Saturday, August 26, 2017

மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்

மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில் 
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில் 
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்.
கருநீலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்.

வைரமுத்து 

கண்ணாடியின்  முன்நின்று (Katoptronophilia) காமத்தின் நுண்கலைகள் பயில்வது காதலைத் தூண்டும். அதேநேரம், அது உணர்வின் கவனத்தைத் திசை திருப்பாமல் இருப்பதும் முக்கியம். 


தனியே, கண்ணாடியில் எமது அழகைக் கடந்திருக்கிறோம். அப்படிக் கடக்கையில், ஒன்று அழகை மெச்சிக்கொள்வோம். இல்லையென்றால், தாழ்வுமனப்பான்மை தோன்றும். நம் அழகை நாமே  மெச்சிக்கொள்வதன் தீவிர நிலை நார்சிஸம். இப்படித் துணையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதையும் நார்சிஸம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமத்தைச் சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டது கிடையாது. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்வரை அழகு. கரை மீறாதவரை ஆழி அழகு. உள்ளக் காதலும் அப்படித்தான். எதிலும், நுண்கலை காண்பது காமத்துக்கு அழகு. புதுக் கலைகள் அழகு.



சிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். அதனால், துணைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இது நிகழவேண்டும். இல்லாவிட்டால், இது ஆர்வத்தைக் குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தும்.

கண்ணாடியில் பார்த்துக்கொள்வது மொத்தக் காதல் நிகழ்வில் சிலநொடி மட்டுமே நீள்வதாக இருப்பதும் நல்லது. இத்தனை காலக்  கற்பனையும் நிஜமும் சேர்ந்துகொள்ளும் இடம்.

சிலருக்குத் தன் அழகுமீது விருப்பம் இருக்கிறது. பின்னிருந்து கழுத்து வளைவில் அழுத்தி  எழுதும் முத்தத்தின் நீட்சியைப் பாராட்டி, சொருக எண்ணும் கண்களோடு, தன்னைக் கண்ணாடியில் பார்த்து இரசிப்பாள். உணர்வில் மிதக்கும் தன் இதழ் அசைவையும், அவன் சேவை அழகையும் ஒருசேர இரசிப்பாள். ஆடையற்ற உடலில் மயிலிறகு ஸ்பரிசங்கள் வரைவதை இரசிப்பாள். அவள் அழகு ஆராதிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் இரசிப்பாள்.

இவை யாவும் அவள் இத்தனை காலம் மனக்கண்ணில் சேர்த்து வைத்த கனவுகள். மனக்கண்ணில் நிறைவுறாத காட்சிகளுக்குக் கண்ணாடி உயிர் கொடுக்கும். என்றோ ஒரு தனியறையில், தான் மனதில் கண்டு  திளைத்த  காட்சியை, நினைவு நனைந்ததைக் கண்ணாடியில்  இரசிக்கிறாள். அவள் உணர்வுகளையும் அவன் கண்ணாடியில் பார்க்கிறான். அவன் செயல்களையும் கண்ணாடியில் பார்க்கிறான். இருவர் உணர்வையும்  ஒரு சட்டகத்துக்குள் காட்சி ஊடகத்துக்குள் அழைக்கிறது கண்ணாடி. இத்தனை காலமும் காட்சி ஊடகங்களில் ஏங்கிய காட்சியைக் கண்ணாடி ஒரு ஊடகமாகிக் காட்டுகிறது. பிழைகளைக் காட்டுகிறது. பயில்வோம் என அழைக்கிறது.

மணிரத்னத்தின், 'ஓக்கே கண்மணி', 'காற்று வெளியிடை' என்று கண்ணாடி பார்த்துக் காதல் பயிலும் காட்சிகள் அதிகம். "கள்வரே" பாடலில் நடனத்தைக் கொண்டே உயர் நிலையைக் கலையாகக் காட்டியிருப்பார். கொஞ்சம் தீவிரமும் மென்மையும் கலந்த காமம். "கள்வரே" பாடலில் வீடு முழுவதும் கண்ணாடி இருக்கும். கூடுதலாக ஆர்வமிருப்பவர்கள் வீட்டின் கட்டிலின் மேலேயும்  கண்ணாடி அமைப்பது உண்டு. இவற்றைத் திரையில் கலையாகக் காட்சிப்படுத்துவது என்பது இன்னொரு கலை.

Thursday, July 13, 2017

மலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்



Loving is a journey with water and with stars
with smothered air and abrupt storms of flour:
loving is a clash of lightning-bolts
and two bodies defeated by a single drop of honey. - Neruda

காதல் மொழியைப் பொறுத்தவரையில், "பருகுதல்" என்கிற சொல் ஒருவித தீவிரத் தன்மையைக் குறிப்பது. காதல் தன் துணையைச் சுமை என்று அறியாது. அதேபோல, உயிர் உறையும் காமத்தில்/காதலில் சகலதும் தூய்மையானது. 

பருகுவன்ன காதலொடு திருகி
மெய் புகுவன்ன கை கவர் முயக்கம் 

பருகுதலை உடைய தீவிரக் காதலில் ஒருவரையொருவர் முயங்கி உறங்குகிறார்கள். இருவரும் ஒருவரே போன்று தழுவி இருக்கிறார்கள். அப்படி இருக்கிறவர்கள்கூட புலம்புகிற அளவுக்குக் கொடியது இந்த மழையும் வாடைக்காற்றும் என்று அகநானூற்றுத் தலைவி சொல்கிறாள். தலைவன் இருந்திருந்தால் மழைத்துளி பட்ட இதழ்களைப் பருகி இருப்பான் என்கிற ஏக்கம் அவளுக்கு இருக்கலாம். 

சங்கப்பாடல்களில் அகநானூறு, பரிபாடல், கலித்தொகை எல்லாம் தலைவன் பரத்தையரோடும் தலைவியரோடும் நீராடுவது பற்றிச் சொல்கின்றன. தலைவன் மார்பை தெப்பம் என்று நினைத்து பெண்கள் ஆடுவர். 

பெண்கள் வைகையில் நீராடுவர்.  பெண் ஒருத்தி மார்பில் சந்தனச் சாந்து/ பூச் சாந்து  பூசி வைகையில் நீராடுகிறாள். தன் மார்பில் பூசிய சாந்தை அவள் துடைக்கவில்லை. வெண் துகிலெடுத்து மூடுகிறாள். சிவந்த நீரைத் துகிலால் மூடினால் எப்படியிருக்கும்! பூ நறுமணத்தோடு மலர்ந்திருப்பது போல தோற்றம். தலைவன் நெருங்கி அவள் மார்பிலிருந்த சிவந்த நீரைத் துடைத்துவிட்டுக் கூடுகிறான். அவன் மருவியதும் அவள் பூத்து நிற்பதைப் பரிபாடல் பதிகிறது. பெண்கள் குளித்துவிட்டுப் போன நீர் நிறம் பெற்று அத்தனை அழகோடு விளங்கியதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

கொடுத்து வைத்த நதி! அவள்  குளித்த சுகத்தைச் சுமந்து நிற்கிறது. சிவப்பு நிறம் கொண்டு நாணம் பூத்து நிற்கிறது. நீர் நுழையா இடம் ஏது!  வைரமுத்துவின் தலைவன் அவள் குளித்த சுகத்தைக் கேட்கிறான். தொழுகின்ற காதலை வைரமுத்து பிழை விடாது சரியாகப் பிரதிபலித்தார். "தீர்த்தம்" என்கிற சொல் மொத்த வரியையும் சீர்படுத்தி நிற்கிறது. 

"தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்."

மழையிலும், நீரோடும் அவளோடு கூடும் பொழுதிலே வடிகின்ற துளிகளோடு  சேர்த்து அவளையும் பருகும் காதல். மடலிலே நீர்த்துளி கொண்ட பூக்கள் ஒரு புது ஒளி பெற்று விளங்குவதுபோல, இரு உடல்களிடையே  நீரோடு கொள்ளும் காதல் எக்கணமும் புதிது.
"Loving is a journey with water and with stars

Saturday, June 10, 2017

மலரினும் மெல்லிது காமம் - சின்னம் வைத்தல்

ஓவியம் : John Fernandas 

தமிழில், பொதுவெளியில் சொல்லத்தகாத சொற்களை வேறு பொருள் கொண்டு சொல்வதை 'இடக்கரடக்கல்' என்பார்கள். 'இடக்கர்' என்றால் சொல்லத்தகாத சொல். சொல்லத்தகாத சொல்லை அடக்கிக் கூறுதல் இடக்கரடக்கல். இதைத் தகுதிச் சொல்வழக்கு என்பார்கள். இது கவிதைகளுக்குத் தனியொரு அழகைச் சுமந்துவரும்.

கவிஞர் வாலி தனது பாடல் வரிகளில் இடக்கரடக்கல் பயன்படுத்தும் விதம் இரசிக்கத்தக்கது. சிலநேரங்களில் அந்தச் சொற்பிரயோகங்களே அவற்றுக்கு உயர்ந்ததொரு நிலையைப் பெற்றுத்தரும். உதாரணமாக, "மின் வெட்டு நாளில்" என்கிற பாடலில் "பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்" என்றொரு வரி வருகிறது. இரு பறவைகள் சேர்ந்து உறவு கொள்வதைச் சொல்வதற்கு பல வார்த்தைகள் இருந்தாலும், "தோள் சேர்த்தல்" என்கிற வார்த்தையில் ஒரு சிநேகமும் இணக்கமும் வெளிப்படுகிறது. காமம் அழகு பெறுகிறது.

அதேபோல, "தீ இல்லை புகை இல்லை" என்கிற பாடலில் ஒவ்வொரு வரிகளிலும்  தமிழ் அழகு செழித்திருக்கும். "முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்னச் சின்னதாய்" என்கிற வரிகள் கவனிக்கத்தக்கது. 

உறவு கொள்கையில் நகக்குறி  இடுதல், பற்கள் பதித்தல் எல்லாம் காதலின் பெறுமதிமிக்க   சின்னங்கள் என்பது   வாத்ஸ்ஸாயனர் கூற்று. ஒருவரின் இன்மையின்போது அவற்றைப் பார்த்து இரசிப்பது காதலர்களுக்கு ஆறுதல் என்று சொல்கிறார். வாத்ஸாயனர் கூற்றுப்படி,  நகக்குறி இடுதலில் எட்டு வகைகள் இருக்கிறது. பற்கள் பதிப்பதில் பத்து வகைகள் இருக்கிறது. எங்கெங்கு பதிக்கவேண்டும், எங்கெங்கு கூடாது  என்றும் இருக்கிறது. இது பயிற்சியால் செய்யவேண்டிய கலை. காயங்கள் ஏற்படுத்தாமல் தடயங்கள் மட்டும் விட்டுச் செல்லல் பயிற்ச்சியால் மட்டுமே விளையக்கூடியது. ஆழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்த இடப்படும் அடையாளங்கள். காதலின் உச்சத்துக்கு துணையால் சூட்டப்பட்ட மரியாதைச் சின்னம் என்று காதலர்கள் மகிழ்ந்து கொள்வார்கள். அதைப் பார்க்கையில் அவர்களுக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனத் தோன்றும்.

நம்முடைய கலிங்கத்துப் பரணியில் ஒரு பாடல் வருகிறது. பதிக்கப்பட்ட  அடையாளங்களை யாரும் இல்லாத நேரம் பார்த்து  பெண்கள் கண்டுகளித்து பெருமை கொள்வர் என்று சொல்கிறது பாடல்.

ஆனால் வாத்ஸாயனர் காமசூத்திரம் எழுதும்போது பெண்களின் இச்சைகளுக்கும் முன்னிலை கொடுத்தவர் என்பதால் பெண்கள் இடும் நகக்குறிகள் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். நம்முடைய படைப்புகளில் பெண்களின் இச்சைகளுக்கு அதிக  முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனம் நீண்டகாலமாக இருக்கிறது. சினிமாப் பாடல் வரிகளில் வைரமுத்து வரிகள் இதை உடைத்தது.

'நகக்குறி இடுதல்' என்பதிலேயே ஒருவித உடன்பாடு இருக்கிறது. இந்தச் சின்னம் வைத்தல் என்கிற சொல்லும் அத்தனை நயமானது. 

படிப்பவர்கள், "வாங்கிக்கொண்டேன் உன்னை. ஆடை கொண்டதோ தென்னை" என்கிற வரிகளில் இருக்கும் அழகைக் கண்டறிய முனையலாம். வாலி குறும்புக்காரர். 

பகுதி 1

பகுதி 2