கம்பராமாயணத்தில் வருகிற வரைக்காட்சிப் படலத்தில் "பானல் அம் கண்கள் ஆட. பவள வாய் முறுவல் ஆட" என்று ஒரு அழகான பாடல். சந்திர சயிலத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள். அப்போது என்னவெல்லாம் அசைகிறது எனக் கம்பன் சொல்லுகிறார். இதைப் படிக்கும்போது கண்ணதாசன் எழுதிய "கட்டோடு குழலாட ஆட" என்கிற பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது. வாசிக்கும்போதே இனிக்கிறது. இரண்டு தோழிகள் நடனமாடிகொண்டும் சுதந்திரமாகப் பாடிக்கொண்டும் போவதுபோல அமைந்த பாடல். அப்படிப் போகிறபோது என்னவெல்லாம் ஆடுகிறது என்று சொல்லும் பாட்டு. கண்ணதாசனின் சொற்கள்கூட கொடிபோல ஆடும். கண்ணதாசனின் இந்தப் பாடலை எல்லோரும் மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவைப் பாடலுடன் ஒப்பிடுவார்கள். ஒருசில வரிகளை மட்டுமே ஒப்பிடமுடியும். பெண்கள் நீரினைக் குடைந்தாடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனச் சொல்லும் திருவெண்பாவைப் பாடல். //காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாட// இதனைப் பிரித்து எழுதினால் இப்படி அமையும். காது ஆர் குழை ஆட பைம்பூண் கலன் ஆட கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட ...