Skip to main content

Posts

Showing posts from 2013

இரண்டாம் உலகம் - Universe or Multiverse ?

இரண்டாம் உலகம் திரைப்படம், Multiverse theory, Membrane theory போன்றவற்றை அடிப்படையாக் கொண்ட திரைப்படம். படத்தில், தியரி பற்றி பெரிய அறிமுகம் ஏதும் கொடுக்கப்படவில்லை. Michio kaku மற்றும் ஐங்ஸ்டைன் சொல்லிய கோட்பாட்டை டைட்டிலில் எளிமையாகப் போட்டார்கள். முக்கியமாக ஐங்ஸ்டைன் முடிக்காமல்( Theory of everything ) விட்டுப்போன கோட்பாடுகளில் ஒன்று. அதில் ஆர்வம் கொண்ட Michio kaku பின்னர் தானும் ஆய்வில் இறங்கினார். நம்மைப் போலவே நிறைய உலகங்கள் இருக்கின்றன, அதில் நம்மைப் போலவே பலர் இருப்பார்கள் என்கிற தியரி. உதாரணமாக, நீங்கள் இதை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள், நீங்களே வேறொரு உலகில் இருந்து திபெத்திய போராட்டம் பற்றி வாசித்துக்கொண்டிருக்கலாம். இன்னொரு உலகில், இணையமே இன்னமும் அறிமுகமாகாமல் இருக்கலாம். இன்னமும் நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.அங்கிருப்பவர்கள் தமிழை மொழியாகக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அங்கு இயற்பியல் விதிகள் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். நம்மைப் போன்றவர்களை, அவர்களின் உலகை பார்க்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சூரிய குடும்பத்தில் பூமி இருப்பது...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

விரிச்சி கேட்டல் : 'வாய்க்குச் சக்கரை போடணும்'

'அமுதம் உண்க நம் அயலிலாட்டி' என்றொரு நற்றிணைப் பாடல்(கபிலர்) உண்டு.அதாவது பக்கத்து வீட்டுப் பெண்(அயல் + இல் + ஆட்டி) அமுதம் உண்ணட்டும் என்கிறாள் தலைவி. யாராவது நல்ல விஷயம் சொன்னால், 'வாய்க்குச் சக்கரை போடணும்' என்று இப்போது சொல்ற மாதிரி. தலைவி இவ்வளவு சந்தோஷப்படுகிற அளவுக்கு அப்பிடி என்னத்தைச் சொல்லிப்புட்டா பக்கத்து வீட்டுப் பெண்? தலைவன் வருவானா என்று காத்திருக்கிறாள் தலைவி. தலைவன் வந்திடுவான் கவலைப்படாதே என்று தோழி தேற்றுகிறாள். உடனே தலைவியை மேலும் தேற்ற ஒரு செய்தியையும் சொல்கிறாள். "பக்கத்து வீட்டுப் பெண் வேறோருத்தியோடு ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதோ எழுந்தமானமாக, 'அவன் இப்போதே வந்துவிடுவான்'  என்று கூறினாள். எனக்கென்னவோ அது நல்ல சகுனமாக/செய்தியாகப்படுகிறது" என்றாள். ஒரு நல்ல சொல்லைக் கேட்டல், நல்ல சகுனம் என நினைத்தார்கள் பண்டைத் தமிழர்கள்.அதுதான் 'விரிச்சி கேட்டல்' எனப்படுகிறது. ஏதாவது நல்ல வேலையா போகும்போது எங்கிருந்தோ வரும் நல்ல சொல் கேட்டல். உதாரணமாக, மணி அடித்தால் நல்ல சகுனம் என்பது மாதிரி. தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும்...

சங்க காலத்தில் திருக்கார்த்திகை விளக்கீடு!

பண்டைய தமிழர் மரபில், கார்த்திகைத் திருநாளன்று தீபங்களை வரிசையாக அடுக்கி விழாக் கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. வட இந்திய மக்களுக்கு தீப + ஆவளி  போல, நம் தமிழர் மரபில் திருக்கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போது சமயம் கலக்காத ஒரு கார்காலப் பண்டிகையாக கொண்டாடப்பட்டுள்ளது. கார் நாற்பது எனும் நூல்,  தன்னைப் பிரிந்து வெளியூருக்குச் சென்றிருக்கும் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் ஏக்கத்தைக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகிறது. இவை கார்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும் எடுத்துக் கூறுகின்றன. நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட  தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்  புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை   நன்மை மிகுந்த கார்த்திகைத் திருவிழா நாளில், நாட்டில் உள்ளவர்கள் கொளுத்தி வைத்துள்ள முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகிப் பூத்திருக்கின்றன தோன்றிப்பூக்கள்(தோன்றி என்பது காந்தல் மலரின் வகை எனப்படுகிறது)'  என்கிற பொருளில் இந்தப் பாடல் அமைகிறது.   அகநானூறிலும்(நக்கீர...

மூடர் கூடம்

அண்மையில் வெளியான திரைப்படங்களில் இயக்குனர்  நவீன் அவர்கள் இயக்கிய 'மூடர் கூடம் '  மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முயற்சியையும் புதிது என அறிமுகப்படுத்துவது கொஞ்சம் பழசாகப்படுகிறது. Quentin Tarantino வினுடைய படங்கள் போல என்கிற அறிமுகத்துக்கு  எல்லாம் அவசியமில்லை. இந்த அறிமுகங்கள்,விளக்கங்கள் எதுவுமில்லாமல் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். தமிழில் ஒரு புதுமையான திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டும். படத்தில் அப்படி என்ன இருக்கு ? . ஒரு ஆர்வத்தில், 'படத்தின் கதை என்ன ?' எனக் கேட்பவர்களுக்காக கதையைச் சொல்லிடலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாலு பேரும்  சேர்ந்து திருடப்போறாங்க.படத்தின் கதையே அவ்வளவுதான்.ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்திருக்கிறார் நவீன். அந்த நான்கு பேரில் இயக்குனர் நவீனும் ஒரு பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.படத்தில் வருகிற அத்தனை பேரின் நடிப்பும்,Deadpan expressions உம் பிரமாதம்.ஒவ்வொரு சிறிய கதாப்பத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. நாய்க்கு ஒரு பாடல் கூட உண்டு. Flashback எல்லாம் உண்டு. விலங்குக...

கம்பன் கவிச்சுவை

சுவாரசியமான கம்பராமாயண பாடலொன்று. மேற்குல சூரியன் உதிக்குமா?. அதான் கம்பன். கம்பனின் கவிச்சுவையை கொஞ்சம் இரசிப்போம் என்று யூடியூபில் தேடியபோது ராகவன்(  @ RagavanG  )  அவர்கள் தொகுத்த ஒரு காணொளி கிடைத்தது.   வேறு வேறு time zone பற்றி கம்பன் சொல்லுகிறார்.வடக்கே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறையும், உலகம் உருண்டைன்னு எப்படி அந்தக் காலத்தில் தெரிஞ்சிருக்கும்! வால்ம ீகி ராமாயணத்தில் இல்லாமல் கம்பராமாயணத்தில் மட்டுமே உள்ள காட்சி. எத்தனையோ யோசனைகளைக் கடந்து இலங்கையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் அனுமனுக்கு வடதுருவத்தை அடைந்ததும் திசை மாறுகிறது. கீழுள்ள பாடலும் பொருளும் இன்னொரு இணையப்பக்கத்தில்( https://groups.google.com/forum/#!msg/mintamil/-MA8upTnKKA/vrLUjNRhyaEJ )  இருந்து எடுக்கப்பட்டது.   அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த வள்ளல், உத்தரகுருவை உற்றான். ஒளியவன் கதிர்கள் ஊன்றி, செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி, வித்தகன், 'விடிந்தது!' என்னா, 'முடிந்தது, என் வேகம்!' என்றான். மேருமலையை நீங்கி அப்பால் சென்...

கொழும்பு : பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகிய 'கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி'யில் இந்தத் தடவையும் கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்ப்பட்ட  புத்தக நிலையங்கள். 15 ஆவது தடவையாக இந்த பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி BMICH இல் நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஒரு வாரத்துக்கு நடைபெறும். முதல் நாளிலேயே ஒரு இலட்சம் பார்வையாளர்கள் வந்து போனார்கள் என ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டாவது நாள் ஞாயிறு ஆகையால் அதிக கூட்டம்.நீங்கள் செல்லும் போது முதலிலேயே Hall A க்குச் சென்று புத்தக நிலையங்கள் தொடர்பான விபரம் அடங்கிய துண்டை பெற்றுக்கொண்டால் இலகு.அல்லது முன்னாலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த முறை சரியாகத் தமிழ்ப் புத்தக நிலையங்களை இனங்காண முடிந்தது. தமிழ்ப் புத்தக விரும்பிகளுக்கு ஏற்ற நிறைய புத்தகங்கள் ஜெயா புக் சென்டரிலும்(Hall -A : A-47, 51- 58),பூபாலசிங்கம் புத்தகசாலையிலும்(A - 25,27) மற்றும் புக்வின்னிலும்( Hall J - 400) கிடைக்கிறது. ஜெயாவில் அதிகமாக ரமணிச்சந்திரன்,பா லகுமாரன்,இந்திரா பார்த்தசாரதி,சுஜாதா புத்தகங்களை காணக்கிடைத்தது.  பூபாலசிங்கத்தில் எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள்...

சில கணங்கள் : அகம்புறம்

ஒரு சில புத்தகங்களை, சுவாரசியமான துப்பறியும் கதையைப் படிப்பது போல  எடுத்த எடுப்பிலேயே படிச்சு மூடி வைச்சிட முடியாது. வாழ்க்கைல எல்லாத்தையுமா ரசிச்சுடுறோம்.நம்முடைய வேகம் அப்படி. அதே வேகத்தை இரசனையான பகிர்வுகளைக் கொண்ட புத்தகங்களின் பக்கங்கள் மேல் காட்ட முடியுறதில்லை. எதை எப்படி வாசிக்கவேண்டுமென ஒரு சில பக்கங்களை தாண்டிய பின் புத்தகங்களே நமக்குச் சொல்லிக்கொடுக்கும்.ஒரு சில புத்தகங்களை   ஒரு நாளைக்கு ஒரு சில பக்கங்கள் எனப் படிப்பது இன்பம்.  அப்படி ஒரு புத்தகம் தான் வண்ணதாசன் அவர்கள் எழுதிய அகம்புறம்.கடற்கரையோரமாக நடந்து போவதற்கும்,கடலை சலிக்காமல் நின்று பார்த்துக்கொண்டிருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.சில கணங்கள் மெதுவாகவே நகர வேண்டும்.பக்கங்களும் அப்படித்தான்.இந்த 'மெதுவாக' என்பது போகப் போக இயல்பாகிவிடும்.வாழ்க்கையின் சில கணங்களை மெதுவாக்கிவிடும் இயல்பு இரசனைகளுக்கு உண்டு.குழந்தையைப் பார்க்கும் போது சட்டென்று விரிகிற புன்னகை மாதிரி. புத்தகத்தை இன்னும் படித்துமுடிக்கவில்லை.இப்போதைக்கு முடிப்பதாகவும் உத்தேசம் இல்லை. அந்தப் புத்தகத்திலிருந்து இதுவரை பகிர்ந்துக...

கவிப்பேரரசு வைரமுத்து: இலக்கியப்பாடல்கள்

வைரமுத்து அவர்களின் பிறந்தநாளில் இருந்து அவரைப்பற்றிய பதிவுகளையே தொடர்ந்து எழுதுகிறேன்.வெறும் பாட்டு வரியில் என்ன இருந்துவிடப் போகிறது என கடந்துபோக  முடியாதபடி, அவற்றுள் ஒருவித  இலக்கியச் சுவையை,விஞ்ஞானத்தை,தகவல்களைக் கொண்டு வந்தவர் அல்லவா!.கொண்டுவந்து சேர்த்தார்  என்பதை விட ,நமக்கு அதை அறிமுகப்படுத்த முயன்றுகொண்டிருப்பவர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவரது முயற்சியை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் அறிந்திருப்பார்கள். சாதரணமாக அனுகிவிட்டுப் போகாதபடி புதுமையால் கட்டிவைக்கும் பாடலாசிரியர்.  வைரமுத்து அவர்கள் ,'இரண்டாம் உலகம் ' திரைப்படப் பாடல்களை வெளியிட்டு வைக்கும்போது, " இலக்கியத்தின் சாரங்களைப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத்தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முயற்சிசெய்து வருகிறேன்" என்று கூறியிருந்தார். அவர் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அவற்றை  மாற்றி எளிமையான வரிகளாகக் கொடுத்தார்.ஆனால்  இலக்கியப் பாடல்களை கொஞ்சம் கூட மாற்றாமல் நேரடியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கூடுதலாக ரஹ்மானுக்கு எழுதிய பாடல்களில் நேரடியான வரிகள...

வைரமுத்து : திருக்குறள்

'அவள் வருவாளா' என்கிற பாடல் 98 களில் மிகவும் பிரபலம். அந்தப் பாடலை இப்போதுகூட சத்தம் எழுப்பாமல் மனதுக்குள் பாடிப் பார்க்காதவர்கள் கிடையாது.  தேவா இசையமைப்பில் ஷாகுல் ஹமீதும் ஹரிகரனும் பாடிய பாடல். அதில் ' ஏய் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணிலிருக்கு, அந்தப் பெண்ணிலிருக்கு' ங்கிற வரியை மட்டும் ஷாகுல் ஹமீது பாடுவார். ஹரிகரன் குரல் இருக்கும் போதே அந்தக் குரல் தனித்துத்தெரியும். "வீ மிஸ் யூ ஷாகுல் ஹமீத்" என்று சொல்லத் தோன்றுகிறது.  புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில இருக்கிற குறளை பயன்படுத்தியிருக்கார் வைரமுத்து. அந்தக் குறளை வேகமாகப் பாடுமளவு, துல்லியமான குரல் வளம் உடையவர் ஷாகுல் ஹமீத். சரி காமத்துப்பாலில் வருகிற அந்த வரியில் அப்படி என்ன சிறப்பு.  கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்  ஒண்தொடி கண்ணே உள. எனும் குறள் தான் அது. கண்களால்  பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம், ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண...

'நெஞ்சுக்குள்ள' - வைரமுத்துவும் குறுந்தொகையும்

'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ' பாடலில் 'பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு, நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு' என்றொரு வரி. அதென்ன 'நொச்சி மரத்து இலை கூட தூங்கிரிச்சு'? குறுந்தொகையில்(138) வருகிறது :  கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே எம் இல் அயலது ஏழில் உம்பர் மயிலடி இலைய மா குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. 'ஊரே தூங்கிடிச்சு,நான் மட்டும் தூங்கல்ல. என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏழில் மலைல , மயிலோடை கால்களை மாதிரி இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தோட பூக்கள் உதிர்கிற சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்' என தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள். ஆனால் வைரமுத்து அந்த நொச்சியும் தூங்கிடிச்சு என்கிறார். இலக்கியத்தை எவ்வளவு அழகா தொடர்புபடுத்துகிறார்.

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

முருகன் : பகிர்வுகள்

ஐந்தாம் நூற்றாண்டு வரை முருகனுக்கு வள்ளி ஒருத்தி தான் மனைவி. வடமொழிப் பண்பாட்டுக் கலப்பில் ஸ்கந்தக் கருத்து நம் முருகக் கருத்துடன் கலந்த பின் தான் தேவசேனை எனும் மற்றொரு மனைவி ஏற்பட்டதாக ஒரு கட்டுரையில் சுஜாதா குறிப்பிட்டிருக்கார். " சேயோன் மேய மைவரை யுலகமும்" என  தொல்காப்பியம் கூறும் சேயோன் தான் சுத்தமான தமிழ்க் கடவுள் போல. அதுவும் ஆதிகாலத்தில் சேவல்தான் முருகனின் கொடி. பின்னர் தான் மயில் வாகனமாகியிருக்கிறது. தெய்வம் பற்றி தேடிக்கொண்டிருந்ததில் 'தெய்வம் ' எனும் சொல் எப்படி உருவானது என சில தகவல்களில் விக்கியில் கிடைத்தது. 'தெய்' என்ற உரையசைக் கிளவியிலிருந்து தான் தெய்வம் எனும் சொல் வந்திருக்கிறது. 'தெய்யனே' எனும் சிங்களச் சொல்லும் அங்கிருந்து வந்திருக்கலாம் .  அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிறக்கும் ஆற்றலைத் தேய்வு என்றிருக்கின்றனர். பின்னர்  அது தேய்வம், தெய்வம் என்றாகியிருக்கிறது(நன்றி  விக்கிபீடியா). புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க" என திருவாசகத்தில...

கதை நேரம் : பாலுமகேந்திரா

மேசை மீது  ஒரு  paperweight , அதன் கீழே பறக்கும் ஒரு சில கடதாசிகள், பேனை,புல்லாங்குழல் இசை என அனைத்தும் இன்னமும் நினைவில் இருந்தால் நீங்களும் பாலுமகேந்திராவின் 'கதை நேரம் ' தொடருக்கு இரசிகர் தான். அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்தத் தொடர். ஒவ்வொரு கதாப்பத்திரங்களுக்கும் செயற்கைத் தன்மை அற்ற உணர்வை கொடுத்திருப்பார் . நான் பார்த்த போது என் வயது நுண்ணிய உணர்வுகளை எல்லாம் உற்றுநோக்கும் அளவில் இருக்கவில்லை . இயற்கையாகவே ,கதையின் போக்கிலேயே பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலித்ததால் இன்று வரை அந்தக் கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத திரைக்கதை,இயக்கம். அது பாலுமகேந்திராவுக்கே உரிய  வித்தை. இப்போது அந்தத் தொடர்களை  மீண்டும் பார்க்கும் போது Lighting இல் இருந்து எத்தனை விடயங்களை இந்த மனுஷன் கவனித்திருக்கிறார் என வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஜீனியஸ். அவர் தொடக்கி வைத்த புதிய அத்தியாயத்தை யாரும் பின்பற்றவில்லை என்பது தான் கவலைக்குரியது.   மனதினில் கொஞ்சம் அமைதி நிலவும் வேளையில் 'கதை ...

பாடிண்ட ஈனம் நீயானு...

மலையாளப்  பாடல்கள் மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு. அண்மையில் காதுகளுக்கும் கண்ணுக்கும் இனிமை தரும் ஒரு பாடல் கேட்டேன். இந்தப் பாடல் வந்தது 2012 ல். என் கண்ணில் இப்போது தான் பட்டது.  'Yuvvh" எனும் பாடல் தொகுப்பிலிருந்து   "நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்" என்றொரு பாடல் . மீண்டும் மீண்டும் பல தடவைகள் கேட்டுவிட்டேன்."பாடிண்ட ஈனம்(tune) நீயானு", "நீ வரு ஈ  பாட்டின் ராகமாய்", "விரியுன்ன சித்ரம் நீயானு " என்று அழகான வரிகள் கொண்டு கட்டப்பட்ட பாடல்.     பாடலின் காட்சியமைப்பின் அழகுக்கு ஒரு காரணம் Nazriya Nazim .ஒவ்வொரு அசைவுகளையும் அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். 'நேரம்' என்றொரு தமிழ் திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். மம்முட்டி நடித்த 'Palunku' எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் இனி பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம். பாடலுக்கு இசையமைத்தது ஸ்ரீஜித்,சச்சின். பாடலைப் பாடியது ஆலப் ராஜு. 

'நெஞ்சினிலே' - மூர்சிங்

உயிரே படத்தில் நெஞ்சினிலே பாடலில்  மலையாளம் கலந்து வருவது இனிமை தருவது போல, ஆரம்பத்தில் இருந்து தனித்து,பின் பிற வாத்தியங்களோடு இணைந்து  ஒலிக்கும் மோர்சிங் இசை இனிமை. இந்த மூர்சிங்(ஆபிரிக்க வாத்தியம்) இசை பற்றி சுஜாதா பகிர்ந்திருக்கிறார் . இதை ரஹ்மான் அவ்வப்போது திறமையாகப் பயன்படுத்துவார் என்கிறார். கேட்பதற்கு 'டொன்ட்டி டொன்ட்டி' என்று சுவர்ப்பூச்சி போலத்தான் ஒலிக்கும். இந்த மூர்சிங் இசையை உற்றுக் கவனித்தால் தான் லய வின்னியாசங்கள் புரியுமாம். இதனை வாசிப்பது கடினமாம். உள்ளுக்குள்ளே கொன்னக்கோல் போல அந்தத் தாளத்தை சொல்லிக்கொண்டு வரவேண்டுமாம். வாசித்த பின் கேட்டுப்பார்த்தேன். இயற்கை ஒலிகளோடு ஆரம்பமாகும் மூர்சிங் ஏதோ புரிகிறது.

தேநீர் வாசம் - மதன் கார்க்கி

வாழ்வில் ஒரு நிமிடம் நின்று இரசிக்க மறந்த, சின்னச்  சின்ன இரசனைகள் கொண்டு கட்டப்பட்ட நல்ல வரிகள்(புதிய பாடல்) கேட்டுப் பல நாட்களாகிறதே எனத் தோன்றியது. கவிதாயினி  தாமரை/ கவிஞர் மதன் கார்க்கி அவர்கள்  ஏதாவது புதிய பாடல்  வரிகள் எழுதியிருப்பார்கள்  என்று புதிதாக வந்த பாடல்களைக்  கொஞ்சம் தேடிப் பார்த்தேன். 'கூட்டம்' திரைப்படத்தில் 'இத்தனை தூரம் எப்படி வந்தேன்' என்ற  பாடலைக் கேட்க நேர்ந்தது. ஜேம்ஸ் வசந்தனின், வரிகளை மீறாத  மெல்லிசையில் புதிய வார்த்தைகள் மனதில் எளிதாக ஊடுருவியது. இசை தமிழுக்கு இடையூறாக இருந்தால், வரிகளை மீறினால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஹரிச்சரன், சுவேதா மோகன்  குரலும் உச்சரிப்பும் வரிகளுக்குத் துணை. "கொய்து வந்த பூவின் வாசம் கைது செய்த கையில் வீசும்" உறங்கும் நாசி மேலே தேநீர் வாசம் போலே மனதின் தூக்கம் போக்கும் இவளின் வாசம் உறங்கும் நாசி மேலே தேநீர் வாசம் போலே எனும் உவமை அன்றாடம் உணரும் ஒன்று தான். தேநீர் வாசம் உறங்கவிடாமல் தனக்கும் புலன்களுக்குமிடையே ஒரு ஈர்ப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும். சாதாரணமாக நம...

'தமிழன் விருதுகள்'

புதிய தலைமுறை தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை, தமிழில் இப்படியொரு ஊடகம் வராதா என்ற ஏக்கத்தை  படிப்படியாக குறைத்துக்கொண்டே வருகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறி முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு பஞ்சமில்லை. அதை ஆரோக்கியமாக முன்வைப்பவர்களுக்குத் தான் தட்டுப்பாடு. தமிழ் ஊடகங்களில் 'புதிய தலைமுறை' ,தன் பெயருக்கு ஏற்றபடி பல படிகள் முன்னோக்கித் தான் இருக்கிறது. சக தமிழர்களைத் தூக்கிவிடும் ஊடகமாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. ஒரு தமிழ் ஊடகம் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் தரத்தோடு ஒத்துப்போகாமல், அந்தச் சமூகத்தையும் சேர்த்து அரவணைத்துக்கொண்டு  செல்கிறது என்பது ஆரோக்கியமான விடயம் அல்லவா. இன்று சித்திரைத் திருநாளை முன்னிட்டு புதிய தலைமுறையில் ஒளிபரப்பான 'தமிழன்  விருதுகள்' நிகழ்ச்சியை  பார்க்கக் கிடைத்தது.  இலக்கியம் ,கலை ,அறிவியல் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு, தமிழன் விருதுகளை வழங்கி கௌரவித்தது புதியதலைமுறை. ஓர் ஊடகம் கேளிக்கை  நிகழ்ச்சிகளை தவிர்த்து ,சமூகத்துக்கு பயன்தரக் கூடிய வி...

நெடு வெண்ணிலாவே ! :குறிஞ்சி : தோழி கூற்று

"கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. " -  நெடுவெண்ணிலவினார். கரிய அடியையுடைய வேங்கை மரத்துடைய மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல் நிலவொளியில் ,பெரிய புலிக்குட்டி போலக் காணப்படுமாம். அதைப் புலின்னு நினைச்சு தன் தலைவன் அஞ்சுவான் என எண்ணுகிறாள். இது இரவில் திருட்டுத்தனமாக வரும் தன் தலைவனுக்கு  நன்மை தருவதாய் இல்லை என்கிறாள். எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள்! அவ்வளவு காதல் :) ஆனால் இங்கு 'நெடு வெண்ணிலாவே' என்று கூறுகிறாள். இயல்பாகவே  தனக்குரிய பொழுதில் தான் நிலவு எறிக்கும் .பின் ஏன் நெடு வெண்ணிலாவே என்கிறாள்?  தன் தலைவனின்  களவொழுக்கத்திற்கு இடையூறாக இருக்கும் வெண்ணிலவை அவள் விரும்பவில்லை. அது விரைவில் மறைய வேண்டுமென விரும்பினாள். அதனால் அதை நெடு வெண்ணிலா என கூறுகிறாள். இந்தச் சிறப்பால் இந்தச் செய்யுளை இயற்றியர் ' நெடுவெண்ணிலவினார்' எனப் பெயர் பெற்றார்.   உவமைகளைக்  கையாண்டிருக்கும் விதம் பிரம்மிப்பாகவும், இனிமையாகவும் இருக்கிறது. கரிய பாறையையும்,உதிர்ந...

சில்வியா பிளாத் effect

சுருக்கமாகக் கூறினால், மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராக கருதப்படும் சில்வியா பிளாத், உளவியல் பிரச்சனையால் (மனப்பிறழ்வு - Bipolar disorder ) பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்.சில்வியா பிளாத் பற்றி மேலதிக விபரங்கள்  அறிய ஆர்வமிருந்தால் தேடிப்  படித்துக்கொள்ளுங்கள். எழுத்தாளர்  சுஜாதா 'சில்வியா' என்றொரு நாவலிலும் சில்வியா பிளாத் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நாவலும் இது போன்றதொரு உளவியல் பிரச்சனையோடு தொடர்புபட்டது.  ஆனால் creativity தொடர்பான ஆய்வுகளின் மூலம் அதிகமாக அறியப்படும் உளவியலாளர்  ' James  Kaufman  ' என்பவர் 'சில்வியா பிளாத் effect ' எனும் சமாச்சாரத்தை முன்வைத்திருக்கிறார். ஏனைய படைப்பாளிகளை விட பெண் கவிஞர்களே அதிகமாக இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்கிறார்.  கூகிள்  செய்ததில் நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஆன் செக்ஸ்டன் ( Anne Sexton) ,  Amy Levy  (அமி லெவி ) ,  Sara Teasdale   ,  Alfonsina Storni ,  Virginia Woolf  எனத்  தற்கொலை செய்துகொண்ட பெண் கவி...