பேஸ்புக்கில் எழுதிய பதிவு
'உலகங்கள் ஏழும் பனிமூடும் போதும், உன் மார்பின் வெப்பம் போதும்' - Fire & Ice
'Fire & Ice' எனும் தலைப்பில், ரொபேர்ட் ஃரொஸ்ட் எழுதிய பிரபலமான கவிதை ஒன்று இருக்கிறது. வெறும் ஒன்பது வரிக் கவிதை, விஞ்ஞானிகளைப் பல விஞ்ஞான விவாதங்களுக்கு அழைத்துப்போனது. தத்துவார்த்த விவாதங்களுக்கு அழைத்துப் போனது. பலரையும் பேசவைத்தது. அந்தக் கவிதை தன்னுள்ளே பல முகஙகளைச் சுமந்திருப்பதுதான் அதன் உள்ளழகுக்குக் காரணம் எனலாம். பல கேள்விகளுக்கான பதில்களைப் புதிராக எழுதி வைத்திருக்கிறது.
அந்தக் கவிதையில், ஆசை அல்லது வெறுப்பு எனும் இரண்டில் ஒன்றில் மனித உணர்வுகள் அழியும் என எழுதியிருப்பார். ஆனால், தன் நிலைப்பாட்டை ஆசையின்(Desire) பக்கம் வைத்திருப்பார். இங்கு ஆசை என்பது தீ அல்லது வெப்பத்தைக் குறிக்கும். வெறுப்பு என்பது, குளிர் அல்லது பனியைக் குறிக்கும். கூடவே தீ அல்லது பனியில் உலக உயிர்கள் அழியும் என்கிற அர்த்தத்தையும் அந்தக் கவிதை சுமந்து வரும்.
வைரமுத்து தெளிவாக, நிலம் கடலாகும், கடல் நிலமாகும் நம் பூமி அழிவதில்லை என்று நிலவியலை எழுதினார். அதுபோலத்தான், காதல் என்கிற உணர்வும் மரிப்பதில்லை என்று எழுதினார்.
காதலும் காமமும் ஜோதி என்பது கவிஞர்கள் ஏற்றுக்கொண்டது. யாக்கை(உடல்,காமம்) திரி, காதல் சுடர் என்று எரித்துக்கொண்டு மோட்சம் அடைவதை விரும்பினார்கள்.
கற்பூர தேகம் தான் காதல் வெப்பம் பட்டுக் கரைவதென்ன? என்று தித்திக்கும் தீயைக் கேள்விகேட்டார் வைரமுத்து. பெண்ணழகுக்குள் கொதித்திருக்கும் தேனைக் காமமும் காதலும் உண்ண விரும்பும் என்றார். சூபி கவிஞர்கள்போல, காமத்திலும் காதலிலும் எரிந்து சொர்க்கம் அடையலாம் என்றார்கள். ஆனால் அது மிதமான வெப்பம். 'தீண்டாய்' என்கிற வார்த்தைக்குள்ளேயே தமிழ் தீயென்னும் ஓரெழுத்தை ஒளித்துவைத்திருக்கிறது.
உன் வேட்கையின் பின்னாலே என் வாழ்க்கை வளையும் எனச் சொல்லும் வெப்பம்.
“Love is an irresistible desire to be irresistibly desired.”
காமத்தில் இருக்கும் வேட்கையான பார்வையை, ஒன்றைத் தீண்ட நினைக்கும் மோகத்தை, மணிரத்னம் காட்சியில் எழுதியிருப்பார்.
Comments