தமிழர் அரசியலும் சர்வதேசமும் 2..

ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுச்  சில நாட்களே ஆகிறது. இந்நிலையில், இலங்கையின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் அரசிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது  என்பதனை ஆராய்வது அவசியமாகும். சாதகமான ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிற வேளையில் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் என்ன அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்துவைத்திருப்பதும்  அவசியம்.

இனப்பிரச்சனையும் உள்நாட்டு அரசியலும்

ஜனவரி 17ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபின்னரும்கூட  உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இதன் காரணமாக, இனப்பிரச்சனை தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையோ, கருத்துகளையோ யாரும் முன்வைக்கவில்லை. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது. 

வெளிப்படையான பேச்சுகளை முன்னெடுத்திருந்தால், அவை தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியற் பிரச்சாரமாக உருவெடுத்திருக்கும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைகூட மார்ச்சில் வெளியாகவிருந்த மனித உரிமை அறிக்கையை செப்டம்பருக்கு ஒத்திவைத்தது. மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைந்த புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதே சர்வதேசத்தின் எண்ணமாகவும் இருந்தது. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல்வரை இனப்பிரச்சனை தொடர்பில் அனைவரும் அடக்கிவாசித்தார்கள். அப்படியிருந்துமே எதிரணியினால் இனவாதப் பிரச்சாரம் தூண்டப்பட்டது. அதனை முக்கிய பிரச்சாரமாகக் கொண்டிருந்த மஹிந்த அணி மீண்டும் தோல்விகண்டது.

புதிய அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 

ஜனவரி 8ல் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களும்  உதவியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்தும் புதிய அரசுடன் ஒருவித தொடர்பைப் பேணிவந்தது. இரண்டாவதாக, பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தாலும் புதிய அரசுக்கான தனது ஆதரவினை விலக்கிக்கொள்ளவில்லை. ஓகஸ்ட் 17 தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாதபோதும்கூட, ரணிலின் தலைமையிலான கட்சிக்குத் தனது ஆதரவினை வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்தது. தற்போதும்கூட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில்தான் புதிய அரசோடு செயற்பட்டு வருகிறது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒருவித சுமுகமான உறவைப் பேணிவருகிறது.

தேசிய அரசாங்கமும்  இனப்பிரச்சனைத் தீர்வும்

பாராளுமன்றத் தேர்தலிலே எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாதபடியினால் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொண்டன. ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டுமே இணைந்து ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனாலும் தேசிய அரசாங்கம் அமைப்பதன் மூலம் நாட்டின் பிரதான பிரச்சனைகளைத் தீர்ப்பது இலகு என்பதே  சில அரசியல் வல்லுனர்களுடைய கருத்து. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசிய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கும். ஆகையால், நாட்டின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டுவரும்போது இடையூறுகள் இல்லாமல் நிறைவேற்றலாம். 

புதிய அரசின்  மீட்சியின் பின்னரான நடவடிக்கைகள் 


ரணில் விக்கிரமசிங்க பிரதமரானதும் 'தி ஹிந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டி மிகவும் முக்கியமானது. அதில் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், நிச்சயமாக 13ம் திருத்ததிற்கு அப்பால் சென்று தீர்வு எட்டப்படும் என்றும் கூறியிருந்தார். இனப்பிரச்சனைத் தீர்வு  தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா முக்கியமான பொறுப்பினை ஏற்றிருப்பதாகக் கூறினார்.

சில நாட்களிலேயே, சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன், வவுனியாப் பூந்தோட்டம் முகாமில் வசிக்கும் மக்களுக்குக்  குடியிருப்புப் பிரதேசங்களை அமைத்துக்கொடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றது.

இனப்பிரச்சனை தொடர்பிலான சர்வதேச அணுகுமுறை

இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்பதில் இந்தியா, அமேரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகள் உறுதியாக இருக்கின்றன. ஆசியாவில் சமாதானத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் கட்டியெழுப்பவேண்டிய அவசியம் சர்வதேச நாடுகளுக்கு இருக்கிறது. இதனடிப்படையில் இனப்பிரச்சனை தொடர்பான தீர்வுத் திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் மத்தியஸ்தம் வகிக்கின்றன. உள்நாட்டில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதின் மூலம்தான் நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதில் தெளிவாகக் இருக்கிறார்கள். 

அமெரிக்காவானது தற்போது இந்தியாவுடன் நெருங்கிய உறவினைப் பேணிவருகிறது. தனது கொள்கைகளில் பாரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. ஆசியக் கண்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல், நிலையற்ற தன்மை இருப்பதால் இன்னொரு  வல்லரசுடன் இணைந்து செயற்படவேண்டிய நிலை அமெரிக்காவுக்கு இருக்கிறது. ரஷ்யாவும் சீனாவும் இணைந்து 'Multipolar world order' எனும் சித்தாந்தத்தை நோக்கிப் பயணிப்பதால், இந்தியாவுடன் சேர்ந்து ஏனைய ஆசிய நாடுகளையும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதன் மூலம் ஆசிய நாடுகளுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகிறது. இது அமெரிக்காவினுடைய நீண்டகாலத் திட்டம் என்கிறார்கள்  சில மேற்கத்தேய அரசியல் ஆய்வாளர்கள்.

இன்னொரு உதாரணமாக பங்களாதேஷினை எடுத்துக்கொள்ளலாம். அமெரிக்காவானது பங்களாதேஷுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுவதோடு, அதன் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்குதாரராகச் செயற்படுகிறது. பங்களாதேஷின் வேகமான வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இரு நாடுகளினதும் உறவானது 'three Ds' அடிப்படையில் அமைந்தது என்கிறார்கள் அமெரிக்க இராஜதந்திரிகள். Democracy, Development and Denial of space for terrorism என்கிற மூன்று விடயத்திலும் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அங்கு நேரடியாக முதலீடு செய்யும் நிறுவனங்களில் பெரும்பான்மையானவை அமெரிக்க நிறுவனங்கள். இதில் NGOக்களின் பங்கும் அதிகமானது. அதே போன்றதொரு உறவையே இலங்கையுடனும் ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்தத் தடவை இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செயற்படுகிறது.

அத்தோடு, நேபாளத்தில் நிலவும் உள்நாட்டு பிரச்சனைகளின் காரணமாக அங்கே சமஷ்டி முறை மூலம் அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா முனைப்புக் காட்டுகிறது. பங்களாதேஷின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் முக்கியமானது.போர்க்குற்ற விசாரணையும் சர்வதேசமும் 

தற்போது இலங்கையின் உள்ளக விசாரணையை ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. தென்னிலங்கையில் நிலவும் அமெரிக்க எதிர்ப்புச் சிந்தனையை  மாற்றவேண்டிய அவசியமும் அமெரிக்காவுக்கு இருக்கிறது. புதிய அரசின் மேற்குலகுக்கு ஆதரவான செயற்பாடும், தமிழ்ச் சமூகம் தொடர்பில் புதிய அரசு எடுத்துவரும் ஒருசில நடவடிக்கைகளும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். உள்ளக விசாரணையில் வெளிநாட்டு விசாரணையாளர்களும் உள்வாங்கப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக இருக்கிறது.


உலக அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு செயற்படுமளவுக்குத்  தமிழ்த் தலைமைகள் வளர்ச்சி காணவேண்டும். தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும். அதன் மூலம் இனப்பிரச்சனையையும், சமூக பொருளாதார பிரச்சனைகளையும் தீர்த்து முன்னேற வியூகம் வகுக்கவேண்டும். பேரம்பேசும் அரசியலை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். ஊடகங்களும் கல்வி அமைப்புகளும் வெறுமனே உணர்ச்சி அரசியலைக் கையில் எடுப்பதை விடுத்து மென்போக்குடன் கூடிய திறமையான அணுகுமுறையை வகுக்கவேண்டும். 


Comments

Popular posts from this blog

மணிரத்னத்தின் ஆண்கள்

சாக்லேட் : Kiss me, I can read your lips.

மலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு