கட்டைப் பஞ்சாயத்து எல்லாம் ஆலமரம், செம்புன்னு காலம் போய், சோபா செட்டு கண்ணாடி கிளாஸ்னு ட்ரெண்டு மாறிப்போச்சு. அதனாலேயே கொஞ்சக் காலமாக மற்றவர்கள் பிரச்னையை தீர்க்கிறேன் என்று ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சிகள் மீது எதிர்மறையான கருத்து வைத்திருந்தேன். எந்த டிவி சானலுக்கு மாற்றினாலும் 'இதோ அறிவுரை சொல்லுகிறேன்' என்று பலபேர் காத்திருக்கிறார்கள். இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி, நிபுணத்துவம் அற்றவர்கள் எல்லோரும் மற்றவர்களின் வாழ்வில் தலையிட்டு ஏதேதோ குழப்பம் செய்து பணம் பார்க்கிறார்கள். தங்கள் டிஆர்பி ரேட்டினை உயர்த்திக்கொள்ளவதற்கு பிரச்சனைகளை அணுகுகிறார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அதே நோக்கம் இருந்தாலும் சில நிகழ்ச்சிகளில் கொஞ்சமேனும் சமூகப் பொறுப்புணர்வு இருக்கும் என்றே நம்புகிறேன்.
தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் 'மனதோடு பேசலாம்' எனும் நிகழ்ச்சியினைத் தற்செயலாகக் காணக்கிடைத்தது. நான் பார்த்தவரையில் நிபுணத்துவம் பெற்ற உளவியல் ஆலோசகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். எந்தக் கேள்வி கேட்டாலும் பொதுவான ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு, அருகிலிருக்கும் உளவியல் நிபுணரைப் பாருங்கள் என்கிறார்கள்.
"நான் விரும்பி கல்யாணம் செய்துகிட்டேன். என் கணவர் பிரச்சனை பண்ணுகிறார். அவரோடு சேர்ந்து வாழலாமா? வேண்டாமா?" என்று உளவியல் ஆலோசகரிடம் ஒரு பெண் தொலைபேசியில் கேட்டு வைத்தார்.
உண்மையில் உளவியல் நிபுணர்கள் என்பவர்கள் இன்ஸ்டன்ட் சாமியார்கள் மாதிரி தீர்ப்புச் சொல்லுபவர்கள் அல்ல. பிரச்சனைகளைச் செவிமடுப்பவர்கள். தங்களின் பயிற்ச்சிகளின் மூலம் தகுதியான கேள்விகள் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களைப் பேசவைத்து, அவர்களிடமிருந்தே தீர்வை எதிர்பார்ப்பவர்கள். டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்கு ஏதும் புரட்சி பண்ணிடுவாரோ என்று நினைத்தேன். "தீர்மானம் நீங்கள் தான் எடுக்கவேண்டும். எந்த உளவியல் நிபுணரும் முடிவு சொல்லமாட்டார்கள். நீங்களாக ஆராய்ந்துதான் முடிவு எடுக்கவேண்டும். ஒரு நல்ல உளவியல் நிபுணராகப் போய் பாருங்கள்" என்று இயல்பாகப் பதில் சொன்னார். அழகான பதில்.
நல்லவேளை அந்தப் பெண் கடும்போக்கு மாதர் சங்கப் பக்கம் ஏதும் போகவில்லை. போயிருந்தால், அவர்களே முடிவைச் சொல்லியிருப்பார்கள்!
Comments