நம்மை முழுதாய் ஆட்கொண்டு உணர்வுபூர்வமாக புதியதொரு நிலைக்கு அழைத்துச் செல்லும் பாடல்கள் என்று , ராஜா இசையில் அமைந்த ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம். ஆனால் பருவ நிலைகள் , காலநிலைகள் , இயற்கை என நம்மை அழைத்துச் சென்றுவிடும் பாடல்கள் தரும் சுகம் அலாதியானது. தென்றல் வந்து தீண்டும் போது பாடலை எப்படி வெறும் காதல் உணர்வு தூண்டும் பாடல் இது என கடந்து போக முடியாதோ அது போன்றதொரு பாடலே பூ பூக்கும் மாசம் தை மாசம். வருஷம் 16 படத்தில் அமைந்த பாடலை காலைப் பனி படர்ந்திருந்த வேளை கேட்பது தனி சுகம். தையை வரவேற்க்க தயாராக இருக்கும் இந்நேரத்தில் மனதை சிதறடித்து கரைத்துக் கொண்டு செல்லும் இதமான கீரவாணி இராகத்தில் அமைந்த பாடல் இது . பனி படர்ந்த சூழலை இசையே உருவாக்கிவிட அதை ஊடறுக்கும் தென்றல் போல் நுழைகிறது சுசிலாவின் தேன் குரல். கிராமிய சூழல் , மகிழ்ச்சி கலந்த சுதந்திரமான காதல் நிலை, புதிய பருவநிலையை மகிழ்ச்சியுடன் வரவேற்பது என அனைத்தையும் ஒன்று சேர்த்து தரும் பாடல். அதற்கேற்றபடி காட்சியமைப்பையும் மாற்றி மாற்றி அமைத்துள்ளது இயக்குனர் பாசில...