கூதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. பனியும் மழையும் ஒன்றாகப் பொழியும்போது அதற்குப் பொருத்தமான ஒரு அழகான குறுந்தொகைப் பாடலோடு காதல் காலத்தை வரவேற்பது அழகாக இருக்கும் என நினைக்கிறேன்.
தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்க மாட்டான்னு கவலைப்பட்ட தன் தோழியிடம் தலைவி தன் மனநிலையைச் சொல்லுகிறமாதிரியான பாடல்.
படம் : இணையம் |
தோழியே கேளு, ஈரத்தைச் சுமந்துவந்து என்மேல தூவுகிறபடி பனிக்காற்று வீசுகிற கூதிர்காலம் இது. நடுக்கம் தருகிற இந்தக் குளிர்கால இரவின் அமைதியில் மெல்லிய மணி ஒலி மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைவிலிருந்தாலும் துல்லியமாகக் கேட்கிறது. இரவுல நல்லாத் தூங்குற பசுவை ஈ/நுளம்பு உறங்கவிடாம கடிச்சு தொந்தரவு செய்கிறது. ஈ அமரும் இடத்தை எல்லாம் தன்னோட நாக்கால தடவுவதற்காக பசு தன்னோடை தலையைத் தூக்கிவிட்டு மறுபடியும் உறங்குகிறது. இதையே திரும்பத் திரும்பச் செய்திட்டிருக்கு. அது இப்பிடி செய்யும்போதெல்லாம் அதோடை கழுத்துல இருக்கிற குட்டி மணி அசைந்து அசைந்து சின்ன ஒலி எழுப்புது. அந்த ஒலி என்னை ஏதோ செய்கிறது. என் தனிமைக்கு துக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது.
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
தூதை தூற்றுங் கூதிர் யாமத்
தானுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
மஜ்னு படத்தில் இடம்பெற்ற 'பட பட பட்டாம்பூச்சி' என்கிற அழகான வரிகள் உள்ள பாடலை எடுத்துக்கலாம். காதல் வந்த பெண்ணின் இரவை இப்படிச் சொல்கிறார். காதலனின் நினைவா தனிமையில் இருக்கும்போது இவளுக்கும் மனசு ஏதோ செய்கிறது.
"கடமுட கடமுட கொடம் ஒன்னு மனசுக்குள் உருளுதே
பூனை வந்து உருட்டவும் இல்லை
காத்து வந்து கவுக்கவும் இல்லை
இந்தச் சத்தம் ஏன் கேட்குதோ
வந்த தூக்கம் ஏன் போனதோ!"
என்று காதலியானவள் காதலனிடம் புலம்ப, "அது வேற ஒன்னுமில்லை, நான்தான் உன் மனசுக்குள்ள புகுந்திருக்கேன். நீ புரண்டு படுக்கையில் உருண்டு விழுந்திருப்பேன். அந்தச் சத்தம்தான் அது" னு பதில் சொல்லித் தேற்றுகிறமாதிரி அமைகிற வரிகள். இந்த வரிகளிலும் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறதுதான் இதன் அழகு. இலக்கியத்தன்மை சேரும்போது காதல் அடையும் உயர்வுக்கு அளவே இல்லை.
Comments
எங்கள் என்ன ஓட்டத்தை அறிவீர்கள் போலேவ!?!