Monday, December 17, 2012

இசையமைப்பாளர் ,பாடகர் ரமேஷ் விநாயகம்
தமிழ் இயக்குனர்களால் சரியாக இனங்காணப்படாத ,பயன்படுத்தப்படாத  மிகவும் திறமையான இசையமைப்பாளர்கள் வரிசையில்  ரமேஷ் விநாயகத்துக்கும் ஒரு முக்கிய இடம் கொடுக்கலாம் . 

இசையமைப்பாளரும் பாடகருமான  ரமேஷ் விநாயகம் பற்றிய அறிமுகம் பெரும்பாலானவர்களுக்கு  நளதமயந்தி , அழகிய தீயே திரைப்படங்களுக்கு பின்னர் கிடைத்திருக்கும்.


அதற்கு முன்னரே வசந்தின் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே " படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார். அவர் முழுமையாக இசையமைத்த முதல் திரைப்படம் யுனிவேர்சிட்டி.

அவர் பாடி  இசையமைத்த பாடல்களில் சில எப்போது கேட்டாலும்  சுகமான இசை அனுபவத்தை தந்துவிட்டே செல்லும். 

 "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே"   திரைப்படத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைத்து பாடிய  தொட்டு தொட்டு செல்லும் பாடல் அதிகமானோரைக் கவர்ந்தது.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அவர் கொடுத்த மெல்லிசைகளை கேட்க்கும் போது , அதில்  இரண்டு எப்போதுமே தென்றலில் ஈரம் கலந்து  மனதை நனைத்துவிட்டே  செல்லும் . 

இன்று கேட்டாலும் நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்த பாடல்கலென அவரே பாடி இசையமைத்த   "விழிகளின் அருகினில் வானம்"  , " என்ன இது என்ன இது " வை சொல்லலாம் .

விழிகளின் அருகினில் வானம் எப்படி  உள் அழைத்துச் சென்று ஒரு அதிசய அனுபவத்தை வழங்குகிறதோ அதே போல "என்ன இது என்ன இது" பாடலும்  ஒரு இனிமையான காதல் அனுபவத்தை நெஞ்சமெங்கும்  படரச் செய்யும். 

அழகான ஹம்மிங்குடன் ஆரம்பித்து மெல்ல மெல்ல மனதை ஆட்கொள்ளும் மெல்லிசை. உறவுகளுக்கிடையேயான உணர்வுகளின் மென்மையை இசையே மெதுவாய் உணர்த்திவிடும். திரைப்படத்தோடு சேர்ந்து கேட்க்கும் போது இதை உணரலாம்.

இனி எந்த இயக்குனர்கள்  அவரை சரியாக பயன்படுத்துவார்கள்  என்பதை உறுதியாக சொல்லமுடியவில்லை . ராதாமோகன் , வசந்த் போன்ற இயக்குனர்கள் கையாண்டால் நம் காதுகளுக்கு  இன்னும் மெல்லிசைகள் கிடைக்கும் .

அவரின் குரலையும் தவிர்த்துவிட்டு பேசிவிட முடியாது . தொட்டி ஜெயா படத்தில் "யாரிடமும் தோன்றவில்லை" என்ற பாடலை தன் குரலால் இன்னும் மெருகூட்டியவர்.

கமகங்கள் தொடர்பிலும் ஒரு ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் ரமேஷ் விநாயகம் . அது பற்றி வாசிக்க : Times Of India

Sunday, December 16, 2012

நீ தானே என் பொன்வசந்தம்உறவுகள் ,உணர்வுகள் எனும் இரண்டு விடயங்களோடு உளவியலையும் சேர்த்து விட்டால் ஏராளமான படைப்புகள் கைகளில் கிடைக்கும் . அதைத் திறம்படக்  கோர்த்து ஒரு படைப்பாக தருவதில் கைதேர்ந்தவர்கள் என இயக்குனர்  பாலுமகேந்திரா, மறைந்த ஜீவா, கௌதம் மேனன் , மணிரத்னத்தை குறிப்பிட்டு சொல்லலாம் . இந்த தனித்துவத்துக்கு காரணம்  பெண்கள்  வெறும் காட்சிப்பொருள்கள் எனும் சித்தாந்தத்தை மாற்றியது தான்.

உறவுகளும் உணர்வுகளும் மிகவும் மென்மையானவை என்பதனால் தானோ என்னவோ அவர்களின் காட்சியமைப்புகளும் மெதுவாகவே மனதை ஆட்கொண்டு மென்மையாக்கிவிடும். ஆனால்  இந்த மென்மை எனும் விடயம் தமிழ் சினிமாவுக்கும் அதன் பெரும்பாலான இரசிகர்களுக்கும்  இன்னமும் பழக்கப்படாத ஒன்று. காதலுக்கு பிரச்சனை தருவது புறக்காரணிகளே எனும் உளவியலுக்குள்ளும் மிக ஆழமாக உந்தப்பட்டு இருப்பவர்கள்.

வழமையாக பெண்களை வெறும் அசையாத பொருளாக மையத்தில் வைத்துக்கொண்டு , ஆணின் மனோநிலையில் இருந்துகொண்டே சுழலும்  காதலை உடைத்து பெண்ணின் மனநிலையையும் ஆழமாக தொட்டவர் கவுதம் எனலாம். இதையே தான் நீ தானே என் பொன் வசந்தத்திலும் செய்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயாவில் பெண்களின் குழப்பமான மனோவியலை ஒரு காட்சியில் அழகாய் வடித்திருப்பார் . வார்த்தைகளால் விபரிக்க முடியாத அந்த குழப்பமான உணர்வுகளை த்ரிஷா  மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் .

விலகிச் செல்லவேண்டும் போலிருக்கும் ஆனால் மீண்டும் வர மாட்டானா  என்ற ஏக்கமும்  அதில் கலந்து  இருக்கும். இது ஊடலின் அதீத நிலை. தம்மைத் தாமே,தம் காதலை  பரீட்சித்துக் கொள்ளவேண்டும் என்ற நிலையினால் ஏற்படும் மனப் பிறழ்வும் இதற்கு  ஒரு காரணம். இந்த  இருமுனையப் பிறழ்வு(Bipolar disorder )  காதலில் அதிகம்  இருக்கும் . ;)  

விண்ணைத்தாண்டி வருவாயாவில் மேலோட்டமாக தொட்டதை இதில் நிறைவாக காட்டியிருக்கிறார்.  பாடசாலைக்காதல், கல்லூரிக்காதல் , அதன் பின்னரான  காதல் என மூன்றிலும் இருக்கும் வேறுபாட்டை காட்டியிருக்கிறார். சின்ன வயதில் தனக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடன் விளையாட வரவில்லை என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது சமந்தாவின் ஏமாற்றம்.இதே மனநிலை பின்னர் வரும் பருவங்களிலும் தொடருகிறது. தனக்கு முக்கியத்துவம் தரவில்லை எனும் ஒரு வித எதிர்பார்ப்பு. இதுவே அனைத்து பிரச்சனைகளும் ஆரம்பப் புள்ளி. இதனால் மீண்டும் மீண்டும் பிரிவுகள் .      

காதல்  உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் முயன்ற விதத்தை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் . காருக்குள் வைத்து சமந்தா தன் காதலை சொல்ல , ஜீவா எதுவுமே சொல்லாமல் முத்தம் மட்டுமே கொடுக்கும் காட்சி ,
"என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது" என்ற வைரமுத்து வரிகளை நினைவுபடுத்த தவறவில்லை . :)  இது போல பல வசனங்கள்,காட்சிகள்  director's touch எனலாம்.

இருவருக்கிடையிலும் நிகழும் மனப் போராட்டங்களை, கருத்து  வேறுபாடுகளை கமெராவின் கோணம் மாறாது காட்டியது சிறப்பு. இரு உறவுகளுக்கிடையே நிகழும்  இந்த கருத்து முரண்பாடுகளில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி தப்பித்துக்கொள்ள முயல்வதை வார்த்தைகள் உறுதிப்படுத்தும். இந்த அடிப்படைக் காரணிகளால் ஏற்படும்  பிரச்சனைகளின்  கோர்வை  இறுதியில் பிரிவு எனும் வடிவில் வந்துவிடுவதுண்டு. இதனை வெளிப்படுத்திய   விதம் சிறப்பு.   

சமந்தாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது . குறிப்பாக இந்தக் காதாப்பாத்திரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் கனதியும் அதிகம் எனலாம். தன் நிலையற்ற மனதை சமந்தா வெளிப்படுத்தும் விதம், எதிர்பார்ப்பையும் வெறுப்பையும் ஏக்கத்தையும் ஒரே தடவையில்  வெளிப்படுத்துவது  என அவரின் நடிப்பாற்றல் வெளிப்படுத்தப்பட்டது.

இரவுக்காட்சிகளுக்குரிய ஒளிப்பதிவில் பிரபுவும் ,ஓம் பிரகாஷும் கலக்கியிருப்பார்கள் . ஆனாலும் இரவுக்காட்சிகளில் மனோஜ் பரமகம்சாவின் ஒளிப்பதிவை இழந்தது போலவே உணருகிறேன்.

ரஜீவனின் கலை பள்ளிப்பருவங்களையும், டியூஷன் வகுப்புகளையும் அப்படியே கண் முன்னே கொண்டுவந்தது. குறிப்பாக  இருவரும் சந்திக்கும்  Resturant அனைத்திலும்  Interior design கள் குறிப்பிட வேண்டும் .இது போன்ற  இரசனைகளில் கவுதமை  ஈடு செய்திட முடியாது . நளினி சிறீராமின் ஆடை வடிவமைப்புகள் பின்னணி காட்சிகளுக்கும் மிகவும் பொருந்தி கண்களுக்கு  காட்சிப்பேழையாக காட்சி அளித்தன.

முதல் முறை பார்த்த ஞாபகம் பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சிறப்பு. ஆனால் பாடல்கள் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் கொஞ்சம் சறுக்கி இருக்கிறது எனலாம் . உணர்வுகளை சரியாக புதுமையான வார்த்தைகள் கொண்டு வெளிப்படுத்தும்  தாமரையின் வரிகள் இல்லாததும்  இன்னொரு குறையாக தெரிந்தது .

ஒரு விதமான இசை அனுபவத்தை இந்தத் திரைப்படம் தந்துவிட்டு போகிறது.இசையால் ஒரு தனிக் காதல் அனுபவத்தை தருகிறது.முக்கியமாக பின்னணி இசை  ஒலியமைப்பில் அவ்வளவு ஈர்ப்பு  இல்லை. இதில் தவறு ராஜாவுடையதா  , கவுதமுடையதா  என சொல்ல முடியவில்லை . இசை சில இடங்களில்  திடீரென உயர்ந்து இல்லாமல் போய் விடுவது காட்சிகளில் வெறுமையை தெளித்துவிட்டு போகிறது .

வசந்தம் பலரின்  கடந்த காலங்களை வருடிச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.காதலை கவிதைகள் , மென்மையான உணர்வுகள் என அணுகும் இளைஞர்கள்  அனைவருக்கும் இதில் வரும்  காதல் காட்சிகள், காட்சியமைப்புகள் என அனைத்தும்  ஒரு காட்சிப்பேழையாய்   மனதில் சேர்ந்து     திரைப்படத்துடன் பிணைத்து வைத்திருக்கும் .


   

Monday, December 3, 2012

பாஷோ..

பாஷோ ஹைக்கூவின் கம்பர் என்று சுஜாதா சொல்லுவார். அனைத்து  உணர்வுகளையும்  தன் பக்கம் குவிக்கும் திறன் கொண்ட ஹைக்கூ கவிதைகள் அவருடையது. ஒரு வித அமைதியை தந்துவிட்டுப் போகும்.

பாஷோவின் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதைகள் இவை :

***
விருந்தினர் கூட
மறந்து விட்ட
மலையடி கிராமம்

***
பழைய கிணறு
தவளை குதிக்கையில்
தண்ணீரில் சப்தம்

***
நிசப்தம்
கற்களில் ஊறிவிட
பூச்சிகளின் சப்தம்

***
கோடைப் புல்வெளி
அந்த மாவீரர்களின்
கனவுப் பாதைகள்

***
இலையுதிர் காலத்தில் இந்தப்
பாதையில் யாரும் செல்வதில்லை
என்னைத் தவிர 


 ஒரு பொருளை மேலாகப் பார்த்தால் போதாது .கவித்துவத்துக்கு ஆழமாக அந்தப் பொருளின் உள்ளே நோக்க வேண்டும் . வருணனை மட்டும் ஒரு காட்சியின் உள் அர்த்தத்தை பிடிக்க முடியாது என்பது பாஷோவின் கூற்று.

அவற்றை அவரின் ஹைக்கூக்களிலேயே கவனிக்கலாம்.

எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. எண்ணங்களை கலைய விடாமல் நேரடியாகச் சொல்" என்றார் .

எஸ் ராமகிரிஷ்ணன் அவர்களின்  "கவிதை கேட்ட நரி " என்ற இந்தப் பகிர்வையும் படித்துப் பாருங்கள்.

Wednesday, October 3, 2012

அழிவிலிருந்து ஆக்கம் 01 - ஊடகங்கள்
ஒரு சமூகமோ, அமைப்போ அல்லது ஒரு படைப்போ திருத்தங்களுக்கு உள்ளாவது என்பது வேறு ,அழிவுக்குள்ளான  ஒரு சமூகத்தை புதிதாக கட்டியெழுப்புவது  என்பது வேறு .

உதாரணமாக சொல்லப்போனால் நாம் செய்த விடயங்களில் தவறு இருந்தால் அதை திருத்தப்பார்ப்போம். சில விடயங்களை  திருத்த முடியாமலும் ,தவறுகளை சரிவரக் கண்டுகொள்ள  முடியாமலும் போகும் போது அதனை முற்றாக அழித்துவிட்டு மீண்டும் செய்ய முயல்வோம் . இது ஒருவித சௌகரியத்தை எமக்கு கொடுக்கும். புதிய அணுகுமுறைகளையும் பிரயோகப்படுத்துவது இலகு.

பொருளாதாரத்தில் இதை Creative destruction என்று சொல்வார்கள் . ஆனால் இந்த பதிவு பொருளாதாரம் பற்றியது அல்ல. மனிதர்களின் நாகரிகமும் கலாச்சாரமும் மனித சிந்தனைகளின் வளர்ச்சி பற்றியதும்.  

திருத்தங்களுக்கு உட்படுத்துவதை விட ,முழுதாக அழிவடைந்த ஒன்றை மீண்டும் கட்டியெழுப்பும் போது அது முற்றிலும் புதிய வடிவமாக உருவெடுக்கக் கூடும். மீண்டும் புதிதாய் உருவாக்கப்படும் போது அதில் நல்ல விடயங்களும்  இருக்கக்கூடும் அல்லது மக்களை பின்தங்கிய நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு அடிமைபப்டுத்தும் விடயங்களும் தீய விடயங்களும் இருக்கக் கூடும்.

சில சமூகங்களில் இந்த அழிவுகள் தானாகவே நிகழ்ந்து விடும். அதற்குப்  போர் ,இயற்கைச் சீற்றங்கள் என்று பல காரணங்கள் சொல்லலாம். அதன் பின்னர் மீண்டும் அந்த சமூகம் கட்டியெழுப்பப்படும் போது அதில் மிக முக்கிய பங்கு வகிப்போர் அந்த சமூகத்தின் புத்திஜீவுகளும் கற்றறிந்தோர் எனப்படுவோரும் ஊடகங்களுமே.

இதில் பாமரர்  , சிறுவர்கள் உள்ளடங்கலாக  அனைவரையும்   எளிதில் அடையக்கூடியவை ஊடகங்கள்.  ஊடகங்கள் சமூகத்தில்  முக்கிய பங்களிப்பு செய்வதால் ,ஊடகவியலாளர்களுக்கு மிகப்பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது . இதை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை . ஆனால் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

ஒரு சில ஊடகங்கள் மக்கள் எளிதில் அடிமையாகி விடக்கூடிய விடயங்களையே மீண்டும் மீண்டும் ஊட்டி வளர்க்கின்றன. மக்களை அடியமையாக்கும் எந்த விடயத்தையும் மீண்டும்  வளர்ப்பது ஆபத்தானது. இது அழிந்து மீண்டும் புத்துயிர்  பெறும் சமூகத்தின் சிந்தனையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சமூகத்தை குறிப்பிட்ட சில விடயங்களுக்கு(உதாரணமாக சினிமா நடிகர்கள் , கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம்) அடிமைப்படுத்தி வைத்திருக்கும் போது அவர்களின் சிந்தனையும்,சுய அறிவும் எந்த நிலைக்கு செல்லுமென்பதற்கு  உதாரணமாக சில நாடுகள் இருக்கின்றன .  

ஒருவரின் இன்னொன்றின் மீது வெறுப்பையும்  காழ்ப்புணர்ச்சியையும்  உண்டாக்கி அதன் மூலம் ஒரு போட்டியை உண்டாக்கி தொடர்ந்து நிலைத்திருப்பதே தற்போது பலரும் கையாளும் உத்தி. முக்கியமாக சில கருத்துகளும்  பயனுள்ள  விடயங்களும் நிகழ்ச்சிகளும் இருக்கும் போது அதே பொழுதுபோக்கு உத்தியை மீண்டும் மீண்டும் 24 மணித்தியாலமும் கையாளும் உத்தியை எப்போது இந்த தமிழ் ஊடகங்கள் கைவிடப்போகின்றன .?

ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தாம் சமூகத்தின் முதுகெலும்பு என்பதை உணராதவரை எத்தனை புதிய சிந்தனைகளை புத்திஜீவிகள் சமூகத்தில் தோற்றுவித்தாலும்  அவையனைத்தும் இல்லாது போய்விடும் . காரணம் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் மக்களின் தரத்தினை தீர்மானிக்கும் சக்திகள்.

இதில் மக்களின் தரம் என்பது அவர்களின் பொருளாதார தரம் பற்றியதல்ல . சிந்தை ,தூரநோக்கு பார்வை , சுய அறிவு , எதையும் ஒப்பிட்டு பகுத்தறியும் தன்மை என அவர்களின் நாகரிகம் ,கலாச்சார வளர்ச்சி போன்ற மிகப்பெரிய வட்டத்தை உள்ளடக்கியது. 

Sunday, September 9, 2012

ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தல் ..சமூக நிகழ்வுகள் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி (எல்லாமே தொடர்புடையுடையவை ) அவை உளவியல் ரீதியில் சமூகத்தை எப்படி பாதிப்படைய செய்யும் , மாற்றத்தை ஏற்படுத்தும் , அதன் பின்னர் அந்த சமூகத்தை எப்படி கொண்டு செல்லுமென தொலைநோக்கில் எழுதப்படுவதோ பேசப்படுவதோ கிடையாது.

சமுதாயமும் ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தாத சமுதாயமாகவே வளர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சில நிகழ்வுகளை ஆரம்பித்தில் நாம் தடுக்காத போது அவை வளர்ந்து மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் அபாயமுடையன .

Domino effect , Snowball effect உம் இதைத்தான் சொல்கின்றன . Butterfly effect எல்லோரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் snowball effect , domino effect பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

இவை மூன்றையும் ஒரு சங்கிலித்தொடர் விளைவுகள்னு பொதுவா ஒரு வகைக்குள்  சேர்த்திடலாம். ஒன்றோடொன்று தொடர்புடையன . மேலதிக விபரம் தேவைப்படுவோர் கூகிள் செய்து பாருங்கள் . விபரங்கள் தேவைப்படுமேயானால் அடுத்த  பதிவில் விளங்கப்படுத்துகிறேன்.

வண்ணத்துப் பூச்சி விளைவு என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் கொடுத்திடலாம் என எண்ணுகிறேன் .

பிரேசிலில் பறந்துகொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் பட படப்பில் ஏற்ப்படும் சல்சலப்புக்கும் டெக்சாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்புண்டு என்று  Edward lorenz என்பவர் கணித ,வானியல் முறைப்படி நிறுவிக்காட்டினார்.

மேலோட்டமாக பார்த்தால் இது பயித்தியக்காரத்தனமாக தோன்றலாம் . ஆனால் அன்றாடம் நாம் இதை எதிர்கொள்கிறோம். இதுபோலவே சமூக நிகழ்வுகளும் சமூக வளர்ச்சியை தீர்மானிக்கிறது.

இதில் உளவியல் மாற்றங்கள் , சிந்தனை வளர்ச்சியை பின்னோக்கித் தள்ள பல முனைப்புகளை( சின்ன சின்ன  நிகழ்வுகளை )நம்மை அறியாமலேயே நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம் .

உளவியல் தாக்கம் என்று ஒன்றை எடுக்கும் போது உதாரணமாக நாம் விளையாட்டாக பார்க்கும் கிரிக்கெட் என்போம் . ஆனால் இதிலுள்ள நுணுக்கத்தை சுஜாதா அழகா சொல்வார். நம்மிடமிடம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் ஒரே விடயம் கிரிக்கெட் என்று. எவ்வளவு பெரிய உண்மை இது. இது ஒரு மறைமுக விளைவு. விளையாட்டு  ,உளவியல் ,அரசியல் இதுமூன்றும் இப்போதையை உலகில் மிகவும் தொடர்புடையன . நாடுகளுக்கிடையே நிகழ்ந்த 2012 ஒலிம்பிக் சர்ச்சைகளை கவனித்தவர்களுக்கு தெரியும்.

ஒன்றை இன்னொன்றோடு தொடர்புபடுத்தி பார்க்கும் திறன் சாதாரண  மக்களிடம் இல்லை. அதனை வளர்க்க வேண்டியது சின்ன வாயசைப்பில் கையசைப்பில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஊடகங்களே !

இந்த திறன் தொலைநோக்கு பார்வையை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை . சமூகத்தின் தொலைநோக்கு பார்வை வளர்க்கப்படும் போதே அந்த சமுதாயம் உயர்ந்த நாகரிகமும் அபிவிருத்தியும் உடைய சமுதாயமாகும்.

தொலைநோக்கு சிந்தனையில் நம்  தமிழ் சமூகம் வளர பல சிறகுகளின் படபடப்புகள் நிகழ வேண்டும். அதே நேரம் அதற்கு இணையாக அதனை பின்னோக்கித் தள்ள தொலைநோக்கற்ற நிகழ்வுகளும் நடந்தவண்ணமே இருக்கும் . அவற்றையும் கடந்து வரவேண்டும்.

Saturday, September 8, 2012

கம்பனின் கவிச்சுவை !

முன்னமே இரண்டு இலக்கிய தளங்களை பரிந்துரைத்திருந்தேன். எளிய முறையில் இலக்கியத்தின் சுவையை அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளங்கப்படுத்தியிருப்பார்கள்.

தினம் ஒரு பா வாக இதுவரை வலைத்தளங்களில் எழுதி வந்த என் சொக்கன் அவர்கள் இப்போது ஒலி வடிவில் கம்பராமாயணத்தை சுவை பட கூறி வருகிறார். 
 இவர்களின் பகிர்வுகளில் சுவை மட்டுமன்றி சுவாரசியமும் நிறைந்திருக்கும்.

உதாரணமாக இந்த பாடலில் வேட்கை மிகுந்தவர்கள் நிகழும் செயல்களைத் தமக்குச்
சாதகமாகவே நோக்குவார்கள் என்னும் உளவியலை கம்பன் அழகா சொல்லியிருப்பார் . 

நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல்.

‘சேமத்து ஆர் வில் இறுத்தது. தேருங்கால்.
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைப
ால்
காமத்தால் அன்று. கல்வியினால்’ என்றாள்.
 

இராமன் சீதை மீது கொண்ட காதலால் வில்லை உடைக்கல , தான் கற்ற கல்வித் திறனை ( வில் உடைக்க முடியும்னு ) நிரூபிக்கவே உடைச்சிருப்பார்னு ராமர் மீது காதல் கொண்ட இன்னொரு பெண் நினைத்துக்கொள்கிறாள். தன்னை ஆறுதல்ப்படுத்த.

இதை என் சொக்கன் மிக அழகா இன்னும் விபரமாக  ஒலி வடிவில் விளங்கப்படுத்தியிருக்கார் . கம்பனை வியப்போர் இவருடைய ஒலி வடிவங்களை பின்பற்றலாம். மிகவும் சுவாரசியம்.

என் சொக்கன் அவர்களின் ஒலித் தொகுப்புகள் SOUNDCLOUD 

நண்பர்கள் இணைந்து கம்பன் இணைய வானொலி என்றொரு வலைப்பதிவு தொடங்கி அதில் பகிர்ந்து வருகின்றனர் .  

இந்த தளங்களுக்கு சென்று நீங்களும் கம்பனின் தமிழையும்  கவிச்சுவையை உணரலாமே !

Friday, August 3, 2012

child prodigy பற்றிய தேடலில்

child prodigy பற்றிய தேடலில் பல அறியக்கிடைத்தது .

குறைந்த வயதிலேயே சாதனை படைத்தார், குறைந்த வயதிலேயே பட்டம் பெற்றார் வளர்ந்தவர்களே சித்தியடைய கடினப்படும் பரீட்ச்சையில் எல்லாம் சித்தி பெற்றார்கள்னு கேள்விப்படுவோம்  இல்லையா !

இப்படிப்பட்டவர்களை தான்  child prodigies என அழைக்கின்றனர் .  

சின்ன வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவை பெற்றவர்கள் தான் இவர்கள் .

ஆனால் இதில் நாம் அதிகம் கேள்விப்பட்டது கணித மேதை ராமானுஜன் , இசை மேதை பீத்தோவன், மொசார்ட்   பற்றி தான் .  ஆனால் விக்கியில் பெரியதொரு வரிசை இருக்கிறது . Wiki

ஆனால் இவர்களில் அண்மையில் அதிகம் அறியப்பட்டவர் அண்மையில் ஜனவரி 2012 இல் தன்னுடைய 16 வயதில் மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்து போன அர்பா கரீம் . பாகிஸ்தானை சேர்ந்தவர் 9 வயதிலேயே மைக்ரோசொப்டின்  MCP முடித்தவர் . 
இயல்பாகவே குழந்தைகள் திறமைசாலிகள் ஆனால் மேலதிக எதிர்பார்ப்பால் / அழுத்தங்கள் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் போது அவர்கள் தொடர்ந்து சாதிக்க முடியாமல் போகிறது என்னும் கருத்து பல கட்டுரையாசிரியர்களால்  முன் வைக்கப்படுகிறது . 


சின்ன வயதில் சாதிப்பவர்கள் பெரும்பாலானோர்  தொடர்ந்து வளர்ந்த பின்னர் சாதிப்பதில்லை (பெரிய அளவில் ) . சமூகத்தின் அழுத்தம் குழந்தைகளை தன் பாதையில் விடாமல் எதிர்பார்ப்பை திணிக்கிறார்களா ?

இது நம் சமூகத்தினில்  நிலவும் மிகப்பெரிய பிரச்சனை . 

Sunday, July 29, 2012

உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்

மொழிஞாயிறு என்றழைக்கப்படும்  ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய வேர்ச்சொற் கட்டுரைகள் படிக்க நேரிட்டது .   அதில் உ என்னும்  வேர்ச்சொல் பகுதியில் உகரச்சுட்டு பற்றி பகிர்ந்திருப்பார் . 


உகரம்  ஒலிக்கும் போது இதழ் குவிந்து முன்னோக்குவதால் உகரச்சுட்டும், பேசுபவரின் முன்னிடத்தை குறிக்கும் . 

ஒருவரை நோக்கி சொல்கிறோம் என்றால் அவர் முன்னிலையில் (மிக நெருக்கமாக ) உகரச்சுட்டு பயன்படுத்தப்படும் .

உதாரணமாக : உதுக்காண்
                               உந்தா
                               உந்த
                               உவன்
                               உது
                               உவை


உந்த ( இந்த ) சொற்கள் ஈழத்தமிழ் பேச்சுவழக்கில் இன்றும் உள்ள சொற்கள் . இந்த உகரச்சுட்டு யாழ்ப்பாணத்தில் உண்டு தமிழ் நாட்டில் வழக்கற்றதாகி விட்டது என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கார் தேவநேயப் பாவணார் .

ஈழத்தமிழில் இவற்றின் பயன்பாடுகள் :

உதுக்காண் ( என் முன் பார் ) இருக்கும் நல்லா தேடிப்  பார் .

உவனிட்ட(முன் நிற்ப்பவர் ) எத்தனையோ  தடவை சொல்லீட்டன் 

சும்மா உவ்விடமா (உ + இடம் ) வந்தனான் . அப்பிடியே உங்களையும் பாத்திட்டு போகலாம் எண்டு வந்தன் . 

என அன்றாட வழக்கில் இந்த உகரச்சுட்டு உண்டு . இலங்கை தமிழின் பழமைக்கு இதுவொரு எடுத்துக்காட்டு என சொல்லலாம் . 

காரணம் இந்த உகர சொற்கள் சில பல்லாயிரம் வருடங்கள் பழமையான குமரி நாட்டில் (லெமூரியா கண்டம் ) வழக்கில் இருந்ததாக சொல்கிறார் தேவநேயப்பாவனார் . அவற்றில் சில வழக்கில் இல்லை என்கிறார் .  
Thursday, July 26, 2012

கங்கை கொண்ட சோழபுரம் பயணம் - பகுதி 1

ஒரு வரலாற்று இடத்தின் சிறப்பை கேள்விப்பட்டு , அந்த தகவல்களை கொண்டு அந்த இடம் இப்படித்தான் இருக்குமென  மிகப்பெரிய  பிம்பத்தை முன்கூட்டியே ஏற்படுத்திக்கொண்டு அங்கு எப்போது செல்வோமென  எதிர்பார்த்திருப்பது ஒரு தனி சுகம் என்றால் , அதை நேரில் பார்த்து பிரமிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது என்பது அதை விட அதீத மகிழ்ச்சியும் ஆச்சரியமும்  தரும் .

அப்படியானதொரு சந்தர்ப்பம் ,  இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு  பிரயாணம் செய்த போது கிட்டியது . இந்த தடவை கங்கை கொண்ட சோழபுரம் முதல்  தராசுரம் ,தஞ்சைப் பெருங்கோயில், மதுரை , குமரிமுனை  வரை செல்வதென  நீண்ட தெரிவை மேற்க்கொண்டேன்.

முதலாவது இலக்கு சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் நோக்கியதாக அமைந்திருந்தது . சென்னை நோக்கி மீண்டும் திரும்பி வரும் வழியில் மாமல்லபுரம் செல்லலாம் என எண்ணமிருந்தது.

வாகனம் கங்கை கொண்ட சோழபுரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது சோழப்பேரரசு பற்றிய எண்ண  ஓட்டமும் மனதில் தொற்றிக்கொண்டது .

தரையில் தன் பேரரசை நிறுவியதோடு மட்டுமல்லாது மிகப்பெரிய கப்பற்படை கொண்டு கடல் தாண்டி மலேசியா , இலங்கை என அனைத்து நாடுகளையும் தன் வசமாக்கிய சோழ பேரரசை நெருங்குகிறேன் என்பது மனதில் பெருமையையும் , எதிர்பார்ப்பையும் அதே நேரம் ஏக்கத்தையும் கொடுத்திருந்தது .

ஒரு டைம் மெஷின் கிடைத்தால் , 1000 ஆண்டுகள் பின்னால் சென்று சோழர் கால தமிழர்களையும் , களிறுகளுடன் நிற்க்கும் சோழர் படைகளையும் காண வேண்டுமென ஆவல் எழுந்தது. மனதிற்க்குள்ளேயே ஒளியை விட  வேகமான ஒரு டைம் மெஷின் இருக்கிறதே . அதில் ஒரு 1000 வருடங்கள் பின்னால் செல்வது போல கற்பனை ஓடிக்கொண்டிருந்தது .

இந்நகரம் இராசேந்திர சோழனால் ,கங்கையை வெற்றி கொண்டதை  கொண்டாட கட்டப்பட்டது . இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றதால் கங்கை கொண்ட சோழன் எனவும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . 

பெரியதொரு கோட்டையின் வாயிலூடாக (சிதைந்திருந்தது ) உள் வீதியில் நுழைந்த போது பாரிய சிற்ப்பக்கலையும் கட்டடக்கலையும் மெய் சிலிர்க்க   வைத்தது .


ஏறக்குறையை 250 ஆண்டுகள் சோழர்கள் கங்கை கொண்ட சோழபுரத்தை (இப்போது ஜெயங்கொண்டம் ) தலைநகராக்கி ஆண்டார்கள் எனப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 20 ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்டது .

அழகுடன் 160 அடி உயர விமானத்துடன் பிரம்மாண்டமாக நின்ற கோவிலை பார்க்கும் போது சோழர்களின் கட்டிடக்கலை மெய் சிலிர்க்க வைத்தது. தஞ்சை பெருங் கோவில் பிரம்மாண்டமானது என்றால் கங்கை கொண்ட சோழபுரம் அழகு மிகுந்தது .
விமானத்தின் அமைப்பு நேர்கோடாக இல்லாமல் நெளிவுகளாக இருக்கும் . அதனால் தான் இதை பெண்மையின் அழகு கவர்ந்து இழுக்கிறது என்பார்கள் போல . இந்த கோயிலின் சிவலிங்கம்  4 மீட்டர் உயரமுடையது.


 சுற்றி இயற்கையால் கொடுக்கப்பட்ட அழகும் கோவிலை மேலும் அழகாக காட்டியது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இடங்களை புகைப்பட கருவி வாங்கிக்கொண்டது. கூடவே நிறைய மேல்நாட்டு பிரஜைகளும்  சிற்ப வேலைப்பாடுகளில் மூழ்கியிருந்தனர் . நம்மவர்கள் அங்கு பெரும்பாலாக  இல்லை .


ஒரு வேளை  வரம் அள்ளித்தரும் சாமி,நினைத்தது நடக்கும்  என கட்டுக்கதைகள் கட்டப்பட்டு வியாபார உத்திக்குள்  சிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் . 


மனது உள் வாங்கிக்கொண்ட  இதன் அழகை மூளையும் காலமும் நினைவு வைத்திருக்க சில புகைப்பட நினைவுகளையும் கொண்டு  அங்கிருந்து புறப்பட்டோம் .


எடுக்கப்பட்டபுகைப்படங்களில் சில ...1000 வருட தமிழ் எழுத்துகள்


நந்தி


Tuesday, July 24, 2012

ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா

சுஜாதா தன் கதைகளாக இருந்தால் கூட அதில் தனக்கு தெரிந்த  தகவல்களை பகிர்வது சாதாரணம் . கதையின் ஓட்டத்தின் வேகத்தையும் சுவராசியத்தையும் அவை இன்னும் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவடைய செய்யாது .


அண்மையில் வாசித்த சுஜாதாவின் " ஒரு லட்சம் புத்தகங்கள் " கதை மிக சுவாரசியமானது. சமூகத்தில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ,அத்தனை அழுக்குகளையும் ஒரே கதையில் சுட்டிக்காட்டுவது என்பது மிக கடினம் .

மாகாகவி பாரதி போன்றவர்களை சமூகம் எப்படி பார்த்தது ,பார்க்கிறது என்பதிலிருந்து யாழ் நூலகம் , இலங்கை தமிழர் ,தனி நபர்களின் அரசியலும் நாட்டின் அரசியலும் எப்படி இந்த சமூகத்தை கையாள்கிறது என்பது வரை இந்த கதையில் தொட்டுவிட்டு சென்றிருப்பார் .


நம்ம சமூகத்திலை ஒரு பழக்கம் ஒன்றிருக்கு , ஏதாவது ஒன்றை சின்னதாக
கடமைக்கு செய்து விட்டு செய்து விட்டேன் செய்து விட்டேன் என்று இறக்கும் வரை  சொல்லிக்கொண்தே இருப்பது . அதை அரசியல் வாதிகள் பார்வையில்  " நாங்க தான் கடையடைப்பு நடத்தினோமே " என்று சொல்வதோடு அவர்கள் கடமை முடிந்து போவதை சுட்டிக்காட்டி இருப்பார் . இதனை சமூகத்தில் இருந்து கண்டறிய நுணுக்கமானதொரு அவதானிப்பு வேண்டும் . 


சமூகத்துக்கு  யார் விரோதிகள் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்லி முடித்திருப்பார் . அனைவரும் வாசிக்க வேண்டிய கதை இது . 


வாசிக்கஒரு லட்சம் புத்தகங்கள் 

Wednesday, July 11, 2012

இரண்டு இணையத்தளங்கள்

நான் தினமும் வாசிக்கும் தளங்களில் புதிதாக இணைந்திருக்கும் தளங்கள் இவை . தமிழின் சுவையை எளிமையாக்கி அனைவரையும் சேரும் வண்ணம் பகிர்ந்து வருகிறார்கள்.

தினம் ஒரு பா 


வலைத்தளம் : தினம் ஒரு பா 

நன்னூல் ,கம்பராமாயணம் , சிலப்பதிகாரம் ,அகநானூறு ,நளவெண்பா , தேவாரம்  என அதில் வரும் பாடல்களை  எளிமையான உரை நடையில் விளக்கம் கொடுக்கும் தளம் . கம்பனின் தமிழ் மீது அதிக ஈர்ப்பு ஏற்ப்பட காரணமான தளமும் கூட . தமிழ் பாடல்களில் சுவாரசியம் நிறைந்த கணக்கதிகாரம் ,புதிர்  போன்றவை மிகவும் பிடித்தமானவை . எழுத்தாளர் என் சொக்கன் அவர்கள் இதனை தொகுத்து பகிருகிறார் .குறுந்தொகை குறு டுவீட்டுகளாக 

குறுந்தொகைகளை எளிய உரைநடையில் பகிருவதோடு ,அதனை இன்னமும் சுருக்கி 2 வரிகளில் எளிமைப்படுத்தி விடுவார் . குறுந்தொகைகளை  வரலாற்று ஆவணமாக அணுகாமல் கவிதைகளாக உணர வைப்பது  சிறப்பு.

குறுந்தொகைகள்  எந்த காலத்துக்கும் , எவருக்கும் பொருந்தக்கூடியது . அதனை சுவை குன்றாது எளிமைப்படுத்துவது என்பது தனி சிறப்பு . இவற்றை தொகுத்து வரும் விஜய் ரெங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் .

வலைத்தளம்  : குறும்பா 

குறுந்தொகைகளை குறு டுவீட்களாக பெற இவரை டுவிட்டேரில் பின்பற்றலாம் . - @urapvr

காரணங்கள்காரணங்கள் சௌகரியமானவை 
மறதி என்பது மறக்கப்படாத தருணம் 
மறுக்கிறேன் என்பதை மறைக்க   
தவறுகளை நியாயப்படுத்த
காரணங்கள் தேடுகிறேன் 

அனைவரும் செய்வதுதானென
இன்னொரு காரணத்தை வைத்துக்கொண்டு !

Monday, May 7, 2012

The Way Home (2002) - கொரிய திரைப்படம்நாம் சிறுவர் பிராயத்தில் கடந்து வரும் நபர்கள் , உறவுகளில் எம் மீது அதீத அன்பு வைத்திருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களின் அன்பை சரியாக புரிந்துகொள்வதில்லை.காலங்கடந்த பின்னரே இந்த உறவுகளின் அன்பின் ஆழம் எமக்கு தெரியவரும் . அவர்களின் இன்மையை உணரும் போது இது இன்னும் அதிகமாகும் .

அவர்கள் மீதான வெறுப்பிற்கு அவர்களின் தோற்றம் , நடத்தைகள் காரணமாக இருக்கலாம் . ஆனால் அவர்கள் வைத்திருக்கும் அன்பு ஆழமானது . எமக்கு எதுவெல்லாம் சின்ன சின்ன மகிழ்ச்சியை தருமோ அதையெல்லாம் அவர்கள் மனம் கோணாது செய்வார்கள் . அந்தளவு முதியவர்கள் எம் மீது வைக்கும் அன்பு சிறிது கூட சுயநலமில்லாத அன்பு எனலாம் .

ஆனால் அவற்றை நிறைவேற்ற அவர்கள் என்ன என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள் என்பதை நாம் உணர்வதில்லை .எமது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்ற நிறைவேற்ற எமக்கு விருப்பங்கள் அதிகரிக்குமே தவிர அவர்கள் நிலையை புரிந்துகொள்வதில்லை .


அப்படிப்பட்ட ஒரு சிறுவன் பாட்டியுடன் தங்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறான் . அந்த சிறுவனுக்கும் அவனது கிராமத்து பாட்டிக்கும் இடையேயான பாசம் , வெறுப்பு ,கலந்த உறவுப்பயணம் தான் இந்த திரைப்படம் .

முதியவர்கள் இளம் சமுதாயம் மீது செலுத்தும் எல்லையற்ற அன்பை, சற்றும் தொய்வில்லாத நேர்த்தியான திரைக்கதையினூடு சொல்லியிருக்கிறார் அந்த பெண் இயக்குனர் .

தென் கொரியாவின் தலை நகர் சியோலில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம் நோக்கி ஒரு தாயும் மகனும் பயணம் செய்வதோடு கதை ஆரம்பிக்கிறது . அமைதியற்ற ,குழப்படியான சிறுவன் என்பது அவன் நடத்தைகளை வைத்தே சொல்லப்படுகிறது . இருவரும் ஒரு கிராமத்தில் உச்சியில் தனியான இருக்கும் ஒரு வீட்டை அடைகின்றனர் .

அங்கிருக்கும் வயதான பாட்டியிடம் , தான் வேலை  தேடிக்கொண்டிருப்பதாகவும் அதுவரை தன்னுடைய பிள்ளையை பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டு தலைநகர் சியோலிட்க்கு செல்கிறார் தாய் .

முதல் சந்திப்பிலேயே 'என்னை தொடாதே அழுக்காக இருக்கிறாய்' என்கிறான் சிறுவன் . அவனுக்கு அந்த பாட்டி மீது விருப்பமில்லை . படிப்படியாக அவரது அன்பை எப்படி உணருகிறான் என்பதை நேர்த்தியான காட்சி அமைப்புகள் ,சம்பவங்களை வைத்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர் . மிகுதியை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .


இதில் வரும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் எம்மை ஈர்த்து விடுவது தான் இயக்குனரின் வெற்றி. அதுவும் ஒவ்வொரு காட்சியும் எம்மை பிரதிபலிப்பதாக திரைக்கதையின் உதவியோடு கொண்டு செல்வது தான் படத்தின் வெற்றி .

இடையிடையே சிறுவனிடையே இருக்கும் ஈகோவையும் நகைச்சுவையான காட்சி அமைப்புகள் மூலம் காட்டியிருப்பார் இயக்குனர் .

எந்தவித ஆர்ப்பாட்டமும் , அழுது புரளும் காட்சிகளும் இல்லை . ஆனாலும் மனதை மென்மையாக வருடவும் செய்யும் , ஓங்கி அடித்தால் போல இறுக்கமாக்கவும் செய்யும் காட்சிகள் .

இப்போதிருக்கும் தலைமுறை இடைவெளியில் இது போன்ற படங்களை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும் .

இந்த படத்தை ஆங்கில உப தலைப்போடு இங்கு பார்க்கலாம் ...

Wednesday, May 2, 2012

சென்றவார பேஸ்புக் ,டுவிட்டர் பகிர்வுகள் சில ... [ 22/04 - 30 /04 ]

சென்ற வார (22/04 -30/04) பேஸ்புக், டுவிட்டர் பகிர்வுகள் சிலவற்றின் தொகுப்பு இவை . முன்னையை பகிர்வுகளை வாசிக்க தவற விட்டிருந்தால் .. இதை அழுத்தவும் 
" எங்கெங்கு காணினும் சக்தியடா ஏழு கடல் அவள் வண்ணமடா ! " எனும் முதலாவது கவிதையை சமர்ப்பித்த போது பாரதியாரின் தராசு 'எழுக புலவன்' என ஆசீர்வதித்தது ! #புதுமைப்பித்தன் எழுத்தும் அழகு தான் ! 

புதுமைப்பித்தன் பாரதிதாசன் பற்றி எழுதியதை படிக்க 

========================================================================
டுவிட்டர் பகிர்வுகள் படிப்பறிவு தரும் புத்தகங்களுக்கும் பரந்த அறிவு தரும் புத்தகங்களுக்கும் இடையே வேறுபாடு பலர் உணர்வதில்லை 
கல்வி முறை குழந்தைகளை புரட்டிப்பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறது . #நிலை இல்லா தன்மை
எந்த வரைவிலக்கணமும் அற்ற வாழ்விற்க்கு அர்த்தம் தருவது தேடல் ஒன்றே !மனதிற்கு பிடித்த வேலை ,மூளைக்கு பிடித்த வேலை , கடமைக்கு செய்யும் வேலை மூன்றையும் நிர்வகிக்க கூடிய ஆளுமை வேண்டும்.


எதிரில் வந்தவர் உதிர்த்து சென்ற புனைவு இல்லா புன்னகையை வாங்கிக்கொண்டேன் . #முகம் தெரியா நபர்கள்


மனதின் ரணங்களை வருடிச்சென்றது காற்று
வியப்பில்லை , மாசில்லாத காற்றில் ஈரமிருக்கிறது !


அடுத்தவர்களின் விருப்பங்களாக இருப்பது ,எமது தேவைகளாய் மாறுகிறது ! #சந்தைப்படுத்தலின் உத்தி


கல்வி முறை குழந்தைகளை புரட்டிப்பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறது . #நிலை இல்லாத தன்மை


மனது அதிகம் கனப்பது தனிமையில் பிரயாணம் செய்யும் போது ! #நிகழ்வுகளை மீட்டல்


நம் நாட்டில் மிக அதிகமாக சொல்லப்பட்ட பொய் "நான் சொல்வதெல்லாம் உண்மை " என்பது தான் - பாரதி பாஸ்கர்


========================================================================


1968 இல் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு அரிய காணொளி ! -- அறிஞர் அண்ணா முன்னின்று நடத்தியது . 
Tuesday, April 24, 2012

அறிந்துகொண்டவற்றில் பகிர்ந்துகொண்டவை ! தொகுப்பு (14/04 - 22/04 )

சென்ற வாரம்(15/04 - 22/04) பேஸ்புக்கிலும் டுவிட்டேரிலும் பகிர்ந்த சில முக்கிய தகவல்களை இதில் தொகுத்துள்ளேன் .

என் பகிர்வுகளை தவற விடுபவர்கள் வாராவாரம் இந்த வலைப்பதிவில் வந்து பார்க்கலாம் .

========================================================================
எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட அரிய கலந்துரையாடல் இது .

தனக்கு எழுத்தின் மீது எப்படி ஆர்வம் உண்டானது என்பது பற்றியும் , தன் படைப்புகள் பற்றியும் ஆரம்பம் பற்றியும் மனம் திறக்கிறார் சுஜாதா அவர்கள் .
========================================================================

தில் படத்தில் ஒரு பாடலில் " ஹிட்லர் காலத்தில் அந்த சாலி சாப்ளின் தில் " என்று ஒரு வரி வரும் . அந்த கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என அறிய கீழே உள்ள தகவலை வாசியுங்க .


சார்லி சாப்ளினை அனைவருக்கும் நகைச்சுவையாளனாக தான் அறிந்திருப்பீர்கள் . ஆனால் அவரின் சிந்தனைகள் உயரியவை . உலகை மாற்றும் ,சமாதானத்தை கொண்டுவருவதற்காக தயாரிக்கும் வீடியோக்கள் அனைத்திலும் சாப்ளினின் இந்த வார்த்தைகள் இல்லாமல் வருவதை கவனித்ததில்லை .

ஹிட்லர் தனது சர்வாதிகாரத்தை நிறுவிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சார்லி சாப்ளின் ஹிட்லேரை விமர்சித்து "The Great Dictator " எனும் திரைப்படத்தை எடுத்தார் . ஆனால் இவை இப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் வசனங்கள் . ஏழு நிமிட வீடியோ இது .

========================================================================
சென்ற வாரம் முக்கியமான நிகழ்வாக இந்திய /உலக அரங்கில் பேசப்பட்டது அக்னி ஏவுகணை V பற்றியே .

அக்னி II 2000 கிலோ மீடேர்களில் உள்ள இலக்கை தாக்க கூடியது . அக்னி III 3500 , அக்னி V 5000 கிலோமீடர்களை தாண்டக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் சீனாவோ இது ஐரோப்பா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தது .8000 கிலோ மீட்டர்கள் வரை செல்லும் என கூறியது .

அக்னி ஏவுகணையை உருவாக்க முக்கிய பங்காற்றியவர் டெஸ்ஸி தாமஸ் என்கிற பெண்மணி என்பது குறிப்பிடத்தக்க விடயம் . [மேலதிக தகவல்களுக்கு : BBC ]


========================================================================


இசை / ரகுமான் பிரியர்களுக்கான பகிர்வாக இது அமைந்தது . வழக்கம் போல இசை தேடலை  மேற்கொள்ளும் போது அகப்பட்டது . 


ரோஜா முதல் எந்திரன் வரை 350 பாடல்களில் இருந்து இசை தொகுப்புகளாக . 80 நிமிடங்கள் நீள்கிறது இந்த தொகுப்பு . 


========================================================================

ஒரு மொழியின் முக்கியத்துவத்தை சொல்லும் மிக முக்கியமான நிகழ்வு இது . இதனை செல்லினம் அறிமுகப்படுத்திய முத்துநெடுமாறன் அவர்கள் ஒரு செவ்வியில் பகிர்ந்திருந்தார். செல்பேசிகளில் தமிழ் குறுஞ்செய்திகளை அனுப்பும் மென்பொருள் தான் செல்லினம் .

செல்லினத்தை 2005 ஆம் ஆண்டு பொதுப்பயனீட்டுக்காக வெளியிட்ட நாளுக்கு மறுநாள் பலர் செல்லினத்தை நேரடியாகத் தரவிறக்கும் சிக்கல் ஏற்பட்டது. அதில் ஒருவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 

அவர் காண்ட்ராக்ட் தொழிலாளியாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்துகொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து தன்னுடைய Samsung போனைக் கொடுத்து இதில் தமிழ் போட்டுக்கொடுங்க எனக்கு ரொம்ப அவசியமாத் தேவைப்படுது நான் வந்து வீட்டுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளணும்னு.

நான் உடனே “இப்பதான் நீங்க போனில் அழைப்பதற்கான வாய்ப்புக்கள் சுலபமாக இருக்கே காலேல ஒருதடவை போன் பண்ணிக்கலாம், சாயந்திரம் இன்னொரு வாட்டி அழைக்கலாம் இப்படி உங்க மனைவி கிட்ட ஒவ்வொரு நாளும் பேசலாமே இப்படி இருக்கையில் இந்த செல்லினத்தை ஏன் முக்கியமாகக் கருதுறீங்க என்று நான் கேட்ட போது அவர் சொன்னார்.


“என் மனைவிக்குப் பேச வராதுங்க”

கண்கலங்கிப் போய்விட்டேன். பல பொதுமேடைகளில் எனக்கு அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருக்கின்றது ஆனால் இவருடைய சந்திப்பு மறக்கமுடியாதது. என்றார் முத்து நெடுமாறன்


பகிர்வுகள் தொடரும் .........


Tuesday, February 28, 2012

இந்திய அறிவியல் நாள் நோக்கம், அறிவியல் பற்றி சுஜாதா எளிமையாக ...

தளத்தில் தொடர்ந்து ஆக்கங்கள் எழுதி வருவதால் வலைப்பதிவில் இப்போது பகிர்வதில்லை . மீண்டும் வலைப்பதிவில் ஆக்கம் எழுத ஆரம்பிக்கும் போது பழைய நினைவுகள் மீள்கிறது. சரி நேரடியாக விடயத்துக்கு வருவோம் .

இன்று(28/02) இந்தியாவின் தேசிய அறிவியல் நாள் . இந்த நாள் இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்க்கும் புகழைத்தேடி தந்த நாள் . இன்று தான் சேர் சி வி இராமன் அவர்கள் "ராமன் விளைவை" கண்டுபிடித்தார் . அதன் நினைவாக தான் அறிவியல் என்பது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டுமென்று, இந்த நாள் இந்திய தேசிய அறிவியல் நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது .

ஆனால் இதை எழுத்து வடிவில் மிகவும் அழகாக பாமரர்களிடமும் கொண்டு சேர்த்தவர் குரு சுஜாதா அவர்களே . தமிழர்களை அறிவியல் பால் ஈர்த்த பெருமை அவர்களையே சாரும் .

சுஜாதா அவர்கள் அறிவியல் என்றால் என்ன என்று அனைவருக்கும்  விளங்கும் வகையில் தெளிவுபடுத்தியிருப்பார் . வாசித்ததை உங்களோடு பகிர்கிறேன் .

"அறிவியல் -சயன்ஸ் என்பது பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியது . சில விஷயங்களை உன்னிப்பாக பார்த்து அவற்றை பற்றி ஒரு கோட்பாடு அமைப்பது .அந்தக்கோட்பாடு பொதுப்படுத்தப்பட்டு விதிகளாக மாறுவது . அந்த விதிகள் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சரி தானா என்று கண்டறிவது . எங்காவது அந்த விதி தவறினால் அதை தூர எறிந்துவிட்டு வேறு விதிகள் அமைப்பது . நியூட்டன ,கொபர்நிக்கஸ்,கலிலியோ ,கெப்ளர் போன்ற விஞ்ஞானிகள் பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள் . அவர்கள் பழகியது இயற்பியல் ,வான சாஸ்திரம் என்று நாம் படிக்கிறோம் . இதெல்லாம் அறிவியல் " 

அறிவியல் தேடலில் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் அறிவியல் தின நல் வாழ்த்துகள் . !

 பல அறிவியல் ஆக்கங்களை பெற இந்த தளத்தை தொடரலாம். 

Thursday, January 19, 2012

சைபைகூ வகை கவிதைகளின் தொகுப்பு

சைபிகூ வகை கவிதைகள் என்பது விஞ்ஞான கற்பனைகள் பற்றி ஹைக்கூ வடிவில் எழுதுவது . உதாரணமாக எதிர்கால நூற்றாண்டு கவிதைகள் எப்படி இருக்கும் /எப்படி எழுதப்படும் என கற்பனையாக எண்ணி எழுதுவது . 

அந்த வகையில் எழுதிய சில சைபைகூ கவிதைகளை தொகுத்துள்ளேன் . 

சைபைகூ கவிதைகளில் நல்ல தகவல்களும் இருக்க வேண்டும்/பயனுள்ளதாக இருக்கக் வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை இவை . தெரியாத விடயங்கள் இருந்தால் கூகிள் செய்து பாருங்கள் :) 


சைபைகூ 


இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ;
எம் தியரியும் எம்(M) தியரியும் ஒன்று தான் . சிந்தடிக் டெலிபதியில் பேசிக்கொண்டன இரு மனங்கள்
சிந்திக்காத காதல் என்பது பிழையானது 
இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் ..செவ்வானத்தின் வனப்பு :
வாங்கிப் பொருத்திய கண்களினூடு ஊறியது 


நேரத்தில் பயணித்து இறந்தகாலம் சென்றுவிட்டேன் ; 
அடையாளம் தொலைத்துவிட்டேன் ;
காலம் காட்டும் கடிகாரங்கள் அங்கில்லை .!

பொதுவான சில கவிதைகள் 

மெய்யின் மையத்தில் மையல் கொள்ளும் 

இதயம் தைக்கும் தையலின் கொள்ளை #காதல்


வளி ஊடுருவும் இதயத்தில் வலிகள் சுமக்கிறான் மனிதன் , 
சிறகுகள் கொண்டு வளியை கிழித்து வழி அமைக்கின்றன பறவைகள் .


இரவி இல்லா இரவில் ;
ஒளிரும் இரவல் வாங்கி :) #நிலவு