Thursday, April 30, 2015

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறைக் கொள்கை - QDDR 2015அமெரிக்காவானது தனது புதிய இராஜதந்திரக் கொள்கைகள்  மற்றும் அபிவிருத்திக்கான திட்டங்களையும் உள்ளடக்கிய இரண்டாவது அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. இது 'QDDR' என அழைக்கப்படுகிறது. இதனை அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளுக்குப் பொறுப்பான  திணைக்களம் வெளியிடுகிறது. அமெரிக்க அரசினதும் சர்வதேச அபிவிருத்திக்கான ஏஜென்சியினதும்(USAID) நீண்டகால மற்றும் குறுகிய இலக்குகளைக் கொண்ட வெளியுறவுக்கொள்கைகளை நன்றாக ஆராய்ந்து, நன்கு நெறிப்படுத்தக்கூடிய திட்டங்களை வடிவமைத்து  இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. கொள்கைகளையும் திட்டங்களையும் ஒவ்வொரு வருடமும் மீளாய்வு செய்வதை விடுத்து, நான்கு வருடங்களுக்கு உண்டான  நீண்டகாலத் திட்டங்களை இது முன்வைக்கிறது. 

ஒபாமாவின் தலைமையின் கீழ், அப்போதைய(2009-2013) அமெரிக்கச் செயலாளராக  இருந்த ஹிலாரி கிளிண்டனால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த முறைமை. முதலாவது அறிக்கையானது ஹிலாரி கிளிண்டன் தலைமையில் 2010 இல் வெளியிடப்பட்டது. அதில் 'மக்கள் சக்தி மூலம் முன்னோக்கிச் செல்லுதல்' என்கிற சாராம்சம் முன்னிலைப்படுத்தப்பட்டது.  Smart Power என்றால் "Speak softly and carry a big stick." என்கிறார் ரூஸ்வெல்ட் இந்த 'ஸ்மார்ட் பவர்' என்கிற உத்தியைத்தான் ஹிலாரி முன்வைத்தார். அதன்பின்னர்  'அரேபிய வசந்தம்' எனப் பெயர்கொண்ட மக்கள் எழுச்சியை ஊக்குவித்து முன்னின்று நடாத்தியது  ஹிலாரி கிளிண்டன் தலைமை என்று அரேபிய நாட்டுத்தலைவர்கள் சிலர் விமர்சித்ததைக் கவனித்தில் கொள்ளவேண்டும். 

தற்போதையை செயலாளராக இருக்கும் ஜோன் கெரியின் தலைமையில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது இன்னமும் முன்னேற்றகரமானது என்று கருதுகிறார்கள். இந்தமுறை அமெரிக்க அபிவிருத்திக்கான முகவர் நிலையமும் அமெரிக்க அரசும் இணைந்து செயற்படுகிற மாதிரியான வேலைத்திட்டங்கள் அதிகம். மாறிவரும் உலகுக்கு ஏற்றபடி ஒத்துப்போகும் தன்மையைக் கடைப்பிடிப்பதே இலக்கு.அபிவிருத்தியும் வெளியுறவுக்கொள்கையும் இரண்டு முக்கியமான கூறுகள் என்று கூறுகிறது. 

அமெரிக்க அரசும் அமெரிக்க அபிவிருத்திக்கான முகவர் நிலையமும் இணைந்து செயற்படக்கூடிய நான்கு முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்துகிறது இந்த அறிக்கை. தீவிரவாத வன்முறைக்கு எதிரான போராட்டம், வெளிப்படையான சமூக அமைப்பினைக் கட்டி எழுப்புதல், வளங்களைப் பகிர்வதை முன்னெடுத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தடுத்தல் போன்றவற்றைப்  பட்டியலிடுவதோடு, இவையனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை என்றும் உலகெங்கும் சிறந்த ஆட்சியமைப்பை நிறுவுவதற்கு அவசியமானது என்றும் கூறுகிறது. 

 நாடுகளின் பிரச்னையைச்  சர்வதேச இரீதியாக தீர்த்து வைப்பதில் அக்கறை இருக்கிற அதேநேரம்  உள்நாட்டுப் பிரச்சனைகளை அவர்களாகவே தீர்த்துக்கொள்ள முன்வந்தால் முன்னின்று உதவி செய்வதிலும் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகிறது, அந்தந்த நாடுகளின் ஜனநாயக அமைப்பினைப் பலப்படுத்தல், வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல், ஊழலுக்கெதிராகப்   போராடுதல் போன்றவற்றில் பங்களிப்பினைச் செலுத்துவதாகவும் சொல்கிறது. 

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகள் முன்னர் கடினத்தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. உதாரணமாக, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவானது அதிக  கடினமான தன்மையை கடைப்பிடித்தது என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்(CSIS) விமர்சித்திருந்தது. அதன்பின்னர் CSIS தனது ஆய்வில்  'ஸ்மார்ட் பவர் கமிஷன்' என்று  அறிக்கை வெளியிட்டது. அமெரிக்காவின் எதிர்காலத் திட்டமிடல்கள் அதன் அடிப்படையில் நிகழவேண்டும் என்றது. ஐக்கிய நாடுகள் சபையைத் தனது 'ஸ்மார்ட் பவர்' கருவியாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. 

ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகு அதுவே ஒபாமாவின் வெளியுறவுக்கொள்கையாகவும் இருந்தது. அதன்பின்னர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட முதலாவது QDDR இல் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிரபலமானது. அதன் அடிப்படையில் தனது இழப்புகளைக் குறைத்துக்கொண்டு தேவையான காரியங்களை நீண்டகாலத்திட்ட அடிப்படையில் புத்திசாலித்தனமாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறது.  ஆனால் இப்போதைய கொள்கைகள் 'Smart power' அடிப்படையில் இல்லை 'Brain Power' என்கிறார் ஜோன் கெரி. 

Friday, April 24, 2015

நிறம்

எங்கள் நிறுவனத்தில் வேறு பிரிவிற்கு புதிதாக மனேஜர் ஒருவர் வந்திருக்கிறார். வெளித்தோற்றத்திலேயே ஒரு நல்ல படிப்பாளிக்குரிய விபரங்கள் தெரிந்தது. அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்பவர் என்று அவருக்கு நெருங்கியவர்கள் சொன்னார்கள். நான் அடிக்கடி வாசித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறவர்கள் என்கிறபடியால் எனக்கென்று அந்தச் செய்தியை விசேஷமாகச் சொல்வதுபோலச் சொன்னார்கள்.
பொதுவான விடயங்களில் விவாதம் வரும்போது, தன்னைவிட உயர்நிலை அதிகாரிகளுக்கு புத்தகங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லி விளங்கப்படுத்துவார். இவர்களும் கைபேசியைத் தடவுவதை நிறுத்திவிட்டு அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர் சொல்கிற விதமும் அப்படியிருக்கும். சிங்களவராக இருந்தபோதிலும் தமிழர்களே தெரிந்துவைத்திருக்க ஆர்வம் காட்டாத தமிழர் வரலாற்றின் நுணுக்கமான விபரங்களை மிகவும் தெளிவாகப் புரியவைப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று சோழர்களின் இலங்கை வருகையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அதெல்லாம் one-way communication தான். உரையாடல் நீட்சி அடைவதற்கு மற்றப் பக்கத்தில் இருபவருக்கும் கொஞ்சம் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டுமே!
ஒருமுறை உணவின்பின்னர் அவரோடு உரையாடக் கிடைத்த நொடிகள் பிடித்திருந்தது. "இந்த பட்டர் பெகான் ஐஸ்கிரீம் என்கிற பெயரில் ஏதோ செய்திருக்கிறார்கள்" என்றேன். ஒருமுறை சிரித்தார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி " நீங்கள் புத்தகங்கள் படிப்பீங்களாமே!" என்றேன். இந்த இரண்டாவது கேள்விக்காக முதலாவதாக ஒரு மொக்கை ஜோக்கை வீணாக்கவேண்டியிருந்தது. அதிகம் பேசாதவர் என்பதால் கஷ்டப்படவேண்டியிருந்தது. முதலாவது கேள்வியே அவருக்குப் பிடித்திருக்கும். உடனேயே "இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்" என்றார்.
"சூப்பருங்க...நாவல் வகையா?"
"இல்லை மார்ஷல் ஆர்ட்ஸ் பற்றி எழுதுவேன். அதில் என்னவோ அதிக ஆர்வம்"
"சிங்களத்திலா ஆங்கிலத்திலா?"
"சிங்களத்தில்... ஆங்கிலத்தில் எழுதவேண்டும்... நீங்களும் வாசிப்பீங்க போல..." என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். நிறைவில் மகிழ்ச்சியாய் இருந்தார். அந்த உரையாடல் மட்டும் one-way communication ஆக இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். சொல்லுகிற இடமும் சரியான இடமென்றால்தான் பகிர்தலின் முழு இன்பம் இருக்கும். ஒருவேளை அவருக்கு அது கிடைத்திருக்கலாம்.
வேலை விஷயத்தைத் தவிர பிறருடன் அதிகம் பேசமாட்டார். இப்படிப் பேசிக்கொள்கிறவர்கள் மற்ற மனிதர்களைப் பற்றிப் பேசிக்கொள்ளமாட்டார்கள். மனேஜ்மென்ட்டினை எதிர்த்து பெரிய விளக்கம் ஒன்று எழுத நேர்ந்தபோது, தானும் அதில் ஒருவர் என்பதை மறந்து தொழிலார்கள் பக்கம் நின்று எழுதிக்கொடுத்திருக்கிறார் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். தாஸ்தாவெஸ்கி சொன்னமாதிரி அழகுதான் உலகைக் காக்கும். எது அழகு என்பதை அவரவர்தான் தீர்மானம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Friday, April 10, 2015

சிறுபேச்சு : நகுலன்


நகுலனின் 'சில அத்தியாயங்கள்' எனும் நெடுங்கதையில் கிறிஸ்தோபர் மார்லோ எழுதிய எட்வர்ட் II .... 

அவனைச் சிறையில் அடைத்துவிட்டார்கள்... அவன் அவனைக் கொல்ல  வருகிறான்... அவனுக்கு அது தெரியும்... இருந்தாலும் கேட்கிறான்...

என்னைக் கொல்லத்தானே... 

சே, உனக்குத் துணையாக... 

இல்லை, போய்விடு.. 

அவன் போகையில் கூப்பிடுகிறான்... 

தனியாக இருக்க பயமாக இருக்கிறது, போகாதே... 

எனக்குத் துணையாக இரு... 

இருக்கிறேன்.

தூங்கு... 

தூக்கம் வரமாட்டேன் என்கிறது... 

ஏன்?... 

நீ என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியும்.


Tuesday, April 7, 2015

புதுவெளி
“There is music in words, and it can be heard you know, by thinking.” 

 - E.L. Doctorow

மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான் கூட்டணியில் 'ஓ காதல் கண்மணி' பாடல்கள் நவீன வடிவம் பெற்றிருக்கிறது. ஜதிகள், மிகவும் குறைவான வரிகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் சொற்கள், இடையிசை, ஆரம்ப இசை அளவீடுகள்  என ரஹ்மானின் முயற்சிகள் அனைத்தும் பாடல் முழுதும் புதிதாக வெளிப்படுகிறது. ஆனால் கவிதை மொழிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமலே இருப்பாதாகத் தோன்றுகிறது. வெளிப்படுபவை எல்லாமே மொழிகளாகும்போது, இசைபோல சொற்களுக்கும் எப்போதும் இணையான இடம் கிடைக்கவேண்டியது அவசியம்.

இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகளில் கவிதை உயரும் இடங்களில் இசை நெகிழ்ந்துகொடுத்தும், இசை உயரும் இடங்களில் மொழி மௌனித்தும் இயங்கியிருக்கிறது. தன்னுடைய மொழிக்கு சரியான இடம்தேடிக் காத்திருந்தபோது வந்தவர் ரஹ்மான் என வைரமுத்து கூறியிருந்தார். இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகள் எல்லாம் இன்றுவரை சலிக்காத்திருப்பதன் ரகசியமும் அதுதான். மெதுவாய் நுழைந்து பரவுகிற தந்திரத்தை தமிழ் ஓசைகள் அறிந்திருக்கின்றன. அவை இசைவந்த பாதையின்வழி இன்றுவரை நுழைந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னமும் சித்ராவின் குரலில் மொழியின் வளைவெல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

"எப்போதுமே கவிதை வடிவில் பாடல்களை எழுதுங்கள்" என்று பொதுவெளியிலேயே வைரமுத்துவிடம் வேண்டுகோள் வைப்பவர் மணிரத்னம். கவிதை மொழியில் பாடல் அமைவதன் அழகியல் புரிந்தவர். வைரமுத்துவின் 'ஆறாம் பூதம்' என்கிற கவிதையைப் படித்துவிட்டு, அதை ரஹ்மானிடம் கொடுத்து இசையமைக்கச் சொன்னபோது பிறந்ததுதான் 'யாக்கைத்திரி' பாடல் என்று படித்திருக்கிறேன். சொற்களால்  கட்டமைக்கப்பட்ட கவிதை பாடலானது அழகு.

ஆரம்பத்திலிருந்து சொற்களை இசைக்காகப் பயன்படுத்திப்பார்ப்பது ரஹ்மானின் முயற்சிகளில் ஒன்றாக இருந்தது.  "தீண்டாய் மெய் தீண்டாய்" பாடலின் இடையிசை, யாக்கைத்திரி, தீ தித்திதிக்கும் தீ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். "யாக்கைத் திரி காதல் சுடர்" என்கிற உயர்ந்த கவிதை வரிகளுக்கு இடையில்  'Fanaa' என்கிற உருது மொழிச்சொல் ஒலிக்கும். "அழித்துக்கொள்ளுதல்" என்கிற பொருள்கொண்ட அந்தச்சொல் கவிதையின் ஒவ்வொரு இடங்களிலும் ஒலிக்கும். உடைந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் ஓசைகள் கேட்பதற்கு நன்றாயிருந்தாலும் வைரமுத்து பேசுகிற கவிதைமொழிகள்தான் பாடலின் உயிரோட்டமாக இருந்தது. நவீன இசையென்று  சொற்களை இசைக்காக வளைக்கிறபோதெல்லாம் அவை சிதையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


ஓ காதல் கண்மணியில் இடம்பெற்ற "பறந்து செல்ல வா" என்கிற பாடல் பற்றிச் சில விஷயங்களை வைரமுத்து அவர்களே குமுதத்தில்  பகிர்ந்திருந்தார். முதல்முறையாக எல்லை தாண்டுகிற காதலில் உடல் தொட்டும்தொடாமலும்  நகர்வதுபோல  வார்த்தைகளையும் பட்டும்படாமல் மென்மையாக அமைக்கவேண்டும் என மணிரத்னமும் தானும் மொழிக்கொள்கையை நிர்ணயித்துக்கொண்டதாகக் கூறியிருந்தார்.

இந்த நிர்ணயித்துக்கொண்ட மொழிக்கொள்கை, நவீனத்துவம் என்றொரு விடயத்தைக் காட்டவேண்டும் என்பதையெல்லாம் உடைக்கவென எழுதப்பட்ட பாடல்தான் மலர்கள் கேட்டேன். கடவுளைப் பார்த்து பக்தன் கேட்பது போல இருக்கிற அதேநேரம் காதலன் ,காதலிக்கும் பொருந்திவருகிறபடி ஒரு தமிழ்க் கீர்த்தனை எழுதித்தாருங்கள் என மணிரத்னம் கேட்டதால் பிறந்ததுதான் இந்தப் பாடல் என்கிறார் வைரமுத்து. நல்ல மொழிஅமைப்பினைக்கொண்ட  சில வரிகள் இந்தப் பாடலில் இடம்பெறவில்லை. சிலவேளைகளில் திரைப்படத்தின் இடையில் பயன்படுத்தப்படலாம்.
சொற்கள் கேட்டேன் கவிதை தந்தனை
மின்மினி கேட்டேன் விண்மீன் தந்தனை
எதனைநான் கேட்பின் உனையே தருவாய்
           பசியில் துடித்தேன் இரையாய் வந்தனை
        பிணியில் துடித்தேன் மருந்தாய் வந்தனை
                          எதில் நான் துடித்தால் இறையாய் வருவாய்?


நானே வருகிறேன் பாடலில் "சின்னஞ்சிறு" என்கிற சொல் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. ஆரம்பத்தில் அந்தப்பாடலுக்கு வரிகள் மிகவும் சிக்கலான அமைப்பினைக் கொண்டதாக இருந்ததாகவும், அதனை எளிமைப்படுத்தி மீண்டும் மீண்டும் வருகிறபடி வரிகள் அமைக்கபட்டதாகச் சொல்கிறார் ரஹ்மான். Thumris இசை வகையை உதாரணம் காட்டுகிறார்.

பறந்து செல்ல வா என்கிற பாடலில் இடம்பெற்ற யோசிக்காதே போ.. யாசிக்காதே போ.. என்கிற வரிகள் கொஞ்சம் நீண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வைரமுத்துவின் 'பெயர் சொல்லமாட்டேன்' கவிதையிலிருந்து சில வரிகளும், 'பூக்களும் காயம் செய்யும்' கவிதையிலிருந்து சில வரிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 'பெயர் சொல்லமாட்டேன்' என்கிற கவிதைதான் அமர்க்களம் படத்தில் 'மேகங்கள் என்னைத்தொட்டுப் போவதுண்டு' பாடலாக உருவாகியது. அதில் பயன்படுத்தப்பட்ட அதே வரிகளை மீண்டும் இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நவீன இசையென்று கவிதைமொழி சிதைக்கப்படுகிறதா என்கிற சந்தேகம் இன்னமும் இருக்கிறது. இந்தப் பாடல்களின் நீண்டகால வெற்றியைப் பொறுத்தே முடிவுக்கு வரமுடியும்.