பிரபஞ்சத்தின் இருண்ட பக்கம் திரும்பியிருந்த பூமியின் ஒரு பக்கம் சூரியன் நோக்கி திரும்ப ஒளி கசிந்தது . கசிந்த சூரிய ஒளி எல்லையில்லாத வெட்ட வெளிக்கு நீல நிறத்தை கொடுத்தது . கூடுதலான செய்மதிகளின் கண் பார்வை படாத கிராமத்தில் ஆங்காங்கே கோவில்களிலும் தேவாலயங்களிலும் பக்திப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன .
தெருவெங்கும் விழாக்கோலம் , திருவிழா சுவரொட்டிகள் அருகில் திறக்க இருக்கும் புதிய தொழில்நுட்பப கல்லூரியின் விளம்பரத்தை மறைத்துக்கொண்டிருந்தது .
அன்று விஜதசாமி ஆகையால் காலையிலேயே விழித்துக்கொண்டது குட்டிநேசனின் குடும்பம் .
வானம் விடிந்துவிட்டது இன்னும் என்னம்மா தூக்கம் என தமிழ்ச்செல்வியை தட்டி எழுப்பினாள் பாக்கியம் பாட்டி .
பாட்டி ! பொய் சொல்லாதீங்க பாட்டி வானம் எண்டு ஒண்ணுமே இல்லை பாட்டி . நேற்று தான் மனோபிரியா டீச்சர் சொன்னாங்க . என்று தமிழ்ச்செல்வியின் அண்ணன் சொல்ல பாட்டி திகைத்துப்போனாள் .வானம் கடவுள் படைச்சதல்லோ? ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை .
அவன் கொஞ்சம் சுட்டி , சொல்லிக்கொண்டே ஓடி விட்டான் .
சத்தத்தில் திகைத்து எழும்பிய தமிழ்ச்செல்வி , கொஞ்ச நேரம் கண்ணை கசக்கிவிட்டு கட்டிலை விட்டு எழுந்து நடந்தாள் . ஏதோ ஒரு நினைப்பு அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது . நேற்று அவள் அப்பா சொன்ன ஏடுதொடக்கும் விடயம் ஞாபகம் இருந்தது . எங்கேயோ வெளியில் போகிறோம் என்ற சந்தோசம் அவளுக்குள் .
அம்மா அவளுக்கு முகம் கழுவி விட்டுவிட்டு சாமியை கும்பிட்டுவிட்டு வா அம்மா என்றாள் . அவள் தாய் விஞ்ஞான ஆசிரியை .
சாமி அறைக்கு வந்த அவள் சாமி முன்னிலையில் அடுக்கப்பட்டு இருந்த புத்தகங்களில் அட்டையில் இருக்கும் படங்களை ஒவ்வொன்றாக தலையசைத்து பார்த்தாள் . சிலது அறிவியல் புத்தகங்கள் .நவராத்திரி பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது . ஐங்ஸ்டேயினும் நியூட்ட்டனும் சிரித்துக்கொண்டிருக்க அதன் மீது பூ வைக்கப்பட்டிருந்தது . பூவை விலக்கிவிட்டு அவளும் அவர்களை பார்த்து கொஞ்சம் புன்னகைத்தாள் .
சிரிக்கும் அவள் முகத்தில் குழி விழ பேபி ஷாலினி போல இருக்கிறாய் என் கண்ணே என அப்பா வந்து கட்டியணைத்து தூக்கிக்கொண்டு சென்றார் ஹோலிட்க்கு .
ஹோலில் இருந்து அண்ணன் சில படங்கள் புரட்டுவதை பார்த்த அவளும் அப்பாவிடம் இருந்து இறங்கி ஆர்வத்தோடு சென்று பார்த்தாள் . அது அவளது மச்சானின் படங்கள் . அவனுக்கும் இவளின் வயது . ஆனால் அவன் கனடாவில் இருக்கிறான் . இவர்கள் பார்ப்பதற்கு அனுப்பி வைத்திருந்தார்கள் .
வீட்டில் உள்ளவர்கள் விஜயதசமிக்கு தயாராகி கொண்டிருக்க ராஜா மாமாவும் அவர்களோடு இணைந்து பூசை பொருட்கள் தயார் பண்ணிகொண்டிருந்தார் .ராஜா மாமா தான் ஏடு தொடக்க இருப்பவர் . அவருக்குள்ளும் ஒரு சிந்தனை . இந்தப்பிள்ளை படிக்காட்டி என்னை ராசியில்லாதவன் ன்னு சொல்லீடுவானுன்களோ என்று .
கனடா மச்சான் ஒவ்வொரு படத்திலும் மிக சிறிய கணணியை மடியில் வைத்து அமர்ந்திருந்தான் .
அவள் அண்ணன் ஆர்வத்தோடு அருகில் இருந்த செல்விக்கு சுட்டு விரலால் இது தான் சின்ன பிள்ளைகள் கொம்பியூட்டர் .நல்லா விளையாடலாம்,படிக்கலாம் என்றான் .
(ஐந்து வயது பிள்ளைகளுக்கென மிகவும் இலகுவான முறையில் ஆங்கிலம் கற்க கணணியை அறிமுகப்படுத்தி இருந்தனர் .அதை தான் அவன் மடியில் வைத்திருந்தான் .)
அவளும் சின்னக்கைகளால் அதை எடுத்து பார்த்துக்கொண்டிருக்க அப்பா வந்து தூக்கினார் . முதுகுப்பக்கமாக அவளை தூக்கி வைத்திருந்தார் .
ஒரு கையில் செல்வியும் இன்னொரு கையில் அரிசியில் எழுதுவதற்காக அரிசிப்பையையும் அப்பா கோயிலுக்கு தூக்கிக்கொண்டு புறப்பட்டார் . "அ" எழுதுவதற்காக ......
.
கைகளுக்குள் மடங்கியிருந்த கணணிப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தது அவள் கண்கள் ......
Comments
its true . thanks for sharing.
தொடர்ந்து எழுதுங்கள்... சொந்த முயற்சி பப்ளிஸ் ஆகல என்கிற கவலை வேண்டாம்...
ஆரம்பத்தில் எல்லாம் இப்படித்தான் இருக்கும்... காரணம்... நீங்கள் ஒன்றும் சினிமாவை பற்றி எழுதவில்லையே... :)
வாழ்த்துக்கள்.