ஓவியம் : John Fernandas தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும். கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது. அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும் தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது. ...