ஞாழல் மரத்தடியில் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள் வள்ளி. அவள் ஞாலத்திலே ஆழ்ந்திருந்த நினைவின் சுகத்தை, கற்பனையின் காந்தத்தை, அதை அவள் தன் விடைத்த இடையில் ஏந்தி மடக்கித் தாங்கும் வடிவினை எல்லாம், அலுங்காமல் அள்ளிடவே கந்தனும் அருகில் வந்தான். ஓதித் திரை உளரி, கழுத்தில் வெம்பனி வந்து ஊதியும், கீழ் விலாத் தண்டில் ஊசி இறக்கியும், ஆலிலை வயிற்றை மஞ்ஞை உதிர்த்த மயிலிறகால் அது வந்து வந்து வாட்டியும், வேலனைப் புலவிப் பின் தழுவும் இன்பம் அறியவெனப் புல்லாதிருந்தாள் அந்தப் பொல்லா மகள். அவள் எண்ணத் தழலின் வாசமும் வெப்பும் அறிந்து, அவளை அன்றாடம் நுகர்ந்தவன், சோலை ஒலிகளிலும் மெதுவாய், அவள் பெயரைப் பாங்கொடு சொல்லி அழைத்து, அவள் மெய் காண, வேல் எறியும் விழி காண, வண்டு மூச விண்ட மலரொன்றைக் கண்டு பறித்தான். அவளை வனைந்துகொண்டு, நறும் தேனொழுகும் செவ்வாய் வரிகளைத் தமிழ்ப் புனலில் நனைத்துச் சூட்டினான். அவள் புலவியதன் நுணுக்கம் தேடி அவன் கைகள் நெருங்க, அவனைத் தன் ஆழ்ந்த தழல் இன்பம் காண நெருக்கி அணைத்திட்டாள் வள்ளி.