Friday, April 22, 2011

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .

 அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  .


இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது .

இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் . 

சிறகுகள் அமைப்பின் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பும்  நிகழ  அமைப்பில் இருந்த பலரும் இறந்துவிட எஞ்சியவர்கள் இதன் மூலமே தேர்தலில் வெற்றிபெற்றுவிடுகின்றனர் .இதன் பின்னர் சிறகுகள் அமைப்பின் தலைவன் (அஜ்மல் ) ,ஜீவா யார், குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்பதை இரண்டாம் பாதியில் திரைக்கதையில் விறு விறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் .


புகைப்படப்பிடிப்பாளராக வரும் ஜீவாவை தமிழ் சினிமாவில் வரும் பஞ் வசனம்,செண்டிமெண்ட் வசனம் பேசும்  கதாநாயகன் என்று காட்டாமல்  யதார்த்தமான ஒரு சாதாரண பத்திரிகையாளனாக  காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் . ஜீவாவின் நடிப்பும் அவ்வளவு யதார்த்தம் .மொத்தமாக தமிழ் சினிமாவின் மாற்றத்துக்கு பாராட்டுகள் .

அதே பத்திரிகையில் நிருபர்களாக இருக்கும் கதாநாயகி கார்த்திகாவும் பியாவும் யதார்த்தமாக தேவையான இடங்களில்  வந்து போகின்றனர் . துறு  துறு பியாவின் நடிப்பு பாராட்டப்படவேண்டியது .

பிரகாஸ்ராஜ் உம் கோட்டா சிறீநிவாசராவும் ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்கள் பாத்திரத்தில் சிறப்பு . பிரகாஸ் ராஜ் இன் வசனம் பேசும் முறை நடிப்பு திரையில் பார்த்தால் மட்டுமே உணர முடியும் .சாமிக்கு பிறகு கோட்டா சிறீநிவாசன் நடிப்பு பிடித்த படம் இது .இந்த படத்தில் உண்மையான கதாநாயகன் கே வி ஆனந்த்,ரிச்சர்ட் நாதன்  உம் அவரின் கமெராவும் ஜீவாவின் கமெராவும் தான் .ரிச்சர்ட் நாதனின்  ஒளிப்பதிவு சண்டை காட்சிகளிலும் சரி பாடல் காட்சிகளிலும் சரி மிக சிறப்பு என்றே சொல்லலாம் .சண்டை காட்சிகளில் சுழன்ற கமெரா பாடல் காட்சிகளில் இயற்கையை அழகாக காட்டிய கமெரா சில காட்சிகளில் தொழில்நுட்பத்திலேயும்  கலக்கியிருக்கிறது .

ஹரீஸ் எங்கிருந்து இசையை சுட்டாலும் கேட்க்க நன்றாக இருக்கிறது,காரணம் பா விஜயின் மதன் கார்கியின் வரிகள் அருமை.சில இடங்களில் பின்னணி இசை மிக வித்தியாசமாக இருந்தது .ஆனால்  ஒரு இடத்தில் டயிடானிக் இசையை நினைவுபடுத்தியது !! .

படம் யதார்த்தமாக இருப்பதோடு நச்சென்று சில வசனங்களும்  இருந்தது . "நமக்கெல்லாம் ஏன் வேண்டாத வேலை அது தான் நாட்டை திருத்த பஞ் டயலாக் பேசிற ஹீரோஸ் இருக்காங்களே !!! ""உங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டும் சினிமாவும் ஹீரோவும்,தோணி சிக்ஸ் அடிப்பாரா மாட்டாரா என்பது தான் பிரச்சனை " எனும் இடங்களும்" வசனங்கள்  அருமை .
அரசியல் நக்கல்களுக்கும் பஞ்சமில்லாமல் காட்சிகளும் கலைஞரும் வந்து போகிறார்கள் . சோனா பிரசார மேடையில் பேசும் தமிழ் குஷ்புவை நினைவுபடுத்துகிறது .

யதார்த்தமான சண்டை காட்ச்சிகள் ,யதார்த்தமான நடிப்பு ,யதார்த்தமான நாயகன் என அத்தனையும் யதார்த்தமாக செய்திருக்கும் கே வி ஆனந்த் இற்கு பாராட்டுகள் .

சினிமா பார்க்கும் மக்களை முட்டாள் ஆக்காத வரிசையில் கோ வும் அந்த அணியும் இணைந்துகொள்ளலாம் .அவ்வளவு யதார்த்தமான சினிமா .விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ......

பத்திரிகை துறையை வைத்து எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும்  புகைப்படத்தாலேயே கதை சொல்லும் இந்த யதார்த்தமான திரைப்படம்  வரவேற்பு பெறும் .

Friday, April 15, 2011

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் .

இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் .

ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின் மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  .
புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு ..முதலில் ரசித்த பாடல் .....

சந்திக்காத கண்களில் .... -பாடலை கேட்க்க

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
 செய்ய போகிறேன் 
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் 
பெய்யப்போகிறேன் ...

குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிமுகம் தொடரவேண்டும் .அன்பின் ஆலை ஆனாய் 
ஏங்கும் ஏழை நானாய் 

அன்பையே கொண்டிருப்பவனிடம் ஏங்கும் பெண்ணின் ஏக்கமாய் ஒலிக்கும் வரிகளில் சொற்களின் பாவனை அருமை .

இணையும் முனையம் இதயம் என்று ஆனாலே 
பயணம் முடியும் பயமும் விட்டு போகாதோ  

இரண்டு இதயங்கள் ஒரே சமயத்தில் இணையும் இடம் இதயம் என்றானபின் பயம் இல்லை என்று காதலின் அர்த்தம் இரு வரியில் சொல்லும் காதல் வரிகள் . 

 நான் கேட்டு  ரசித்த  அடுத்த  பாடல் துறு துறு கண்ணில் ......

இந்த பாடல் வரிகளை தீட்டிப்பாருங்கள் . ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் வைரம் ஒளிரும். உணர்வீர்கள் .குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்ற வரிகள் .

புதிய புதிய உலகம் வேண்டாமே 
நேற்றுலகம் நான் காண்பேன் 
தூசில்லா பூங்காற்றிலே ...

நவீன உலகின்,  மனித மனதின் ஏக்கம் மாசில்லாத  பூங்காற்று . ஏக்கத்தை இன்னும் அதிகரிக்கும் வரிகள் .


இது மதன் கார்கியின் சிறப்பு . வரிகளுக்கும் பாடகரின் உச்சரிப்புக்கும் மேலும் அழகு. மீண்டும் தமிழின் அழகை கொண்டுவந்துள்ள ளகர வரிகள் மிகவும் பிடித்தது .

பல நாள் இருளும் 
ஒரு நாள் சுருளும் எனவே !
மருளும் மனதில் 
ஒளியாய் திரளும் கனவே !

மருளும் - பயப்படும் 
இருளான வாழ்க்கையையும் ,இறுதியில்  இல்லாமல் போகும் வாழ்க்கை எனவும் நினைத்து மருளும் (பயந்து மிரண்டுகொண்டிருக்கும்)  மனதிற்கு ஒளியாய் இருப்பது கனவே .  வாழ்க்கையின் அர்த்தம் இந்த வரிகள் .இந்த வரிகளின் அழகு உணர பாடலை கேளுங்கள் .

ஏஜே மனம் மறைப்பதேன் பாடலில் ரசித்தது  ..

நாடியை தேடி உனது கரம் தீண்டினேன் 
நாழிகை ஓடக்கூடா வரம் வேண்டினேன் 


இந்த வரியை சிந்தித்த மதனின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் .காதலியின் கையை தீண்டும் போது கூட ஆவலுடன் அவள் நாடியிலேயே நேரம் கணித்து நாழிகை ஓடக்கூடாது என வரம் கேட்கும் காதலன் . நேரம் போக கூடாது என்ற எண்ணத்தையும் காதலியை தீண்டுவதையும் இணைத்தது நாடியில் நேரம் பார்ப்பதை உணர்த்துவது அருமை .இரு வரிகளுக்குள் எண்ணமும் நிகழ்வும் .

இளமை ததும்பும் வரிகளிலும் விடவில்லை ..

மேல் விழும் தூறல் 
எனது ஆசை சொன்னதா 
கால் வரை ஓடி எனது 
காதல் சொன்னதா ?

காதலை  சரியாய் சொல்லும் மொழி  மோகம்  என்பதையும் அழகாக விளக்கும் வரிகள் .

இந்த வரிகள் எதிர்பார்ப்பை குறைக்கவில்லை ..அடுத்த பாடல்களின் அழகான வரிகளுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது . மதன் கார்கியின் தரமான வரிகளின் ரசிகனாய் ....