆனால், இந்த வார்த்தைப் பிரயோகம் அத்தனை அழகு. படத்தில் இருக்கும், கஜுராஹோ சிற்பத்தில் குழலுக்குள் கைகள் இருக்கும். ஒருகை அவள் குழலைப் பிடித்திருக்கும். அவளின் கை, அவன் குழல்களை அணைத்திருக்கும்.  இதனின் அற்புதமான காட்சி விபரிப்புத்தான் ஆண்டாளின் தமிழ். அதை, உணர்ந்து இரசித்துப் படிக்கவேண்டும். மேலே உள்ள பாடல்வரிகளில், காமத்தில் ஐந்துபுலன்கள் பெறவேண்டிய இன்பத்தையும் ஒளித்துவைத்திருக்கிறாள். 

Thursday, February 8, 2018

சாக்லேட் : Kiss me, I can read your lips.சிலகாலங்களாகத் தொலைக்காட்சிகளில் காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரங்கள் போட்டார்கள். சமூகத்தின் விருப்பங்களை மிகவும் கவனித்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரங்கள், சாக்லேட் விற்பனையை மேலும் உயர்த்தியது. குறிப்பாக, குடும்ப நிகழ்வுகள், உறவுகளை வைத்து உணர்வுபூர்வமான விளம்பரங்கள் எடுத்தார்கள். "மகிழ்ச்சியை இனிப்புடன் கொண்டாடுங்கள்" என்றார்கள். 

அதேநேரம், காமம் சார்ந்த உணர்வினை வைத்தும் மிக அழகாக விளம்பரப்படுத்தினார்கள். காமம் சார்ந்த உணர்வுநிலைகளை முன்னிலைப்படுத்திய விளம்பரங்களில், இன்பத்தைத் தேடுங்கள்(Discover) என்றார்கள். குறிப்பாக, அந்தப் பாடலும் அந்தக் குரலுமே நம் செவியின் வழியாக நம் உணர்வுநிலைகளைத் தூண்டிவிடப் போதுமானது.   

அந்தப் பாடலின் வரிகள், ஒவ்வொரு விளம்பரங்களிலும் சிறு சிறு மாற்றங்களோடு வந்தது.

Kiss me. I can wet your lips. And your fingertips. And happiness in your eyes. Kiss me. Close your eyes. Miss me.

முத்தாடுதல், இதழில் ஈரம் சேர்த்தல், விரல்களை உண்ணுதல் , கண்களை மூடுதல், சுவைத்தல், இன்மையை உணர்தல், மீண்டும் முத்தாடுதல் என்று திரும்பத் திரும்ப வந்து தழுவும் வார்த்தைகள்கொண்டு நெய்திருப்பார்கள்.

Kiss me, I can read your lips, on your fingertips, I can feel your smile, come on my lips.  Miss me. 

பெரும்பாலும் சாக்லேட்டில் இருக்கும் மென்மையைத்தான் எல்லோருக்கும் காதலிப்பார்கள். அதன் சில்க் தன்மையை, 'Rich smooth and creamy' என்றார்கள். அது இதழுக்குத் தரும் இன்பத்தை, மேலும் (silk now bubbled up for joy) கூட்டினார்கள். 

சாக்லேட் என்று மட்டுமல்ல, Magnum ஐஸ்கிரீம்க்கும், 'Magnum temptation' என்று விளம்பரப்படுத்தினார்கள். இன்பத்தை நுகர விரும்புபவர்களுக்கு (For pleasure seekers) ஒருவித வாய்வழி இன்பத்தையும், அது தரக்கூடிய தூண்டலையும்  காட்சிப்படுத்தினார்கள். கொஞ்சம் வன்மையான தன்மையை(crunch) உடைத்தபிறகு, உள்ளே கிரீம்போன்ற ஈர உணர்வைச் சுவைப்பதை நாம் விரும்புகிறோம். வாய்வழி playfulness இனையும், உண்டபின்பு அது தூண்டும் அதீத உணர்வுநிலைகளையும்(euphoria) காட்சிப்படுத்தினார்கள். Never stop playing....உதாரணமாக, Ferero roucher சொக்கலேட்டைப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். இதுவரையில் பார்த்திராவிட்டால், அடுத்தமுறை சூப்பர் மார்க்கெட் போகும்போது வாங்கிப் பாருங்கள். கொஞ்சம் விலை அதிகம். வெளியில் தங்க நிறப் பேப்பரால் சுற்றியிருக்கும். சிப்பிக்குள் தங்க முத்துப்போல வெளித்தோற்றம். அந்தப் பேப்பரைத் திறந்தால், உள்ளே கோதுபோல(wafer) ஓர் அடுக்கு இருக்கும். அதில், 'hazelnut'களை துண்டுகளாக உடைத்து, சொக்கலேட்டோடு கலந்து ஊற்றியிருப்பார்கள். அதை உடைத்தால், உள்ளே இன்னுமொரு மில்க் சாக்லேட் உருண்டை இருக்கும். அதையும் திறந்தால், உள்ளே அந்த 'hazelnut' சின்ன உருண்டையாக இருக்கும். அதைக் கடிக்கும்போது ஒருவிதமான நெருக்கும் உணர்வு ஏற்படும். 

வெளி உறையை மட்டும் அகற்றிவிட்டு அப்படியே வைத்துக் கடித்தால் அதற்குச் சுவை அதிகம். காரணம், நாக்கு ஒவ்வொரு லேயராக சிறுகச் சிறுக உணர்ந்து சுவைக்கும். இந்த மறைப்பும், இந்த உடைப்பும் அந்தச் சுவையை இன்னும் உயர்த்தும். அந்த waferஐ, பற்களால் உடைக்கும்பொழுது ஒருவித வாய்வழி இன்பம்(oral) கிடைக்கும். அந்த மில்க் சாக்லேட் உள்ளே நாவுக்கு இன்பம். பிறகு மீண்டும், உள்ளே இருக்கும் உருண்டையான hazelnut பற்களுக்கு இன்பம். கொஞ்சம் மென்மையான தன்மையும் கடினமான தன்மையும் பற்களுக்குக் கிடைக்கும். ஆகையால், இதைச்  சாப்பிடுபவர்களின் சென்ஸரி நியூரோன்களுக்கு மோட்சம்தான்.

உண்மையில், இதன் வெளியில் சுற்றியிருக்கும்(wafer) லேயரை உருண்டை வடிவில் வளைத்தெடுக்கவே அப்போது ஐந்து வருடங்களாகி இருக்கிறது. அதற்குரிய தொழிநுட்பம் கண்டுபிடிக்க அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அதற்குப் பிறகுதான் மார்கெட்டுக்கு வந்தது. அத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்கக் காரணம் இருக்கிறது. இந்த ஐந்தடுக்கு நட்சத்திர விடுதிகள் எங்கும், food garnishing(உணவு வடிவமைப்பு) செய்திருப்பார்கள். வீட்டிலேயே வாசத்துக்கு இலைகள் போடுவோம். உணவு நம் அடிப்படைத் தேவையென்று எதையோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லை. அவற்றை மேலும் மேலும் அழகாக்குகிறோம். இரசனைக்குரியதாக்குகிறோம். அந்த இரசனை நமக்கு உணவின் சுவையைக் கூட்டுகிறது. உணவு உண்மையில் கண்களை முதலில் தாக்குகிறது. இதை அறிந்துதான் இத்தனை ஜோடிப்புகள். அழகை உண்கிறோம். கேஎப்ஸி சிக்கன் மீதிருக்கும் கிரிஸ்பிபோல, ferero roucher கிரிஸ்பி பிடிக்கிறது.

உண்ண முதலே, டார்க் சாக்லேட் (Dark fantasy) நிறமும் மில்க் சாக்லேட் நிறமும் பார்வையின்மூலம்  வேறுவேறு உணர்வுநிலைகளைத் தூண்டக்கூடியது. சாக்லேட், காமத்தின்போது தூண்டப்படும் உணர்வுநிலைகளைத் (சென்ஸரி நியூரான்கள்) செயற்படுத்தக்கூடியது. குறிப்பாகக் காதலர்தினத்துக்கு சாக்லேட் விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவது உண்டு. அவை, நமக்குத் தெரியாமலேயே நம்முடைய காமத்துக்கான இன்பத்தை தரக்கூடியது.  

காமத்தைக்  காதல் கொண்டு ஜோடித்தோம். அந்தக் காதலையும் காமத்தையும், கவிதைகள், கலைகள் கொண்டு ஜோடிக்கிறோம். உணர்வுகளின் பரிணாமம் அழகான அடுக்குகளைத் தருகிறது. அதன் மூலம் இரசித்து இரசித்து அந்த உணர்வுகளுக்கு மேலும் மேலும் சுவை கூட்டுகிறோம். காமத்தையும் உணவுகளையும் இன்னும் சுவைத்து உண்கிறோம். ஜோடிப்புகள், லேயர்கள் எல்லாம் வைத்து வைத்து, இரசனைகளால் உலகை மேலும் மேலும் அழகாக்கிச்  சுவைக்கிறோம்.

Sunday, January 21, 2018

காமம்: கடவுள் பாதி; மிருகம் பாதி

Wildness in bed: A journey that heals life's deepest wounds. Please avoid if you don't want to heal. 'ளவந்தான்' திரைப்படத்தின் காட்சி குறித்துப் பேசும் முன்னர், அதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். உளவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியை உணராமல், அதன் அழகை இரசிக்கமுடியாது என்பதால், இவற்றைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.  

செக்ஸ் பொஸிடீவ் மூவ்மென்ட் : இதுவொரு சமூக முன்னேற்ற அமைப்பு. இது மேற்குலகில், 1960களிலிருந்து வீறு கொண்டது. எல்லோருக்கும் காமத்தில் முழுச் சுதந்திரம் இருக்கிறது எனவும், வெவ்வேறுபட்ட காம இரசனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியது எனவும் போராடிய அமைப்பு. இது காமத்தில் ஒருவருக்கு இருக்கும் தனிமனிதச் சுதந்திரத்தை முன்னிறுத்தியது. தன்னுள் எழும் காமத்தை, ஒருவருக்குப் பூரணமாக அனுபவிக்க அனுமதி உண்டென்று முன்னின்றவர்கள் அனைவரும் அதில் சேருவர். இவர்கள் யாரிடமிருந்து விடுதலை கேட்டார்கள்?

சமூகமும்(நாம்) மதங்களும் காமம் பிழையானது எனவும், அது குழந்தை பெறுவதற்காக, திருமணம் எனும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்கள் மட்டும் நிகழ்த்தும் பண்பாடற்ற செயலெனவும், ஆழ்மனதில் வகுப்பெடுத்தது. காமத்தைக் கட்டுப்படுத்தச் சொன்னது. மக்கள் நம்பினார்கள். ஆனால், உள்ளிருக்கும் ஆதிகால இச்சை அதை விடவில்லை. இரண்டும் மோதிக்கொள்ள அழுத்தம் வந்தது. அழுத்தம் எதனால் வருகிறதெனத் தெரியாததால் மீண்டும் மதங்களிடம் போனார்கள். மேலும், விவாகரத்துகள் எல்லாம் அதிகமானது. மன உளைச்சல் அதிகமானது. அதனால், பலரும் தங்களைத் திருமண பந்தத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை.  

இவ்வாறான பிரச்சனைகளை நன்றாக அவதானித்துப் புரிந்துகொண்ட சிலர், காமத்தையும் காதலையும் சுதந்திரமாக விடவேண்டுமென்று விதிகளைக் கடந்து நடந்தார்கள். பலரும் அதன்படி வாழவும் செய்தார்கள். லிவிங் டுகெதர் எல்லாம் அந்தச் சுதந்திரத்தின் ஓர் அங்கம். அது திருமணத்துக்கு வெளியிலான உடலுறவை ஆதரித்தது. கூடவே, செக்ஸ் கல்வியும், பாதுகாப்பு வழிமுறைகளும் அவசியம் என்றது. இப்பொழுது, காமம் வைத்துக்கொள்ள விரும்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கிறது. அதைத் தனி மகிழ்ச்சிக்காக நிகழ்த்தலாம். இதையெல்லாம் ஆதரித்துச் சில தத்துவவியலாளர்களும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள். மனிதர்கள் காமத்தை அனுபவித்துக் கடக்கவேண்டும் என்றார்கள்.

உண்மையில், இன்னொருவரின் காமம் சார்ந்த தேடலை நாம் தீர்மானிக்கமுடியாது. இருவரின் அனுமதியோடு அது நடப்பதால், மூன்றாவதாக மூக்கை நுழைக்கும் நபர் குறித்தோ, சமூகச் சட்டங்கள் குறித்தோ இந்த மனிதர்கள் அலட்டிக்கொள்ளவில்லை.

உளவியல் என்று பார்த்தால், எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கும். ஒருவித aggression இருக்கும். வாழ்க்கையின்மீது  கோபங்கள் இருக்கும். யாரையாவது உடல் ரீதியாகவோ அல்லது  உளவியல் ரீதியாகவோ காயப்படுத்திப் பார்க்கப் பிடிக்கும். முன்பின் அறியாதவர்கள் பற்றி கொஸிப் (Gossip) செய்வதும் ஒருவித உளவியல் தாக்குதல். உளவியல் பாதிப்பென்றால், சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவில் போவது என்று நினைக்கிறோம். உண்மையில் உளவியல் பாதிப்புள்ளவர்கள் ஏஸி காரிலும் போகலாம்; காதலி இருக்கலாம்; குடும்பங்கள் இருக்கலாம். அப்படி நம்முள் இன்னொரு முகம் இருப்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு நல்ல உளவியல் மருத்துவரை நாடுவதில்லை. வெட்கத்தால் மறைப்போம். மறைக்க மறைக்க வளரும்.  

schizophrenia : ஏனைய உளவியல் நோய்களிலும் பார்க்கக் கொஞ்சம் பாரதூரமானது. இது உள்ளவர்கள், கனவையும் நிஜமென நம்புவார்கள். மிகவும் நெருங்கியவர்கள் இறந்துபோனால், அவர்கள் அருகில் இருப்பதுபோலவே கற்பனை(hallucinations) செய்வார்கள்; அவர்களோடு பேசுவார்கள். மனதில் குழப்பகரமான சிந்தனைகள் வந்துபோகும். 
Paranoid delusion : கூடுதலாகப் போர்ப் பிரதேசங்களில் இருந்துவந்த மக்களுக்கும் இருக்கும். யாராவது தன்னைக் கொல்ல நினைப்பதுபோல நினைத்துக்கொள்வார்கள். இராணுவ ஏஜென்டுகள் தன்னைப் பின்தொடர்வதாக எல்லாம் நினைத்துக்கொள்வார்கள்.


 

ஆளவந்தானில் காட்டப்படுகிற மனிஷா- கமல் உறவு அழகானது. திரைப்படத்தில் கமலுக்கு, 'schizophrenia' வும், பரனோயாவும் இருக்கும். சின்ன வயதில் சித்தியால் (அப்பாவின் இரண்டாம் மனைவி) உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படுவான். இவற்றைத் தாங்கமுடியாமல் சித்தியைக் கொலைசெய்துவிடுவான். கூடவே தனது அம்மாவையும் இழந்துவிடுவான். சிறையிலும் சரிவரக் கவனிக்கப்படமாட்டான்.


இந்தப் பாதிப்புகள் அனைத்தும் அவன் மனதில் ஆழவும் பதிந்துவிடும்.  இறந்துபோன அம்மாவை அழைத்துப் பேசுவான். அவனுக்கு அம்மாவென்றால் மிகப்பிடிக்கும். தம்பியாக வரும் இன்னொரு கமலின் காதலியைத் தனது சித்தியென நினைத்துக்கொள்வான். அவளிடமிருந்து தனது தம்பியைக் காப்பாற்றவேண்டும் என்பது மட்டுமே அவனது குறிக்கோள். அவளும் தனது சித்தியைப்போல தன்னைக் கொலைசெய்யப் பார்க்கிறாள்(Paranoid delusion) என நினைத்துக்கொள்வான். உண்மையில் அவள் அப்படியில்லை; அவன்மீதும் அன்பு கொண்டிருப்பாள். அவனுக்கு அது புரியாது. அவனைப் பொறுத்தவரை இவள் சித்தி. அதற்கு, அவனுடைய சின்னவயதுக் காயங்கள்தான் காரணம். மற்றபடி சாதாரண மனிதர்களுக்கு அவன் தீங்கு செய்வதில்லை.

"கடவுள் பாதி மிருகம் பாதி" என்கிற பாடலில், அவனுக்கு மனிஷாவின் நிகழ்ச்சிக்கான(ஆபிரிக்க காட்டுப்புலி) விளம்பரத்துண்டு தற்செயலாகக் கிடைக்கும். அந்தக் காட்சியில் அவன், கடவுளுக்கும் மிருகத்துக்கும் இடையில் போராடிக் கவிதை செய்துகொண்டிருப்பான். அந்தப் போராட்டம் நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் மிருகத்தை மறைத்து தெய்வத்தை மட்டும் காட்டிக்கொண்டிருப்போம்.

ஆனால் அவனுக்குத் தன் பிரச்சனை தெரியும். இரண்டும் இருப்பதை ஏற்றுக்கொள்வான். மனதுக்குள் முட்டி மோதுவான். 'மிருகம் கொன்ற எச்சம் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா' என்றுவிட்டுத் தன் இதழ்நீர் தடவி அவள் உருவமுள்ள விளம்பரத்துண்டை சுவற்றில் ஒட்டி வணங்குவான். (அது அவனுடைய எக்ஸ்ட்ரீம் செய்கை)

பிறகு, அவளுடைய நிகழ்ச்சிக்கான போஸ்ட்டரைப் பார்த்துவிட்டு, கற்பனையில் அவளை அழைப்பான். அவனுக்கு ஷர்மிலியின் ஃபான்டஸி வடிவம் பிடித்துவிடும். அவள் ஒருவித, Fetish wear (Latex & Leather) அணிந்திருப்பாள்.  அது ஒருவித காமச் செய்கைக்குரிய(BDSM) ஆடை அணியும் முறை. அதை அறிந்துதான் வைத்தார்களா தெரியாது. அவனுக்கு, அவளை அந்த ஆடையில்  பார்க்கப் பிடித்திருக்கவேண்டும். அவள், அவனுக்குப் பிடித்த மழையைக் கொடுப்பாள். அவனுக்கும் அவளை மிகப்பிடித்துப்போனதும் சேர்ந்து நடனமாடுவான். நடனம் முடிந்ததும் அம்மா வந்து கேட்பாள், "உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா? டான்ஸ்லாம் ஆடினே?"

மீண்டும் ஹோட்டல் ரூமில் அவளை முதன்முறையாக நேரில் சந்திக்கிறான். அவனைப் பொறுத்தவரைக்கும் அது இரண்டாவது சந்திப்பு. காரணம், அவனுக்குக் கனவும் நிஜமும் ஒன்று. ஆனால், அவளைப் பொறுத்தவரை அது முதலாவது சந்திப்பு.

எக்ஸ்டஸி மாத்திரையை எடுத்துப் போட்டதும், 'Oh Bad. You wild. Don't go away' என்பாள். அவனைப் பிடித்ததும், ஒரு கஷுவல் செக்ஸ்க்குத் தயாராவாள். அவளும் ஒரு மாத்திரையைப் போட்டுக்கொள்வாள். இன்னொரு கொலைசெய்ய வந்த அவனுக்கு அவளை இன்னும் பிடித்துவிடும். அவளுக்கும் அவன் பேச்சுப் பிடித்துவிடும். ஒருவித, 'Playfulness' நிலைக்குப் போவார்கள்.

அவளிடம், "மரணமும் காமமும் ஒன்று" என்பான். கமல் ஓஷோ சொன்ன தத்துவவியலும் படித்திருக்கலாம். ஓஷோ, மனிதர்கள் இரண்டையும் பற்றிப் பேசுவதில்லை என்பார். இரண்டின்மீதும் மனிதர்களுக்குப் பயம் என்பார். 

அந்தக் காட்சியில், மிருகம்- கடவுள் என்று உரையாடிக்கொள்வார்கள். அவன் தனது  மனநிலையைச் சொல்வான். அவள் காமத்தைச் சொல்வாள். தனக்குக் காமத்தில்  இரண்டும் வேண்டும் என்பாள். அவனோ, தன்னோடு ஒப்பிட்டு ஒன்றுமட்டும்தான் கிடைக்கும் என்பான். மிகவும் அழகாக உளவியல் அறிந்து எழுதப்பட்ட வசனம் அது.

எங்களிடமும் இரண்டும் உண்டு. ஆனால் இரண்டும் சமநிலையில் இருக்கும். ஆனால் உளவியல் பாதிப்புள்ளவர்கள் ஏதேனும் ஒன்றில் மிகவும் எக்ஸ்ட்ரீமாக போவார்கள். அவன் சிலநேரம் முழுக் குழந்தை. சிலநேரம் அதீத மிருகம். இருவருக்கும் வைல்டான, ஃபாண்டஸி சமாச்சாரங்கள் பிடிக்கும். அது ஒரு அழகான காதலில், காமத்தில் முடிந்திருக்கவேண்டியது. கவனித்தால், அவன் அவளைத் தொட அனுமதிப்பான். கூடுதலாகத் துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்கள் தொட அனுமதிக்கமாட்டார்கள். அதிலும் அவனுக்குப் பெண்கள் என்றால் பிடிக்காது. அவளை அனுமதிப்பான்.

அவள் BDSM நிலைக்குப் போவாள். அவளுக்கும் அது பிடிக்கும். கூடவே, அவனது சிறுவயது நினைவுகள் வரும்படி நடந்துகொள்ள அவளையே கொன்றுவிடுவான். பிறகு, அதை உணர்ந்து அழுவான்.

"யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலிவடிவம் பூவாக மாறுவேன்" - வைரமுத்து 


காமம், உளவியலை மாற்றக்கூடியது. அவளோடிருக்கையில் அவன் மாறிக்கொண்டு வருவான். கட்டிலில் கொஞ்சம் மிருகம் அனுமதித்தால், மிருகம் முடிந்ததும் தெய்வம் குடியேறும். இல்லாவிட்டால் மிருகம் உள்ளேயே இருக்கும். அது மிகவும் ஆபத்து. எல்லோருக்குள்ளும் வெளியில் சொல்லமுடியாக் கோபங்கள் இருக்கிறது. இதையெல்லாம் காமம்(Wildness) வெளியேற்றும்.


“Sex is kicking death in the ass while singing.” - Charles Bukowski

அது 'kicking' or 'slapping' எதுவாக இருந்தாலும், இருவர் அனுமதியுடன் பேசி நிகழ்வது அழகு. ஈடுபடுபவர்கள் இருவருக்கும் பிடித்திருக்கவேண்டும்.

அந்தப் பாடலிலிருந்து(ஆபிரிக்க காட்டுப்புலி) ஆரம்பமாகும் காட்சி முழுதும் மரணத்தையும் காமத்தையும் தொடர்புபடுத்தும்.

"யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலிவடிவம் பூவாக மாறுவேன்" என்பது வைரமுத்து எழுதிய வரிகள்.

காமமும் அதையே செய்யக்கூடியது. அதீத காமம், முடிவில் மனிதனுள் சுதந்திரம் உண்டாக்கும். புதிதாய்ப் பிறக்கவைக்கும்.

இந்தப் படம் வந்து பத்து வருடங்கள் கழித்து 'Fifty shades of grey' தொடர் நாவலாக வந்தது. அவள் காமத்தால் அவன் காயங்கள் ஆற்றுவாள். அவளுக்கும் அது பிடித்திருக்கும். அந்த மனிஷா - கமல் காதல் நீண்டிருந்தால் தமிழில் ஒரு 'Fifty shades of grey' கிடைத்திருக்கலாம். ஆனால் நந்து, கிரிஸ்டியன் கிரேயைவிடக் கொஞ்சம் பாதிப்பு அதிகமுள்ளவன். 

கடவுளுமில்லாமல், மிருகமும் இல்லாமல், இரண்டுக்கும் நடுவில் மனிதனாக வழிதேடியவனுக்காக, வைரமுத்து சில வரிகள் எழுதியிருப்பார்.

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்தவன் கலவை நான் 
காற்றில் ஏறி மழையில் ஆடி கவிதை பாடும் பறவை நான் 
ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு துளியும் உயிரின் வேர்கள் குளிர்கிறதே 
எல்லாத் துளியும் குளிரும்போது இருதுளி மட்டும் சுடுகிறதே 
நந்தகுமாரா நந்தகுமாரா மழைநீர் சுடாது தெரியாதா 
கன்னம் வழிகிற கண்ணீர்த்துளிதான் வெந்நீர் துளியென அறிவாயா 
சுட்ட மழையும் சுடாத மழையும் ஒன்றாய்க் கண்டவன் நீதானே 
கண்ணீர் மழையில் தண்ணீர் மழையைக் குளிக்கவைத்தவன் நீதானே.

இதையெல்லாம் கலையாகத் தந்த கமல் ஒரு அற்புதக் கலைஞன். கலையின்மீது பித்துக்கொண்டவன்.