குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பங்கு பெரியது. அவற்றைப் பற்றிப் பேசுகிற புத்தகம்தான் "The Young Mind". குழந்தைகள் தங்கள் வளர்ச்சியில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை ஆராய்வதோடு அதற்குரிய சரியான உளவியல் வழிகாட்டல்களை எப்படி அணுகுவது என ஒரு கட்டமைப்பை நிறுவியிருக்கிறது. பாடசாலையில் தனது நண்பி தன்னைப் பார்த்து சிரிக்கவில்லையென்று ஒரு மாணவி வருத்தப்படுகிறாள் என்று வைப்போம். இதை வைத்து தனது நண்பிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அந்தக் குழந்தை எண்ணிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், தான் அழகில்லாமலும், போரிங் டைப்பாகவும் இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்ளும். யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று தன்னம்பிக்கையின்றி அழுத்தத்துடன் இருக்கும். சிலர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சிலவேளைகளில் பாடசாலைக்குப் போவதையே நிறுத்திவிடும். இந்தமாதிரியான எதிர்மறை எண்ணங்கள் எதிர்காலத்தை எப்படியெல்லாமோ மாற்றக்கூடும். அடுத்தவர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தகூடியவர்களாக மாற்றும். ஒரு சிறிய விடயம் எவ்வளவு தூரம் வளரக்கூடும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.