மனப்பீடத்தில் வீற்றிருந்து மணிமொழி சூட்டி அழகு பார்க்கும் பெயரற்றவளுக்கு எழுதிய ஓலைகள்.
பாயல் கொள்ளுதல்
கண்மணியாள்,
மூடிவைத்த வீணை போல் நினைவில் உனது வடிவு .தந்தி மீது இரு கயல்கள். வெறித்த வெண்ணிலவில் உறங்கும் புள்ளெல்லாம் எழுப்பிவிடத் தோன்றுகிறது. கிடக்கட்டும் வைகறை.
வள்ளியைத் தொழுதல்
வள்ளீ ,
எனதன்பு சொல் நர்த்தகி. "அடுக்கடுக்காய் மலரும் விடியல் காண நீர்த்தாமரை விழித்திருக்கும்" என்று நீ சொன்னால்,அப் பொருளின் வேர் மருவிய மொழியும் பாதி வழியில் நாணும்.
கூதிர்காலம்...
நங்கை,
இது வெள்ளைச் சூரியன்கள் பார்க்கும் கன்னி மாதம். ஓர் அச்சிர ஆராதனம். ஊசிப் பூக்கள் நெருக்கையிலே ஒரு ஆளுயர விடமேற்றிக் கொலைகள் புரிகுவாய். உயிர் இறங்கிய மறுகணமே பற்றிக்கொண்டு எரிகிறதொரு சித்திரவனம் என்பாய். பதிலுக்கு, குளித்த மலர்கள் தொட்டுப் பறவை ராகம் பாடுகையில் உன் குற்றமிலாப் புன்னகை கள் என்றிருக்கிறேன்.
விழா மகளே, நங்காய்! இப்போதும் உன் செவியோரம் தவம்கிடந்து தொட்டுச் சென்றது ஒரு நெடிய பனிக்காற்றுத்தான் என்று சொன்னால் நீ நம்பப் போவதில்லை. நீ நம்பவில்லை என்றால் மட்டுமே பொய்களுக்குள்ளும் பொருளிருக்கும்.
சிவந்த நிலம்
எழில்மொழி,
சற்றே செந்தூரம் குழைந்த குறிஞ்சி மண்ணில் வீழலாம் என்று காதலை வாழ்த்தி வணங்கிய உனது குரலில் பிழையில்லை. வானம் பார்த்துச் சரிகையில் உயர்ந்து ஓங்கும் நினது வண்ணம் தொழுதிருந்த இவனின் நற்றவத்திலும் பழுதில்லை. இளங்கிளியே கேளாய்! ஒவ்வொரு நாளும் சூரியன் புதியது என நீ அறியாய். அடுத்த புலர்தலில் அலர் மலர்ப் பாதம் வருட எண்ணிய யாசகனின் தாகம் நீ அறியாய். மலர்களைப் பறிக்க அஞ்சுபவனைத்தான் மலர்கள் நேசிப்பது உண்டு. இயற்றமிழ் வடித்தவர்கள் சொன்ன இச் சாத்திரமும் பொய்யில்லை. குறிஞ்சியோ இப்போதும் ஈரமாகத்தான் இருக்கிறது. ஈரமாக இருப்பதுதான் அதற்கு உயர்வு.
வனமகள் அழைப்பு
நேர்நாயகி,
நினது தெரிவைப் பருவமதில், பைன் மரங்களால் நெருக்கமுற்ற கருங்காடுகளின் அழகைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். பைன் மரங்கள் நெருக்கமாய் உயர்ந்திருக்கும். அவ்விருட்டில் காற்றுங்கூட மைபூசியிருக்கும்.அங்கே சூரியன் தீண்டாத இடங்களும் உண்டு. சிறுவேர்கள் தொடும் பெருமழையும் உண்டு. வெண்பனியை இருளில் படரவிட்ட இயற்கை அமுதவொளியில் உன் கண்மணி சுகம்பெறவேண்டும் நேர்நாயகி. தேர்போல் உயர்ந்தோங்கும் தீயின் ஊமை வடிவாய் உன் கருங்கூந்தல் சரியும்போதெல்லாம் ஒரு கருங்காட்டின் ஆதிவேட்கை என்னை அழைக்கிறது.
முத்தாடுபவள்
வெண்முகை,
உலவித்திரியும் நூற்பா வடிவினள்.ஒயிலாள் நடை அழகில் இடைமேகலை பகுதியாய் சாய்ந்து மிகுதியாய் எழுந்து முத்தங்கள் பல இடும். வெண்ணிறத் துகிலுக்கு மஞ்சள் நிறப் பூக்கள் என்றும், கருநீல நூற்பின்னலுக்கு வெண்ணூல் தனிலிருந்து வீழ்ந்த வெள்ளை நிற மொட்டுகளையும், வெள்ளிக்கொலுசிலிருந்து கழன்ற ஒன்றிரண்டு மணிகளையும் வைத்து அழகு கோர்க்கும் சுந்தர விழிகள். மண்ணிற் சிதறிய குங்குமமும், மாமரத்து அணிலின் பேச்சும், உழுது சிவந்த உழவன் கால்களும் அழகென்று நோக்கும் பணிமொழியாள் நெஞ்சம்.
அவள் குழல் வெப்பத்தில்...
கோதை,
முன்பனி ஈரத்தில் தன் விழிகளைத் திறப்பதில்லை நிலமடந்தை. இருப்பினும், ஒரு குயிலின் குரல் வடிவிலாவது விழிப்புற்றிருப்பாள். இலக்கணங்கள் உடைத்துக் கவிதை தருவிப்பாள். தீம்பாரங்கள் இவையென்று பொருள் தருவாள். செந்நிற மாந்தளிரில் தீம்புனல் சொட்டும். சிறு பூங்கொடிகள் கவிழ்ந்துகொள்ளும். இறகுகளிலேயே குடில் வடிவம் செய்து அமர்ந்திருக்கும் புள்ளினம்.காலை விழிப்பில், காதலியின் திருவடிவு மறைக்கும் பகுதிக் கூந்தல். இவையெல்லாம் தீம்பாரங்கள் என்று ஓதுவாள்.
கிள்ளை மொழி பேசுதல்
கார்த்திகை,
மரப்பாச்சி பொம்மையை இறுகப்பற்றி உறங்கிய கற்கண்டு விரல்கள். திருவிழாப் பெண் கோலத்தில் வளையல்கள் அணிந்துபார்க்கக் குவிந்த மொட்டு விரல்கள். புடவைக் கடைகளில் புடவையின் சருகு ஓசையைத் தடவிப் பதம் பார்த்த பட்டு விரல்கள். சக பெண்தோழியின் கைகளைப் பிடித்து விளையாடிய பிள்ளை விரல்கள். முதியவர் கரங்களுக்குள் வெப்பம் கடத்திய கருணை விரல்கள். கோவிலின் மரக்கதவுச் செதுக்கல்களுக்கு அழகுசேர்க்கும் சிறுமணிகளைத் தடவிச்சென்ற மரகத விரல்கள். கோடிமுறை கூந்தலைச் சரிசெய்த நயன விரல்கள். பச்சை வயல் வரப்பு நெடுக நெல்மணிகளைத் தடவிச்சென்ற பால் விரல்கள். என்னைப் பற்றி எழுதும்போது மட்டும் பாரதியின் விரல்களாவது எப்படி.
Comments
நம்பவில்லை என்றால் மட்டுமே பொய்களுக்குப் பொருளிருக்கும். யாசகனின் தாகமும் பறிக்க அஞ்சுபவனும் எதிர் எதிர் முரண்பாடு,தீயின் ஊமை வடிவு!!
வரிக்கு வரிக்கு வந்த முற்றுப்புள்ளிகள் வரைந்தவனுக்கு கிடைத்த தலைக்கணம்,மகுடம் அது.
தருணங்களை அழகாக்கியமைக்கு நன்றி.
-திவ்யா.