1975ல் இந்திரா காந்தியின் அரசினால், இந்தியா முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்திலிருந்து பின்நோக்கி நகருகிற கதைக்களம். கதைசொல்லியாக ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறார். அரச ஆணையின்படி தான் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்து, தான் பார்த்தவற்றை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பிக்கிறார்.
நீலகிரி, மூனாரில் ஆங்கிலேயர்கள் தேயிலைப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்த காலம். 1900ம் ஆண்டளவில் ஜாக்ஸன் என்கிற ஆங்கிலேய அதிகாரிக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அடிமைகளை அடக்கியாள இயோப் என்கிற உள்நாட்டு இளைஞனை ஜாக்ஸன் நியமிக்கிறார். இயோபிற்கு திருமணம் முதலான ஆதார காரியங்களைச் செய்துவைக்கிறார். ஜாக்ஸன் இறந்தபின்னர் இயோப்பின் கைக்கு அதிகாரமும் உரிமையையும் மாறுகிறது. பிரிடிஷ்காரர்கள் போலவே இயோபின் ஆட்சியும் அமைகிறது.
இயோப்பிற்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. முதல் இருவரும் தந்தையைப் போலவே வன்முறை செய்கிறவர்கள். மூன்றாவது பிள்ளையான யோஷி(Farhadh Fazil) தனது தாயைப் போல அமைதியும் அன்பும் கொண்டவன். சில காலங்களில் நோயின் காரணமாக தாய் இறந்துவிடுகிறாள். தன்னுடைய சகோதர்கள் செய்யும் கொலையைப் பார்த்துவிடும் யோஷி தப்பித்து ஓடி, பிரிட்டிஷ் அரசின் ரோயல் நேவியில் இணைகிறான். மீண்டும் திரும்பிவந்து தன்னுடைய குடும்பத்தையும் காதலையும் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை. பத்மப்பிரியாவின் கதாப்பாத்திரம்தான் கதையின் ஓட்டத்துக்கு சுவாரசியமானது. எனக்கு ஆரண்ய காண்டத்தை நினைவுபடுத்தியது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பு, கதைக்களம், ஆர்ட் டிரெக்க்ஷன் என்று ஒரு பீரியட் படத்துக்குரிய அத்தனை அம்சமும் உண்டு.
Comments