நீரில் நனைந்த கூந்தலை நெறிப்படுத்தி வாரியணைத்துக்கொள்வதும், உளரிய பொற்கூந்தல் விரல்களினின்று பிழைத்து விழவிழ வாங்கி நுகர்வதும், காமமுற்றோர்(காதலுற்றோர்) செய்யும் சிருங்காரக் கலை. அந்தக் கலைக்காகவே, கூந்தல் நெளிநெளியாய்ப் நெய்யப்பட்டது போலிருக்கும். உயிரை உய்த்துணரும் நற்புணர்வின் பின்னர், வியர்வையின் கதகதப்பும் மணமும் கொள்ளும்பொழுது அது மேலும்மேலும் வனப்புக் காட்டக்கூடியது. அதைச் சங்கத்தமிழ்க் கவிகள் அத்துணை நயமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதைப் படிக்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்தபடி, தகிக்கும் தமிழொடு கலந்தாடி இரு காதலர் புணரும் வேளையில், ஆற்றின் மேல் நீண்டிருக்கும், அதன் கொப்புகள் சொரிந்த மலர்ப்போர்வையின்கீழே, பண்புடன் புணரும் மீனினம்போல அத்துணை குளுமை தரும். ஒரு சங்கப் பாடலில் மனதிற்கு இனிய சங்கத்தலைவியானவள் காமுற்றிருக்கிறாள். அவள் உணர்வைச் சொல்ல, சங்கக்கவி, ஆற்றுமணலை அவள் கூந்தலோடு ஒப்பிடுகிறார். ஆற்று நீரறுத்த மணல்(அறல்) எப்படி வரிவரியாக நெளிவுடன் திரண்டு அழகாய் இருக்குமோ, அப்படி இருக்கிறது அவள் கூந்தல் என்கிறார்.