கம்பராமாயணத்தில் வருகிற வரைக்காட்சிப் படலத்தில் "பானல் அம் கண்கள் ஆட. பவள வாய் முறுவல் ஆட" என்று ஒரு அழகான பாடல். சந்திர சயிலத்தில் பெண்கள் ஊஞ்சல் ஆடுகிறார்கள். அப்போது என்னவெல்லாம் அசைகிறது எனக் கம்பன் சொல்லுகிறார். இதைப் படிக்கும்போது கண்ணதாசன் எழுதிய "கட்டோடு குழலாட ஆட" என்கிற பாடலின் வரிகள் நினைவுக்கு வந்தது. வாசிக்கும்போதே இனிக்கிறது. இரண்டு தோழிகள் நடனமாடிகொண்டும் சுதந்திரமாகப் பாடிக்கொண்டும் போவதுபோல அமைந்த பாடல். அப்படிப் போகிறபோது என்னவெல்லாம் ஆடுகிறது என்று சொல்லும் பாட்டு. கண்ணதாசனின் சொற்கள்கூட கொடிபோல ஆடும்.
கண்ணதாசனின் இந்தப் பாடலை எல்லோரும் மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவைப் பாடலுடன் ஒப்பிடுவார்கள். ஒருசில வரிகளை மட்டுமே ஒப்பிடமுடியும். பெண்கள் நீரினைக் குடைந்தாடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனச் சொல்லும் திருவெண்பாவைப் பாடல்.
//காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாட// இதனைப் பிரித்து எழுதினால் இப்படி அமையும்.
காது ஆர் குழை ஆட
பைம்பூண் கலன் ஆட
கோதை குழல் ஆட
வண்டின் குழாம் ஆட
பெண்ணானவள் நீரினில் இறங்கிக் குளிக்கும்போது காதில் பொருந்திய குழைகளுடன் சேர்ந்து பொன்னாலான அணிகலன்களும் ஆடுகின்றன. அவளுடைய கூந்தல் ஆடுகிறது. அதனால் அதிலுள்ள மாலை அசைகிறது. அவர்கள் மூழ்கும்பொழுது அதிலிருக்கிற வண்டுகள் எல்லாம் எழுந்து ஆடுகின்றன.
ஆனால் கண்ணதாசன் மேலதிகமாக கிராமியப் பாடலுக்குரிய சொற்களைப் பயன்படுத்தியிருப்பார்.
பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட
முதிராத நெல்லாட ஆட
முளைக்காத சொல்லாட ஆட
உதிராத மலராட ஆட
சதிராடு தமிழே நீ ஆடு
பெண்கள் ஊஞ்சல் ஆடும்பொழுது என்னவெல்லாம் அசைகிறது எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் சொல்லுகிறார்.
பானல் அம் கண்கள் ஆட
பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட
பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட
திரு மணிக் குழைகள் ஆட
தசரதனும் அவனது படைகளும் சந்திர சயிலத்தில் கண்ட காட்சிகள் இவை.
Comments