Thursday, October 27, 2011

7 ஆம் அறிவு - நம்மை இங்கு நாம் தொலைத்தோம் ! தொலைப்போம் !

 ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் .7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு .

அதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் .

இந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில் தேடினால்  ஒன்றையும் காணக்கிடைக்காது .ஒரு சில பிளாக்கர்களின்(எண்ணலாம்) ஆக்கங்கள் தவிர .

இந்த நேரத்தில் போதிதர்மன் எனும் கதாப்பாத்திரம் 7 ஆம் அறிவில் இருக்கிறது என கேள்விப்பட்டேன் . இணையத்தில் தேடிய போது ஆங்கிலத்தில் பல விடயங்கள் கொட்டிக்கிடந்தது . தமிழில் ஏழாம் அறிவோடு சேர்ந்த செய்திகளாகவே போதிதர்மன் பற்றி தமிழில் காணக்கிடைத்தது . 


யாராவது ஒருவர் தமிழின் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்தால் அதை பற்றி ஒருவர் கூட வாய் திறந்து பேசுவதில்லை . செம்மால் மானவை எனும் பேராசியர் திருக்குறளில் 140 குறள்களில் இருக்கும் நவீன மருத்துவம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் . இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு இத்தனை காலம் எப்படி இருக்கிறீர்கள் என்பது அவரின் கேள்வி??? .இது எத்தனை பேருக்கு தெரியும் .எத்தனையோ பேர் மருத்துவம் படிப்பீர்கள் .யார் தேடியிருக்கிறீர்கள் ! எத்தனை எஞ்சினியர்களுக்கு தஞ்சை பெரும் கோவிலின் கட்டடக்கலை தெரியும் ! எத்தனை பேர் நீங்கள் படிக்கும் துறையில் தமிழை நவீன மயப்படுத்த தயாராக இருக்கிறீர்கள் . இத்தனைக்கும் தகுதி இருந்தால் 7ஆம் அறிவை .முருகதாஸை நீங்கள் தவறாக விமர்சிக்க முடியும் .

வைரமுத்துவிடம் ஒரு பெரிய நடிகர் தமிழ் வருவது போல பாடலில் வரி எழுதி தாருங்கள் ,தாய் குலத்தோடு ஒரு சீன்,உழைக்கும் வர்க்கத்தோடு ஒரு சீன் என கேட்டு வாங்குகிறார்கள் ஒரு உழைப்பும் ஒரு விடயமும் இல்லாமல் . இது எதை, பாச உணர்வை  தூண்டி ?யாரை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கும் வழி ? இந்த நடிகரின் எல்லா பாடல்களிலும் தமிழ் வருவதை கவனிக்கலாம் . இது ஒரு விடயத்தை சொல்லி,வரலாற்றை சொல்லி தானே தமிழ் தமிழ் என்கிறார்கள் .அதை விட இது எவளவோ மேல்.  

தமிழ் உணர்வை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதில் எனக்கு பெருமையாக இருக்கிறது .தமிழ் உழைப்பது பெருமை தானே ! அவர் பணம் பண்ணுவது ,கருணாநிதி குடும்பம் பணம் பண்ணுவது ,சூர்யா விஜய் சண்டை ,வரலாறு தவறு ,முருகதாஸ் தவறு என்பதை விட்டு சொன்ன கருத்து புரிந்து கொண்டீர்களா முதல் ? அதற்காக செயற்படுவீர்களா ? .ஒருவருமே செய்யாத போது ஒருவன் செய்ததை மட்டம் தட்டி ,அன்றோடு மறந்து விடுவீர்கள் தானே . 

போகி என்ற பெயரில் எங்கள் முக்கிய குறிப்புகளை அழித்தார்கள் என்பது முற்றிலும் உண்மை . எம் முன்னோர்களை சூரன் என்று ,நரகாசூரன் அளித்த நாளை எம்மையே கொண்டாட வைத்துள்ளார்கள் புத்திசாலி ஆரியர்கள் .இன்றும் பிராமணனுக்கு அடிமையாகி பணத்தை சும்மா இறைக்கிறோம் தானே ? தமிழனுக்கு எந்த மதமும் இருந்திருக்கவில்லை ,அவன் கண்டுபிடித்த விடயங்களை ,பொக்கிஷங்களை படையெடுப்புகள் மூலம் பின்னர் எம்மை ஆண்டவர்கள் அழித்தார்கள் என்பது உண்மை . சித்தர்கள் புத்தகங்களில் நவீன விஞ்ஞானம் இருப்பது போன்ற விடயங்கள் எமக்கு தெரியும் .ஆனால் சிலபஸ் படி படித்தோம் ,வேலை கிடைத்தது .பணம் பணம் என்று  ஓடினோம் என்று போய்க்கொண்டே இருப்போம் . ஏன் இன்னும் அறிவியலுக்கு ஒவ்வாத சித்திரையை புதுவருடமாக நாம் கொண்டாடவில்லையா ?? 

இதுவரை தமிழ் சினிமா காட்டாத பக்கத்தை தைரியமாக தமிழை நம்பி எடுத்திருக்கிறார் முருகதாஸ் . முதல் நிமிடங்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை காட்டும் போதே ஒரு வித திமிர் தொற்றிக்கொள்கிறது. சூர்யாவின் மிடுக்கான தோற்றம் ஒரு வீரனை முன்னிறுத்தியது . போதி தர்மன் பற்றிய முதல் 15 நிமிடங்களுக்கு மிகவும் உழைத்திருக்கிறார்கள் . இதே காட்சி சீனப்படத்தில் வந்திருந்தால் சங் சாங் என்று பேசியிருந்தாலும் பார்த்துவிட்டு இப்படி எல்லாம் தமிழ்ல எடுக்க மாட்டாங்களே என்று திட்டு வேறு . அதே தமிழில் எடுத்தால் ?

படத்தில் வரும் நோக்கு வர்மம் என்பது சித்தர்கள் பற்றி வாசித்தவர்களுக்கு தெரியும் . நோக்கு வர்மம் மட்டும் அல்ல .சித்தர்கள் பல கலைகள் பலருக்கு தெரியாது என்பது நம் துரதிஷ்டம் . ஒன்றுமே தெரியாதவிடத்து இப்படியொன்று இருக்கிறது,தமிழனின் பொக்கிஷங்களில் விஞ்ஞானம் இருக்கிறது என்று நினைவு படுத்தியது முருகதாசின் குற்றமாக இருக்கலாம் .

எம் முன்னோர்களை வணங்காமல் அவர்களை விஞ்ஞானிகளாக பாருங்கள் என்று ஒரு செய்தி வருகிறது . இது எத்தனை பேருக்கு புரிந்திருக்குமோ தெரியவில்லை .

இந்த திரைப்படத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஒரே பதில் சொல்லலாம் . "நம்மை இங்கு நாமே தொலைத்தோம் " . நிச்சயம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் . பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள் . 

Sunday, September 11, 2011

பாரதியை முழுமையாக படியுங்கள் !

பாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகிறேன் .

பாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் .எப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக  சொல்லலாம் . 

முக்கியமாக "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே ! 


புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! 
     இந்த வசையெனக் கெய்திட லாமோ? என்று முடித்திருப்பார் .

அதற்கான வழியையும் முன் வைத்தான் .நாம் அதனை பின்பற்றுகிறோமா!
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!


எட்டு திக்கும் சென்றோம் இங்கே கொண்டு வந்து சேர்த்தோமா என்பதே கேள்வி ? அங்கேயே சென்று இருந்துவிட சொல்லவில்லை பாரதி .


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
 இனிதாவது எங்கும் காணோம்; "

இதனை கூறிவிட்டு நாம் நிறுத்தி விடுவோம் . பாரதி வெறுமனே மொழியின் புகழ் பாடிவிட்டு நிறுத்திவிடவில்லை . அவன் புரட்சிக்கவி . சாதாரண கவிஞர்கள் போல் அல்லாததால தான் இன்னமும் உயிர் வாழ்கிறான் .


பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும் 
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம்      பரவும்வகை செய்தல் வேண்டும்.

மொழியின் அழகை உணர்ந்தவர் அதன் தொடர்ச்சியை விரும்பியவர் .அதனோடு நிறுத்திவிடவில்லை .அதற்கு வழியும் சொல்லி இருக்கிறார் . மேலே உள்ள வரிகளை கவனிக்கும் பலர் அவர் காட்டிய வழியில் பயனிப்பதில்லை என்பது நிதர்சனம் .

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்  
 தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்   
 சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்;   
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

நாம் வெளிநாட்டவரை ,வெளிநாட்டு மொழிகளை வணக்கம் செய்கிறோமே  தவிர அவர்கள் எம் மொழியை எம்மை பின்பற்றவேண்டும் என்று நினைப்பதில்லை .

இப்படி செய்தால் யார் யார் எல்லாம் விழித்து கொள்வர் என்றும் கூறுகின்றார்  .

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்   
 இங்கமரர் சிறப்புக் கண்டார்.

என்னை கவலைகள் தின்னத்தகாதேன்று நின்னை சரணடைந்தேன் என்று பாரதி கூறியது .பணம் என்ற இந்த அற்ப துன்பங்களால் மக்களுக்கும் ,நாட்டுக்கும் ,மொழிக்கும் தான் செய்ய இருந்த செயல் முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் தான் பாடினான் . இந்த வரிகளை நாம் எமது அற்ப  துன்பங்களுக்கே பயன்படுத்துகிறோம் .

பாரதியின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம் ! 

Thursday, August 11, 2011

மங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் நினைவுகள்

அண்மையில் வெளியான மங்காத்தா பாடல்களில் மென்மையான பாடல்கள் இரண்டு ரசிக்க கூடியதாக இருந்தது . ஒன்று என் நண்பனே ,மற்றொன்று கண்ணாடி நீ கண் ஜாடை நான் . "என் நண்பனே" பாடலின் வரிகளுக்கு கவிஞர் வாலி பலம் ,பாடலுக்கு யுவனின் குரல் பலம் .
கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடலுக்கு நிரஞ்சன் பாரதியின் வரிகளில்   சரணின் குரலும் ,பவதாரனியின் குரலும் சிறந்த மெல்லிசை பாடலை தந்திருக்கிறது .பாடலை கேட்க்க 

கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்


என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்
 நான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு  . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி காதல் கலந்து கொடுத்திருக்கும் வரிகள் இவை .அவரின் எதிர்கால தமிழ் வரிகளின் பயணம் சிறப்புற வாழ்த்துகள் .

ஆனாலும் இந்த பாடலை கேட்க்கும் போது மகாகவியின் அருமையான தமிழ் வரிகளை நினைவுபடுத்தின . ஆனால் அவரின் வரிகளில் காதலுடன் தெய்வீகமும் இருந்தது . அதனையும் இங்கே பகிர்கிறேன் . தமிழ் சுவையும் கூடவே கலந்திருக்கும் . கவிராஜன் பாரதியின் வரிக்கு இசைராஜா இளையராஜா கொடுத்த இசை இது . பாடல் கேட்க்
 

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வைரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!


வாலியின் வரிகளில் எப்போதும் தமிழ் சொற்கள் விளையாடும் . என் நண்பனே பாடலில் வந்த வளைக்கையை  பிடித்து வளைக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம்  வர  நினைத்தேன் . வரிகள் காதலெனும் தேர்வெழுதியில் நான் ரசித்த இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா வரிகளை நினைவுபடுத்தியது. 

Tuesday, August 9, 2011

நேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050

திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கதை ...
http://puthu.thinnai.com/?p=3070

பாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள்  என  கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே  காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில்  மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் .

அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் .

 மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப மையத்தில் மும்முரமாக வேலைகளில்  ஈடுபட்டிருந்த விஜய்க்கு, இருந்த இடத்தில் ரோபோக்களின் உதவியால் உடல் அசையாத வேலை என்றாலும் மூளை படுவேகமாக இயங்கிக்கொண்டிருந்தது . காரணம் அடுத்த நாள் ஒளியின் வேகத்துக்கு இணையாக செல்லவிருக்கும் விண்வெளிக்கப்பல்  பயணத்திற்கு தயார்நிலையில் ஒரு குழுவே இயங்கிக்கொண்டிருந்தது .அதில் தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும்   பொறுப்பு விஜய்யிடம் இருந்ததால் குட்டித்தூக்கம் போட கூட நேரமில்லை .

இருந்தாலும் அங்கு வேலை செய்பவர்களுக்கு இத்தனை மணித்தியாலங்கள் கட்டாயம் உறங்கவேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தது.அங்கேயே சாய்ந்திருக்கும் கதிரையில் படுத்துக்கொண்டு ஒரு பொத்தானை அழுத்தியதும் கதிரையில் ஒரு வித அதிர்வு தொடர்ந்து இருக்க,இன்னொரு பொத்தானை அழுத்தி எழ வேண்டிய நேரத்தையும் பதிந்துவிட்டு  அப்படியே உறங்கிவிட்டான்  .

குறித்த நேரத்தில் எழுந்து வேகமாக இயங்க தொடங்கினார்கள் அவர்கள் .புறப்படும் நேரமும் நெருங்கிக்கொண்டிருந்தது .இறுதி செக்கன்கள் வரை தனது நோக்கம் தவிர வேறு எந்த நினைவுகளும் அவன் தலையை தட்டிப்பார்க்கவில்லை  .3 ,2 ,1 என செக்கன்கள் கணணி திரையில் எண்ணப்பட்டு முடிந்ததும் தனது விலங்குகளை அவிழ்த்து புறப்பட்டது விண்வெளிக்கப்பல் .

திணிவின்  காரணத்தால் உடனடியாக வேகத்தை ஆர்முடுக்க  முடியவில்லை . ஆனாலும் சிறிது நேரத்தில் தனது முழு இயந்திர சக்தியையும் பயன்படுத்தி கூடிய வேகத்தை பெற்றுக்கொண்டு பல மைல் தூரம் சென்றது  .ஒருவாரத்தில் கிரகங்களை தாண்டி செல்லத்தொடங்கியது .கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் ஒளியின் வேகத்தின் அரைவாசியை பெற்றுக்கொண்டு சூரிய குடும்பத்தையும் தாண்டி விட்டது  .

உள்ளேயும் பல தொழில்நுட்ப வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜய்க்கு அவ்வப்போது தனது அப்பா ,மகன் பற்றிய சிந்தனை  எட்டிப்பார்க்கும்  .சில வருடங்களாக அவன் தனது தந்தையை பார்க்கவில்லை .இறுதியில் கூட அவன் அவரிடம் சொல்லிவிட்டு வரவில்லை .
அவன் காதல் மனைவி விபத்தில் இறந்து விட்டதால் தனது தந்தையிடமே தனது மகனை பராமரிக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டு வானியல் ,தொழில்நுட்பம்  என்று மூழ்கிவிட்டான் .

மனைவி இறந்ததை நினைத்துக்கொண்டு தனது வானியல் துறையில் கவனம் செலுத்தாமல் இருந்த தன்னை அப்பா தோளோடு தோள் நின்று தட்டிக்கொடுத்ததை நினைத்து ஒரே இடத்ததை பார்த்துக்கொண்டிருக்க  ,நண்பர்கள் கை  அவனை தட்டி "இன்னும் கொஞ்ச நேரத்திலை ஸ்பெஷிப் ஒளியின் வேகத்தில் 90 % ஐ அடையப்போகிறது "என மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து ஜபநிஸ் பாட்டு ஒன்றையும்  பாடிக்கொண்டிருந்தார்கள் .

90 % மா !அப்பிடின்னா இனி எங்களுக்கு ஒரு நாள் எண்டா பூமியில் இருக்கிறவங்களுக்கு இரண்டு நாள் . நாங்க பூமியில் இருந்து புறப்பட்டு 2 வருடங்கள் ஆகிறதே! காலம் ஒரு புரியாத புதிர் என தனக்குள்ளேயே விஜய் நினைத்ததும் அவனது தந்தையின் ஞாபகம் மீண்டும் வந்தது .

"அப்பா நேரம்னா என்னப்பா ? டிக் டிக் ன்னு போகுமா ? "என ஆண்டு ஐந்தில் படிக்கும் போது  செல்லக்குரலில் அவன் கேட்ட கேள்வியை அப்பா கடவுள் மீது பழி போட்டு  புறக்கணிக்காமல் கைகளை பற்றிப்பிடித்து ஆற்றோரமாக அழைத்து சென்று அவனை தூக்கிப்பிடித்தபடி "நேரம்ங்கிறது இந்த ஆறு மாதிரிப்பா போய்க்கொண்டே இருக்கும் .ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு வேகம் .இது ஐங்ஸ்டெயின்ன்னு ஒரு பெரியவர் சொன்னது ".

அவன் கேட்ட சின்ன சின்ன கேள்விகளையும் அப்பா புறக்கணிக்காமல் ,அன்பாக பதில் தந்ததை எண்ணி கண் கலங்கியது . இயந்திரங்களோடு பழகியிருந்தாலும் அவனது உணர்வுகள் பூ போலவே இருந்தது .ஒரு தமிழனாக இருந்து இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் ,தனது மழலை கேள்விகளை தந்தை புறக்கணிக்காமல் சலிக்காமல் தேடிப்பிடித்தாவது அவனுக்கு விளக்கிவிடுவார் .

நேரம் பற்றிய இந்த விளக்கம் தான் அவனிடம்  நேரபயணம் பற்றிய எண்ணத்தை தூண்டியது .அவன் இந்த வானியல் துறைக்கு வந்ததன் காரணமும் அவன் தந்தை தான் .

என்ன தான் கரண்டியில் தேசிக்காய் வைத்து இலக்கை நோக்கி ஓடினாலும் அன்பு எனும் தேசிக்காய் விழுந்த பின் இலக்கை அடைந்து என்ன பயன் என சலித்துக்கொண்டான் .

மொத்தமாக பூமியில் இருந்து வந்து நான்கு வருடங்களும் ஓடிவிடவே விண்வெளி கப்பலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தின் 99 % ஐ அடைந்தது .ஒளியின் வேகத்தை அடைந்ததும் விண்வெளிக்கப்பல் கொஞ்சம் ஆட்டம் கண்டு பின்னர் சரியாகிவிட்டது .

வழக்கம் போல தனது யோசனைகளை களைந்துவிட்டு தொழில்நுட்பத்தை பரிசோதிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டான் .எல்லாம் சரியாக இருந்தது . அதில் இருந்த அனைவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியாத அளவு மகிழ்ச்சி . காரணம் அவர்கள் அனைவரும் ஐங்ஸ்டேயினின் கனவை,கணிப்பீட்டை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்  .

அவர்கள் விண்வெளிக்கப்பலில்   கழிக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் பூமியில் ஒருவருடத்திற்கு சமம் .நேரத்தில் அவர்கள் எதிர்காலத்திற்கு பயணித்தார்கள்  .

அவன் தந்தையை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாலும் அவன் மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் போது அவனது தந்தை அருகில் வந்து "உறவுகள் எப்போதும் தொடர்ச்சியானதுடா கவலைப்படாதை ஒன்றோடொன்று எப்போதும் தொடர்பிருக்கும்.முடிவென்று ஒன்று இல்லை " என்று சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது .

சில நாட்களில் பூமியிலிருந்து அவனது மகன் அனுப்பிய குரல் செய்தி அவனுக்கு கிடைத்தது ."அப்பா எப்படி இருக்கீங்க ?வாழ்த்துக்கள் வெற்றி கண்டுடீங்க. ஐங்ஸ்டெயின் கனவை நனவாக்கீடீங்க ." என்றதும் அவனது குரல் நிறுத்தப்பட்டு "நாசா மையத்தால் அனுப்பப்பட்ட முதல் பரீட்சார்த்த மிக வேகமான தொடர்பாடல் முறை " என ரெக்கார்டிங் சொன்னது .

அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியும் ஆச்சரியமாகவும் இருந்தது . தனது மகனும் ஒரு விஞ்ஞானி என எண்ணி பெருமிதத்துடன் தனது குழுவுடன் சில நாட்களில் பூமியை மீண்டும் வந்தடைந்தான்  .ஆனால் பூமியில் ஆண்டு அப்போது 2020

2050  இல் இவர்களை அனுப்பியவர்கள் யாரும் இப்போது பூமியில் உயிரோடு இல்லை .ஆனாலும் ஒரு நினைவு சின்னத்தில் இவர்கள் பெயர்கள் "2050 இல் பூமியில் இருந்து புறப்பட்டவர்கள்.இவர்கள் வந்தடையும் ஆண்டு 2120 "  என குறிப்பிட்டிருந்தது .

 மக்கள் அனைவரும் வரவேற்ப்பு நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படுத்தியதோடு இளமையாகவே சென்று இளமையாகவே வந்தவர்களை பார்த்து ஆச்சரியப்பட்டனர் .

விஜய் வந்ததுமே தனது பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்தான் அவனது மகன் .மகன் மிகவும் வயது போனவனாய் இருந்தான் .மகனை பார்த்த மகிழ்ச்சி என்றாலும் விஜய்யிடம்  ஏதோ ஒரு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது .

 ஒரு மகிழ்ச்சியான செய்தியை முகத்தில் மறைத்துக்கொண்டு வந்த மகன்  "அப்பா நான் பரடொக்ஸ் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து  இறந்தகாலத்துக்கு செல்லும் இயந்திரத்தை கண்டுபிடித்துவிட்டேன் ". என்று கூறியதும் பூரித்துப்போனான் விஜய் .

பரடொக்ஸ் னா என்ன தாத்தா என விஜய்யின் கொள்ளுப்பேரன் கேட்க்க விஜய்யின் மகன் அவனை தூக்கி வைத்து "இப்போ தாத்தாக்கு மறுபடியும் வயசு குறைஞ்சா இளமையாகீடுவன் இல்லையா " என சொல்லிக்கொண்டே போனார் .
"ஆமா அப்புறம் "என வியப்பாக கேட்டான் அவன் ."அந்த இளமையான தாத்தாவை எனக்கு பிடிக்காம நானே  சுட்டு கொன்னுட்டேன்னா .அந்த இளமையானவரை சுட்டது யாரு ? இது தான் இறந்தகாலத்துக்கு போறதிலை இருந்த பிரச்சனை ".அடிப்படை ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படும் .

"புரியல்லையே  தாத்தா ஒரே குழப்பமா இருக்கு" என இதழை பிதுக்கி வைத்துக்கொண்டு சொன்னான் ."குழப்பமா இருக்கா ? அது தான் பரடொக்ஸ் ". அந்த குழப்பத்தை தான் தாத்தா இல்லாம பண்ணியிருக்கேன் .

இதை உணர்ந்து கவனித்துக்கொண்டிருந்த விஜய்க்கு கண்ணீர் ஊற்றியது .தனது அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ வேண்டும் போல இருந்தது அவனுக்கு .மீண்டும் தந்தையுடன் தான் இருந்த காலங்கள் வருமா என்று எண்ணி வருத்தப்பட்டான் .

தனது தந்தை விஜய்யின் இந்த பிரச்னையை உணர்ந்த மகன் ,தந்தையை  இறந்த காலத்துக்கு அனுப்பினான் .மீண்டும் சின்னவயதுக்கு சென்ற விஜய் தனது தந்தையின் ஒவ்வொரு விளக்கங்களையும் தெரிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தான் .தான் எதிர்காலத்திலிருந்து வந்தவன் என்று தந்தையிடம் அவன் இறுதிவரை சொல்லவில்லை .

தன்னையே இழந்து தான்  வெளியில் தேடினாலும் மனிதனுக்கே உரித்தான அன்பு ,காதல் ஒன்றும் தேடினாலும் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டே நேரம் பற்றிய அப்பாவின் விளக்கத்தை கேட்டுவிட்டு அவரின்  கைகளை பிடித்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து நடந்தான் .


Thursday, August 4, 2011

கால பயணம் (Time travel)- இறந்த காலத்துக்கு செல்வதில் பரடோக்ஸ் பிரச்சனை

கால பயணம் பற்றிய முன்னைய ஆக்கம் . காலபயணம் பற்றிய அடிப்படை இல்லாவிட்டால் வாசிக்கவும் - அழுத்துக

காலத்தில் பயணம் செய்வதில் உள்ள பிரச்சனை இறந்த காலத்துக்கு பயணம் செல்வது தான் . எதிர்காலத்தில் பயணம் செய்வதை இதுவரை யாரும் விமர்சிக்கவில்லை.


இந்த பிரச்னையை இலகுவாக விளக்குவதானால் ,உதாரணத்திற்கு நீங்கள் 200 வருடங்கள் பின்னோக்கி  சென்று விட்டீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் உங்கள் பிறப்புக்கு முன்னரான  காலப்பகுதியில் இருக்கிறீர்கள் . 

அதாவது ஒரு விளைவுக்கு (பிறப்பு ) முன்னரே நிகழ்வு (வாழ்தல் ) நடக்கிறது . இது மிகவும் முரண்பாடானது .

இதனை  விளக்குவது தான் பிரபலமான கிராண்ட் பாதர் பரடொக்ஸ். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் இறந்த காலத்துக்கு சென்று விட்டீர்கள் .அந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொந்த தாத்தாவையே கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது . நீங்களும் ஒரு துப்பாக்கியை  எடுத்து சுட்டு விட்டீர்கள் .

ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிறக்கவில்லை . உங்கள் தாத்தா உயிரோடு இருந்தால் தானே உங்கள் தந்தை பிறப்பார்  .தந்தை இருந்தால் தானே நீங்கள். ஆகாவே இந்த தொடர்பு வட்டம் துண்டிக்கப்படுகிறது(inconsistent causal loop ) . ஆகவே இது  இறந்த காலத்திற்கு செல்வதில் பிரச்சனையான விடயமாக கொள்ளப்பட்டது .

 =======================================================================

Tuesday, August 2, 2011

வெளிப்படையாக பேசுதல்? மறைத்து பேசுதல் ? - நீயா நானா

நீயா நானாவில் நல்ல தலைப்புக்கள் வரும் போது வார இறுதி நாள் ஒழுங்காக செல்லவில்லை என்ற குறையை அந்த இரவுகள் நிவர்த்தி செய்கின்றன . 

அது போல இந்த ஞாயிற்றுக்கிழமை(31 /7 /2011 ) ஒளிபரப்பாகிய தலைப்பு மிகவும் சுவாரசியமானதும் ,எமது அன்றாட வாழ்க்கையில் கடந்து வரும் முக்கிய பிரச்சினையுமாகும் .காரணம்  தொடர்பாடல் தான் இந்த காலத்தில் எமது வேலைகளையும் அனைத்தையும் கொண்டு செல்கிறது .


வெளிப்படியாக பேசுவது சரியா ? மறைத்து பேசுவது சரியா என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருபக்கம் ஆராயப்பட்டது .

வெளிப்படையாக பேசுபவர்கள் ஏமாளிகள் என்றும் அளந்து  பேசுபவர்கள் வஞ்சம் வைத்து பேசுபவர்கள் என்றுமே ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் .

ஆனால் இதை பொதுவாக பார்ப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வெளிப்படையாக பேசுபவர்களை நம்பலாம் அமைதியாக ,கமுக்கமாக பேசுபவர்களை நம்ப முடியாது என்ற எண்ணமே நிலவுகிறது . 

இந்த இரு பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் . வெளிப்படையாக பேசுதல் கூடுதலானோரை பாதித்து விடுகிறது . 

முன் வைக்கப்பட்ட சில கருத்துகள் மிக பயனுள்ளதாக இருந்தது . வெளிநாட்டவர்கள் கலாச்சாரம் எப்படி வெளிப்படையாக பேச வேண்டும் என்று கற்று தந்திருக்கிறது ஆனால் எமது காலாசராம் எப்படி மறைத்து பேச வேண்டும் என கற்றுத்தந்திருக்கிறது . உண்மையாக ஒரு சமூகம் வெளிப்படையாக பேசுவதை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறாத போது நாமும் அதனை குறைத்துகொள்வது நல்லது .

நாம் வெளிப்படையானவர்கள் என்பதை காட்டிக்கொள்ள தேவையற்ற இடங்களில் அவர்களுக்கு அந்த விடயங்கள் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் பேசுவது தவறு .ஒருவர் வெளிப்படையாக பேசும் பொது அவரின் நிலையும் மிகவும் முக்கியமானது .

மிகவும் பயனுள்ள தலைப்பாக  இருக்கும் . பார்க்க 


Sunday, July 17, 2011

ஆடிப்பிறப்பு : தமிழர் திருநாள்

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை" என்று நவாலியூர் சோமசுந்தர புலவரது பாடப்புத்தகங்களில் படித்தது நினைவு. இன்று ஆடிப்பிறப்பு (17.7.2011) பனங்கட்டிகூழ் குடித்து மகிழ்ச்சியாய் கொண்டாடும் நாள் .

ஆடிப்பிறப்பு தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாள் . இன்றுவரை இது யாழ்பாண தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் கடைப்பிடித்து வருவது பாராட்டத்தக்கது . தமிழ் நாட்டு மக்கள் இதை பெரும்பாலும் மறந்துவிட்டனர் . மேலைத்தேய கலாசார திணிப்பு காரணமாக இருக்கலாம் .

ஆரியர்களால் திணிக்கப்பட்ட தீபாவளி ,சித்திரை வருடப்பிறப்பு போல் அல்லாது தை திருநாளும் ,ஆடிப்பிறப்பும் தமிழர்களுக்கு என்றே தனித்துவமான திருநாளாகும் .

 அப்படி மாதத்தின் முதல் நாட்களை கொண்டாட வேண்டிய காரணம் என்ன என்பதை பார்ப்போம் . தமிழர்களின் திருநாள் எதுவும் அறிவியலுடன் பிழைக்காது . இயற்கையோடு தொடர்புபட்டவை அவை.

உலகிலேயே தமிழ் கலாசாரம் சிறந்து விளங்கியது என்கிறோம் என்றால் அதற்கான காரணம் விவசாயம் ,இயற்கையை மக்கள் மதித்தமை . தமிழர்களின் கலாசாரத்தில் கடவுள் என்ற பதத்திற்கு இடம் கொடுக்காமல்  இயற்கையையே மதித்தனர் . தையிலும் சூரியனுக்கு தான் நன்றி செலுத்தினர் .


ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள் .யாழ்ப்பாணத்தின் மீது தென் மேல் பருவக்காற்று வீசும் காலம் இது .யாழ்பாண மக்கள் பட்டம் விட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள் .


தை முதல் தேதி நெல் அறுவடை நன்றி நவிலல் நாள்.ஆடி முதல் தேதி தை மாதத்திற்குப் பின் புது ஆறுமாதம் துவங்கும் நாள்.


 வானம் பார்த்த பயிர்கள் விதைதூவும் காலப்பகுதி. மழையால் ஆற்றுநீர் வரும் காலம். எனவே தான் தை முதலும் ஆடி முதலும் கவனத்திற்கு வந்தன.


இந்த காலப்பகுதியை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் புதிய காலப்பகுதி போல கொண்டாடுவார்கள் .


நவாலியூர் சோமசுந்தர புலவர் பாடலிலேயே ஆடிக்கூழ் எப்படி செய்வது என்றே எழுதி விட்டார் . பாடலின் இனிமையும் சிறப்பும் அது .


ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை 
ஆனந்த மானந்தம் தோழர்களே! 
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் 
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! 

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் 
பச்சை அரிசி இடித்துத் 
தெள்ளி,, 
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல 
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, 

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே 
வேலூரில் சக்கரையுங்கலந்து, 
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி 
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. 

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி 
வெல்லக் கலவையை உள்ளே இட்டு 
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே 
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! 

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி 
போட்டு மாவுண்டை பயறுமிட்டு 
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் 
மணக்க மணக வாயூறிடுமே 

குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே 
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து 
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை 
ஆடிப் பாடிப்பும் படைப்போமே 

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே 
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு 
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க 
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே 

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல 
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் 
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் 
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை 
ஆனந்த மானந்தந் தோழர்களே 
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் 
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!  

Friday, July 15, 2011

காமராஜர் - சுய அறிவு பிறந்த தினம்

றாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!’ - ஆர் வெங்கட்ராமன் 


இன்று ஐயா காமராஜரின் பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் ,சிலருடைய பிறப்பு மற்றயவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும் சொந்தக்காரார் காமராஜர் எனும் பெருந்தலைவர் .இன்னொருவர் சொல்லிக்கொடுத்து வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உழல வித்தியாசத்தை காமராஜரை பார்க்கும் போது உணர முடியும் .

காமராஜர் பற்றி படிக்க படிக்க சுவையாக இருக்கும் .அவரை பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்துகொள்கிறேன் .

சினிமா என்றால் காமராஜருக்கு பிடிக்காதாம் .அதனால் தான் நிஜமாகவே நாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வியக்கும் போலி நாயகர்கள் போல அல்லாது நிஜத்தில் நாயகனாக வாழ்ந்திருக்கிறார் .

  • படிப்பு ஏறாததன் காரணமாக 6 ஆம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்தி விட்டார் .
  • ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார் .
  • பலரிடம் ஆலோசனை கேட்கும் நேரு ,இறுதியில் காமராஜர் சொல்வதையே கேட்பார் .
  • காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருக்கலாம் .ஆனால் அவரை சுற்றி எப்போதும் படித்த மேதைகள் மொயத்திருப்பார்கள் .

அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . அவர் முதலமைச்சர் ஆனவுடன் அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சர் ஆக்கினார் .


ஆனந்த விகடன் குறிப்புகள் 
=========================================================================

சட்டசபையில் கலைஞர் :- ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்று ஏதோ வசனங்கள் சொல்லிகொண்டிருந்தார் .
காமராஜர் கேட்டார்.. “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”
“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். 
==============================================================================================
பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.
காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் .
  • அவரது காலகட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ் நாடு பெற்றது .
  • தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் .
  • ஏழை குழந்தைகளும் கல்வி கற்க வரவேண்டுமென்று மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் .
  • எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார் .
  • எல்லா பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் .
தமிழுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தார் .தமிழின் அனைத்து விதமான புத்தகங்களையும் வெளியிட்டார் .நீதி மன்றம் அரச அலுவலகம் அனைத்திலும் தமிழை கொண்டுவந்தார் .

மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது,பதவி விலகி கட்சி நலனுக்காக செயல்ப்பட வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் தானும் பதவி விலகி முன் உதாரணமாக இருந்தார் .

இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும் இந்திரா காந்தி ,சாச்திரியையே பிரதமராக்கினார் . நேரு இறந்த பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்கும் வேலையை மிக திறமையாக செய்து முடித்தார் .

அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!!!!

காமராஜர் பற்றி மேலதிக,கூடுதல் தகவல்கள் படிக்க http://kamaraj101.blogspot.com

Sunday, June 19, 2011

ஒருவரால் என்ன முடியும்- ஒன்று செய்யுங்கள் !

எவருக்காகவும்  கடவுளை பிரார்த்திக்காதீர்கள்  .முடிந்தளவு கடவுளாக இருங்கள் அனைவருக்கும் ..

மனிதனின் அடிப்படைத்தேவைகளில் உறையுளை இழந்து ,முதல் நாள் உண்ட உணவையும் ,உடுத்த உடையையும் மட்டுமே மூலதனமாக கொண்டு இடம்பெயரும் அகதிகளின் தினம் நாளை .  

இன்னொருவருடைய துயரை அறிய நான் அப்படி இருந்தால் என ஒரு சுயசரிதையை  எம் மனதுக்குள் நாமே எழுதிக்கொள்வது நல்லது .

எம்மால் என்ன செய்ய முடியும் ?-ஒருவரால் மாற்ற முடியும் ...


 இந்த முறை அகதிகள் தினத்துக்காக(ஜூன் 20 ) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தாபனம் தனது இணையத்தளத்தில் "ஒன்று செய்யுங்கள் " என்ற தொனிப்பொருளில் தனது தளத்தை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது . Click here

இந்த தளத்தில் Learn ,Spread the world  ,Give என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .  
Learn பகுதியில் அகதிகள் படும் துயரங்களையும் ,அவர்களாகவே எம்மை  உணர்ந்து அவர்களின் துயரங்களையும் உணரும் வகையிலும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது .


2 .உங்களால் போர் சூழலில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமான சூழ்நிலையில் உங்களால் உங்களை தயார்படுத்திகொள்ள முடிகிறதா என்பதை பரிசோதிக்க விளையாட்டு போல வடிவமைக்கபட்டுள்ளது .- http://www.playagainstallodds.com/ 

3 .இடம்பெயரும் அகதிகளுக்கும் ,வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கும் உதவியாக அவை பற்றி விழிப்புணர்வு கற்பித்தல்கள் இந்த 
பக்கத்தில்: -http://www.unhcr.org/pages/4b7409436.htmlSpread the world பகுதியில் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் முக்கியமானது . ஈ மடல்களை அனுப்பலாம் .ஏஞ்சலினா ஜோலியின் வீடியோ காட்சியை பகிரலாம் . 

Give என்ற பகுதியில் உங்களால் முடிந்த பணத்தை கொடுக்கலாம் .அல்லது உங்கள் நேரத்தை ஒதுக்கலாம் .

இந்த தளத்திற்கு சென்று உங்களை UNHCR  சேவையாளராக இணைத்துக்கொள்ளலாம் .http://www.unv.org/how-to-volunteer.html

அல்லது நேரம் மிக குறைவு எனில் இணையத்தில் உங்களால் செய்யக்கூடியவற்றை பதிந்து உங்களை பதிந்துகொள்ளலாம். .http://www.onlinevolunteering.org/en/vol/index.html

உதவிகள், சேவைகளில் சில்லறை உதவி பெரிய சேவை  என்றில்லை .. நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியையும் தொகுத்தால் மிகப்பெரிய அளவில் பயன் கிடைக்கும் .

சமூக இணையத்தளங்களை கொஞ்சம் சமூகத்துக்காகவும் பயன்படுத்துவோம் 

Saturday, June 4, 2011

காலத்தில் பயணிக்கும் துகள்


இந்த நேரத்தை நான்காவது பரிணாமமாக சிந்தித்தால் மட்டுமே உணரமுடியும் . உதாரணமாக நீங்கள் இந்த ஆக்கத்தை ஒவ்வொரு சொல்லாக படிக்கும் போதும் நேரம் இறந்த காலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது .நேரத்தில் நாம் பயணிக்கிறோம் .

 மனிதன் பயணித்த அப்பலோ விண்கலம் 25 ,000 mph எனும் வேகத்தை தான் இறுதியாக அடைந்தது.ஒளியின் வேகத்தில் பயணிக்க இதை விட கிட்டத்தட்ட 2000 மடங்கு வேகம் வேண்டும். அதுவும் சாத்தியமாகும் ,ஆனால் காலம் செல்லும். 

உண்மையில் நேரத்தில் இறந்தகாலத்துக்கோ,எதிர்காலத்துக்கோ பயணிப்பதில்  இது மாத்திரமல்ல பிரச்சனை .பரடொக்ஸ்(கிராண்ட்  பாதர்,மேட் சயன்டிஸ்ட் )  ,வோர்ம் ஹோல், லூப் பிரச்சனை என்றெல்லாம் பல பிரச்சனைகள். 

ஆனால் மனிதன் தன்னால் பயணிக்க முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் அணு துகள்கள் பயணிக்க கூடிய அளவு உலகின் மிகப்பெரிய துகள்களை முடுக்கி விடும்( particle accelerator ) மையம் சுவிசில் ஜெனீவாவில் அமைக்கப்பட்டுள்ளது .


அடித்தளத்தில் 16 மைல்கள் தூரமுள்ளதான வட்டவடிவில் அந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது .அந்த துகள்களுக்கு சக்தியை வழங்கும் போது ஒரு செக்கனிலேயே பூச்சியத்திலிருந்து 60 ,௦௦௦ mph வரை அது ஆர்முடுக்கபடும் .

அதற்கு வழங்கும் சக்தியை மேலும் மேலும் அதிகரிக்கும் போது ஒரு செக்கனில்  11 ,000 தடவைகள் அந்த வளையத்தை(16 மைல்கள்) சுற்றி வருகின்றன .

கிட்டத்தட்ட இது ஒளியின் வேகம் .ஆனால் முழுதாக ஒளியின் வேகத்தை பெறமுடியா விட்டாலும் ,ஒளியின் வேகத்தில் 99 .99 சதவீதத்தை அடைந்துவிடும் .

இதன் போது அவை நேரத்தில் பயணிக்க தொடங்கிவிடுகின்றன .மிகவும் குறுகிய நேரம் இருக்க கூடிய துகள் பை மேசன்ஸ்(pi-mesons ) ஒரு சில நனோ செக்கனில் கலைந்துவிடும் .ஆனால் இவை நேரத்தில் பயணிக்க தொடங்கியதும் முனனர் இருந்ததை விட 30 மடங்கு நேரம் அதிகமாக இருக்கிறது .


இந்த கணிப்பின் படி பௌதீகவியலாளர்கள் இதை ஏன் நேர இயந்திரமாக பாவிக்க கூடாது என கேள்வி எழுப்பி உள்ளனர் .இதில்   இறந்த காலத்துக்கோ  எதிர்காலத்துக்கோ  செய்தியை  அனுப்பி  முயற்ச்சிக்கலாம்  என்பது  அவர்களது  கருத்து .

Friday, April 22, 2011

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .

 அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  .


இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது .

இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் . 

சிறகுகள் அமைப்பின் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பும்  நிகழ  அமைப்பில் இருந்த பலரும் இறந்துவிட எஞ்சியவர்கள் இதன் மூலமே தேர்தலில் வெற்றிபெற்றுவிடுகின்றனர் .இதன் பின்னர் சிறகுகள் அமைப்பின் தலைவன் (அஜ்மல் ) ,ஜீவா யார், குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்பதை இரண்டாம் பாதியில் திரைக்கதையில் விறு விறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் .


புகைப்படப்பிடிப்பாளராக வரும் ஜீவாவை தமிழ் சினிமாவில் வரும் பஞ் வசனம்,செண்டிமெண்ட் வசனம் பேசும்  கதாநாயகன் என்று காட்டாமல்  யதார்த்தமான ஒரு சாதாரண பத்திரிகையாளனாக  காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் . ஜீவாவின் நடிப்பும் அவ்வளவு யதார்த்தம் .மொத்தமாக தமிழ் சினிமாவின் மாற்றத்துக்கு பாராட்டுகள் .

அதே பத்திரிகையில் நிருபர்களாக இருக்கும் கதாநாயகி கார்த்திகாவும் பியாவும் யதார்த்தமாக தேவையான இடங்களில்  வந்து போகின்றனர் . துறு  துறு பியாவின் நடிப்பு பாராட்டப்படவேண்டியது .

பிரகாஸ்ராஜ் உம் கோட்டா சிறீநிவாசராவும் ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்கள் பாத்திரத்தில் சிறப்பு . பிரகாஸ் ராஜ் இன் வசனம் பேசும் முறை நடிப்பு திரையில் பார்த்தால் மட்டுமே உணர முடியும் .சாமிக்கு பிறகு கோட்டா சிறீநிவாசன் நடிப்பு பிடித்த படம் இது .இந்த படத்தில் உண்மையான கதாநாயகன் கே வி ஆனந்த்,ரிச்சர்ட் நாதன்  உம் அவரின் கமெராவும் ஜீவாவின் கமெராவும் தான் .ரிச்சர்ட் நாதனின்  ஒளிப்பதிவு சண்டை காட்சிகளிலும் சரி பாடல் காட்சிகளிலும் சரி மிக சிறப்பு என்றே சொல்லலாம் .சண்டை காட்சிகளில் சுழன்ற கமெரா பாடல் காட்சிகளில் இயற்கையை அழகாக காட்டிய கமெரா சில காட்சிகளில் தொழில்நுட்பத்திலேயும்  கலக்கியிருக்கிறது .

ஹரீஸ் எங்கிருந்து இசையை சுட்டாலும் கேட்க்க நன்றாக இருக்கிறது,காரணம் பா விஜயின் மதன் கார்கியின் வரிகள் அருமை.சில இடங்களில் பின்னணி இசை மிக வித்தியாசமாக இருந்தது .ஆனால்  ஒரு இடத்தில் டயிடானிக் இசையை நினைவுபடுத்தியது !! .

படம் யதார்த்தமாக இருப்பதோடு நச்சென்று சில வசனங்களும்  இருந்தது . "நமக்கெல்லாம் ஏன் வேண்டாத வேலை அது தான் நாட்டை திருத்த பஞ் டயலாக் பேசிற ஹீரோஸ் இருக்காங்களே !!! ""உங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டும் சினிமாவும் ஹீரோவும்,தோணி சிக்ஸ் அடிப்பாரா மாட்டாரா என்பது தான் பிரச்சனை " எனும் இடங்களும்" வசனங்கள்  அருமை .
அரசியல் நக்கல்களுக்கும் பஞ்சமில்லாமல் காட்சிகளும் கலைஞரும் வந்து போகிறார்கள் . சோனா பிரசார மேடையில் பேசும் தமிழ் குஷ்புவை நினைவுபடுத்துகிறது .

யதார்த்தமான சண்டை காட்ச்சிகள் ,யதார்த்தமான நடிப்பு ,யதார்த்தமான நாயகன் என அத்தனையும் யதார்த்தமாக செய்திருக்கும் கே வி ஆனந்த் இற்கு பாராட்டுகள் .

சினிமா பார்க்கும் மக்களை முட்டாள் ஆக்காத வரிசையில் கோ வும் அந்த அணியும் இணைந்துகொள்ளலாம் .அவ்வளவு யதார்த்தமான சினிமா .விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ......

பத்திரிகை துறையை வைத்து எத்தனையோ கதைகள் வந்திருந்தாலும்  புகைப்படத்தாலேயே கதை சொல்லும் இந்த யதார்த்தமான திரைப்படம்  வரவேற்பு பெறும் .

Friday, April 15, 2011

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் .

இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் .

ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின் மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  .
புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு ..முதலில் ரசித்த பாடல் .....

சந்திக்காத கண்களில் .... -பாடலை கேட்க்க

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
 செய்ய போகிறேன் 
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய் 
பெய்யப்போகிறேன் ...

குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிமுகம் தொடரவேண்டும் .அன்பின் ஆலை ஆனாய் 
ஏங்கும் ஏழை நானாய் 

அன்பையே கொண்டிருப்பவனிடம் ஏங்கும் பெண்ணின் ஏக்கமாய் ஒலிக்கும் வரிகளில் சொற்களின் பாவனை அருமை .

இணையும் முனையம் இதயம் என்று ஆனாலே 
பயணம் முடியும் பயமும் விட்டு போகாதோ  

இரண்டு இதயங்கள் ஒரே சமயத்தில் இணையும் இடம் இதயம் என்றானபின் பயம் இல்லை என்று காதலின் அர்த்தம் இரு வரியில் சொல்லும் காதல் வரிகள் . 

 நான் கேட்டு  ரசித்த  அடுத்த  பாடல் துறு துறு கண்ணில் ......

இந்த பாடல் வரிகளை தீட்டிப்பாருங்கள் . ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் வைரம் ஒளிரும். உணர்வீர்கள் .குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்ற வரிகள் .

புதிய புதிய உலகம் வேண்டாமே 
நேற்றுலகம் நான் காண்பேன் 
தூசில்லா பூங்காற்றிலே ...

நவீன உலகின்,  மனித மனதின் ஏக்கம் மாசில்லாத  பூங்காற்று . ஏக்கத்தை இன்னும் அதிகரிக்கும் வரிகள் .


இது மதன் கார்கியின் சிறப்பு . வரிகளுக்கும் பாடகரின் உச்சரிப்புக்கும் மேலும் அழகு. மீண்டும் தமிழின் அழகை கொண்டுவந்துள்ள ளகர வரிகள் மிகவும் பிடித்தது .

பல நாள் இருளும் 
ஒரு நாள் சுருளும் எனவே !
மருளும் மனதில் 
ஒளியாய் திரளும் கனவே !

மருளும் - பயப்படும் 
இருளான வாழ்க்கையையும் ,இறுதியில்  இல்லாமல் போகும் வாழ்க்கை எனவும் நினைத்து மருளும் (பயந்து மிரண்டுகொண்டிருக்கும்)  மனதிற்கு ஒளியாய் இருப்பது கனவே .  வாழ்க்கையின் அர்த்தம் இந்த வரிகள் .இந்த வரிகளின் அழகு உணர பாடலை கேளுங்கள் .

ஏஜே மனம் மறைப்பதேன் பாடலில் ரசித்தது  ..

நாடியை தேடி உனது கரம் தீண்டினேன் 
நாழிகை ஓடக்கூடா வரம் வேண்டினேன் 


இந்த வரியை சிந்தித்த மதனின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் .காதலியின் கையை தீண்டும் போது கூட ஆவலுடன் அவள் நாடியிலேயே நேரம் கணித்து நாழிகை ஓடக்கூடாது என வரம் கேட்கும் காதலன் . நேரம் போக கூடாது என்ற எண்ணத்தையும் காதலியை தீண்டுவதையும் இணைத்தது நாடியில் நேரம் பார்ப்பதை உணர்த்துவது அருமை .இரு வரிகளுக்குள் எண்ணமும் நிகழ்வும் .

இளமை ததும்பும் வரிகளிலும் விடவில்லை ..

மேல் விழும் தூறல் 
எனது ஆசை சொன்னதா 
கால் வரை ஓடி எனது 
காதல் சொன்னதா ?

காதலை  சரியாய் சொல்லும் மொழி  மோகம்  என்பதையும் அழகாக விளக்கும் வரிகள் .

இந்த வரிகள் எதிர்பார்ப்பை குறைக்கவில்லை ..அடுத்த பாடல்களின் அழகான வரிகளுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது . மதன் கார்கியின் தரமான வரிகளின் ரசிகனாய் ....