Saturday, August 24, 2013

கவிப்பேரரசு வைரமுத்து: இலக்கியப்பாடல்கள்

வைரமுத்து அவர்களின் பிறந்தநாளில் இருந்து அவரைப்பற்றிய பதிவுகளையே தொடர்ந்து எழுதுகிறேன்.வெறும் பாட்டு வரியில் என்ன இருந்துவிடப் போகிறது என கடந்துபோக  முடியாதபடி, அவற்றுள் ஒருவித  இலக்கியச் சுவையை,விஞ்ஞானத்தை,தகவல்களைக் கொண்டு வந்தவர் அல்லவா!.கொண்டுவந்து சேர்த்தார்  என்பதை விட ,நமக்கு அதை அறிமுகப்படுத்த முயன்றுகொண்டிருப்பவர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவரது முயற்சியை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் அறிந்திருப்பார்கள். சாதரணமாக அனுகிவிட்டுப் போகாதபடி புதுமையால் கட்டிவைக்கும் பாடலாசிரியர். 

வைரமுத்து அவர்கள் ,'இரண்டாம் உலகம் ' திரைப்படப் பாடல்களை வெளியிட்டு வைக்கும்போது, "இலக்கியத்தின் சாரங்களைப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத்தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முயற்சிசெய்து வருகிறேன்" என்று கூறியிருந்தார்.

அவர் இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அவற்றை  மாற்றி எளிமையான வரிகளாகக் கொடுத்தார்.ஆனால்  இலக்கியப் பாடல்களை கொஞ்சம் கூட மாற்றாமல் நேரடியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கூடுதலாக ரஹ்மானுக்கு எழுதிய பாடல்களில் நேரடியான வரிகள் இடம்பெற்றிருக்கும். ஒரு சில உதாரணங்கள் மிகவும் பிரபலம்.பலருக்கும் தெரிந்திருக்கும். கவனித்த இன்னும் சில பாடல்களையும் தொகுத்திருக்கிறேன். வள்ளுவன் கூற்றுக்கிணங்க,அவர் அப்படி நேரடியாகத் தந்த ஒரு சில பாடல்களே தெரியும்.அடியேனுக்குத் தெரியாதது ஏதும் உங்களுக்குத் தெரிந்திருந்தால்/கவனித்திருந்தால்  பகிருங்கள்.

ஒரு சில பாடல்களில் காட்சியமைப்பும் அப்படியே அமைந்துவிடும். அது இயக்குனர்களின் திறமை.'திருட்டுப்பயல் படத்தில் இடம்பெற்ற 'தையத்தா தையத்தா' பாடலில்,ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியை அப்படியே பயன்படுத்தியிருப்பார்.பரத்வாஜ் இசையில் அமைந்த இந்தப் பாடலில் இரண்டாவது Interlude இல் இந்த வரிகள் இடம்பெறும். 

குங்குமம் அப்பி குளிச்சந்தம் மட்டித்து மங்கள
வீதி வலம் செய்தி மணநீர் அங்கவனோடும்
உடன்சென்ற ரங்கனை மேல் மஞ்சமாட்ட
கனாக் கண்டேன் தோழி நான்

இன்னொரு பிரபலமான பாடலும் இதே காட்சியமைப்பில் நினைவில் வருமே! 'மார்கழித் திங்கள் அல்லவா' பாடலில் ஆரம்பத்தில் திருப்பாவை அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கும்.  

சென்னியது உன்பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம், சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின்னடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

'கண்ணெதிரே தோன்றினாள்' எனும் பெயரை படத்திற்கு இட்டது குருஜி சுஜாதா என்று எங்கோ படித்ததாக நினைவு. அந்தப் படத்திற்கு வசனங்கள் அவர் தான்.அந்தப் படத்தில்  தேவா இசையில் அமைந்த 'சின்ன சின்னக் கிளியே'   பாடலில்,அதே போல இடையிசையில்,அபிராமிப்பட்டார் எழுதிய  'அபிராமி அந்தாதி' பாடல் ஒன்று இடம்பெறும்.

சென்னி -தலை , சிந்தூர வண்ணப் பெண்ணே -  சிவந்த வண்ணப் பெண்ணே. என்னவொரு ஓசை நயம் .இதெல்லாம் தமிழுக்கே உரிய சிறப்பு .ஆர்வமிருந்தால் பொருள் எல்லாம் தேடிப் படித்துக்கொள்ளுங்கள். 

ஏனைய இசையமைப்பாளர்கள் எல்லோரும் இடையிசையில் போட்டுக்கொள்கிறார்கள்.ரஹ்மான் மட்டும் ஆரம்பத்திலேயே பயன்படுத்திக்கொள்வார். 'மார்கழித் திங்கள் அல்லவா', தீண்டாய் மெய் தீண்டாய்' பாடலின் ஆரம்பத்தில் வருகிற வெள்ளிவீதியார் எழுதிய கன்றும் உண்ணாது கலத்தினும் படாது' என்கிற குறுந்தொகைப் பாடல் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். 


முழுமையாக ஒரு பாடல் அபப்டியே ஒரு பாடலாக பயன்படுத்தப்படட் இடம் என்றால் ,காதலன் படத்தில் ,  இடம்பெற்ற   'இந்திரையோ இவள் சுந்தரியோ'(திருக்குற்றாலக் குறவஞ்சி) பாடலைச் சொல்லலாம்.


இலக்கியப் பாடல்கள்ல அழகான ஓசை நயம் உண்டு. தமிழ் இனிமையான மொழினு சொல்லுகிறோம் .சாதாரண மக்களும் அதைக் கொஞ்சம் அனுபவிக்க, இது போல வரிகள் இடம்பெற  அனுமதிக்கும் இயக்குனர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.இலக்கிய வரிகளில் சிறுதும் மாற்றமில்லாமல் அப்படியே பயன்படுத்தப்பட்ட வரிகள் தான் இவை. மாற்றிப் பயன்படுத்தப்பட்ட வரிகள் என்றால் ஏராளமான உதாரணங்கள்  உண்டு.

Saturday, August 3, 2013

வைரமுத்து : திருக்குறள்


'அவள் வருவாளா' என்கிற பாடல் 98 களில் மிகவும் பிரபலம். அந்தப் பாடலை இப்போதுகூட சத்தம் எழுப்பாமல் மனதுக்குள் பாடிப் பார்க்காதவர்கள் கிடையாது.  தேவா இசையமைப்பில் ஷாகுல் ஹமீதும் ஹரிகரனும் பாடிய பாடல்.

அதில் ' ஏய் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணிலிருக்கு, அந்தப் பெண்ணிலிருக்கு' ங்கிற வரியை மட்டும் ஷாகுல் ஹமீது பாடுவார். ஹரிகரன் குரல் இருக்கும் போதே அந்தக் குரல் தனித்துத்தெரியும். "வீ மிஸ் யூ ஷாகுல் ஹமீத்" என்று சொல்லத் தோன்றுகிறது. புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில இருக்கிற குறளை பயன்படுத்தியிருக்கார் வைரமுத்து. அந்தக் குறளை வேகமாகப் பாடுமளவு, துல்லியமான குரல் வளம் உடையவர் ஷாகுல் ஹமீத்.

சரி காமத்துப்பாலில் வருகிற அந்த வரியில் அப்படி என்ன சிறப்பு. 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள.


எனும் குறள் தான் அது.கண்களால்  பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம், ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு. (நன்றி : பேராசிரியர் சாலமன் பாப்பையா உரை )


இனிமையான மொழி அல்லவா வள்ளுவன் மொழி :) அதுவும் காதல் மொழியில் சுவை அதிகம்.கவிஞ்ஞர் வாலியும் ஒரு குறளை  பயன்படுத்தி இருக்கிறார்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 
அஞ்சுதும் வேபாக் கறிந்து.என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன். (சாலமன் பாப்பையா உரை)

தீன படத்தில் இடம்பெற்ற 'காதல் வெப்சைட் ஒன்றில்' பாடலில் 

"Hot box-ல் வைத்த food உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்.
என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உன்னை உஷ்ணம் தாக்கக்கூடும்."

என்று எழுதியிருப்பார் கவிஞர் வாலி. :)