யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாக் காலம் என்பது ஒரு மிகப்பிரமாண்டமான கொண்டாட்டக் காலம். யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கலாச்சார விழாவாகவே ஆகிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவானது, மொத்தமாக 27 நாட்கள் இடம்பெற்று, வைரவர் உற்சவத்துடன் நிறைவுபெறும். இன்றுவரை சரியான ஆகம விதிமுறைகளின்படி இடம்பெறும் தேர்த்திருவிழா இதுவென்றும் சொல்லலாம். தேரன்று, வெளிக்கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டு, ஒரு விடுமுறை தினம்போலவே காட்சியளித்தது. கோயிலிலிருந்து குறிப்பிட்ட அளவு தூரத்திலேயே வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதியெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, எங்குபோனாலும் பக்திப் பாடல்கள்தான் காதுகளில் கேட்டவண்ணம் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வீதியில், கலாச்சார ஆடைகளுடன் வரும்படி அறிவுறுத்தும் பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலாச்சார ஆடைகளுடன் கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். முருகன் தேர் ஏறியதை மட்டும் பார்த்துவிட்டு ஒருச