பேஸ்புக்கில் எழுதிய பதிவு
I want to eat the fleeting shade of your lashes. - நெரூடா
ஒரு நல்ல கூடலுக்கு முன்னரான பழக்கமும், ஒருவருக்கொருவர் சொல்லிவிட்ட மிக நேர்மையான காமமும், உச்ச நம்பிக்கையும், நெடுந்தூர உலவுதலும், ஆழமான உரையாடல்களும், எப்படி நிறைவில் ஒரு நல்ல காமமென மொழிமாற்றப்பட்டு உடல்களால் உரையாடப்படுகிறதோ, அதுபோல, நேசத்தையும் அழகையும், உடலால் சரிவர எழுதித் தெளிதல், கொண்டாடுதல் எல்லாம் என்றும் ஆராத அந்த அன்புக்கு அவசியமானது.
'காதல் வெறியில் நீ காற்றைக் கடிக்கிறாய்' என்று வைரமுத்து எழுதிய வரிகளின் அழகை, 'ஓக்கே கண்மணி' திரைப்படத்தில் காட்சியாகக் காட்டியிருப்பார் மணிரத்னம். மிகமிக மெல்லிதாக அந்தக் காமத்தின் தீவிரத்தை காட்சிப்படுத்தியிருப்பார்.
காமத்தில் பற்குறி பதித்தல் ஒரு கலை. அதிலும், உச்சூனக, பிந்து, ப்ரவாளமணி போன்றவை கன்னத்தில் இடக்கூடியவை. சில முத்துவடம் போன்ற பதிப்புகள் மார்புக்குரியது. இந்த இலக்கணங்கள் யாவும் காமசாஸ்திரம் சொல்லுவது. மெல்லிய வலிதரும் சுகங்கள் சில உயிர்களுக்குப் பிடித்தம். அது மிகை அன்பை வெளிப்படுத்தும் சாதனமுமாகும். அதைப் பிஸிஸ்ரீராமின் உதவியுடன் ஒளி ஓவியம்போலத் தீட்டியிருப்பார் மணிரத்னம்.
இதுபோன்ற காட்சிப்படுத்தல்களில், காமத்தின் வெளிப்பாடு கொஞ்சம் பிசகினாலும் அழகிழந்துவிடும், அதை அற்புதமாய்த் தீட்ட மிகுந்த கலையம்சம் வேண்டும். நிழல்கள், ஒரு முப்பரிமாணக் கண்களை கமெராவுக்குக் கொடுக்கும். அவள் நிழலைக் கடிக்கும் அந்தக் காட்சிக்கு அது அத்துணை அழகு சேர்த்திருக்கும்.
Comments