Friday, December 19, 2014

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள் 2

'சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்' என்ற முதலாவது பதிவு பொதுவானதாக அமைந்திருந்தது.  மேலும் சில உதாரணங்கள், காரணங்களோடு, 'உள்ளம் துறந்தவன்' நாவலை முன்னிலைப்படுத்தி இரண்டாவது பதிவு..

********************************************************************************* 
எதிர்பாராத தன்மைதான் அவள் சிறப்பம்சம். இத்தனைக்கும் அழகி என்று உடனே சொல்லிவிடமுடியாது. பத்து நிமிஷம் உற்றுப் பார்த்துப் பேசினால் அவள் உண்மை அழகு புலப்படும். உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் கச்சிதமான உடலமைப்பு. இடக்கைப் பழக்கம், aquiline nose (டிக்க்ஷனரியைப் பாருங்கள்). எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஆர்வம். எதில் ஆர்வம் என்பது தினம் தினம் மாறும். ஒருநாள் இகேபானா, ஒருநாள் கர்நாடக சங்கீதம், ஒருநாள் சூடான் நாட்டு பட்டினிக் குழந்தைகள்.
- சுஜாதா (உள்ளம் துறந்தவன்)
மில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொழில் நிறுவனக் குழுமத்தின் உரிமையாளர் ராகவேந்தர். அவரின்  அன்பிற்குரிய வளர்ப்பு மகள் மஞ்சரி. அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஷெயார்களை அவள் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். ஏழையான அழகேசன் என்பவனைக் காதலிக்கிறாள்.  இந்நிலையில், இதயமாற்று சிகிச்சை செய்யவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் ராகவேந்தரைச் சுற்றிச் சதிகள் நடக்கிறது. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள்   என்பதுதான் கதையின் ஓட்டம். ஆங்காங்கே சுஜாதாவிற்கே  உரிய நகைச்சுவை நுட்பங்கள் நுழைந்துகொள்ள விறுவிறுப்பாக நகருகிறது  கதை.

"டி.டி.கே ரோடின் அத்தனை ட்ராபிக் மத்தியில் ஒரு குட்டி நாய் குறுக்கே கடந்து செல்ல, கார்கள் சீறி 'ஏஏய் நாயே!' என்று அதட்டின. அது கவலைப்படவில்லை."

ஷெயார் மார்க்கெட்டில் நிகழும் இன்சைடர் ட்ரேடிங், உடலுறுப்பு தானம், இதயமாற்று அறுவை சிகிச்சை, பிரைன் ஸ்டெம் டெத்  என சுஜாதாவின் டீடெயில்கள் நிறையவே உண்டு.

மஞ்சரியின் காதலனான அழகேசன் கொஞ்சம் படிப்பாளி. நிறையப் புத்தகங்கள் வாசிப்பான். சுஜாதாவின் கதைகளில் யாராவது ஒருவர் நல்ல வாசிப்பாளராக இருந்து நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லுவார்கள்...

'எப்படி, நான் நல்லா நடிச்சேனா? பாதிலேயே தூங்கீட்டேன். தத்ரூபமா இருந்ததுன்னாங்க. ' உறங்குவது போலும் சாக்காடு' ன்னு வள்ளுவர் சொன்னாப்ல. உடி ஆலன் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கார்.. death is one of the few things that can be done as easily lying down.' 

வள்ளுவரின் இருந்து திடீரென்று உடி ஆலனுக்கு போய்விடுவார் சுஜாதா. பிஸிக்ஸில்  இருந்து ஆண்டாள் மொழிக்குப் போவார். தொடர்புபடுத்தும் வல்லமையை இயல்பாகவே வாசகர்களுக்குள் ஏற்படுத்திவிடும் உத்தி இது.

புத்தகம் வாசிக்கப் பழகுபவர்கள் கையாளக்கூடிய  முறையை போகிற போக்கில் சொல்கிறார்...

புக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.


'புரிஞ்சுக்கணும், எக்சிஸ்டென்ஷியலிசத்திலிருந்து ஏ ஆர் ரஹ்மான் வரை' - சுஜாதா 


Monday, December 15, 2014

கம்பரும் கார்க்கியும்..


என் காட்டுக்குள் கிளியாகினாய் 
கிளி ஒன்றின் கீச்சாகி..
இலை ஒன்றின் மூச்சாகி..
முகில் ஒன்றின் பேச்சாகி..
எனில் வீழ்கிறாய்! ~ கார்க்கி யுவனின் இசையமைப்பில் வெளியான 'வை ராஜா வை' திரைப்படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கேட்டேன். என்றும் தனித்துவமும் புதுமையும் காட்ட விரும்பும் மதன் கார்க்கியின் வரிகளில் என்றுமுள்ள ஈர்ப்பு இருந்தது. 'பச்சை வண்ணப் பூவே' பாடலில் இடம்பெற்ற மேலே குறிப்பிட்ட வரிகள்  ஒரு சினிமாட்டோகிராபருக்கு தேவையான காட்சியையே முன்னே விரித்துப் போகிறது. 

அதன் பின்னர் கம்பரும் கார்க்கியும் சேர்ந்து எழுதிய பாடலை இரசித்தேன். வைரமுத்துவும் வாலியும் தமிழ் சினிமாப் பாடல்களில் சங்க இலக்கியத்தை மெதுவாகப் புகுத்தி இரசிக்கச் செய்தவர்கள். அந்த வகையில் மதன் கார்க்கியின் முதல் முயற்சி இதுவென்று நினைக்கிறேன். எல்லோரும் காதல் என்றதும் சங்க இலக்கியத்தைப் பொருத்தினர். கார்க்கி சற்றே வேறுபட்டிருக்கிறார். 'பூக்கமழ் ஒதியர்' பாடலை  'சங்ககாலத்து club song' என்று சொன்னால்  பொருத்தமாக இருக்கும்.

பெண்ணை மானென்றெண்ணாதே

என்னை நிலவென்றெண்ணாதே - நீ

கண்ணை மூடித் திறக்கும் முன் உன்

இதயம் கொய்தால் கேட்காதே...


என்கிற பாடலில் ஆரம்பத்திலும் இடையிலும் கம்பர் வருகிறார். பாலகாண்டத்தில், உண்டாட்டுப் படலத்தில் இடம்பெற்ற பாடல்கள் சில இந்தப் பாடலில் இணைக்கப்பட்டுள்ளது. கம்பனின் தமிழ் நுழையாத இடமில்லை என்று சொல்லலாம். பாடல்களின் பொருளினை முடிந்தவரை இலகுபடுத்திக் கொடுத்திருக்கிறேன்.பூக்கமழ் ஓதியர் போது போக்கிய 
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர் 
ஆக்கிய அமிழ்து என அம்பொன் வள்ளத்து 
வக்கிய பசு நறா மாந்தல் மேயினர்.

(சேக்கை - படுக்கை ; செரு - போர் ; வாக்கிய - வார்த்த )
பூக்களின் மணம் பரவுகிற கூந்தலினையுடைய பெண்களானவர்கள் மது அருந்தும் கூடத்தில் இருக்கிறார்கள். அவர்கள், மிகையாக மலர்கள் பரப்பப்பட்ட  படுக்கைகளிலே நிகழும் கலவிப் போரிலே இன்பம் பெறவேண்டும் என்கிற மனத்தினை உடையவர்களாக இருக்கிறார்கள். பொற்க்கிண்ணத்தில் ஊற்றிய மதுவை அப் போரிலே வெல்வதற்காகவே ஆக்கப்பட்ட அமிழ்தம் போல பருகத் தொடங்கினர்.

மீனுடைய விசும்பினார். விஞ்சை நாட்டவர்.
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்.
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார்
தேனுடைய மலரிடைத் தேன் பெய்தென்னவே.


வானுலக மங்கையரும் வித்தியாதர நாட்டு மங்கையரும் சிறப்புள்ளவர்கள் ஆயினும் ஊன்மேனியைடைய  இந்தப் பெண்களுக்கு ஒப்பாக மாட்டார்கள். மானின் பார்வையைத் தோற்கடித்த விழியையுடைய மகளிர், தேனையுடையே மலர்களே தேனைச் சொரிந்தது போல தங்கள் மலர் போன்ற இதழ்களால் மதுவினை அருந்தினர். 

தாமமும் நானமும் ததைந்த தண் அகில் 
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை 

ஓம வெங் குழி உகு நெய்யின் உள் உறை 

காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே.

மலர்மாலையும் புனுகும் நிறைந்த அகில் புகையூட்டப்பட்ட கூந்தலையுடைய(நறுமணம் வீசும்)  பெண்கள், தூய்மையான மதுவினை இதழ்களின் நனைத்து உண்டார்கள். நெருப்பு நிறைந்த யாகக் குண்டத்திலே நெய்யை ஊற்றினால் தீயின் வளர்ச்சி அதிகமாகுவது போல, அவர்களின் உள்ளத்திலே நிறைந்திருந்த காமத்தினை மேலும் சூடேறச் செய்ததாம் இந்த மது.    

(புனுகு - புனுகுப்பூனையில் இருந்து பெறப்பட்ட வாசனைத் திரவியம். செறிவான கஸ்தூரி வாசனையைக் கொண்டு காணப்படுமாம்.)

Thursday, December 4, 2014

சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்...

தமிழ்ச் சூழலில் இருந்து புதிதாகப் புத்தகங்கள் வாசிக்க வருபவர்களுக்கு எந்தப் புத்தகத்திலிருந்து வாசிப்பினை ஆரம்பிப்பது என்பதில் நிறையக் குழப்பங்கள் இருக்கிறது. யாராவது புத்தகம் வாசிப்பவர்களைக் கண்டால் அவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி இதுதான் என்று நினைக்கிறேன். ஒருசிலரின்  'பிஸி' எனக் காட்டிக்கொள்ள விளையும் செயற்கைத் தன்மையால், அவர்களாகவே வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் 'உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?' என்கிற முதலாவது கேள்வியை இப்போதைக்கு ஒத்திப்போடுவோம். 


புத்தகங்களைப் படிக்க விரும்புபவர்கள் சுஜாதாவிடம் இருந்து வாசிப்பினை ஆரம்பிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. இதுவரை நான் படித்த புத்தகங்கள் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பம். தீவிரமான இலக்கிய வாசகன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரு புத்தகத்தை இரண்டு, மூன்று தடவைகள் வாசித்தால் தான் தலைக்கு ஏறும். ஒருபோதும் எண்ணிக்கையினை நோக்கி ஓடி வாசிப்பின் நோக்கத்தைச் சரித்திட முயல்வதில்லை. வார்த்தைகளில் நின்று செல்லும் நிதானமான வாசிப்பு மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளனை முழுமையாக உள்வாங்கி மரியாதைப்படுத்த வேண்டும் என எண்ணுவதுண்டு. நீங்கள் புதுமைப்பித்தனை அணுகும்போது, வசனங்களிலும் சங்கீதம், கவிதை உண்டென்பதை அறிந்துகொள்வீர்கள்.

தகவல் அறியும் ஆர்வத்தில் நிகழந்தது தான் என் முதலாவது வாசிப்பு. பத்திரிகைத் துணுக்குகளில் ஆரம்பமானது சுஜாதாவிடம் வந்து நின்றது. அதன் பின்னர் என்னை இன்றுவரை அழைத்து வந்தது 'serendipity' தான். இந்தச் சொல்லினை அறிமுகப்படுத்தியதும் சுஜாதா தான். அதுவும் இந்தச் சொல் என்ன என்பதைத் தேடித் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். 'ஒன்றினைத் தேடுவதை நாம் நோக்கமாகக் கொண்டிராதபோது தற்செயலாக நம் புலனுக்கு அகப்படுவது; அதன் விளைவால் ஏற்படும் அதிர்ச்சி மகிழ்ச்சி' என அதனை வரையறுக்கலாம். பிரிட்டனைச் சேர்ந்த மொழிபெயர்ப்பு நிறுவனம் ஒன்று இந்தச் சொல்லை , 'மொழி பெயர்ப்பதற்கு   கடினமான சொற்கள்' என்கிற பட்டியலில் சேர்த்திருக்கிறது.  

என்னைப்பொறுத்தவரை சுஜாதா ஒரு 'polymath' என்பேன். அவருடைய 'கற்றதும் பெற்றதும்', 'ஏன்? எதற்கு? எப்படி?', 'கற்பனைக்கு அப்பால்' போன்றவை தான் என்னுடைய முதலாவது புத்தக வாசிப்பு. 'என் இனிய இயந்திரா' என்னுடைய முதலும் முழுமையானதுமான நாவல் வாசிப்பு. சுஜாதாவை வாசிக்கும்போது  அவருடைய அந்த 'சீரியஸ்' இல்லாத பன்முக ஆளுமை உங்களைக் கவரும். மற்றைய எழுத்தாளர்களை விடுத்து, முதலாவதாக இவரைத் தேர்ந்தெடுக்கக் சொல்வதற்குக் காரணமும் அதுதான். உங்கள் சிந்தனையிலும் எண்ணத்திலும்  ஒருவித  சமநிலையைத்(balanced state of mind) தோற்றுவிக்கும் எழுத்து. அந்த 'Mind state balancing' என்கிற வித்தையைச் சொல்லாமல் சொல்லித் தருவார். இப்போதைய காலத்தில் பலருக்கும் அவசியமான விஷயம் என நினைக்கிறேன்.  அதன் பின்னர் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாசிக்கலாம். அவரே உங்களுக்கு பலவிதமான தளங்களில் வாசிப்பை அறிமுகம் செய்வார். 'அவள் மெல்லிய ஆடையுடன் சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு லோலீட்டாவைப் படித்துக்கொண்டிருந்தாள்' என்று சட்டென்று அறிமுகப்படுத்துவார். குறித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. கற்றதும் பெற்றதும் நூலில் மட்டுமே சுஜாதா குறிப்பிட்ட புத்தகங்களை ஒரு பட்டியலாக (எவ்வளவு புத்தகங்கள்!)ஒருவர் தொகுத்திருக்கிறார். 

இப்போதெல்லாம் பல்வேறு தளங்களிலும் வாசிப்பினை நிகழ்த்துவது  என்பது அனைவருக்கும் அவசியம். தேவையில்லாதவை என்று ஒன்றுமில்லை. நீங்கள் படிக்கிற, வாசிக்கிற விடயங்களை உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் பிரயோகப்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். அந்தப் பிரயோகம் வாசிப்பினால் தான் நிகழ்கிறது என்பதை உணரும்போது மட்டுமே வாசிப்பினைப் புரிந்துகொள்ள முடியும். மற்றபடி அழுத்தம் கொடுத்ததெல்லாம் வாசிப்பினை நிகழ்த்த முடியாது. மகிழ்ச்சி தருவிக்கும், அறியாமை விலகும் சுகத்தினால் அதனை நிகழ்த்த முடியும். 


Monday, December 1, 2014

மீனோட்டம் - லா.சா.ராமாமிர்தம்
லா.சா.ராமாமிருதம் அவர்கள், எழுத்தின் ஒலிப்பு முறையில், வசனங்களில் இருக்கும் கவிநயத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்களில் உள்ள சோகமும் கவிநயம் மிக்கவை. லா.சா.ராவின் கரைபுரண்டோடும் எழுத்தை நான் முதன்முதலாகக் கண்டுகொண்டது 'அபிதா' என்கிற நாவலில் தான். அவருடைய மற்றைய படைப்புகளையும் படிக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் நிகழ்ந்தது தான் 'ஜனனி' என்கிற சிறுகதைத் தொகுப்பின் மீதான வாசிப்பு.  இதில் 'மீனோட்டம்' என்கிற சிறுகதைத் தொகுப்பில் உள்ள லா.சா.ராவின் அடையாளங்கள் ஏராளம்.

"நெஞ்சின் அடிவாரத்தில் ஏதோ புற்று இடிந்து அதனுள் ஜன்மக்கணக்கில் உறங்கிக் கிடந்த ஏதேதோ விஷயங்கள், பேச்சுகள், வாக்கியங்கள், வார்த்தைகள், பதங்கள் பத-ஸரி-க-ஸா-ம-த  ஸ்வரங்கள் ஓசைகள், ஒலிகள், மோனங்கள். திக்கித் திகில்கள். திமிதிமி எழுந்து மிரண்டு ஒன்றுடன் ஒன்று உருண்டு புரண்டு நெஞ்சமுட்டில் கவிந்த நஷத்ர இருட்டில் கருங் குதிரைகள் மின்னிடும் வெண்பிடரிகளை சிலிர்த்துக்கொண்டு தங்கத்துடைப்பம் போன்ற வால்களைச்  சுழற்றிக் கொண்டு இதய விலாசத்தில் ஓடுகையில் திடும் திடும் திடு திடும் - குளம்போசை தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறேன். கண் கவிழ்கிறேன். விழிகள் வரம்புடைந்து வழிகின்றன. அலை மெல்ல மெல்ல அடங்குகிறது. மூச்சு மெதுவாய் முனை திரும்புகிறது. உள் மூட்டம் படிப்படியாய்க் களைந்து வக்களிப்பு தோன்றுகிறது. அருவி கருணையாய் சொரிந்து கொண்டிருக்கிறது. " - லா.சா.ராமாமிருதம் (மீனோட்டம்)

"மொட்டுப்போல் வாய் சற்றே திறந்த வண்ணம், அரைத்துணி போன இடம் தெரியாமல் கையையும் காலையும் விசிறிப் போட்ட வண்ணம் அவள் தூங்குவதைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. குழந்தைகள் பாடு நிம்மதி. பேசிக் கொண்டேயிருக்கின்றன! அப்படியே தூக்கத்துள் நழுவி விடுகின்றன. விழிப்பதும் அப்படித்தான்." - (தூசி-மீனோட்டம் )

"வேணும் போது பூணி, வேணாத சமயத்தில் கழட்டி  எறியக்கூடிய தனிமைதான் பாந்தமாயிருக்கிறது." ( தேவி-  மீனோட்டம் )

"பொட்டலங்களைப் பிரிச்சு, சாமான்களை எடுத்து வைப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் இருக்கு." ~ லா.சா.ராமாமிர்தம்  

Friday, November 28, 2014

காவியத்தலைவன் - அசையும் சித்திரங்கள்

ஒரு வரலாற்று நாவலின் இடையிலுள்ள சித்திரங்களைக் கற்பனையில் அடிக்கடி அசைத்துப் பார்த்திருப்போம்.  அவற்றுக்கு உருவம் கற்பித்த்திருப்போம். பார்க்காத உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற தீராத ஆசையின் விளைவு நம்மை அங்கெல்லாம் கொண்டுசெல்கிறது.  அப்படியான  நிமிடங்களைத் திரட்டி, கண்முன்னே கொண்டுவந்து நம்மை  மகிழ்ச்சிப்படுத்துவது  என்பது எளிதான காரியமாக இருக்க முடியாது. சோர்வு நம்மை நெருங்காது சொல்ல அந்த 'மேஜிக்' பிடிபடவேண்டும். இதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டாலே சரித்திரப் படங்கள் வெற்றிப்படங்களாகும். வசந்தபாலனின் காவியத்தலைவன் செய்த 'பிரம்மாண்ட மேஜிக்' அதுதான். இது ஒரு கலர்புல் கலையின் கரைதொட்ட சினிமா. இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் நிறைய நாடக சபாக்கள் இயங்கின. அந்த நாடக சபாக்களைச் சேர்ந்த நடிகர்களின் வாழ்க்கை முறையை காதல்,நட்பு, பாசம் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு சொல்லும் திரைப்படம். இவை படத்துக்கு வெறும் ஆதாரம் மட்டும்தான். நலல் சினிமாவின் அழகைப் பார்த்துத்தான் உணரவேண்டும். நாடகங்களைப் பற்றி நிறையப் புத்தகங்கள் படித்தும், வேறு வழிகளில் தகவல்கள் திரட்டியும் இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் என்பதை அவரின் பேட்டிகளை விட 'உழைப்பு' அதிகம் சொல்கிறது. ஒரு இடத்திலும் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற கவனம் தெரிகிறது.

நடிப்பில் இயல்பான நடிப்பு, மிகை நடிப்பு என மாறுபட்ட விமர்சனங்கள் இன்றும்கூட நிலவுகிறது. ஆனால், இதுதான் நடிப்பு என எல்லோரும் ஒரே பாதையில் செல்லும்போது புதுமை காட்டி அதை மாற்றியமைப்பவன்  மிகப்பெரிய நடிகன் என்பதைக் காட்சியமைப்புகள் நுணுக்கமாகப் பதிகின்றன. சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா என எல்லோரும் நடிப்பைச் சிறப்பித்திருக்கிறார்கள். நாடகக்காரர்களின் இயல்பு வாழ்க்கையும் அதிதீவிர உணர்ச்சிகள் நிறைந்ததாய் இருப்பதை நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார்கள். 


இந்தப் படத்தின் இன்னொரு வடிவம் மொழி. அவை பாடல்களாகவும் வசனங்களாகவும் முதிர்ச்சி பெறுகின்றன. கவிஞர் வாலி அவர்கள் அல்லி- அர்ஜுனா நாடகத்துக்கு எழுதிய பாடலில் மொழி கொஞ்சுகிறது. வாலியை நாமும் தமிழும் இழந்திருக்கவேண்டாம். அந்தப் பாடலும் காட்சியமைப்பும் லயித்துப் போகச்செய்யும்.  நாடக மொழிகளை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். சில உணர்வுகள் தடுமாறும் மனித உறவுகளை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்கள் எளிதாய்க் கடத்திச் செல்கிறது. அதிலும் " தாலி கட்டிய தாசியாய் இருப்பதை விட, வெறும் தாசியாய் இருந்துவிட்டுப் போகலாம்" என்கிற வசனம் ஒரு புத்திசாலிப் பெண் பிழையான நோக்கத்துடனான ஒரு ஆணின் காதலை எப்படிச் சரியாக எடைபோடுகிறாள் என்பதை ஆழமாகச் சொல்லுகிற வசனம். காட்சிகளோடு பார்க்கும் போது அது உறுத்தலான வசனம் என்கிற எண்ணம் வராது. ஒரு எழுத்தாளரை தமிழ் சினிமா எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதைச் சொல்கிறார்.
     
சேர்க்கப்பட்டிருப்பது தெரியாமல் இயல்பில் இருப்பது, இழைந்துபோவது போலவே இருப்பதுதான் அழகினது வெற்றி. ஏற்கனவே குறிப்பிட்டது போல ரஹ்மான், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, ஆடை வடிவமைப்பாளர்கள்,ஜெயமோகன், வாலி எல்லோரும் வசந்தபாலனின் கற்பனையைக் கண்டுவிட்டவர்கள்.  

இசையைப் பொறுத்தவரை நிறைய ஆண்டுகளுக்குப் பிறகு ரஹ்மானுக்கு தமிழ் சினிமா கொடுத்த பரிசு  இந்தப் படம். பதிலுக்கு ரஹ்மானும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை திரைப்படத்தோடு நீங்கள் இசைந்துபோகும் பொழுதுகளில் உணர்வீர்கள். 


இது ஒரு சரித்திரப் படம் என்பதால் தீபங்களை வைத்தே காட்சிகளில் ஒளியைப் பேச வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. குடிசைக் காட்சிகள், தூரக் காட்சிகளில் சரியான இடங்களில் வைக்கப்பட்ட தீபங்கள் அந்தந்த இடங்களை நிரம்பச் செய்கிறது. ஏராளமான காட்சிகள் இரவில் நகர்வது விஷுவல் ட்ரீட். 'ஹேய் மிஸ்டர் மைனர்' பாடலின் காட்சிப்படுத்தல்களில்(Low Angle, High Angle) உள்ள நேர்த்தி பாடலுக்கே மேலும் அழகு.  வண்ணங்களை விகிதாசாரம் கொண்டு அமைப்பதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். சரித்திரப் படங்களில் மிகவும் முக்கியமானது ஆடை வடிவமைப்பு. பாலாவின் பரதேசிக்கு ஆடை வடிவமைப்புச் செய்த நிரஞ்சனி அவர்கள் நாடகக் கதைக்களத்துக்கு ஏற்றபடி காட்சிகளை வண்ணமாக்கியிருக்கிறார்.   

ஒவ்வொரு படங்களுக்கும் காலம் எடுத்துக்கொண்டு தயார்படுத்திக்கொள்ளும் வசந்தபாலனின் 'வெயில்' , ' அங்காடித்தெரு' போன்ற படங்களின் வரிசையில் இந்தப் படமும் தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களின் வரிசையில் வந்து அமர்ந்துகொள்ளும். நல்ல உழைப்பைத் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள்.

Saturday, August 9, 2014

பிரிவோம் சந்திப்போம் : ஆனந்தத் தாண்டவம்


அவ்வப்போது ஆனந்தத்தாண்டவம் படத்தைப் பார்த்து யாராவது சமூக இணையத்தளங்களில் சிலாகித்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் எனக்கு சுஜாதா எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' நாவல்தான் நினைவுக்கு வரும்.

என்னைப்பொறுத்தவரை அந்தத் திரைப்படம் நாவலைப் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்வேன். உண்மையிலேயே தமிழ்த் திரைப்பட உலகில்  நாவல்களைத் திருப்தி செய்த படமென்று ஒருசிலவற்றைத் தான் குறிப்பிடலாம். அதற்குக் காரணம், நாவலில் இருந்த ஆழமான தன்மை திரைபப்டங்கள்ல இருக்காது. 

'இங்கு எல்லாமே மிகைப்படுத்தல்கள் தான்' என நாவலில் ஒரு வசனம் வரும். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது நான் சந்தித்த, எதிர்கொள்கிற மனிதர்களைப் பார்த்துப் புரிந்துகொண்டேன். மிகைப்படுத்தல்களை கண்மூடித்தனமாக நம்புகிற சமூகமாக மாறி வருகிறது.

இவர்களாகவே காதலுக்கென்று ஒரு தியரி அமைத்துக்கொண்டு, எதிர்கால உலகினை  இப்படித்தான் அமைத்துகொள்வார்கள், வாழ்வார்கள்  என சுஜாதா எண்பதுகளிலேயே எழுதிய நாவல் இது.

"ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதுமிதாவைத் திறந்து மதுமிதாவை முகத்தில் இறைத்துக்கொண்டு, மதுமிதா போட்டுக்கழுவிக்கொண்டு , மதுமிதாவால் துடைத்துக்கொண்டு, மதுமிதாவைத் திறந்து மதுமிதாவை படித்தான்." - சுஜாதா

இந்த உணர்வை, கவித்துவத்தையெல்லாம் எப்படி சினிமாவில் காட்டிவிடமுடியும்.  

Wednesday, August 6, 2014

விடிந்தாலும் பெண்ணழகு!

திருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன். 

நிமிர்ந்து, என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ஆமாம் உதடுகளில் புன்னகையைச் செய்துகொண்டாள். இந்த முறை உதடு மட்டும்தான் சிரிப்புக்குரிய அறிகுறிகளைக் காட்டியதே தவிர, கண்கள் சிரிக்கவில்லை. சிரிக்கும்போது  அவள் கண்கள் ஒரு குட்டி ஹைக்கூ போல இருக்கும்.  இந்தமுறை அந்தக் கண்கள் 'என்னை ஆச்சரியப்படுத்து' எனக் கேட்பதுபோல இருந்தது. அந்தக் கண்கள் இப்படித்தான் புதுமை செய்து என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும்.

சற்றும் எதிர்பார்க்காதபோது, ' விடியும் வரை பெண்ணழகு' என்றாரே உங்க கவிஞரு என்று கேட்டாள். அதுவும் இந்த நேரம் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை' என்று சட்டென்று சொன்னேன். சொன்ன பதிலைக்கேட்டு, இந்தமுறை அவள் கண்களால் சிரித்தாள். திருப்தி அடைந்திருப்பாள் என்று நினைக்கிறேன். நான் சொன்ன பதிலுக்காக அல்ல, கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் சட்டென்று வந்த பதிலுக்காகச் சந்தோஷப்பட்டிருப்பாள். அன்பென்று வந்துவிட்டால்  இந்தப் பெண்கள்தான் எத்தனை சின்ன விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்! உறங்கிவிட்டாளோ தெரியாது, ஆனால் கண்களை மூடிக்கொண்டாள். 

நான் அவளை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்.  நெருங்க நெருங்க வரும் பிரிவு பயம் வந்துவிட்டாலே இப்படிக் கேள்விகள் வரும். எவ்வளவு ஏக்கம், அன்பு, காதல் இருந்திருந்தால் அவளிடமிருந்து இப்படியொரு கேள்வி வந்திருக்கும்! காமம் தீர்ந்ததும் காதலும் தீர்ந்துவிடுமா என்கிற ஏக்கத்தில் வந்திருக்கவேண்டும். வேளைக்கு எழுந்துகொள்ளவேண்டும். நாளை முதல் நிறைய வேலை இருக்கிறது. முதலில் அவள் பயத்தைப் போக்கவேண்டும்.    

Saturday, June 14, 2014

காதல், காமம் : சுஜாதா

இணையத்தில் உலாவியபோது இந்தப் பகிர்வை வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தைப் பற்றிச் சொல்லும் உதாரணங்களில் இதுவும் ஒன்று..


// காமத்தை பற்றி எத்தனையோ எழுத்தாளர்கள் என்னென்னமோ எழுதியுள்ளார்கள், எழுதிகிறார்கள். அதுவும் இப்பல்லாம் ரொம்ப நாராசமா, அருவருக்கத்தக்க விதத்தில எழுதுகிறார்கள்.
சுஜாதாவின் "மனைவி கிடைத்துவிட்டாள்" என்ற கதையில் ஒரு முதலிரவு காட்சி. ஏன் காட்சியென்று சொல்கிறேனா சுஜாதாவின் எழுத்துக்களை படித்தாலே காட்சிகள் கண்ணுக்கு முன்னால் விரிவடையும், அதான் சுஜாதாவின் ஆளுமை.
இந்த கதையில் முதலிரவில் கணவனும் மனைவியும் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது மனைவி கேட்கிறாள், அவளது பெயர் வேணி.
//"உங்களுக்கு பிடிச்ச புத்தகம் எது? "
"வேணி"
"படிங்க"
முதலில் அட்டைப்படத்தைப் பார்த்தான், பிரித்தான், பொருள் அடக்கத்தைத் தேடினான், முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதைகளைத் தொட்டான், வார்த்தைகள், இடைவெளிகள், இடைசெருகல்கள்.//
ஒரு முதலிரவை இவ்வளவு எளிமையாக, ரசிக்கத்தக்க வகையில் வேறு யாராலும் எழுதமுடியாது. சுஜாதா ராக்ஸ். //
பகிர்ந்துகொண்ட யமுனை செல்வன் மற்றும் நரேந்திரகுமாருக்கு நன்றிகள். 

Tuesday, June 10, 2014

வைரமுத்து : அடுத்த படைப்பு

தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய வைரமுத்துவுடனான நேர்காணல் நிகழ்ச்சியில், தனது அடுத்த படைப்பைப் பற்றி அவர் கூறிய செய்தி கொஞ்சம் மகிழ்வைத் தந்தது. அடுத்த படைப்பு எப்போது வெளியாகும்!


"என்னுடைய அடுத்த படைப்பு 'ஈழத்தமிழ்' என்று முடிவு செய்திருக்கிறேன். ஈழம் தான் என்னுடைய அடுத்த படைப்புக்கான களம். அதுதான் என் நெஞ்சிலும் மூளையிலும் கனத்துக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய மனிதப்படுகொலை ஈழம்தான். அவர்களின் நியாயம் இன்னும் தீரவில்லை. அந்தப் போராட்டம் தோற்றிருக்கலாம், காரணங்கள் இன்னும் தோற்கவில்லை. அந்தப் போராட்டம் முடிந்திருக்கலாம் அல்லது முடிக்கப்பட்டிருக்கலாம். அதற்கான கண்ணீர் இன்னும் காயவில்லை. அந்தக் கண்ணீரை, ரத்தத்தை, உள்ளிருக்கும் நியாயத்தை போர் முடிந்த பின்னும் தொடரும் அவலத்தை அந்த மனிதகுலத்துக்கான மீட்சியை என் படைப்புக்குள் கருவாக அமைத்து படைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப் பணி சாதாரணமானதல்ல. ஏதோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டால் கவிதை வந்துவிழுந்துவிடும். ஒரு வெண்ணிலா இரவில் மாலை 7 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணிக்குள் என் படைப்பு முடிந்துவிடும் என்றெல்லாம் நான் சொல்லிவிடமாட்டேன். இதற்கு குயில் சத்தங்கள் வேண்டாம். தோட்டாக்களின் சத்தங்கள் என் காதுகளில் கேட்டிருக்கவேண்டும். இதற்கு கண்ணீரையும் இரத்தத்தையும் நான் உணர்ந்திக்க வேண்டும். அந்த முள்ளிவாயக்காலில் சென்று நான் நடந்து பழகவேண்டும். அந்த ஈரக்காற்று, திறந்த வானம், மக்களின் அவலம் அங்கு நிகழ்ந்த சோகங்களில் தடம் தடையம் எல்லாம் சேகரித்து ஏற்கனவே உள்ளிருக்கும் வலியை, நான் ரணத்தை ஆற்றிக்கொள்ளகூடிய காரணங்களை அறிந்துகொண்டுதான் அந்தப் படைப்பை நான் படைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். அதற்கான பணியை தொடங்கிவிட்டேன்."

- வைரமுத்து(தந்தி டிவி பேட்டியில்)

Saturday, May 3, 2014

விழியும் விழியும் நெருங்கும் பொழுது..

'விழியும் விழியும் நெருங்கும் பொழுது' எனும் பாடலை மிகவும் பிடிக்கும். வித்தியாசாகரின்  இசையில் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அறிவுமதியின் வரிகள் இன்னும் பிடிக்கும். அதில் ஒரு வரிக்கு இப்படியொரு விளக்கம் பேஸ்புக்கில் படிச்சேன்.

\\\
’விழியும் விழியும் நெருங்கும் பொழுது’ - சதுரங்கம் படப்பாடல்.
கவிஞர் அறிவுமதி எழுதியது.
அதில் நாயகன் பாடும் ஒரு வரி: ‘இமையில் நிலவு நுழையும் பொழுது’
இரவு நேரத்தைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஒரு சந்தேகமும் வந்தது. “இது உறவின்போது பாடப்படும் பாடல். நாயகியின் கண்களில் நிலவு தெரிகிறதென்றால்.. வெளியிலா நடக்கிறது கலவி? அல்லது பால்கனியோ..” என்றெல்லாம் நினைத்தேன்.
ஆனால் கவிஞர் சொன்ன விளக்கம் கேட்டு அசந்துவிட்டேன்.
அதாவது..
கிறக்கத்தில் இருக்கும்போது, நாயகியின் கண் கருமணிகள் மேல் செல்வதால்.. கண்ணைப் பார்க்கும்போது நிலவைப் போலவே இருக்குமாம்!
- Parisal Krishna Kumar
\\