"To be moved by some thing rather than oneself"
'மௌனமான நேரம்' பாடலில், "புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். அது அலையின் புலம்பலை மோகத்தின் உச்ச உணர்வோடு ஒப்பிட்டு எழுதிய வரிகள்.
'காதல் சடுகுடு' பாடலில், 'தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்." எனும் அலையின் செயலை, காதற்பெண்ணின் செயலுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பார் வைரமுத்து.
கடல் அலையின் ஒப்பீடு என்பது, அழைப்புக்கும் ஈர்ப்புக்குமிடையிலான இலக்கணம். இந்த இலக்கணத்தை உடல் அசைவுகளை வைத்து எழுதுவது எப்படி?
பாடல் முழுக்கவும், கொஞ்சம் மெல்லிய விரகத்தின் சாயல் இருப்பதை காட்சியில் வெளிப்படுத்துவது எப்படி?
உடல் அசையும் நடனம் ஒருவகை என்றால், ஒரு பொருளால் உடல் நகர்த்தப்படும்படி காட்சிகளை எழுதுவது இன்னொரு கலை. சூழலுக்கேற்றபடி, இரு உயிரின் உணர்வு ஸ்தலங்களைப் பிரதிபலிக்கும் பொருட்களாக இருக்கவேண்டும். அதேநேரம், அந்தப் பொருட்களையும் உயிர்ப்பொருளென உள்வாங்கிக்கொண்டு கலைக் காட்சிகள் எழுதவேண்டும். அதை எந்த இடையூறுமின்றிக் காட்சிப்படுத்தக்கூடியவர் மணிரத்னம்.
பொதுவாகவே, மணிரத்னத்தின் பாடல்களில் பொருள் ஆளுகை அழகாயிருக்கும். அதில், 'காதல் சடுகுடு' பாடல் குறிப்பிடத்தக்கது. 'காதல் சடுகுடு' பாடல் முழுவதும் ஒரு அழைப்பு இருக்கும். அந்த அழைப்பில் சின்ன வேட்கை இருக்கும். அந்த வேட்கையை பொருட்களின் மீது வைத்து உடலை ஆளவேண்டும். அவ்வுடலும் பொருளும் ஆளும் கலையில் வேட்கை வளையவேண்டும். குழந்தை இருக்கவேண்டும். ஊடல் இருக்கவேண்டும். அவை அத்தனையும் சேர்ந்த அழகு இந்தப் பாடல்.
Comments