Friday, November 6, 2015

முல்லைப்பாட்டு : கன்று தவிப்பதைப் போல்!


தாயைப் பிரிந்த கன்றின் தவிப்புக்கு ஆறுதல் சொல்லிவிடமுடியாது. அதன் கண்களையும், கட்டப்பட்டு நிற்கும் இடத்தையே சுற்றிச் சுற்றித் தன் தவிப்பை வெளிப்படுத்தும் விதத்தையும் பார்த்தவர்களுக்கு ஓர் உண்மை தெரியும். எத்தனை செயல்கள் செய்தாலும், தாய்ப்பசு வரும்வரை கன்றின் ஏக்கம் தீராது. அதுபோக, அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதன் ஏக்கம் எங்களையும் தொற்றிக்கொள்ளும். கிட்டச் சென்று அரவணைத்துக்கொள்ளும்போது, எங்கள் மனம் வேண்டுமானால் கொஞ்சம் நிறைவு காணும். இந்த ஆழத்தை இந்த முல்லைப்பாடல் எப்படிக் கொண்டுவருகிறது எனப் பார்ப்போம். இலக்கியத்தில் இருக்கும் அழகே இந்த ஆழம்தான். படிக்கும்போது தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள்.

அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. துயரை மேலும் அதிகரிக்கச்செய்யும் பொழுது. 'மழைக்காலத்துக்கு முன்னர் திரும்பி வந்திடுவேன்' எனச் சொல்லிவிட்டுப்போன தலைவன் எப்போ திரும்பி வருவான் எனத் தலைவி வருத்தத்தில் இருக்கிறாள். அவள் வருந்தி இளைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் அந்தத் துயர் தொற்றிவிட்டது. இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாத செவிலித்தாயும் முதுமையான சில பெண்களும் 'நற்சொல்' கேட்டுவரக் கோவிலுக்குப் போகிறார்கள். 


யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

அங்கே, நெல்லையும் புதிய மலர்களையும் தூவி 'நற்சொல்' கேட்டு நிற்கின்றனர்.  இவர்களின் வேண்டுதல் புரியாத ஒருவர் 'நற்சொல்' சொல்வது காதில் கேட்டால் நல்லதே நடக்கும் என்று அர்த்தம். இதனை 'விரிச்சி கேட்டல்' என்பார்கள். அதனால் யாராவது 'இன்சொல்' சொல்வது தங்கள் காதில் விழவேண்டும் என்று வணங்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், சிறிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கிற இளங்கன்று, தனது தாய் இன்னும் வரலன்னு துயரில் அங்குமிங்கும் சுற்றித் தவிக்கிறது. அதிக குளிர் காரணமாக, நடுங்குகிற இருதோள்களிலும் தனது கையை மாற்றி மாற்றி வைத்துக் கட்டிக்கொண்டு நிற்கும் ஆயர்மகள் ஒருத்தி அதைப் பார்க்கிறாள். அதன் அருகே சென்று, "கோவலர்கள் பின்னால் இருந்து செலுத்த உன்னுடைய தாயார் இதோ இப்பவே வந்துவிடுவார். நீ கவலைப்படாத" என்று ஆறுதல் சொல்கிறாள். இந்த இனிய சொல்லைக் கேட்ட முதிய பெண்களும் செவிலித்தாயும் 'நற்செய்தி' கேட்ட சந்தோஷத்தில் அதை வந்து தலைவியிடம் சொல்கிறார்கள். நிகழ்வினை அப்பிடியே ஒப்பிவித்து, " நல்லவர்களின் வாய்ச்சொல்லினைக் கேட்டோம்; அதனால், உன் தலைவன் போரில் வெற்றிபெற்றுத் திரும்பி வந்துவிடுவான். 'மாமை' நிறம் கொண்ட நீ முதலில் வருத்தப்படுவதை நிறுத்து!" என்று திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லுகிறார்கள். இதனால் அவளுக்கு தனிமை வருத்தம் இன்னும் அதிகமாகி, குவளை மலர் போன்ற கண்களில் கண்ணீர் முத்துக்கள் தேங்கி நிற்க, தனிமை வருத்தத்தில் இருந்தாள்.

"மாமை நிறம் கொண்டவளே" எனச் சொன்னபோது அவளுக்குத் துக்கம் இன்னும் அதிகமாகி இருக்கும். 'மாமை' நிறம் என்பது அழகானதாகக் கருதப்படுவது. வெள்ளையும் இல்லாமல், கறுப்பும் இல்லாமல் ஒரு அழகான நிறம். தலைவன் பிரிவால், இப்போது அவள் உடல் 'பசலை' நிறத்தை அடைந்திருக்கும்.  அவர் இல்லாமல் என் அழகும் இப்படி வீணாகப் போகிறதே என்று இன்னும் வருந்தியிருப்பாள். தலைவன் வந்து தொட்டதும், பசலை நிறம் மாறி, பழையபடியே 'மாமை' நிறம் பெற்றுவிடுவாள். ஒரு பாடலுக்குள் எத்தனை நுணுக்கங்கள்!

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர,                      
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல், தலைவர், வாய்வது; நீநின்                                    
பருவரல் எவ்வம் களை, மாயோய்; என
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப

எத்தனை ஆறுதல் சொன்னாலும் அடங்காத இந்தத் தவிப்பு, கன்றின் தவிப்பைப் போன்றது. அவளுடைய தாயுமான தலைவன்  வந்தால்தான் தீரும்.

Monday, November 2, 2015

அடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்
இந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு! காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை! அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.  

மான்கள் மட்டுமா! துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப்  பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும்! அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும்.  அவர் தீண்டினால் உயிர் நிறைவேன்.

அந்த மான்களுக்கும் யானைகளுக்கும்கூட,  இந்த மாரிகாலத்தில் ஒன்றுடனொன்று சேர்ந்து இன்பம்கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது என் மனம் எப்படிச் சும்மாயிருக்கும் தோழி! நீயே நியாயத்தைச் சொல்லு! மழைக்காலம் வருவதற்கு முதல் வந்திடுவேன்னு சொல்லீட்டுப்போன இவர் இன்னும் வரல. இளைத்துவிட்டேன். 

மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து  
கான நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும்  
கையுடை நன்மாப் பிடியொடு பொருந்தி  
மையணி மருங்கின் மலையகஞ் சேரவும்  
மாலை வந்தன்று மாரி மாமழை  
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்  
இன்னும் வாரா ராயின்  
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே.  

இந்தப் பாடல் ஒரு பெண்ணின் ஆற்றாமையைச் சொல்லுகிறது. இதேபோல கார்காலத்தில் ஒரு ஆண் தன்னுடையை ஆற்றாமையைச் சொல்லி வேண்டினால் எப்படியிருக்கும்! வேட்கையை எப்படி ஆற்றுவேன் என்று கேட்டால் எப்படியிருக்கும்! சங்கத்தமிழ் போலவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் தனது வரிகளில்  இயற்கையை அழைப்பது வழக்கம். 

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்

இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?

எல்லா உயிரனங்களும் மகிழ்ச்சியாக இருக்கிற கார்காலம் இது. நீ மட்டும் ஏன் பிரிந்திருக்கிறாய் எனும் ஆற்றாமை!