குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பங்கு பெரியது. அவற்றைப் பற்றிப் பேசுகிற புத்தகம்தான் "The Young Mind". குழந்தைகள் தங்கள் வளர்ச்சியில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை ஆராய்வதோடு அதற்குரிய சரியான உளவியல் வழிகாட்டல்களை எப்படி அணுகுவது என ஒரு கட்டமைப்பை நிறுவியிருக்கிறது.
பாடசாலையில் தனது நண்பி தன்னைப் பார்த்து சிரிக்கவில்லையென்று ஒரு மாணவி வருத்தப்படுகிறாள் என்று வைப்போம். இதை வைத்து தனது நண்பிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அந்தக் குழந்தை எண்ணிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், தான் அழகில்லாமலும், போரிங் டைப்பாகவும் இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்ளும். யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று தன்னம்பிக்கையின்றி அழுத்தத்துடன் இருக்கும். சிலர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சிலவேளைகளில் பாடசாலைக்குப் போவதையே நிறுத்திவிடும். இந்தமாதிரியான எதிர்மறை எண்ணங்கள் எதிர்காலத்தை எப்படியெல்லாமோ மாற்றக்கூடும். அடுத்தவர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தகூடியவர்களாக மாற்றும். ஒரு சிறிய விடயம் எவ்வளவு தூரம் வளரக்கூடும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.
சில குழந்தைகளுக்கு நாய்களைக் கண்டால் அதீத பயமிருக்கும். உதாரணமாக இரவுகளில் அவை தொலைவில் குலைத்தாலும் இவர்களுக்கு பயம் வந்துவிடும். உளவியல்ல இதை "Cynophobia" என்று சொல்லுவார்கள். இதற்குக்கூட மேற்குலக நாடுகளில் உளவள ஆலோசனை உண்டு. CBT (cognitive behavioural therapy) என்று சொல்லுவார்கள். அதாவது பேச்சின் மூலம் ஒருவரின் ஆதார எண்ணங்களையும் பிரச்சனைகளையும் மாற்றுவார்கள். அங்கு சைனோபோபியாவைக்கூட சீரியஸ் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தீர்க்க முற்படுகிறார்கள். ஆனால் இங்கு சிறுவர் துஷ்பிரயோகம் முதற்கொண்டு, தீவிர உளவியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளை கவனிக்க மறுக்கிறார்கள். இப்படியானவர்கள்தான் போதைப்பொருள் பாவனை, வன்முறை மாதிரியான விஷயங்களைக் கையில் எடுக்கிறார்கள் என்கிறது மேற்குலகின் ஸ்டடிஸ்டிக்ஸ்.
சமூகத்தில் நிலவும் வன்முறைகளுக்கான தீர்வு என்று பேசும்போது எல்லோரும் எப்போதுமே சட்டத்தையும் கட்டுப்பாடுகளையும்தான் பேசுகிறார்கள். எந்தவொரு பிரச்சனை என்றாலும் அது அங்கேயே ஆரம்பித்து அங்கேயே முடிகிறது என்பதுதான் பெரும்பாலோனோரின் அடிப்படைச் சிந்தனை. அதிலிருந்து அறிவுரைகளைச் சொல்லுகிறார்கள்.
முதலில் ஒருவர் அடுத்தவர் மீது பிரயோகிக்கும் உளவியல் வன்முறைகளை நிறுத்தவேண்டும். உளவியல் வன்முறைக்கு பெண்ணியமும் ஆணாதிக்கமும் தெரியாது. அதனை முழுதாக நிறுத்தமுடியாவிட்டாலும், சரியான உளவள ஆலோசனைகள் வழங்கும் கட்டமைப்பு நிறுவப்படவேண்டும். பாடசாலைகளில் இருந்து வீடுவரைக்கும் அந்த உளவியல் அறிவுரை வழங்கும் கட்டமைப்பு விரிவாக்கப்படவேண்டும்.
Comments