Wednesday, June 29, 2016

இறைவி 2 - ஆய்த எழுத்து


இறைவி திரைப்படம்  பற்றிய எனது முன்னைய பார்வையை மணிரத்னத்தின் திரைப்படத்தில் வருகிற பெண்  கதாப்பாத்திரங்களோடு  ஒப்பிட்டு எழுதியிருந்தேன். மணிரத்னத்தின் படங்களில் வரும் பெண்கள் இயல்பாகவே பெறுமதியானவர்கள் என்றும்  எழுதியிருந்தேன். அதற்கு எதிர்வினையாக ஒருசில கருத்துகள் வந்தது. 'இறைவி' பெண்களை முற்போக்கானவர்களாகக் காட்டும் திரைப்படமல்ல, மாறாக ஆண்களை பிற்போக்கானவர்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனை உள்ளவர்கள் என்றும் காட்டும் திரைப்படம் என்று சொல்லியிருந்தார்கள். அவர்களின் நியாயப்படுத்தலில் ஓரளவு உண்மை இருக்கிறது. ஆனால் இந்தப் படம் பெண்களின் பெருமை பேசுகிறேன் என்று ஆண்களை நியாயப்படுத்தி இருக்கிறதென்பது சில விமர்சகர்கள் கருத்து.  இதுவரை, விஜய் சேதுபதியின் போக்கையே மாற்றிவிடும் மலர்விழி கதாப்பாத்திரம் சொல்லவரும் காமம்-காதல் முரண்பாட்டை யாரும் சரியென்று சொல்லவில்லை. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நாங்கள் சேர்ந்து வாழலாம் என்றாவது கேட்டிருக்கலாம். இறைவி விமர்சனத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கேட்டதுபோல எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்!

கார்த்திக் சுப்புராஜின்  இறைவி  திரைப்படத்தை ஏன் மணிரத்னம் படங்களோடு ஒப்பிடவேண்டும் என்கிற கேள்வி புரிகிறது. தமிழ்த்திரையில் எல்லாத் திரைப்படங்களிலும் பெண்களுக்குச்  சமபங்கு கொடுக்கும் இயக்குனர்களுள் மணிரத்னமும் ஒருவர் என்பதை யாரும் மறுக்கமுடியாது. எல்லாத் திரைப்படங்களிலும் பெண்களை வெறும் காட்சிப்பொருளாகப்  பாவித்துவிட்டு ஒரு படத்தில் பெண்ணுரிமை பேசும் தன்மை அவர் படங்களில் கிடையாது. திரைப்படம் முழுதும் பெண்களை அடிமைப்படுத்தும் காட்சிகளை வைத்துவிட்டு ஒரு அம்மா பாடலில் பெண்ணுரிமை பேசிவிட்டதாக நினைக்கும் கதாநாயகர்களின் பக்தர்கள்தான் அதிகம். தமிழ்த் திரையில்  யாராவது பெண்ணுரிமை பேசுகிறார்கள் என்றால் பாலச்சந்தர், மணிரத்னம் போன்றவர்களை ஒப்பிடாமல் நகர்ந்துவிடமுடியாது.  அவர்கள் திரைப்படங்களில் ஒவ்வொரு காட்சிகளிலும் பெண்கள் உயர்ந்தவர்கள். அவர்களின் அழுகை , துயரம், காதல், மகிழ்ச்சி எல்லாவற்றுக்கும் திரையில் இடம் உண்டு. இது எல்லாத் திரைப்படங்களிலும் உண்டு என்பது கவனிக்கப்படவேண்டியது. ஆய்த எழுத்து திரைப்படம்  மூன்று பெண்களினதும் மூன்று ஆண்களினதும் கதையினை ஒரே புள்ளியில் கொண்டுவந்து இணைக்கும். அதில் மீரா ஜெஸ்மின் கதாப்பாத்திரத்தை 'இறைவி' படத்தின் கதைக்கருவோடு ஒப்பிடலாம். கார்த்திக் சுப்புராஜ் மணிரத்னத்தின் ரசிகர் என்பதால் இந்தக் காட்சியே இறைவி படத்துக்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கலாம். இன்பா, துளசியின் சொற்களைக் கேட்பதேயில்லை. தனது ஆணாதிக்க சிந்தனையால் புறக்கணித்து அவளைத் துன்புறுத்துகிறான். அவள் தன் காதலால் அவனை மாற்ற முற்படுகிறாள். முடியவில்லை. இறுதியில் வெளியூருக்குச் செல்லலாம் என முடிவெடுக்கிறாள். இரயிலில் காத்திருக்கிறாள். இன்பா வரவேயில்லை. அப்போது டிக்கட் பரிசோதகர் வருகிறார்.  சுஜாதாவும் மணிரத்னமும் இணைந்து இயல்பாக ஒரு காட்சி அமைக்கிறார்கள்.

"இன்பசேகரன்   யாரும்மா?  உங்க ஹஸ்பெண்டா ? எங்க அவரு ?" 

"எனக்கு எப்பிடி தெரியும் அவர் எங்க இருக்கார்னு.. வேற கம்பாட்மென்ட் ? வேற ஊர்லயா  ? பார்லையா? தேவடியா வீட்லையா ? ஹோட்டல்லையா ? ஜெயில்லையா ? எனக்கு எப்பிடி தெரியும் ? நீங்க எல்லாரும் ஒரே ரகம் . உலகத்துல இருக்க அத்தனை  ஆம்பிளைங்களும் பொறுக்கிங்க" 

"என்னம்மா, இன்பசேகரன் பெயர் சாட்ல இருக்கே அவர் எங்கன்னு கேட்டதுக்க இவ்வளவு அர்ச்சனை "

"sorry" என்று அந்த சம்பாஷணை முடிந்துவிடும்.

ஆயுத எழுத்தில் வருகிற மூன்று பெண்களும் வேறு வேறு குணாதிசயம் கொண்டவர்கள். இதில் மீரா ஜெஸ்மின் பாத்திரம் துன்பப்படுகிற பெண்களின் கதாப்பாத்திரம் எனலாம். மற்றைய பெண்கள் தெரிவுகளில் பிழை விடுவதில்லை. "உன் ஞாபகம் வந்து போனா எனக்கு நானே சொல்லிக்குவேன் . போயும் போயும் இவனுக்காக எதுக்கு ஏங்கணும்? இது அமெரிக்கா போயி வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்குற கேசு . இவன்மேல என்ன புடலங்கா காதல்னு . டிவில பாத்தேன் . நீ எலெக்ஷன்ல நிக்குறேன்னு . அப்போதான் புரிஞ்சுது .. இந்தக் காதல் ஒன்னும் தப்பா வந்திடாதுன்னு" 

என்று மீரா சித்தார்த்தைத் தெரிவு செய்கிறாள்.  இவையெல்லாம் கதையின் ஓட்டத்தோடு இயல்பாக நிகழ்பவை. பெண்களைப் பெருமையாகப் பேசுகிறேன் என்று வலிந்து காட்சிகளைத் திணிப்பதும், உலகிலுள்ள ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் ஒன்றே என்பதுபோல கருத்தை வெளிப்படுத்துவது எல்லாம் ஆபத்து. சொல்ல வருகிற செய்தியைத் தெளிவாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் இயல்பாகச் சொல்லவேண்டும். 'இறைவி' பெண்ணின் பெருமை பேசுகிறது என்று சொல்லாதீர்கள். வேண்டுமானால் பெண்களின்  சகிப்புத்தன்மையைப் பேசுகிறது என்று சொல்லுங்கள்.

Tuesday, June 28, 2016

மெய்தொட்டுப் பயிறல் - கவிதாஞ்சலி 4

இலக்கியத்தில் களவொழுக்கத்தின்போது   தலைவியின் வேட்கையை உணர்ந்த தலைவன் எண்வகைச் செயல்களை ஆற்றுவான். தலைவிக்கும் காதல் உடன்பாடு இருக்கிறது. ஆனால் அவள் பெண்மையின் நலன்கள் அவளைத் தடுக்கிறது. அவற்றை நீக்கவேண்டும். அதன்பின்னரே கூடல் நிகழும்.இவற்றை மெய்தொட்டுப் பயிறல்,பொய்பாராட்டல்,இடம்பெற்றுத்தழாஅல்,இடையூறு கிளத்தல்,நீடுநினைந்திரங்கல்,கூடுதலுறுதல்,சொல்லியநுகர்ச்சி,தீராத்தேற்றம் என்று எண்வகைச் செயல்களாக வகைப்படுத்துகின்றன.

தலைவியின் அச்சமும் மடமும் நாணமும் நீங்கும் பொருட்டு அவளைத் தீண்ட முற்படல் மெய்தொட்டுப் பயிறல் எனப்படும். 'பயிறல்' என்பது தீண்ட முயலுதல் எனும் பொருள் கொள்ளும் என்கின்றனர். இவ்வாறு முயலும்போது தலைவியிடம் பலவகை மாற்றங்கள் நிகழும். "நிலவே கேளு! உன்  ஒளி இவளின்  முகத்தை விட பிரகாசமாய் இருந்தால் நான் உன்னையே மணப்பேன்" என்றெல்லாம் பொய்பாராட்டல்  நிகழும். இதில் பொய் சொல்லி நெருங்குதல் பற்றிக் கூறும் பாடல்கள் நிறைய இருக்கின்றன. அவள் மேல் அமர்ந்த வண்டைத் துரத்தும் சாக்கில் அவள் கூந்தல் திருத்தி, நுதல்  தடவி, வண்டினையும் ஓட்டிவிட்டு மெல்லடிகளைத் தடவுகிறான். 'இடம்பெற்றுத்தழாஅல்' என்பது பொய்பாராட்டலை தலைவி கேட்டுக்கொண்டே இருக்கும்போது அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை நெருங்குதலைக் குறிக்கும்.

இந்திரா படத்தில் இடம்பெற்ற "தொடத் தொட மலர்ந்ததென்ன" பாடலில் இந்த அழகியலைக் காணலாம். அத்தனை மெலிதான வரிகள். "தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே" என்று இலக்கியம் சொல்லும் மெய்தொட்டுப் பயிறலை வரிகளில் அத்தனை நயம்பட சொல்கிறது  வைரமுத்து வரிகள். "மழை வர பூமி மறுப்பதென்ன" எனத் தொழுகிறான். "பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்" என்று பொய்பாராட்டி நெருங்குகிறான்."இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே.மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே"  என்கிற வரிகள் இடையூறு கிளத்தலை அழகாகச் சொல்கிறது. "இடையூறு கிளத்தல்" என்பது தலைவி நாணி தன்னை மறைத்துக்கொள்ளுதலை சொல்கிறது.

இந்தப் பாடலில் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு ஒரு கண்ணியமான ஆண் குரல் வேண்டும். காரணம், கவிதையில் காமம் மட்டும் இல்லை . அன்பும் மிகுந்து இருக்கிறது. இதையெல்லாம் சேர்த்து  வார்த்தைகளில் தெய்வத்தன்மையைக் கொண்டுவந்தது பாலசுப்ரமணியத்தின் குரல்.

Friday, June 24, 2016

கவிதாஞ்சலி - கவியரசு கண்ணதாசன்

செவ்விது! செவ்விது! தமிழ்க்காதல்.  

இன்று கவியரசு கண்ணதாசனின் 90வது பிறந்ததினம். இலக்கிய நயத்தைத் திரையிசைப் பாடல்களுக்குள் நுழைத்தவர் கண்ணதாசன். நூற்றுக்கணக்கான பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பதிவில் இரண்டு பாடல்களில் இருக்கும் இலக்கிய நயத்தைப் பார்க்கலாம். இப்படியான தமிழையும் இனிமையையும்  இனித் திரையில் எதிர்பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை.
முதலில் "அன்புள்ள மான் விழியே என்கிற  பாடலில் உள்ள  இலக்கிய நயம் பற்றிப் பார்க்கலாம். காதலன், "அன்புள்ள மான் விழியே" என்று ஆரம்பித்து ஒரு கடிதம் எழுதுகிறான். உயிர்க் காதலோடு அவளுக்குக்  கவிதை எழுதுகிறான். "உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால்" என்பதுபோல, சேருகிற போதெல்லாம் உயிர் தளிர்க்க தீண்டலால் இது உயிர்க்காதல். எப்போது தீண்டினாலும் காதல் புதிதாய்த் தோன்றும். இப்படியாகத் தொலைவின் ஏக்கத்தில்/ பிரிவின் துயரில் கடிதம் எழுதுகிறேன் என்கிறான்.
ஆனால் அவளோ "நானும் ஆசையில் ஒரு கடிதம் வரைந்தேன். ஆனால் அதைக் கைகளில் எழுதவில்லை. இரு கண்களில் எழுதிவந்தேன்" என்று பதில் போடுகிறாள். நீதானே மான் விழியாள் என்றாய்! உன்னையும் என்னையும் பற்றிய கனவுகளை என் மருண்ட கண்கள் கொண்டு காட்சிகளாக்கி எழுதி வந்தேன் என்கிறாள். காட்சியமைப்பில், அந்த வரிகளை அவள் பாடிக்கொண்டு  கண்களில்  காட்டும் நளினம் ஒரு காட்சியையே வரைந்து செல்கிறது.
இவனும் உடனே  அவள் அழகைப் புகழ்வதுபோல, காதலைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான். அவளைக் பூங்கொடியோடு ஒப்பிட்டு எழுதுகிறான். கொடி ஒடுங்கி மலர்களின் பாரம் தாளாது  துவண்டது போல இருக்கும். இலக்கியங்களில் பெண்களை நெடுங்கொடியோடு ஒப்பிடுவார்கள். அதைப் பெண்களின் அழகென்று சொல்லலாம். அதேநேரம் காதல் நோயால் துவண்டாள் எனும் அர்த்தமும் பெறும்.
"இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ"

சுகமாக இருக்கிறாயா! பிரிவின் துயரால் உன் இடை மெலிந்து, நடை துவண்டு பூங்கொடி போல ஆகிவிட்டாயா? வாடைக் காற்று உனக்கு மேலும் துயரைத் தருகிறதா எனக் கேட்கிறான். இவனில்லாமல் அவள் வருந்துகிறாள் எனும் செய்தியை அவளே சொல்லிக் கேட்கவேண்டும் எனும் ஆர்வத்தில் கேட்கிறான். அவள் தன்மீது எவ்வளவு காதலாயிருக்கிறாள் என்பதைக் கேட்பதில் அப்படியொரு இன்பம். "எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ" என்கிறான். என்ன அழகு!
அவள் நிறையவே புத்திசாலி. இவன் நோக்கம் கண்டுபிடித்துவிட்டாள். அவனைச் சீண்டுகிறாள்.
"இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா"

நல்லிலக்கணம் கொண்ட பெண்ணின்  இடை மெலிவது இயற்கை. வெட்கத்தால் நடைதளர்ந்தது. பூங்கொடி பெண்மையின் வடிவம்தானே! இறுதியில், இதற்குமேல் சீண்டவேண்டாமென்று வாடவைத்தது உண்மை என்பதை ஒப்புக்கொள்கிறாள். "வாட வைத்ததும் உண்மை" என்கிற இடத்தில் பரிகாசம் செய்வதுபோன்ற  அந்தப் பெண்மையின் முகபாவனையில் எவ்வளவு நயம்! இந்த முகபாவனைகள் எல்லாம் நவீன சினிமாவில் தேடினாலும் கிடைக்காது.
தமயந்தியை மணம் முடித்த நளன் அவளோடு நாடு திரும்புகிறான். அவளோடு வரும்போது இயற்கைக் காட்சிகளை அவளுக்குக் காட்டுகிறான். சோலையில் பெண்கள் மலர் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கை தீண்டியதும் கிளைகள்கூட தாழ்ந்துவிடுகின்றன. அங்கே மலரைப் பறித்துக்கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் ஒளி பொருந்திய முகத்தைத் தாமரை என்று நினைத்து வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அதை அவள் தனது செந்நிறக் கையால் தடுக்கிறாள். அவை அந்தக் கைகளைக் காந்தள் மலரென்று நினைத்து மொய்க்கின்றன. அதனால் அவள் அச்சங்கொண்டு வியர்த்து நிற்கிறாள்.நளன் சோலையில் காட்டுகிற பெண்கள் அவ்வளவு மென்மையும் அழகும் பொருந்தியவர்கள். இதையெல்லாம் ஏன் அவளுக்குச் சொல்கிறான்! இத்தனை அழகிகள் இருந்தும் உன்னைப் போல் எவரும் என்னைக் கொள்ளையிட்டதில்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறான்.

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் – செங்கையால்
காத்தாள்;அக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காண்!என்றான் வேந்து. - நளவெண்பா 

இதை "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்" என்கிற பாடலில் நயம் குன்றாமல் எளிமைப்படுத்திக் கொடுத்திருப்பார். காதலன் முன்னாலேயே அவளை பார்க்கும் ஆர்வத்தோடு வந்துவிட்டான். இவள் சற்றுத் தாமதமாக வருகிறாள். அழகியே! நீ வரும் வழியில்  உன் அழகை என்னவெல்லாம் தடுத்தது என்று வினவுகிறான்.

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" என்று கேட்கிறான்.
அவள் அதற்குச்  சொல்லும் பதிலில் இலக்கியத்தை அழகாக நுழைத்திருப்பார். 

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"

இயற்கைப் புனைவும் உள்ளுறை உவமும் காதல் இலக்கியத்துக்கு அழகு. அதை உணர்ந்து பயன்படுத்தியதும் கண்ணதாசனின் கவித்திறமையே!   எட்டாம் வகுப்பு வரை படித்தவன் என்கிறார்கள் .அவர் உரையைக் கேட்கக் காத்திருந்த தமிழ் அறிஞர்கள் எத்தனை பேர் ! தமிழ் அவரை  எட்டா உயரத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறது.

Monday, June 20, 2016

கவிதாஞ்சலி 2

இலக்கியக்காதல் போல அழகான மொழியமைப்பும் காதலும் கொண்ட பாடல்கள் சில வந்திருக்கின்றன. அதில் "என் சுவாசக்காற்றே" படத்தில் இடம்பெற்ற "தீண்டாய் மெய் தீண்டாய்" என்கிற பாடலும் குறிப்பிடத்தக்கது. இதில் "மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். வைரமுத்துவின் இந்த வரிகள் தவறென்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்படியல்ல, இதன் பொருள் வேறு. கம்பராமாயணத்தில் சீதைக்கே இந்தச் சந்தேகம் வருகிறது. இராமன் வில்லை உடைப்பதற்கு முன்னமே அவனைக் கன்னிமாடத்திலிருந்து பார்த்துவிடுகிறாள் சீதை. அவன் மீது காதல் வயப்படுகிறாள். பிறகு, வில்லை ஒருவன் உடைத்துவிட்டான் என்கிற செய்தியைத் தனது தோழிகள் சொல்லித் தெரிந்துகொள்கிறாள். ஆனால் தான் அப்போது பார்த்தவனும் இவனும் ஒருவன்தானா என்கிற சந்தேகம் அவளுக்கு திடுக்கென்று வந்துபோகிறது. இருவரும் ஒருவரேயானால் மகிழ்ச்சி என எண்ணுகிறாள். சபையில் எல்லோர் முன்னாலும் அவனைத் தலைநிமிர்ந்து வேறு பார்க்கமுடியாது. பெரியவர்கள் ஏதேனும் எண்ணுவார்கள் என்கிற பயமும் நாணமும் காரணமாக இருக்கலாம். அதனால் தனது கைவளையைத் திருகுவதுபோல கடைக்கண்ணால் பார்க்கிறாள். அவளது சந்தேகம் தீர்ந்தது.
"எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை. அகத்து வடிவே அல. புறத்தும்.
கைவளை திருத்துபு. கடைக் கணின் உணர்ந்தாள்."

அதேபோல, இந்தத்  திரைப்படத்திலும் தன்னைத் தீ விபத்திலிருந்து காப்பாற்றியவன் மீது காதல் கொள்கிறாள். அவன் முகத்தை அவளால்  பார்க்கமுடியவில்லை. தொட்டுத் தூக்கிய அவன் தொடுகை மட்டும்தான் நினைவிருக்கிறது. பிறகு, ஒருவன் தனது கவிதைகளை உச்சரிப்பதைக் கண்டு காதல் கொள்கிறாள். அந்தக் கவிதைக்காதலனை இவள் சந்திக்கிறாள். அச்சந்தர்ப்பத்தில் அவளை மீண்டும் அவன் தொட்டுவிடுகிறான். தொட்டுவிட இந்தக் கவிதைக்காதலனும் அவனும் ஒருவனா என்று திடுக்கிடுகிறாள். இருவரும் ஒரேவரேயானால் சீதையைப்போல இவளுக்கும் மகிழ்ச்சி.

அன்னவளை. ‘அல்லள்’ என.
   ‘ஆம்’ என. அயிர்ப்பான்.
கன்னி அமிழ்தத்தை எதிர்
கண்ட கடல் வண்ணன்.

சீதைக்கு வந்த அதே சந்தேகம் இராமனுக்கும் வருகிறது. நான் கன்னிமாடத்தில் கண்ட அந்தப் பெண்ணும் இவளும் ஒருத்தியா என்கிற ஐயத்தைப் பார்த்துத் தீர்த்துக்கொள்கிறான்.

"பலபேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்."

இப்படி தமிழ்த் திரைப்படங்களில் ரசனைகள் ஒன்றுசேர்த்த காதலர்கள் மிகக்குறைவு.
"நதியோரப் பூவின் மேலே ஜதி பாடும் சாரல்போலே என்னை இன்ப துன்பம் செய்குவதோ!"  காமத்தின் மென்மையைச் சொல்ல எத்தனை அழகான உவமை.

இந்தப் பாடல் தொடர்பான பேஸ்புக் பதிவு 

Saturday, June 18, 2016

கவிதாஞ்சலி‬

ஒரு பாடல் அதனுள்ளே கவிதைத்தன்மை கொண்டிருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். அப்படியான பாடல்கள் நிச்சயமாக என் தெரிவுகளில்(Playlist) முதலிடத்தைப் பிடித்துவிடும். பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும்போது வார்த்தைத் தேர்வுகளில் நழுவித் தொலைந்துபோவது ஒரு சுகானுபவம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருபாடல் தரக்கூடிய அதியுச்ச சுகம் என்றால் அதுதான் என்பேன். அப்படியான பாடல்களைத் தொகுக்கவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் . கவிதைகளில் இருக்கும் மீமொழி(metalingualism) அழகு. அதாவது, இரண்டாம் அடுக்கு மொழி. ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு கவிதை மொழி மூலம் வெளிப்படுத்துவது. அதில் கற்பனைக்கு நிறையவே வேலை இருக்கும். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" என்பது போல, அந்தப் புதிருக்குள் நுழைந்து யாத்திரை செய்வது ஒருவித போதை.
உதாரணமாக, "உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது." என்கிற வைரமுத்துவின் வரிகளை எடுத்துக்கொள்ளலாம். கற்பனைச் சிறகு விரிந்தால் இதற்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்களுக்கு மேலே எழுதிவிடலாம். சாய்ந்ததில் உன் பூக்கள் உதிர்ந்து இந்தப் பூமியை நிரப்பிவிட்டன என்று சொல்லலாம். அல்லது, அந்த அழகைக் கீழிருந்து கண்ட இந்தப் பூமி சிலிர்த்து மலர்ந்தது எனலாம். இல்லாவிட்டால், பெண்ணழகு கண்டு என் இளமை எனும் பாலைவன பூமி மலர்ந்துவிட்டது என்றுகூடக் கொள்ளலாம். கவிஞர் எழுதிய பொருளையே படிப்பவரும் கொள்ளவேண்டும் எனும் விதிமுறைகள் கவிதைகளுக்குக் கிடையாது. கவிஞர் அப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது.
'உன்னுடன்' திரைப்படத்தில் இடம்பெற்ற, "கண்டுபிடி அவனைக் கண்டுபிடி" என்கிற பாடலிலும் அதற்கு நிகரான வரிகளைக் கவிஞர் அமைத்திருப்பார். அங்கே கம்பனை வம்புக்கு இழுத்தவர் இங்கே கம்பனே பிறக்கட்டும் என்கிறார். "மாராப்பை சரியவிட்டு உந்தன் மார்போடு படரும் கொடி. பேரின்பக் கவி எழுத கம்பன் பிறக்கட்டும் பழையபடி" என்று ஹரிணி பாடுவது கவிதையழகியலை மேலும் மேன்மைப்படுத்துகிறது. இதில் "விண்மீன் விழித்திருக்க அவன் நிலவைத் திருடியவன்" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். எனக்கு அவ்வளவு பிடித்தமான வரி. இத்தனை பெண்கள் இருந்தும் அவன் என் தனிச்சிறப்பு உணர்ந்து கொள்ளை கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம். அல்லது என் பெண்மைக்கு(நிலவு) இத்தனை காவல்கள்(விண்மீன்) நான் வைத்திருந்தும் அதைத் திருடிவிட்டான் என்றும் பொருள் கொள்ளலாம்.
"முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருடவில்லை.", "திருடிச் சென்றதை திருப்பித் தந்தால் அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்" என்கிற எளிய வரிகளில் எவ்வளவு எளிய கவிதைத்தன்மை என்று வியக்க வைக்கிறது.

இந்தப் பாடலைப் பற்றிய என்னுடைய பேஸ்புக் பதிவு இது.

Thursday, June 16, 2016

இறைவிகளின் கதை
இந்திரா : "உங்ககிட்ட கேள்வியெல்லாம் கேட்கணும்னு அமுதா எழுதி வைச்சிருக்கா..."

அமுதா : "20 கேள்விகள்... கேட்கலாமா...! நீங்க ஏன் என்னை விட்டுட்டு போயிட்டீங்க?"

மணிரத்னத்தின் பெண்கள், எவருடைய தலையீடுமின்றித்  தங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொண்டு நகர்பவர்கள். புத்தித் தெளிவு, அழகியல் உணர்வுகள், சுயதன்மை, துணிவு  எல்லாமே  இயல்பாகவே அமையப்பெற்றவர்கள். பெண்களின் உலகத்தில் நானொரு புரட்சி நிகழ்த்துகிறேன் என்று மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள  வேண்டிய அவசியமற்றவர்கள். அதனாலேயே யார்மீதும் முறைப்பாடுகளை வைக்க முன்வராதவர்கள். ஆண்களுடன் தங்களைப் பிணைத்துக்கொள்ளும்போதுகூடத் தெரிவுகளில்  பிழைவிடுவதில்லை. அதிமேதாவித்தனமோ முட்டாள்த்தனமோ அற்றவர்கள். சிலநேர இடைவெளிகளில் மறைமுகமாக ஆண்களை ஆக்கிரமித்துவிடக்கூடியவர்கள் . நாங்கள் நாங்களாகவே இருந்துகொள்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்பவர்கள். யாரிடமிருந்தும் சுதந்திரம் வேண்டாதவர்கள். அவர்களுக்குச்  செய்வதற்கு என்று ஒரு வேலை இருக்கும். இத்தனைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் திரையில் இயல்பாகவே  இயங்கிக்கொண்டிருக்கும். சுதந்திரமான பெண்கள் என்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று அலட்டலில்லாமல்  சொல்கிற பாங்கு முக்கியமானது. 

உதாரணமாக, கன்னத்தில் முத்தமிட்டாலில் மாதவன் சிம்ரனிடம் காதலைச் சொன்னதும், "இது ஒன்னும் நீங்க எழுதுற கதைல ஒரு அத்தியாயம் இல்லையே" என்கிற இந்திராவின் தைரியமான எதிர்க்கேள்வி  ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது. சும்மாவெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது . உன்  காதல் உண்மையென்று அறியவிரும்புகிறேன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. வசனங்களில் சுஜாதாவின்  ஆளுமை அதிகம் என்று சொல்லலாம். 


கார்த்திக் சுப்புராஜ் தன்னை மணிரத்னத்தின் ரசிகராகச் சொல்லிக்கொண்டதால்  எனக்கு இறைவி மீதான எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. அதிலும் இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்ததும் மூன்றாவதாக ஒரு மசாலா ஹீரோவை வைத்துப் படம் பண்ணப் போய்விடும் இயக்குனர்கள் மத்தியில் தன்னை தனித்து நிலைநிறுத்தப் பார்க்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். படம் வெளியாகி இரண்டாவது நாளே போய்ப் பார்த்துவிட்டேன். படத்தின்  ஆரம்பத்தில் பாலுமகேந்திரா, பாலச்சந்தர், சுஜாதாவுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கும்போது இன்னும் நம்பிக்கை வந்தது. மழைச்சத்தத்தோடு  படம் ஆரம்பிப்பது இதமாக இருந்தது. ஆனால் அந்தப் பெண் கதாப்பாத்திரங்கள் பேச ஆரம்பித்த சில நேரங்களில் கட்டிவைத்த அத்தனை பிம்பங்களும் உடைந்துவிட்டது. 

அஜித், விஜய்  போல புற அழகில் ஒரு ஆணைத் தேடிக்கொண்டு திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை  வாழவேண்டும் எனச்சொல்லும்  பொன்னி மற்றும்  டெம்ப்ளேட் வாழ்க்கை வாழ விரும்பாமல் ரசிக்கும்படி வாழ்வு தேடும்  யாழினி போன்றோருக்குத் திருமணம் நடக்கிறது. அவர்களுடைய துணைத் தெரிவுகள் எப்படி அமையப்பெற்றது என்பதைக் காட்டும் காட்சியமைப்புகள் எதுவுமில்லை. பாலச்சந்தர் படங்களிலும்  பெண்களின் கதாப்பாத்திரங்கள்  இயல்பிலேயே புத்திசாலித்தனமும் துடிப்பும் மிக்கவர்களாக இருப்பார்கள் . இந்தப் படத்தின் பாத்திரப் படைப்புகளில் எந்தவிதமான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. செக்ஸ்க்கும் காதலுக்கும் இடைப்பட்ட தொடர்புகூடப் புரியாத அளவுக்கு மேலோட்டமான மலர்விழியின் வசனங்கள் எல்லாம் கவரவேயில்லை. செக்ஸ் உறவிற்குப் பிறகும் மலர்விழியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான் மைக்கல். ஆனால் அவள் அவனை வெறும் செக்ஸ் இயந்திரமாகப் பார்ப்பதாகச் சொல்கிறாள் .அந்தக் கணமே உடைந்துவிடுகிறான். ஒரே  நபரோடு தொடர்ந்து விரும்பி உறவு வைத்துக்கொண்ட பின்பும்  அது காதலாக மாறவில்லை என்பது காமத்திற்கு அவமானம். தொடர் செக்ஸ் உறவில் காதல் மலராது என்பது முரண்பாடானது. இப்படிப்  பேசுகிறவள் பின்னால் அவனுக்காக வருத்தப்படுவதாகக் காட்சி அமைக்கப்படுகிறது. ஆனால் அந்த விரக்தியால் அவனுடைய வாழ்க்கையே மாறிவிடுகிறது.  காரணம், இதில் வருகிற ஆண்கள் அனைவரும் நல்லவர்கள் என்கிற உண்மையை யாராலும் மறுக்கமுடியாது. இப்படியான  முரண்பாடுகளாலான திரைக்கதை. எந்தப் பெண் கதாப்பாத்திரமும் அதில் கவரும்படி இல்லை. மழையில் நனைதல் போன்ற காட்சிகளில் குறியீடு தேடுவதெல்லாம் அதரப்பழசான முறை. இருந்தாலும் இந்தப் படத்தில் ஆண்களின் கோபமும் குடிப்பழக்கமும் அவர்களைச் சார்ந்திருக்கிற பெண்களை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பதிவு செய்கிறது. வசனங்கள் அவ்வளவு ஆழமானதாக இல்லை. 


பெண்களின் உலகில் புரட்சி செய்யப்போகிறேன் என வலிந்து திணிக்கும் காட்சியமைப்புகளை மணிரத்னம் படங்களில் காணக்கிடைக்காது. அவர் அப்படிச் சொல்லிக்கொண்டும் படம் எடுப்பதில்லை. கதை இயல்பாக நகர்ந்துகொண்டேயிருக்கும். அதில் ஆணையும் பெண்ணையும் சரிசமமாக இயங்கச் செய்வது அவரின்  வேலை. அவர்களின் புத்திசாலித்தனங்கள் இயல்பிலேயே இருக்கும். படம் பார்த்துகொண்டிருக்கும்போதே அந்தப் பெண்களின் மீது அதீத காதல் வந்துவிடும் . இறைவி பார்த்தபின்பு அப்படி எந்தவொரு உணர்வும் ஒட்டிக்கொள்ளவில்லை .